ஈத்தம்பழமும் நஞ்சுக்கெதிரான மருந்தும். விமரிசிக்கப்படும் ஹதீஸ் ஓர் ஆய்வு-2
ஈத்தம் பழத்திலுள்ள ஊட்டச்சத்துக்கள், நோய் எதிர்ப்புச் சக்திகள் பற்றிய சிறிய அறிமுகமொன்றைப் பார்ப்போம். நஞ்சு நமது உடலில் புகுந்தால் அதை எதிர்க்கும் ஆற்றல் ஈத்தம் பழத்தில் உள்ளதா? என்பதை அறிய இது நமக்கு உதவியாக இருக்கும். நச்சுத் தன்மைமையை எதிர்க்கும் சக்தி பொதுவாக எல்லா வகை ஈத்தம் பழங்களிலும் இருக்கும் போது அஜ்வா வகை ஈத்தம் பழத்தைச் சுட்டிக்காட்டி அதில் நச்சுத் தன்மையை நீக்கும் சக்தியுள்ளது என்று நபியவர்கள் கூறியிருக்கின்றார்கள் என்றால் நிச்சயமாக அதில் மற்ற வகை ஈத்தம் பழங்களை விடவும் விஷேடத் தன்மையுள்ளது என்பதை நாம் புரிய வேண்டும்.
5-ஈத்தம் பழமும் அறிவியலும்
மனித உடலுக்குத் தெவையான ஊட்டச் சத்துகளை Macro nutrition, Micro nutrition என இரு வகையாகப் பிரிப்பார்கள். புரதம், மாப்பொருள், கொழுப்பு என்பன Macro nutrition என அழைக்கப்படும் பிரதான ஊட்டுச்சத்துக்கள். மனித உடலுக்கு இன்றியமையாதவைகளாகும். நமது உடலுக்கு நாளொன்றுக்குத் தேவையான பிரதான ஊட்டச் சத்துக்களனைத்தும் சிறிதளவு ஈத்தம் பழங்களில் காணப்படுகின்றன. 100 கிராம் ஈத்தம் பழத்தில் 75 கிராம் மாப்பொருளும், 2 கிராம் புரதமும் காணப்படுகின்றன.
ஈத்தம் பழத்தில் Micro nutrition என அழைக்கப்படும் இரண்டாம் தர ஊட்டச்சத்துக்கள் பல:
சோடியம் 2 மில்லி கிராம்,
சீனி 63 கிராம்,
விட்டமின் ஏ10,
விட்டமின் சீ 4 மில்லி கிராம்,
விட்டமின் ஈ 5 மில்லி கிராம்,
விட்டமின் கே 2.7 மைக்ரோ கிராம்,
மைக்ரோ தயமின் 0.052 மில்லி கிராம்,
ரைபோ பிலாவிட் 0.066 மில்லி கிராம்,
நயாஸின் 1.274 மில்லி கிராம்,
விட்டமின் பீ 6 0.165 மில்லி கிராம்,
விட்டமின் பீ 12 0 மைக்ரோ கிராம்,
போலேட் எசிட் 19 மைக்ரோ கிராம்,
கல்சியம் 39 மில்லி கிராம்,
அயன் 1.02 மில்லி கிராம்,
மெக்னீஸியம் 43 மில்லி கிராம்,
பொஸ்பரஸ் 62 மில்லி கிராம்,
பொட்டாஸியம் 656 மில்லி கிராம்,
ஸின்க் 2.29 மில்லி கிராம்,
கொப்பர் 2.206 மில்லி கிராம்,
மென்கனீஸ் 0.262 மில்லி கிராம்,
செலேனியம் 3 மைக்ரோ கிராம்
மற்றும் அனைத்து கொழுப்பு வகைகளும் 100 கிராம் ஈத்தம் பழத்தில் காணப்படுவதாக அறிவியல் ஒத்துக் கொள்கிறது. ஊட்டச்சத்துக்களில் சேராத நார்ச்சத்தும்(Fiber) குறிப்பிடத்தக்களவில் ஈத்தம் பழத்தில் காணப்படுகின்றது. மலச்சிக்கலிலிருந்து நிவாரணமளித்தல், உடலின் கழிவுகளை வெளிப்படுத்தல், உடலுக்கு அழகைக் கொடுத்தல் போன்றவை நார்ப்பொருளாலேயே நமக்குக் கிடைக்கின்றன. சுருங்கச் சொல்வதென்றால் ஒரு மனிதனுக்கு அன்றாடம் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும், பிற சத்துக்களும் சிறியளவு பேரீத்தம் பழங்களில் காணப்படுகின்றன என்று சொல்லலாம்.
6-ஈத்தம் பழமும் நஞ்சுக் கெதிரான சக்தியும்
மேற்கண்ட ஊட்டச் சத்துக்களினூடாக ஈத்தம் பழங்களில் காணப்படும் நஞ்சுக்கெதிராக போராடும் சத்துக்கள் பற்றிப் பார்ப்போமாயின் நச்சுத்தன்மை நீக்கும் திறன் நார்ப்பொருளில் காணப்படுகின்றது எனவே அதிகளவிலான நார்ப்பொருள் ஈத்தம் பழங்களில் காணப்படுகின்றது. அந்த வவகையில் ஈத்தம் பழங்களில் நச்சுத்தன்மையை அழிக்கும் விஷேட சத்துள்ளது என்பது உறுதியாகின்றது. நயாஸின் என்பது நச்சுத்தன்மைக் கெதிரான அதிசிறந்த பொருளாகும். இது ஒருவருக்கு ஒரு நாளைக்கு சில மைக்ரோ மில்லி கிராமளவில் தேவைப்படுகின்றது. இது 1.274 மில்லி கிராம் அளவில் ஈத்தம் பழத்தில் காணப்படுவதாக மேலே பார்த்தோம். இது போலத்தான் விட்டமின் பீ 6 என்பதும் நச்சுத்தன்மைக் கெதிரான அதிசிறந்த விட்டமினாகும். இது 100 கிராம் ஈத்தம் பழத்தில் 0.165 அளவில் காணப்படுகின்றது. எனவே நாம் ஏழு அஜ்வா ஈத்தம் பிங்களைச் சாப்பிட்டால் அதில் காணப்படும் நார்ச்சத்து, நயாஸின், விட்டமின் பீ 6 போன்ற விஷேடச் சத்துக்ளிலிருந்து நச்சுத்தன்மை நீக்கும் சத்து நமக்குக் கிடைக்கின்றது.
இது போலவே 100 கிராம் ஈத்தம் பழத்தில் போலேட் எசிட் 19 மைக்ரோ கிராம் காணப்படுகின்றது. இவ்வாறே 100 கிராம் ஈத்தம் பழத்தில் 3 மைக்ரோ கிராம் செலேனியம் உள்ளது. இதுவும் அதி சிறந்த சத்துக்களில் ஒன்றாகும். எனவே 7 இவ்வகை ஈத்தம் பழங்கள் நாம் சாப்பிடும் போது விஷத்திலிருந்து காக்கும் சக்தி நமது உடலுக்குக் கிடைக்கின்றது என்பதை நபியவர்கள் சொன்ன செய்தியிலிருந்து நாம் அறிய முடிகின்றது. இச்சத்துக்கள் மிக சொற்பளவிலேயே அன்றாடம் நமதுடலுக்கு அவசியப்படுகின்றது. அளவுக்கதிகமான இச்சத்துக்கள் நமதுடலில் காணப்படுமாயின் அது ஆபத்தாகிவிடும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இச்சத்துக்கள் பற்றிய செய்தி நமக்குக் தெரியா விட்டாலும் நாம் நபியவர்களின் ஹதீஸை நம்பவேண்டும் என்னும் போது அறிவியல் பூர்வமாக இவ்வளவு விடயங்கள் நிரூபிக்கப்பட்டிருக்கும் போது இந்த ஹதீஸ் நிதர்சன உண்மைக்கு பொருந்தாது என்று நாம் எவ்வாறு சொல்லாம்! இதற்கேதாயினும் ஆதாரமுண்டா!
7-மீதனோல் ஓர் உதாரணம்
இன்னும் சொல்வதாயின் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பிரதான மருத்துவ ஆய்வகமொன்றின் அறிக்கையில், மீத்தனோல் என்ற எல்கஹோலால் பாதிப்புற்று இறக்கும் நிலையிலுள்ள ஒருவருக்கு ஈத்தம் பழம் அதி சிறந்தது என்ற பரிந்துரைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.மீத்தனோல் அளவுக்கு அதிகமானால் உயிர்கொல்லும் நஞ்சாகிவிடும். மீதனோல்வகை எல்கஹோல் அருந்தி இறக்கும் நிலையில் உள்ளவருக்கு எதனோல் எனும் சாதாரண வகை எல்கஹோலை அதிகமாகக் கொடுத்து முதல் வகையின் நச்சுத் தன்மையை அகற்றும் முறையை வைத்தியசாலைகளில் சர்வ சாதரணமாகக் காண முடிகிறது. ஆனால் அந்த வழிமுறைக்குப் பகரமாக ஈத்தம் பழம் பரிந்துரைக்கப்படுகிறது என்றால் மருத்துவ உலகம் முழுமையாகவே ஈத்தம் பழம் நஞ்சுக்கொதிரான அருமருந்து என பரிந்துரைக்கம் காலம் வெகுதூரம் இல்லை. இப்படியிருக்க அஜ்வா ஈத்தம் பழம் பற்றிச் சொல்லும் ஹதீஸ் எவ்வகையில் நடைமுறைக்கு மாற்றமானது என்று கூறலாம்.
8-நபியவர்களும் நஞ்சூட்டப்பட்ட உணவும்
ஒரு முறை நபியவர்களுக்கு யூதர்கள் நஞ்சூட்டிய ஆட்டை உணவாகக் கொடுத்தார்கள் அதை சாப்பிட்ட பின்புதான் குறிப்பிட்ட உணவு நஞ்சூட்டப்பட்டது என்பது நபியவர்களுக்குத் தெரியவருகின்றது. பின்னர் நபியவர்கள் யூதர்களிடம் இது பற்றி விசாரித்தார்கள் ஆனால் நபியவர்களுக்கு அந்த நஞ்சு பாதிக்கவில்லை. என்பதை நாம் அறிகிறோம். இந்த செய்தி புஹாரியில் 4428ம் இலக்கத்தில் இடம் பெறுகின்றது. இதை ஒரு முஃஜிஸா என்று கூறமுடியாது. இதை நபியவர்களே பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
صحيح البخاري 4428- قَالَتْ عَائِشَةُ – رضى الله عنها – كَانَ النَّبِىُّ – صلى الله عليه وسلم – يَقُولُ فِى مَرَضِهِ الَّذِى مَاتَ فِيهِ « يَا عَائِشَةُ مَا أَزَالُ أَجِدُ أَلَمَ الطَّعَامِ الَّذِى أَكَلْتُ بِخَيْبَرَ ، فَهَذَا أَوَانُ وَجَدْتُ انْقِطَاعَ أَبْهَرِى مِنْ ذَلِكَ السَّمِّ »
நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, 'ஆயிஷாவே! கைபரில் (யூதப் பெண்ணொருத்தியால் விஷம் கலந்து தரப்பட்ட) அந்த உணவை நான் உண்டதால் ஏற்பட்ட வேதனையை நான் தொடர்ந்து அனுபவித்து வருகிறேன். அந்த விஷத்தின் காரணத்தால் என் இருதய இரத்தக்குழய் அறுந்து போவதை நான் உணரும் நேரமாகும் இது' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி)
ஆதாரம் : புஹாரி 4428
நபியவர்களின் உடலில் விஷம் நீண்ட நாளாய் இருந்திருப்பதையும் ஆனாலும் ஏதோ ஒரு காரணத்தால் பாதிக்காமல் இருந்திருப்பதையும், இது முஃஜிஸா அல்ல என்பதையும் இந்த செய்தியிலிருந்து அறியலாம்.
எனவே இந்த ஹதீஸ் நஞ்சை குடித்துப் பரீட்சித்துப் பார்க்கவோ பாம்புகளின் விஷங்களை மனித உடலில் பரீட்சித்துப் பார்த்து அஜ்வாவின் மருத்துவக் குணத்தை நிரூபிக்கச் சொல்லவில்லை. நச்சுத் தன்மை உடலைப் பாதிக்கும் சமயத்தில் அது செயல்படாமல் அதற்கெதிராகப் போராடும் சக்தியை உடலுக்குள் வளர்க்கும் தன்மை அஜ்வா ஈத்தம் பழங்களில் உண்டு என்பதையே இந்த ஹதீஸ் சொல்கிறது என்பதை தொடர்ந்து படித்தவர்கள் தெளிவாகப் புரிந்திருப்பார்கள்.
9-குழந்தையின் முதல் உணவாக அஜ்வா
இது மட்டுமல்லாமல் பல் வேறு சந்தர்ப்பாங்களில் நபியவர்கள் இவ்வகை ஈத்தம் பழங்களை நபித்தோழர்களுக்குப் பரிந்துரைத்திருப்பதையும் காண முடிகின்றது.
உம்மு ஸுலைம் (ரழி) அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கின்றது. அக்குழந்தை நபியவர்களிடம் கொண்டுவரப்படுகின்றது. மிருகங்களுக்கு அடையாளமிடும் ஒரு கருவியை வைத்திருந்த நபியவர்கள் அதை வைத்து விட்டு குழந்தையைக் கையிலெடுத்து, அஜ்வா ஈத்தம் பழத்தைக் கொண்டு வரச்சொல்லி தன் வாயிலிட்டு மென்று அதை அக்குழந்தையின் வாயில் வைத்ததும் குழந்தை அந்த இனிப்பைத் தேடி தன் நாவினால் அலாவுகின்றது. அப்போது நபியவர்கள் 'அன்ஸாரிகள் எவ்வாறு ஈத்தம் பழத்தை விரும்புகிறார்கள் என்பதைப் பாருங்கள்' என்று கூறினார்கள். மதீனாவின் சில பகுதிகளில் காணப்படும் அஜ்வா ஈத்தம் பழங்களில் ஒரு விஷேடத்தன்மை இருப்பதாலேயே நபியவர்கள் இந்தப் பழங்களைப் பரிந்துரைத்துள்ளார்கள் என்பதை நாம் விளங்க வேண்டும். (ஸஹீஹ் முஸ்லிம் : 6476)
எனவே இந்த ஹதீஸோடு சம்பந்தப்பட்ட சில முக்கிய அம்சங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1- நஞ்சு குடித்தல் என்ற வாசகம் இந்த ஹதீஸில் கூறப்படவில்லை. அத்துடன் ந ஞ்கு குடிப்பதை இஸ்லாம் தடைசெய்துள்ளது. தனது உயிரை மாய்க்கும் வகையில் செய்யும் எல்லா முயற்சியும் தற்கொலையில் அடங்கும்.
2- அது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கையோடு தொடர்பானதல்ல. கருஞ்சீரகத்து சில மருத்துவக் குணங்கள் இருப்பதாக வரும் ஹதீஸ்களைப் போன்று, தேன் பற்றி வரும் ஹதீஸ்களைப் போன்று இதுவும் ஒரு மருத்துவம் தொடர்பான ஹதீஸ் ஒன்றே.
3- இது நிதர்சன உள்மைக்கு முரணானதல்ல. அறிவியலுலகு மெல்ல இதை நிரூபித்து வருகின்றது. முழுமையாக மருத்துவ உலகம் இதை இதுவரை நிரூபிக்காதபோதும்; இதை மறுக்கவில்லை.
4-எல்லாவற்றுக்கும் மேலாக நம்பகமான அறிவிப்பாளர் தொடரில் வந்துள்ள இந்த ஹதீஸை மறுப்பதற்கு எந்த நியாயங்களையும் சொல்ல முடியாது.
10-அஜ்வாவும் சூனியமும்
இந்த ஹதீஸை மறுப்பதற்கு இன்னொரு காரணம் உண்டு. அதாவது இந்த ஹதீஸில் 'அஜ்வா ஈத்தம் பழங்களைச் சாப்பிட்டால் சூனியமும் பாதிக்காது' என்று தெளிவாக உள்ளது. இதன் மூலம் சூனியம் சாத்தியமென்பது உண்மையாகின்றது. அதாவது சூனியம் எதார்த்தமானது என்பதற்கு ஆதாரமாக வைக்கப்படும் ஹதீஸ்களில் இது மிக முக்கியமானது. எனவே இதை ஏற்றுக் கொண்டால் சூனியத்தையும் ஏற்றுக் கொள்ளவேண்டியேற்படும் என்ற காரணத்தால் மேற்படி குறித்த ஹதீஸை சிலர் மறுப்பது வெளிச்சம். இஸ்லாமிய உலகம் மறுக்காமல் தலைமுறையாக்கம் செய்யப்பட்டு வந்த ஒரு செய்தியை கிறிஸ்துவ உலகின் விமரிசனத்திற்காய் மறுத்துவிட்டு அதற்கு பகுத்தறிவுக்கு ஒத்து வரவில்லையென காரணம் சொல்வது எதிர்கொள்வதில் உள்ள மறைமுகமான தோல்வி நிலையையே காட்டுகிறது. இன்ஷா அல்லாஹ் இஸ்லாத்திற்கு அந்த நிலை ஒரு பொழுதும் ஏற்படாது.
சூனியத்தால் பிறருக்குத் தாக்கங்களை ஏற்படுத்த முடியுமா என்பது பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.
{وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ} [البقرة: 102]
'அவர்கள் இதன் மூலம் அல்லாஹ்வின் அனுமதியின்றி ஒருவருக்கும் தீங்கிழைக்கக் கூடியவர்களாகவில்லை.' (அல் பகரா : 102)அல்லாஹ் நாடினால் சூனியத்தின் மூலம் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்பதை இதிலிருந்து மேலோட்டமாகவே விளங்கலாம். இதே வசனத்தில் வரும் அடுத்த பகுதியில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.
{وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ} [البقرة: 102]
'அவர்கள் தங்களுக்கு எவ்விதப் பயனுமளிக்காத, தங்களுக்குத் தீங்கிழைப்பதையே கற்றுக் கொண்டனர்.' (அல் பகரா : 102)அதாவது சூனியத்தால் அவர்களுக்குத் தீங்குகள் ஏற்படும் என்பதைத் தெளிவாகவே இவ்வசனம் சொல்கின்றது. ஆகவேதான் சூனியத்தால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள அஜ்வா ஈத்தம் பழங்களை சாப்பிடுமாறு நபியவர்கள் பரிந்துரைத்துள்ளார்கள் என்று உறுதியாகக் கூறலாம்.
எனவே இந்த ஹதீஸ் எந்தவொரு திருமறை வசனத்துக்கும் முரண்படவில்லை. நிதர்சன உண்மைகளுக்கும் முரண்படவில்லை. அஜ்வா ஈத்தம் பழங்களில் இத்தகைய தன்மைகள் இல்லையென்பதை மருத்துவ ரீதியில் நிரூபிக்கவும் முடியாது. மாறாக அறிவியல் இதை நாளுக்கு நாள் உண்மைப்படுத்திக் கொண்டே வருகின்றது. மீத்தனோலால் பாதிப்புற்று மரணிக்கும் தருவாயிலிருப்பவருக்கு ஈத்தம் பழங்களைக் கொடுத்தால் அவர் ஆரோக்கியம் பெறலாம் என்ற செய்தி இதற்கு வலுவான சான்றாகும்.
11-கருஞ்சீரக ஹதீஸின் நிலையென்ன
இந்த ஹதீஸை நாம் மறுப்போமாயின் இன்னும் பல ஹதீஸ்களையும் நாம் மறுக்கவேண்டிய நிலையேற்படும். இதற்கு உதாரணமாகக் கீழ் வரும் ஹதீஸைக் கூறலாம்.
صحيح البخاري 5688 – أَبُو سَلَمَةَ وَسَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُمَا أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي الْحَبَّةِ السَّوْدَاءِ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلَّا السَّامَ
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'கருஞ்சீரக விதைiயில் 'மரணத்தைத்' தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி)
ஆதாரம் : பு ஹாரி 5688
ஆரோக்கியமாக இருப்பதற்காக கருஞ்சீரகம் சாப்பிட்டு வந்த ஒருவர் நோய்வாய்ப்பட்டு மரணித்து விடுகின்றார். 'மேற்கூறப்பட்ட ஹதீஸினடிப்படையில் பார்த்தால், கருஞ்சீரகம் சாப்பிட்டால் நோயேற்படக் கூடாது. ஆனால் இவருக்கு நோயேற்பட்டிருக்கின்றது எனவே இந்த ஹதீஸ் நிதர்சன உண்மைக்கு முரணானது' என்று சொல்லக் கூடாது. கருஞ்சீரகத்தில் மருத்துவக் குணங்கள் காணப்படுகின்றன என்பது உண்மையே. அதற்காகக் கருஞ்சீரகம் சாப்பிட்டால் நோயே ஏற்படாது என்று சொல்ல முடியாது என்பதே இதில் நாம் வரவேண்டிய முடிவாகும். இந்த வகையில் மருந்துகளை நாம் பரீட்சிப்போமென்றால் உலகில் எந்த மருத்துவமும் மிஞ்சாது. இது அறிவுபூர்வமான வாதமல்ல அபூர்வமான வாதம். அல்லாஹ் மார்க்கத்தை தவறான விளக்கங்களிலுருந்து பாதுகாக்கப் போதுமானவன். வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.
http://mujahidsrilanki.com/2012/10/date-and-toxicology/
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக