ஜின்கள் பற்றி அறிந்துக் கொள்வோம்.
ஜின்கள் என்று ஒரு படைப்பு இருப்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. அந்த அளவிற்கு ஏராளமான சான்றுகள் அவைப் பற்றி உள்ளன.எந்த நோக்கத்திற்காக மனிதர்கள் படைக்கப்பட்டார்களோ அதே நோக்கத்திற்காக தான் ஜின்களும் படைக்கப்பட்டுள்ளன.
மனிதர்களையும் – ஜின்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை. (அல் குர்ஆன் 51:56)
இந்த வசனத்தில் இடம் பெறும் வணக்கம் என்பதற்கு அவனுக்கு முழுதும் கட்டுப்பட்டு நடத்தல் என்பதே சரியான பொருள். இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொருப் பொருளும் ஒவ்வொரு உயிரும் அவனை வணங்குகின்றன என்றாலும் வணங்கக் கூடிய இயல்பு இருந்தும் மாறு செய்யக் கூடிய மன நிலை இந்த இரண்டு படைப்புக்கும் இருப்பதால் பிரத்யேகமாக இந்த இரண்டு படைப்புகளை மட்டும் மேற்கண்ட வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மனிதர்களை இறைவன் படைக்கும் முன்பே ஜின் இனத்தை இறைவன் படைத்துவிட்டான். மனிதர்களின் படைப்புக்கு மூலம் மண் என்றால் ஜின் இனத்திற்கு மூலம் நெருப்பாகும்.
நெருப்புக் கொழுந்திலிருந்து அவன்(இறைவன்) ஜின்களைப் படைத்தான். (அல்குர்ஆன் 55:15)
இந்த இனம் மனிதர்களுக்கு முன்பே பூமியில் வாழ்ந்ததா…என்றால் சிலர் அப்படிக் கூறினாலும் அதற்கு தெளிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆதம் (அலை) படைக்கப்பட்டு அவருக்கு ஸூஜூது செய்ய இறைவன் கட்டளையிட்டபோது ஷெய்த்தான் மறுத்து ஆணவம் கொண்டான் என்பதை நாம் அறிவோம். இப்லீஸ் – ஷெய்த்தான் போன்ற பெயர்களால் குறிப்படப்படும் அந்த மனிதமகா எதிரிகள் தனி படைப்பல்ல அவைகளும் ஜின் இனத்தை சார்ந்தவைகள்தான்.
(இப்லிஸாகிய) அவன் ஜின் இனத்தை சேர்ந்தவனவான். (அல் குர்ஆன் 18:50)
ஆதமுக்கு ஏன் ஸஜ்தா செய்யவில்லை என்பதற்கு ஷெய்த்தான் எடுத்து வைத்த வாதம், தான் ஜின் இனத்தை சார்ந்தவன் என்பதை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது.
'நான் உனக்கு கட்டளையிட்ட போது நீ ஆதமுக்கு ஸஜ்தா செய்யாமல் உன்னை தடுத்தது எது.. என்று இறைவன் கேட்க, நான் ஆதமைவிட மேலானவன் நீ என்னை நெருப்பினால் படைத்தாய். அவரை மண்ணினால் படைத்தாய் என்று கூறினான். (அல் குர்ஆன் 7:12)
நான் நெருப்பால் படைக்கப்பட்டவன் என்று ஷெய்த்தான் சொன்னதிலிருந்து ஷெய்த்தானியக் கூட்டம் முழுவதும் ஜின் இனத்தை சேர்ந்தவைதான் என்பது தெளிவாகின்றது.
இந்த ஜின் கூட்டம் முழுவதும் மலக்குகளுடன் இருந்துள்ளார்கள் என்ற விபரத்தை ஆதமுக்கு ஸூஜூது செய்யுங்கள் என்று கூறும் இறைவசனங்களிலிருந்து – சிந்திக்கும் போது – விளங்கலாம்.
மலக்குகளை நோக்கி நாம் சொன்னோம் ஆதமுக்கு ஸஜ்தா செய்யுங்கள் என்று. (அல் குர்ஆன் 2:34 இன்னும் பல இடங்களில் இந்த சம்பவம் இடம் பெறுகிறது)
நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள் என்று நாம் சொன்னோம். (அல் குர்ஆன் 2:38)
'அனைவரும் இறங்கி விடுங்கள்' என்ற வார்த்தை மலக்குகளை விடுத்து மற்ற ஜின் இனத்திற்கும் ஆதம் – ஹவ்வா ஆகிய மனித இனத்தவர்களுக்கும் சொல்லப்பட்ட வார்த்தையாகும்.
இதுவரை நாம் கண்ட விபரத்தின் சுருக்கும் என்னவென்றால்
மனிதர்களுக்கு முன்பே ஜின் இனம் படைக்கப்பட்டு விட்டது
அவர்கள் மலக்குகளுடனே இருந்துள்ளார்கள்.
ஷெய்த்தான் – இப்லீஸ் போன்ற தீய சக்திகள் அனைத்தும் ஜின் இனத்தை சார்ந்தவையாகும்.
ஜின் இனம் நெருப்பால் படைக்கப்பட்டதாகும்.
ஆதம் ஹவ்வா இருவருடனும் சேர்ந்து இவர்கள் பூமிக்கு இறங்குகிறார்கள்.
இன்றைக்கும் இந்த இனம் பூமியில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன. மனிதர்களால் அவற்றின் சொந்த உருவத்தை பார்க்க முடியாத அதே வேளை அவை (குறிப்பாக தீயவை) மனிதர்களைப் பார்த்துக் கொண்டும் சூழ்ந்துக் கொண்டும் இருக்கின்றன.
அவர்களுக்கும் இறைத்தூதர்கள் உள்ளனர்
(மறுமை நாளில் இறைவன் ஜின் – மனித கூட்டத்தாரை நோக்கி) ஜின் – மனித கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை படித்துக் காட்டவும், இந்நாளில் சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா…என்று (இறைவன்) கேட்பான். அதற்கு அவர்கள் நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சிக் கூறுகிறோம் என்று கூறுவார்கள். இதற்கு காரணம் இந்த உலக வாழ்வில் அவர்கள் மயங்கி நிராகரிப்பவர்களாகவே இருந்தது தான். (அல் குர்ஆன் 6:30)
ஜின் கூட்டத்தாரே உங்களிலிருந்தே உங்களுக்கு தூதர் வந்துள்ளார் என்று இறைவன் கூறுவதிலிருந்து ஜின்களுக்கு ஜின் இனத்திலிருந்தே தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்பதை விளங்கலாம். ஆனாலும் இவர்கள் மனித தூதர்கள் சிலரிடமும் அவர்கள் கொண்டுவந்த வேதத்திலும் பாடம் கற்றுள்ளார்கள்.
இவர்களுக்கு ஜின் இனத்திலிருந்து தூதர்கள் வந்தார்கள் என்பது முஹம்மத்(ஸல்) அவர்களின் வருகைக்கு முன்பு தான். முஹம்மத்(ஸல்) மனித குலத்திற்குறிய தூதராக மட்டுமில்லாமல் ஜின் இனத்திற்குறிய தூதராகவும் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் கொண்டுவந்த குர்ஆன் மனித – ஜின் ஆகிய இரு இனங்களுக்கும் பொதுவானதாகும்.
இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் – வேதங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதிலிருந்தே மனித சமூகம் போன்று ஜின் இனமும் ஒரு பெரிய சமூகமாக ஆண் – பெண், சந்ததி பெருக்கம், பிறப்பு வாழ்வு, இறப்பு என்று மனித இயல்பில் பெரும் பகுதி கொடுக்கப்பட்டவை ஹராம் – ஹலாலுக்கு உட்படுத்தப்பட்டவை என்பதை புரிந்துக் கொள்ளலாம்.
நபி(ஸல்) அவர்களுடன் நடந்த சந்திப்பு.
(நபியே) இந்தக் குர்ஆனை செவியேற்பதற்காக ஜின்களிலிருந்து சிலரை நாம் உம்மிடம் திருப்பியதும் அவர்கள் அங்கு வந்தபோது மௌனமாக இருங்கள் என்று(உடனிருந்தவர்களிடம்) சொன்னார்கள். குர்ஆன் படிப்பது முடிந்ததும் தம் சமூகத்தாரிடம் சென்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர். (அல் குர்ஆன் 46:29)
(ஜின்கள்) கூறினார்கள் 'எங்களுடைய சமூகத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தை செவிமடுத்தோம். அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கிறது. தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப் படுத்துகிறது அது உண்மையின் பக்கமும் – நேரான மார்க்கத்தின் பக்கமும் (நமக்கும் சேர்த்து) வழிக்காட்டுகிறது.(அல் குர்ஆன் 46:30)
எங்களுடைய கூட்டத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளித்து அவரை ஈமான்(நம்பிக்கைக்) கொள்ளுங்கள். இறைவன் உங்களுக்கு மன்னிப்பு அளிப்பான். நோவினைத் தரும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றுவான் என்றும் கூறினார்கள் (அல் குர்ஆன் 46:31)
ஆனால் எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளிக்கவில்லையோ அவரால் பூமியில் (சத்தியத்தை)இயலாமலாக்க முடியாது. அவனையன்றி பாதுகாப்போர் எவருமில்லை. (அல் குர்ஆன் 46:32)
இது நபி(ஸல்) தாயிபிலிருந்து திரும்பும் வழியில் குர்ஆனை ஓதி வரும் போது ஜின்கள் செவியேற்று அவர்களை விசுவாசித்த சம்பவமாகும். இந்த சந்தர்பத்தில் ஜின்கள் தம்மிடம் வந்ததையோ – குர்ஆனை சேவியேற்று சென்றதையோ நபி(ஸல்) அறியவில்லை. பின்னர் இறைவன் அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தான். இதை 72 வது அத்தியாயத்தின் ஆரம்ப வசனத்திலிருந்து அறியலாம். மேலும் அந்த அத்தியாயத்தில் இறைவனுக்கு இணை கற்பித்து முஷ்ரிக்குகளாகவும் – காபிர்களாகவும் இருக்கும் ஜின்கள் பற்றியும் படைத்த ஒரே இறைவனுக்கு கட்டுப்பட்டு ஏகத்துவத்தை ஏற்று முஸ்லிம்களாக வாழும் ஜின்கள் பற்றிய விபரமும் கூறப்பட்டுள்ளது.
46:30 வது வசனத்தில் மூஸாவிற்கு பிறகு இது இறக்கப்பட்டுள்ளது என்ற ஜின்களின் கூற்றிலிருந்து முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன்னுள்ள முக்கிய நபிமார்களையும் அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களையும் ஜின்கள் அறிந்திருந்தனர் என்பதையும் அவற்றின் மீது நல்ல ஜின்கள் விசுவாசம் கொண்டிருக்கக் கூடும் என்பதையும் விளங்கலாம்.
ஜின்களுக்கும் தூதுத்துவ செய்தியை எடுத்துக் கூறும் பொறுப்பு நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டப் பிறகு ஜின்களின் பிரதிநிதிகள் நபி(ஸல்) அவர்களை சந்தித்து – அழைத்து சென்ற விபரம் முஸ்லிம் – திர்மிதி – அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
ஜின்கள் நபி(ஸல்) அவர்களை சந்தித்த இரவில் அந்த சந்திப்பில் தாமும் கலந்துக் கொண்டதாக கூறும் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள். அந்த இரவில் ஜின்களுக்கு குர்ஆன் கற்றுக் கொடுக்கப்பட்ட சம்பவத்தையும் – ஜின்களின் காலடி சுவடுகள் – அவர்கள் சமைத்த பாத்திரங்கள் – அடுப்புகள் குறித்தும் அறிவிக்கிறார்கள்.(திர்மிதி 3311)
இந்த சந்திப்பிற்கு பிறகு தான் நபி(ஸல்) கீழ் கண்ட அறிவிப்பை செய்கிறார்கள்.
நீங்கள் மல ஜலம் கழித்தால் விட்டை மற்றும் எலும்பால் சுத்தம் செய்யாதீர்கள் ஏனெனில் அவை உங்கள் சகோதர ஜின்களின் உணவாகும். (அபூஹூரைரா – இப்னு உமர் – ஜாபிர் போன்ற நபித்தோழர்கள் இந்த செய்தியை அறிவித்து இதில் உடன் படுகிறார்கள். முஸ்லிம் – திர்மிதி – அபூதாவூத் – ஹாக்கிம்)
ஜின்களும் – சுலைமான் (அலை) அவர்களும்.
தாவூத்(அலை) அவர்களின் மகனான சுலைமான்(அலை) அவர்களுக்கு இறைவன் வல்லமை மிக்க அரசாங்கத்தையும் – ஆற்றல் மிகுந்த வலிமையையும் – மெய் சிலிர்க்கக் கூடிய மொழியாற்றலையும் கொடுத்திருந்தான். இவற்றிர்க்குரிய ஆதாரங்களை முதலில் அறிவோம்.
சுலைமானுக்கு நாம் கடுமையாக வீசும் காற்றையும் வசப்படுத்திக் கொடுத்தோம் அது அவரது ஏவலின் படி பாக்கியம் பொருந்திய பூமிகளுக்கு அவரை எடுத்துச் செல்லும். (அல் குர்ஆன் 21:81)
ஷைத்தான்களிலிருந்து கடலில் மூழ்கி(முத்தெடுத்து) வரக் கூடியவர்களை வசப்படுத்திக் கொடுத்தோம். (அல் குர்ஆன் 21:82)
சுலைமானுக்கு ஜின்கள் – மனிதர்கள் – பறவைகள் ஆகியவற்றிலிந்து படைகள் திரட்டப்பட்டு அவை தனித் தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. (அல் குர்ஆன் 27:17)
எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஒரு எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) ஓ! எறும்புகளே நீங்கள் உங்கள் புற்றுக்குள் நுழைந்துக் கொள்ளுங்கள். சுலைமானும் அவருடைய சேனைகளும் அவர்கள் அறியாத விதத்தில் உங்களை நசுக்கி விடாதிருக்க… என்று கூறிற்று. இதைக் கேட்டு (சுலைமான்) அவர் புன்னகைத்தார் (அல்
சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம் அதன் காலை பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது. மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகி ஓட செய்தோம். ஜின்களில் உழைப்பவற்றிலிருந்து அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். (அல் குர்ஆன் 34:14)
இந்த வசனங்கள் அனைத்தும் சுலைமான்(அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அருட்கொடையின் மகத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. அவருக்கு மட்டும் இப்படிப்பட்ட அருட்கொடை கிடைக்கக் காரணம் என்ன?
அவர்கள் இறைவனிடம் முறையிட்ட முறையீடுதான்!
எனக்கு பின்னர் எவருமே அடைய முடியாத ஒரு அரசாங்கத்தை எனக்கு அன்பளிப்பாக கொடுப்பாயாக நிச்சயமாக நீயே பெரும் கொடையாளனாவாய் என்று கூறினார் (அல் குர்ஆன் 38:35)
சுலைமான் நபி அவர்களின் பிரார்த்தனையை ஏற்ற இறைவன் அவர்களுக்கு பின் எவருமே அடைய முடியாத பெரும் அரசாங்கத்தை அவர்களுக்கு வழங்கினான். அதற்குரிய ஆதாரங்களைத் தான் மேலே கண்டோம். அந்த அரசாங்கத்தில் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடந்ததில் ஜின்களும் அடங்கும். பலசாலியான ஜின்கள் – முத்துகுளிக்கும் ஷைய்த்தான்கள் எல்லாம் அவர்களின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருந்தன.
வீட்டிற்கு வரும் – ஜின்கள் – பாம்புகள்
ஜின் என்ற அரபு பதத்திற்கு – மறைவானது – என்று பொருள். ஜின் என்ற படைப்பு கண்ணுக்குப் புலப்படாததாக இருப்பதால் அவற்றிர்க்கு அந்தப் பெயர் வந்தது. சில உயிரினங்கள் உருமாற்றம் பெரும் தன்மையைப் பெற்றுள்ளதை நாம் அறிவோம். அதே போன்று ஜின்களும் பல வடிவங்களில் உருமாற்றம் பெரும் சக்தியைப் பெற்றதாகும்.
ஜின்கள் மூன்றுவகைப்படும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
1) பாம்பு வடிவில் உள்ளவைகள். 2) (கண்ணுக்கு புலப்படாமல்) பூமியில் வாழ்பவை 3) ஆகாயத்தில் பறப்பவை. (அபூ தஅல்பா (ரலி) ஹாக்கிம்)
பொதுவாக பாம்பினத்தை ஜின்கள் என்று குறிப்பிடலாம் இதற்கு குர்ஆனில் ஆதாரம் கிடைக்கிறது. (பார்க்க 27:10)
பாம்புகள் அனைத்தும் ஜின்கள் இல்லை ஆனால் ஜின்களில் சிலது பாம்புகளிலும் அடங்கும். இதை கருத்தில் கொண்டுதான் வீட்டில் உலவும் பாம்புகளை எடுத்தவுடன் அடித்து விட வேண்டாம் ஏனெனில் அவை ஜின்களாகக் கூட இருக்கலாம் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
ஜின்கள் கடும் விஷம் உள்ள பாம்புகளின் உருவில் இருக்காது என்பதால் கடும் விஷம் உள்ள பாம்புகளை எங்கு கண்டாலும் உடனே அடித்து விட வேண்டும்.
நபி(ஸல்) மேடையில் நின்று உரையாற்றிக் கொண்டிருக்கும் போது "பாம்புகளைக் கொள்ளுங்கள் – முதுகில் வெள்ளைக் கோடுள்ள பாம்பையும் – குட்டையான சிதைந்த வாலுள்ள பாம்பையும் கொள்ளுங்கள் அவை இரண்டும் கண் பார்வையை அழித்து விடும்" என்றார்கள். (இப்னு உமர்(ரலி) புகாரி 3297)
விஷமுள்ள பாம்புகளை நபி(ஸல்) குறிப்பட்டுக் காட்டியதிலிருந்து அத்தகையப் பாம்புகளை காலம் கடத்தாமல் அடித்து விட வேண்டும். நல்லப் பாம்பை அடிக்காமல் விட்டு விட வேண்டும் என்பதெல்லாம் இந்த ஹதீஸ் கட்டுப்படுத்தாது. அவை கட்டாயம் அடிக்கப்பட வேண்டிய பாம்புகளாகும்.
வீட்டில் தென்படும் பாம்புகளில் ஜின்களும் அடங்கும் அதனால் அதை உடனே அடிக்காமல் போய்விடு என்று கூறுங்கள் மூன்றுமுறை கூறியும் போகாவிட்டால் அதை அடியுங்கள் என்றும் நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அபூ லுபாபா(ரலி) புகாரி 3298 – முஸ்லிம்)
பாம்புக்கு காது கேட்குமா… தமிழ் அறியுமா… என்றெல்லாம் அலச வேண்டிய அவசியமல்லை. பாம்புக்கு செவி புலன் கிடையாது என்பது உண்மைதான். பாம்புக்கு தான் செவி புலன் கிடையாதே தவிர பாம்பு வடிவில் வரும் ஜின்னுக்கு செவிபுலன் உண்டு. "போய்விடு" என்ற அறிவிப்பு ஜின்னுக்குத் தானே தவிர பாம்புக்கு அல்ல. நபி(ஸல்) அவர்களின் வார்த்தையில் பொய் இருக்காது என்பதால் எந்த மொழியில் சொன்னாலும் ஜின்களுக்கு விளங்கும் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுலைமானுக்கு கட்டுப்பட்டதாக இருந்தால் போய் விடு என்று ஹதீஸ் இருப்பதாக நாம் அறிந்தவரை தெரியவில்லை. சிந்தித்துப் பார்க்கும் போது அவ்வாறு நபி(ஸல்) சொல்லி இருக்க முடியாது என்று புரிந்துக் கொள்ளலாம்.
சுலைமான்(அலை) அவர்களுக்கு ஜின்கள் கட்டுப்பட்டன என்பது உண்மை. இந்த கட்டுப்பாடு எதுவரை நீடித்தது? அவர்கள் உயிரோடு இருக்கும் வரை தான் இந்த கட்டுப்பாடு நீடித்தது. இதை நாமாக சொல்லவில்லை. குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்.
(சுலைமான்) அவர் மீது நாம் மரணத்தை விதித்த போது அவரது கைத் தடியை அறித்த நிலத்து பூச்சி (கரையான்)யைத் தவிர வேறெதுவும் ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. அவர் கீழே விழவே 'மறைவான விஷயங்களை நாம் அறிந்திருந்தால் இழிவு தரும் இந்த கடின வேலையில் நீடித்திருக்கத் தேவையில்லை என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது. (அல்குர்ஆன் 34:14)
சுலைமான் (அலை) இறந்து அது ஜின்களுக்கு தெரிய வந்ததும் அவரது கட்டுப்பாட்டிலிருந்து ஜின்கள் விடுபட்டு விட்டன என்பதை இந்த வசனம் தெளிவாக அறிவித்து விடுகிறது. எனவே இன்றைக்கும் ஜின்கள் சுலைமானுக்கு (அலை) அவர்களுக்கு கட்டுப்படுகிறது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம். (ஜின்கள் கட்டுப்படுவதாக இருந்தால் அவற்றிர்க்கு கட்டளையிட சுலைமான் (அலை) உயிரோடு இருக்க வேண்டும். உயிரோடு இல்லையென்றால் ஜின்களுக்கு கட்டளையிடுவது யார்?)
ஒரு வேளை இன்றைக்கும் கட்டுப்படுவதாகவே வைத்துக் கொள்வோம் – ஒரு பேச்சுக்குதான் – வைத்துக் கொள்வோம்.
பிறரது கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றிர்க்கு நாம் எப்படி ஆர்டர் போட முடியும்.
ஒரு பள்ளிக் கூடத்தில் வேலை செய்யும் ஆசிரியரைப் பார்த்து மாணவன் நீங்கள் தலைமையாசிரியருக்கு கட்டுப்பட்டவராக இருந்தால் எனக்கு அதிக மார்க் போடுங்கள் என்கிறான்.
முகலாய மன்னர்களுக்கு நீங்கள் கட்டுப்படுபவர்களாக இருந்தால் எங்களுக்கு வரி கொடுங்கள் என்று இன்றைய ஆட்சியாளர்கள் கேட்கிறார்கள்.
இதுவெல்லம் அறிவுப்பூர்வமான வாதம் என்று யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். சுலைமான்(அலை) அவர்கள் பற்றிய நிலையும் அப்படித்தான். அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் யாராவது இப்படி சொல்லி இருந்தாலாவது ஓரளவு நியாயம் இருக்கும். அவர்கள் மவுத்தாகி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி சொல்வது எந்த வகையிலும் பொருந்தவில்லை.
இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுலைமான் (அலை) அவர்களுக்கு ஜின்கள் மட்டும் வசப்பட்டு இருக்கவில்லை. காற்றும் வசப்பட்டிருந்தது. இன்றைக்கு வேகமாக புயல் காற்று வீசும் போது "நீ சுலைமானுக்கு கட்டுப்பட்டால் வீசாமல் நின்று விடு" என்று யாராவது சொல்ல முடியுமா… ஜின்களுக்கு ஒரு நியாயம் காற்றுக்கு ஒரு நியாயம் கற்பிக்க முடியாது.ஏனெனில் இரண்டும் சுலைமான் நபிக்கு கட்டுப்பட்டது தான்.
சுலைமானுக்கு கட்டுப்பட்டால் என்று ஹதீஸ் இருப்பதாக யாராவது கூறினால் ஹதீஸ் என்னையும் அது இடம் பெறும் நூலையும் கேளுங்கள் முடிந்தால் அந்த காப்பியை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஜின்கள் பற்றி ஓரளவு இந்தக் கட்டுரையில் விளக்கியுள்ளோம். ஜின்களை வசப்படுத்த முடியுமா… போன்ற மேலதிக விளக்கம் தேவைப்படுபவர்கள் எங்களுக்கு எழுதலாம். (இறைவன் மிக்க அறிந்தவனாக இருக்கிறான்)
http://kulasaisulthan.wordpress.com
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக