லேபிள்கள்

செவ்வாய், 25 நவம்பர், 2014

காது மடலில் தோட்டு துவாரப் பிரச்சனைகள்

காது மடலில் தோட்டு துவாரப் பிரச்சனைகள்


'காதும் காதும் வைச்சாப்போலை இரகசியம் பேசு'வதற்கு மட்டும் காதுகள் அவசியம் என்றில்லை. ஒலியை உணரும் திறன் உள்ளது என்பதால்தான் காதுகள் மிக முக்கிய உறுப்பாக இருக்கின்றன.
செவிப்புலன் இல்லாவிட்டால்?

பறவைகளில் கீச்சல்களும் வண்டுகளின் ரீங்காரங்களும், குழந்தைகளின் மழலைகளும் இல்லாத உலகில் வாழ்வது பற்றி என்றாவது சிந்தித்ருக்கிறீர்களா? 'அதிரும் இந்த ஒலிகளிலிருந்து விடுபட்டு நிசப்தமான உலகில் நிம்மதியாக இருக்க வேண்டும்' எனச் சொல்பவனின் காதுகளை ஒரு சில நிமிடங்களுக்கு செவிடாக்கிட்டால் வேண்டாம் இந்தச் சத்தமற்ற உலகு என அலறியடித்து ஓடுவான்.

ஆனால் காதுகள் செவிப்புலனுக்கான உறுப்பு மாத்திரமல்ல. அதற்கு வேறு பல பணிகளும் இருக்கின்றன. அவற்றில் சில அலங்காரத்திற்கானவை. சில அத்தியாவசியமானவை. எமது உடலின் சமநிலையைப்; பேணும் உறுப்பு காதின் உட்புறமாக உள்ளது. ஆனால் இன்று நாம் பேசப்போவது காதின் அலங்காரத்தோடு சம்பந்தப்பட்டது.

காதுமடல்

எமது முகத்தின் இரு பக்கங்களிலும் காது மடல்கள் இருக்கின்றன. குருத்தெலும்புகள் உள்ளே இருக்க அதைச் சுற்றி சிறிது கொழுப்பும், அதை மூடிய மென்மையான சருமமும் காது மடலில் இருக்கின்றன. மனிதக் காதுகளில்தான் எத்தனை அளவு வித்தியாசங்கள், மாறுபாடான நிறங்கள் தோற்றங்கள். இவற்றின் அமைப்புகள் மனிதர்களுக்கு தனித்துவமான அழகு சேர்க்கிறது.

அந்த அழகுக்கு அழகு சேர்க்க அணிகலன்கள் இணைந்து கொள்கின்றன. தோடுகளும் அவற்றை ஒத்த அணிகலங்களும் பெண்களின் தனியுடமையாக இருந்த காலம் மலையேறிப் போய்விட்டது. ஆண்கள் முக்கியமாக இளைஞர்களும் இப்பொழுது அணிந்து கொள்கிறார்கள். இவ்வாறு அணிவதற்கு பொதுவாக காதுமடலில் துளையிட வேண்டியுள்ளது. அதுதான் காது குத்தல்.

காது குத்திய துவாரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலுமாக காது மடலில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உதாரணமாக
  1. அரிப்பு, கடி புண்ணாதல் போன்றவை ஓட்டையைச் சுற்றியுள்ள தோலில் ஏற்படுவதுண்டு. தோட்டில் கலந்துள்ள உலோகங்களால் சருமத்தில் அழற்சி ஏற்படும். தங்கம் அல்லாத உலோகங்களிலான அலங்காரத் தோடுகளாலேயே பெரும்பாலும் இது ஏற்படுகிறது. சிலர் காது பகுதிக்கு சோப் போட்டுவிட்டு நன்கு அலசிக் கழுவாதுவிடுவதால் அழற்சி ஏற்படுவதும் உண்டு. அத்தகைய தோடுகளைத் தவிர்பதுடன் மருத்துவர் சிபார்சு செய்யும் கிறீம் வகைகளை பூசுவதன் மூலம் குணமாகும்.

  1. தோடு கழன்று விடுமளவு ஓட்டை பெரிதாகிவிடுவதுண்டு.

     3. காது ஓட்டை அறுந்துவிடுவதுண்டு.

பிரிந்த அல்லது பெரிதான துவாரங்களைச் சரி செய்தல்

பாரமான தோடுகளைத் அணிவதே துவாரம் பெரிதாவதற்கு முக்கிய காரணமாகும். ஒவ்வாமையால் அழற்சி ஏற்பட்டு புண்ணாகிப் பெரிதாவதும் உண்டு. காதணி எங்காவது மாட்டுப்பட்டு இழுபடுவதால் அல்லது குழந்தைகள் காது வளையத்தை விளையாட்டாக இழுப்பதால் பெரிதாவதும் அறுபடுவதும் உண்டு.
பெரிதான துவாரங்களை மறைக்க சிலர் நிறமற்ற ரேப்புகளைக் கொண்டு தற்காலிமாக ஒட்டிவிடுவதுண்டு. இது நல்ல முறையல்ல. சில மணிநேரத்திற்கு அவ்வாறு ஒட்டுவதால் பிரச்சனை ஏற்படாது. நீண்ட நேரம் ஒட்டினால் அவ்விடத்தில் அழற்சி ஏற்பட்டு எக்ஸிமாவாக மாறும்; ஆபத்து உண்டு.

அவ்வாறு இல்லாமல் இலகுவான சத்திரசிகிச்சை மூலம் இவற்றை சரிசெய்து நிரந்தரமாகப் பழைய நிலைக்குக் கொண்டுவரலாம். இதைச் செய்வதற்கு சத்திரசிகிச்சைக் கூடங்களுக்கு செல்ல வேண்டும் என்றில்லை. அதேபோல பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர்களை நாட வேண்டியதும் இல்லை. பெரும்பாலான மருத்துவர்கள் தமது ஆலோசனை அறையோடு இணைந்த சிறு சத்திரசிச்சை அறையில் வைத்தே செய்துவிடுகிறார்கள். மயக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மரக்கச் செய்தல் போதுமானது.

துல்லியமும்
  நயமும் இணைந்த நுணுக்கமான சிகிச்சை இது. மென்மையான உறுப்பு என்பதாலும், காதின் அழகைக் கெடுக்கக் கூடாது என்பதால்தான் மிகுந்த அவதானம் தேவைப்படுகிறது.

அவ்விடத்தை சுத்தம் செய்து, மரக்கச் செய்வதற்கான ஊசியை ஏற்றுவார்கள். அறுந்த அல்லது பிரிந்து துவாரத்தைச் சுற்றியுள்ள இடத்தைக் கீறி, மறுத்
(Scar) திசுக்களை அகற்றிய பின்னர் வெட்டிய அவ்விடத்தைப் பொருத்தி நுண்ணிய நூலால் தையல் இடுவார்கள். ஒரு சில நிமிடங்களுக்குள் முடிந்துவிடும்.
காயத்தை மூடி காதில் பன்டேஸ் போடுவார்கள். சுமார் ஒரு வார காலத்தின் பின்னர் தையலிட்ட நூலையும் பன்டேஜையும் அகற்றிவிடலாம். இடைப்பட்ட காலத்தில் அது நனையாமல் இருப்பது அவசியம். சுமார் ஒரு வார காலத்திற்கு அவ்விடத்தை நனைக்கக் கூடாது என்பதால் முகம் கழுவும்போது பன்டேஜில் நீர் படாமல் அவதானமாக இருக்க வேண்டும். தலைமுடியைக் கழுவி சுத்தமாக்கிய பின்னர் இச் சத்திர சிகிச்சைக்கு செல்வது உசிதமானது. அக் காலப் பகுதியில் தலைக்கு எண்ணெய் தடவாதிருப்பதும் நல்லது.

பன்டேஸ் போட்டு காயத்தை மூடாது திறந்தபடி விட்டபடி அன்ரிபயோடிக் ஓயின்மன்ட் பூசி தையலிட்ட காயத்தை மாற வைக்கும் முறையும் உள்ளது. ஆனால் இங்கு பெரும்பாலானவர்கள் அவ்வாறு செய்வதில்லை.
பொதுவாக முன்னைய துவாரத்தை முழுமையாக மூடி விடுவார்கள். பழைய இடத்தில் சிறிய துவாரத்தை மிச்சம் விடுவதில்லை. சத்திரசிகிச்சை செய்த இடம் முழுமையான உறுதி இல்லாமல் இருப்பதால் அதேயிடத்தில் மீண்டும் தோட்டை அணிந்தால் மடலின் திசுக்கள்; நொய்ந்து மீண்டும் துவாரம் பெரிதாகமல் இருப்பதற்காகவே முழுமையாக மூடுவார்கள்.

புதிதாகத் துவாரம் இடுதல்

சுமார் 1 மாத காலத்தின் பின்னர் புதிய துவாரம் இட வேண்டி நேரும். புதிய துவாரத்தை பழைய இடத்திற்கு அருகில் அவரது விருப்பதிற்கும் தோற்றத்திற்கும் ஏற்ப தேர்ந்தெடுக்கலாம். அவ்விடத்தை மரக்கச் செய்ய மருந்து பூசி செய்யலாம். அல்லது விறைப்பதற்கான ஊசி மருந்தும் போடலாம். தோட்டு நுனியில் துளையிடுவதற்காக அதன் தண்டில் சிறிய கூர் உள்ள பாரமற்ற தோடுகள் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தலாம். வேறு ஊசிகளால் துவாரமிட்டு அதில் தோட்டை அணியவும் முடியும்.

ஆயினும் மெல்லிய தண்டுள்ள பாரமற்ற தோடுகள் விரும்பப் படுகின்றன. பாரமற்ற காது வளையங்களும் உசிதமானவை. ஆனால் குழந்தைகள் இருப்பவர்களுக்கு இதனால் சிறிய ஆபத்தும் உண்டு. வளையத்திற்குள் கையை வைத்து குழந்தைகள் விளையாடும்போது இழுபட்டு துவாரம் கிழிவதையும் காது மடல் அறுந்துவிடுவதையும் காண முடிகிறது. இதைத் தடுக்க சிறிய ஸ்டற் போன்ற பாரமற்ற காதணிகளை சிறிது காலத்திற்கு அணிவது உசிதமானது.

குத்திய உடன் குருதி கசியும் காயம் இருக்கும் போதே தோடு அணிவதால் சிலருக்கு சிக்கல் ஏற்படுவதுண்டு. தோட்டில் உள்ள உலோகங்களால் ஒவ்வாமை அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அதைத் தடுப்பதற்காக துவாரம் இடப்பட்டதும் உடனடியாகத் தோடு அணிவதை தவிர்த்து துவாரத்தில் சிறிய நைலோன் நூலைச் செலுத்தி முடிந்து வைப்பதும் உண்டு. புண் நன்கு காய்ந்த பின் தோடு அணிந்தால் ஒவ்வாமை ஏற்படாது.

'ஒரு மாதம் காத்திருக்க முடியாது. வாற கிழமை கலியாணம் வருகிறது, சாமத்தியச் சடங்கு ஒன்று இருக்கிறது' என பலர் அவசரப்படுத்துவார்கள். ஸடட் வைத்து அழுத்தக் கூடிய தோடுகளை தற்காலிகமாக அணிய வேண்டியதுதான்.

வேறு பிரச்சனைகள்

காது மடல் பெரிதாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். பிறப்பிலேயே பெரிதாக இருந்து வளரும்போது மேலும் பருத்திருக்கும். சிலருக்கு அதில் சதைகள் மடிப்புற்று அழகைக் கெடுக்கும். சமுத்திரத்தில் மணற் துளியைப் போட்டதுபோல பெரிய மடிந்த காதில் காதணி மறைந்து விடுகிறது என்ற கவலை சிலருக்கு ஏற்படும். அப்படியான காதின் அளவைச் சிறிதாக்கவும் சத்திரசிகிச்சைகள் உள்ளன. ஆனால் அவற்றை அதற்கான சத்திரசிகிச்சை நிபுணர்களே செய்வது நல்லது.

செயற்கைக் காதுகள்

செயற்கைக் கால், செயற்கை மூட்டு எல்லாம் வந்துவிட்டன. செயற்கைக் காதும் வருவதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை. இவை வெறுமனே ரோபோவின் உலேகக் காதுகள் போன்றவை அல்ல. இரத்தமும் சதையும் குருத்தெலும்புகளும் கூடிய காதுகள். வளைந்து மடியக் கூடிய உயிரோட்டம் உள்ள காதுகள். Harvard Medical School in Boston, and the Kensey Nash Corporation in Philadelphia இணைந்து எலிகளுக்கான காதுகளை தயாரித்துள்ளார்கள்.

இத் தொழில் நுட்பம் வளர்ச்சியும்போது, விபத்துகளில் காதுகளை இழந்தவர்கள் இதன் மூலம் எதிர்காலத்தில் பயன்பெறுவார்கள் என நம்பலாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
http://hainallama.blogspot.in/2013/10/blog-post_8.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts