விஷமாகும் சர்க்கரை!
நேற்று, பணக்கார வீடு... இன்று, வீட்டுக்கு வீடு...
ஸ்பெஷல் ஸ்டோரி
-
மிகமிக முக்கியமாக ஸ்வீட்டுக்குத்தான் இதில் முதலிடம் கொடுத்து வைத்திருக்கிறோம். இளசு முதல் பெருசு வரை எல்லோரும் ஏகப்பட்ட ஸ்வீட்களோடு, தீபாவளியைக் கொண்டாடித் தீர்த்திருப்போம். தீபாவளிக்கு மட்டுமா... பிறந்த நாள், திருமண நாள், தேர்வில் வெற்றி பெற்ற நாள்... இப்படி விதம்விதமான கொண்டாட்டங்களுக்காகவும் ஸ்வீட்களை அள்ளிக் கட்டுகிறோம். ஆனால், இவற்றின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக கண்ட கண்ட நோய்கள்... குறிப்பாக, சர்க்கரை நோயின் பிடியில் இந்தியாவே சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது... என்பதை மட்டும் மூளையில் ஏற்றிக் கொள்ளவே மறுக்கிறோம்!
உலகில் சர்க்கரை நோயில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. இதற்கு எச்சரிக்கை மணி அடிக்க வேண்டும் என்பதற்காகவோ என்னவோ... தீபாவளியை அடுத்து வரும் வகையில், 'நவம்பர் 14' அன்று 'உலக சர்க்கரை நோய் விழிப்பு உணர்வு தினம்' என்பதை அமைத்திருக்கிறார்கள் போலும்!
ஒரு காலத்தில் 'பணக்காரர்களின் வியாதி' என்று சொல்லப்பட்ட இந்த நோய், இன்றைக்கு இல்லாத வீடுகளே இல்லை... என்கிற அளவுக்கு அதிகரித்துவிட்டது. அதற்குக் காரணம்... வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாறுதல்கள்தான். அதனால்தான், 'வாழ்க்கை முறை நோய்' என்றும் இதற்கு பெயரைச் சூட்டி வைத்துள்ளனர்.
''சரியான புரிதலும், விழிப்பு உணர்வும் இல்லாததுதான் இந்த நோயாளிகளின் எண்ணிக்கை பெருகக் காரணம்'' என்று எடுத்ததுமே தன் வருத்தத்தைப் பதிவு செய்கிறார் சென்னையைச் சேர்ந்த 'சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர்' கருணாநிதி.
'
'சாப்பிடும் உணவு, வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்ற காரணிகளே... சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை முடிவு செய்கின்றன என்பதை முதலில் நாம் அனைவருமே உணர வேண்டும். சாப்பிடும் உணவு, உடலில் உள்ள திசுக்களுக்கு ஆற்றல் அளிக்கும் வகையில் குளுக்கோஸாக மாற்றப்பட்டு, ரத்தத்தில் கலக்கிறது. இதைத்தவிர கல்லீரலும் குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த குளுக்கோஸ் திசுக்களுக்கு ஆற்றல் அளிப்பதற்காக ரத்தத்தில் கலக்கிறது. இந்தப் பணியை கணையத்தில் சுரக்கும் 'இன்சுலின்' என்கிற ஹார்மோன் தொடர்ந்து செய்கிறது. அதனால் ஒருவருக்குப் போதிய அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ... அல்லது சுரக்கப்படும் இன்சுலின் போதிய அளவு ஆற்றல் கொண்டதாக இல்லை என்றாலோ... ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி, பிரச்னையை ஏற்படுத்தும். இதையே 'சர்க்கரை நோய்' என்கிறோம்'' என்று நோய் பற்றி சொன்ன டாக்டர், அதற்கான அறிகுறிகள், நோயின் வகைகள், தடுப்பு முறைகள், உணவுகள் என்று அனைத்தையும் விரிவாகவே விளக்கினார்.
அறிகுறிகள்!
''அடிக்கடி தாகம், சிறுநீர் கழித்தல், பசி ஆகிய மூன்றுமே சர்க்கரை நோயின் அறிகுறிகள். சர்க்கரை நோய்க்கு மிக முக்கிய காரணம்... உடல் பருமன். இதில் டைப்-1, டைப்-2 மற்றும் கர்ப்பக் கால சர்க்கரை நோய் என்று மூன்று வகை உள்ளன. இதைத்தவிர, 'சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை' என்று சொல்லக்கூடிய 'ப்ரீ டயாபீட்டிஸ்' வகையும் உள்ளது.
டைப்-1: உடல், இன்சுலினை முற்றிலும் சுரக்காத நிலையை டைப்-1 சர்க்கரை நோய் என்கிறோம். பெரும்பாலும் குழந்தைகளுக்கே இது ஏற்படுகிறது. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது, இன்சுலினை சுரக்கும் சுரப்பிகளை, 'கிருமிகள்' என்று நினைத்துத் தாக்கி, அழித்துவிடும். இதனால், இன்சுலின் சுரப்பு முற்றிலும் தடைபட்டு, வாழ்நாள் முழுக்க தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளும் நிலை உருவாகிவிடும். அல்லது இன்சுலின் பம்ப் பொருத்த வேண்டிய சூழல் உருவாகும்.
டைப்-2: உலக அளவில் காணப்படும் 90 சதவிகித சர்க்கரை நோயாளிகள், இந்த வகையைச் சேர்ந்தவர்கள்தான். உடலானது இன்சுலினை உற்பத்தி செய்யும். ஆனால், அது குறைந்த அளவாகவோ... அல்லது தேவையான ஆற்றல் இல்லாததாகவோ இருக்கும். பெரும்பாலும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
கர்ப்பக் கால சர்க்கரை நோய்: பெண்கள் சிலருக்கு, கர்ப்பக் காலத்தில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அதை ஈடுகட்டும் வகையில், கணையத்தால் இன்சுலின் சுரக்க முடியாமல் போகும். இதையே 'கர்ப்பக் கால சர்க்கரை நோய்' என்கிறோம். இவர்களில் 10 சதவிகிதம் முதல் 20 சதவிகிதத்தினருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மாத்திரை, மருந்து தேவைப்படுகிறது. இந்த நோய், பிரசவத்துக்குப் பிறகு தானாக மறைந்துவிடும். இப்படி பாதிக்கப்பட்டவர்கள், பின்னாளில் சர்க்கரை நோய் தாக்குதலில் சிக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
ப்ரீ டயாபீட்டிஸ்: சர்க்கரை நோயாளிகளைவிட, ப்ரீ டயாபீட்டிஸ் நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். 'சர்க்கரை நோய் எந்நேரமும் தாக்கக்கூடும்' என்று 'வானிலை அறிவிப்பு' ஸ்டைலில் எச்சரிக்கை செய்யப்பட வேண்டிய இவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு என்பது சராசரிக்கும் அதிகமாக இருக்கும். அதேநேரத்தில் சர்க்கரை நோய் என்று குறிப்பிடும் அளவுக்குக் குறைவாக இருக்கும்.
இந்த நான்கு நிலையிலும் இருப்பவர்களுக்கு உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மிகமிக அவசியம். முதல் மூன்று நிலைகளில் இருப்பவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் தேவைப்படலாம். கூடுமான வரையிலும் உணவு மற்றும் உடற்பயிற்சி மூலமாக கட்டுப்படுத்துவதே நல்லது. எல்லை மீறும்போது, மருந்துகள், இன்சுலின் இவற்றை விட்டால் வேறு வழியில்லை!
இப்படி கண்டறியுங்கள்!
சாதாரண ரத்தப் பரிசோனை மூலமாகவே கண்டறிய முடியும் என்றாலும். முழுமையாக உறுதிபடுத்திக் கொள்ள ஜி.டி.டி பரிசோதனை, ஹெச்.பி.ஏ.1 சி பரிசோதனை என பல்வேறு வழிமுறைகள் உள்ளன. கைக்கு அடக்கமாக கிடைக்கும் 'குளுக்கோ மீட்டர்' கருவி மூலமாக, நாமே நம் விரலில் இருந்து 0.3 மைக்ரோ மில்லி ரத்தம் எடுத்து, சர்க்கரையின் அளவைத் தெரிந்து கொள்ளலாம். இதன் விலை 1,500 ரூபாய். இதிலுள்ள மிகப்பெரிய மைனஸ் 'இது 10 முதல் 15 சதவிகிதம் சர்க்கரையின் அளவை துல்லியமாக காட்டுவதில்லை' என்பதுதான்'' என்ற டாக்டர், தொடர்ந்து நோய்க்கான காரணிகளைப் பற்றி சொன்னார்.
நோய்க்கான காரணிகள்..?
''டைப்-2 சர்க்கரை நோய்... 45 வயதைக் கடந்தவர்களுக்கும், வயதானவர்களுக்கும் வருவதற்கான வாய்ப்பு அதிகம். உடற்பயிற்சியைக் குறைத்துக்கொள்வது மற்றும் எடை அதிகரிப்பதுதான் காரணம். மரபியல் காரணமாகவும் இந்த நோய் தாக்கும். பெற்றோர் இருவருக்குமே சர்க்கரை நோய் இருந்தால், பிள்ளைகளுக்கு வருவதற்கு 80 முதல் 90 சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது. பெற்றோரில் ஒருவருக்கு இருந்தால், 60 சதவிகித வாய்ப்பு இருக்கும். இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, 25 வயதினருக்குக்கூட சர்க்கரை நோய் வருகிறது. இதற்கு முக்கியக் காரணம்... உணவுப் பழக்கம் மற்றும் மனஅழுத்தம் ஆகியவையே.
இதய நோய்கள், பார்வை இழப்பு, சிறுநீரக செயல் இழப்பு, ரத்தக் குழாய் பாதிப்பு, நரம்பு மண்டலப் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இந்நோய் காரணமாக ஏற்படும். இது சத்தமின்றி வந்து, வாட்டி வதைக்கக் கூடிய ஒன்று என்பதால்தான், 'சைலன்ட் கில்லர்' என்றும் பெயர் சூட்டியுள்ளனர். எனவே, 'ப்ரீ டயாபீட்டிஸ்' நிலையில் இருக்கும்போதே வளர விடாமல் தடுப்பதே புத்திசாலித்தனம்'' என்ற டாக்டர் கருணாநிதி,
''திரும்பத் திரும்ப வலியுறுத்துவது உணவுப் பழக்கத்தைத்தான். இஷ்டம்போல சாப்பிடவே கூடாது. குறிப்பாக ஸ்வீட். பொதுவாக, 'ஸ்வீட் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வராது. ஆனால், சர்க்கரை நோய் வந்த பிறகு ஸ்வீட் சாப்பிடக்கூடாது' என்பார்கள். ஆனால், ஸ்வீட் என்பதே உணவுக்கு அவசியமல்ல. காரணம், நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலுமே இயற்கையாகவே போதுமான சர்க்கரை சத்து இருக்கிறது. எனவே, தனியாக சர்க்கரையை எடுத்துக் கொள்ள தேவையில்லை. கண்ணில் கண்ட இடத்தில் எல்லாம் கிடைக்கிறதே என்பதற்காக ஸ்வீட், சாக்லேட் என்று பழக்கப்படுத்துவது பேராபத்து'' என்று எச்சரிக்கை செய்தார்.
வாயைக் கட்டுவோம்... சர்க்கரையை விரட்டுவோம்!
உலக நீரிழிவு நோய் தினம்!
சார்லஸ் பெஸ்ட் என்பவருடன் இணைந்து, பிரடெரிக் பான்டிங் என்பவர், 1921-ம் ஆண்டில் சர்க்கரை நோய்க்கு பயன்படும் இன்சுலின் மருந்தைக் கண்டுபிடித்தார். பான்டிங்கின் பிறந்த தினம் நவம்பர் 14. இந்த நாள்தான், உலக அளவில் இந்த நோய் குறித்த விழிப்பு உணர்வை உண்டாக்குவதற்காக 'உலக சர்க்கரை நோய் விழிப்பு உணர்வு தினம்' என ஐக்கிய நாடுகள் சபையால் 2006-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.
காலை உணவு... தவிர்க்க வேண்டாம்!
காலை 7 மணி, மதியம் 12 மணி மற்றும் இரவு 7 மணி... இதையட்டிய நேரங்களில் நம்முடைய உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் உச்சத்தில் இருக்கும். இந்நேரத்தில் சாப்பிடும்போது... கூடுதல் உழைப்பு இன்றியே, 500 கலோரி வரையிலான ஆற்றல் எரிக்கப்படும். இதனால், உடல் எடை அதிகரிப்பது தவிர்க்கப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கென்று தனியே சமைக்க வேண்டும் என்பது கிடையாது. சர்க்கரையின் அளவை அதிகரிக்காத எந்த உணவையும் எடுத்துக் கொள்ளலாம்.
சாப்பிடுவதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்துங்கள். இது உங்களது பசியைக் குறைத்து, உணவு எடுத்துக் கொள்ளும் அளவையும் குறைக்கும். மூன்றுவேளை சாப்பிடும் உணவை, ஐந்து அல்லது ஆறு வேளைகளாக பிரித்துச் சாப்பிடலாம். 'நானெல்லாம் ரொம்ப பிஸி...' என்று அலுவலக வேலைகளில் தீவிரமாக இருப்பவர்கள்... கையோடு காய்கறி மற்றும் பழங்களை சாலட்களாக எடுத்துச் சென்று, டீ குடிக்கும் நேரம்... இடைவெளி கிடைக்கும் நேரம் என்று சாப்பிட்டுக் கொள்ளலாம். தினசரி உணவில் குறைந்தது 25 கிராம் முதல் 30 கிராம் அளவுக்கு நார்ச்சத்துள்ள உணவுகள் அவசியம். அதிக அளவில் பச்சைக் காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம்.
தினசரி உணவு அட்டவணைக்கு உட்பட்டு அல்லது போதுமான உடற்பயிற்சி செய்பவர்கள்... இனிப்பு வகைகளை கொஞ்சமாக சாப்பிடலாம். மற்றவர்கள் இனிப்புப் பொருட்களை தவிர்ப்பதுதான் நல்லது. குறிப்பாக வெள்ளை சர்க்கரை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கருப்பட்டி, வெல்லம், நாட்டுச்சர்க்கரை போன்றவற்றைச் சேர்க்கலாம்.
துடிப்பான வாழ்க்கைமுறை..!
உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லாதவர்கள்... இனியாவது தினமும் உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி என ஏதாவது ஒன்றை செய்யத் தொடங்குங்கள். தினமும் குறைந்தது 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கலாம். இதைச் செய்ய முடியாதவர்கள் எளிய நடை பயிற்சி, வீட்டு வேலைகளை செய்தல், மாடிப் படிகளில் ஏறி இறங்குதல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை செய்தாலே போதுமானது.
உணவு... உஷார்!
தவிர்க்க வேண்டியவை: சர்க்கரை, இனிப்பு வகைகள், தேன், ஜாம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஊட்டச்சத்து பானங்கள், குளிர்பானங்கள், கார்பனேட்டட் பானங்கள், பிஸ்கட், மைதாவில் தயாரிக்கப்படும் கேக், பிரெட், பன், பீட்ஸா, பர்கர், கொழுப்பு அதிகம் உள்ள வெண்ணெய், சீஸ், வனஸ்பதி, முட்டையின் மஞ்சள் கரு, நண்டு, இறால், ஆடு, மாடு இறைச்சி, மூளை, கல்லீரல், சிறுநீரகம் போன்றவை. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நூடுல்ஸ் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள்.
குறைக்க வேண்டியவை: தேங்காய், எள், முந்திரி மற்றும் நெய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு. அசைவம் மிகவும் குறைக்கப்படவேண்டும். வாரத்துக்கு இரண்டு முறை தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி (80 கிராம்) அல்லது மீன் (100 கிராம்) எடுத்துக் கொள்ளலாம்.
எடுக்க வேண்டியவை: ஆப்பிள், கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, நாவல் பழம், பேரிக்காய், அத்தி, மாதுளை, தர்பூசணி ஆகிய பழங்களை... வயது, உடல் உழைப்பு, எடை, இதர நோய்களைப் பொறுத்து எடுத்துக் கொள்ளலாம். பழங்களை கடித்துச் சாப்பிட வேண்டுமே தவிர, சாறாக அருந்தக் கூடாது.
சிறுநீரகங்கள் ஜாக்கிரதை!
'அதுதான் சர்க்கரைக்கு மருந்து, மாத்திரைகள் இருக்கின்றனவே...' என்றபடி இஷ்டம்போல மாத்திரைகளை அள்ளி விழுங்கிக் கொண்டிருந்தால்... ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு பிரச்னைகள் ஆரம்பமாகிவிடும். இத்தனை நாட்களாக உங்களுக்கு மருந்து, மாத்திரைகளை எழுதிக் கொடுத்த அதே டாக்டர், ''அடடா... கிட்னி ஃபெயிலியர் ஆயிடுச்சே. ம்... இத்தனை வருஷமா மருந்து, மாத்திரையா சாப்பிட்டிருக்கீங்க. அதோட வீரியம் சும்மா இருக்குமா, கிட்னியை காலி பண்ணிடுச்சு'' என்று சிம்பிளாக சொல்லிவிடுவார். பிறகென்ன, கிட்னி பிரச்னையும் சேர்ந்து கொள்ள, வாழ்க்கையே நரகமாகிவிடும்!
சர்க்கரை நோயாளிகளுக்கு அழுத்தத்தைத் தாங்கக் கூடிய கால் பகுதியில் அடிக்கடி புண் ஏற்படும். இப்படி ஆறில் ஒருவருக்கு வருவதாக புள்ளிவிவரம் சொல்கிறது. இது, கால்களைத் துண்டிக்கும் அளவுக்குப் பிரச்னையை உருவாக்குகிறது. காயங்கள், வெடிப்புகள், கொப்புளங்கள், வீக்கம், நகங்களில் பிரச்னை என இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
http://pettagum.blogspot.in/2013/11/blog-post_6.html--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக