உண்ணவும் பருகவும் இஸ்லாம் சொல்லும் வழிமுறை
அல்லாஹ்வின் பெயரைக் கூறு! உன் வலது கையால் சாப்பிடு! உனக்கு முன்னால் உள்ள பகுதியிலிருந்து சாப்பிடு! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் இன்னு அபூ ஸலமா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ.நபி (ஸல்) அவர்கள் தட்டை சுத்தமாக்கிக்கொள்ளும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். உங்களின் எந்த உணவில் பரக்கத் உள்ளது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். (எனவே) சுத்தமாக வழித்துச் சாப்பிடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ.
சாப்பிடும் போது கீழே விழும் பொருளை சுத்தம் செய்து உண்ண வேண்டும் என்பதையும், தட்டிலோ, விரல்களிலோ ஒட்டியிருக்கும் உணவை வீணாக்காமல் தட்டை வழித்தும், விரலை சூப்பியும் சுத்தமாகச் சாப்பிட வேண்டும் என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து அறிய முடிகிறது.
சாப்பிட்ட பின்…
நபி (ஸல்) அவர்கள் முன்னாலிருந்த சாப்பாட்டு தட்டு எடுக்கப்படுமானால்… "அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கkரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி ஃகைர முவத்தயின் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்புனா" என்று கூறுவார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி.
(துஆவின் பொருள்: தூய்மையான ஏராளமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. இறைவா! நீ உணவின்பால் தேவையுடையவன் அல்ல உன்னை யாரும் விட்டுவிட முடியாது)
ஒரு அடியான் உணவை சாப்பிடும்போது அந்த உணவுக்காக அவனைப் புகழ்வதையும், நீரைப் பருகும்போது அந்த நீருக்காக அவனை புகழ்வதையும் அல்லாஹ் பொருந்திக்கொள்கிறான் என்பதும் நபிமொழி. அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ, நஸயீ.
உணவை குறைகூறக் கூடாது விருந்துக்கு செல்லும்போது குறைகள் இருந்தால் அதை சகித்துக்கொள்ள வேண்டும். அதை வெளிப்படுத்தும்போது விருந்தளித்தவர் மனது கஷ்டப்படலாம்.
பிடிக்காத உணவு வைக்கப்படும் நேரத்தில் அதை உண்ணாமல் ஒதுக்குவது தவறல்ல. நபி (ஸல்) அவர்கள் முன்னே உடும்பு (சமைத்து) வைக்கப்பட்டபோது அதை அவர்கள் சாப்பிடவில்லை. இதைக் கண்ட காலித் இப்னு வலித் (ரலி) இது ஹராமா? என்று கேட்டார்.
அதற்கு நபியவர்கள் "இல்லை" (இது) என் குடும்பத்தில் நான் காணாத உணவாகும். அதனால் என் மனம் விரும்பவில்லை என்று கூறியவுடன், காலித் இப்னு வலித் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க, தன்னருகே அதை இழுத்துக்கொண்டு உண்ண ஆரம்பித்தார்கள். அறிவிப்பவர்: காலித் இப்னு வலீத் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்
முஅத்தா. நின்றுகொண்டு நீர் அருந்தக் கூடாது நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு குடிப்பதை தடை செய்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), அபூஸயீத் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்.
தண்ணீரில் மூச்சுவிடவோ, ஊதவோ கூடாது. குடிக்கும் பாத்திரத்தில் மூச்சுவிடுவதையும் ஊதுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா.
உங்களில் எவரும் இடதுகையால் குடிக்கவோ, சாப்பிடவோ வேண்டாம். ஏனெனில், சைத்தான்தான் இடது கையால் குடிக்கிறான், சாப்பிடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்கள்: முஸ்லிம் முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ.
முஸ்லிமல்லாதவர்களின் பாத்திரங்கள் முஸ்லிமல்லாதவர்களின் வீட்டிற்கு விருந்திற்கு செல்லும் போது அவர்களின் பாத்திரங்களில் உண்ணலாமா? என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்களோடு நாங்கள் போரிலிருந்த சமயம் இணை வைப்போரின் பாத்திரங்கள் கிடைத்தன. அதைத்தான் (உண்பதற்கும், பருகுவதற்கும்) நாங்கள் உபயோகித்தோம். அது விஷயமாக நபி (ஸல்) அவர்களால் நாங்கள் குறை கூறப்படவில்லை. அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) நூல்: அபூதாவூத்.
முஸ்லிமல்லாதவர்களின் பாத்திரங்களில் சாப்பிடுவதும், அதில் சமைப்பதும் நபி (ஸல்) அவர்களால் தடுக்கப்படவில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. என்றாலும் தூய்மையான உணவு சமைக்கப்பட்ட பாத்திரங்களையே சாதாரணமாக பயன்படுத்தலாம்.
பன்றி இறைச்சி போன்றவை சமைக்கப் பயன்படும் பாத்திரங்கள், மது அருந்தப் பயன்படும் குவளைகள் ஆகிய பாத்திரங்களில் உணவு தரப்படுமானால், அதை நன்றாகக் கழுவிய பின் உண்ணலாம், பருகலாம். இதைப் பின்வரும ஹதீஸிலிருந்து விளங்கலாம்.
அபூஸல்பா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் வேதமுடையோரின் அருகில் வசிக்கிறோம். அவர்கள் தங்களின் சமையல் பாத்திரங்களில் பன்றி இறைச்சியை சமைக்கிறார்கள்.
அவர்களின் பாத்திரங்களில் மது அருந்துகிறார்கள் (அந்தப் பாத்திரங்களை நாங்கள் பயன்படுத்தலாமா?) என்று கேட்டார். அவர்களின் பாத்திரங்கள் அல்லாத (வேறு) பாத்திரங்கள் கிடைத்தால் அதில் உண்ணுங்கள், குடியுங்கள். அவர்களிடம் மட்டுமே பெற்றுக்கொண்டால் தண்ணீரால் கழுவிவிட்டு பின்பு உண்ணுங்கள், பருகுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஷலபா (ரலி) நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ.
நபி (ஸல்) அவர்களையும் மற்றும் நால்வரையும் ஒரு மனிதர் விருந்துக்கு அழைத்தார். அவர்களுடன் இன்னொரு மனிதரும் பின்தொடர்ந்து வந்தார். வீட்டுவாசலை நபி (ஸல்) அடைந்ததும், விருந்துக்கு அழைத்தவரிடம், "இவர் எங்களைத் தொடர்ந்து வந்துவிட்டார்.
நீர் விரும்பினால் இவருக்கு அனுமதியளிக்கலாம். நீர் விரும்பாவிட்டால் இவர் திரும்பிச் சென்றுவிடுவார்" என்று கூறினார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே நான் அவருக்கு அனுமதியளிக்கிறேன்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி) நூல்கள்: புகாரி முஸ்லிம்
http://kulasaisulthan.wordpress.com
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக