தமிழர்களின் உணவில் இரண்டறக் கலந்தது மோர் மற்றும் தயிர். தயிர் உடலுக்குச் சூடு என்பார்கள். அதே தயிரை நீர் மோராக்கினால் உடலுக்குக் குளிர்ச்சி. இப்படிப் புரியாத புதிராக உள்ள தயிர் மோரை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதில் ஏற்படும் சந்தேகங்களைப் போக்குகிறார் திருச்சியைச் சேர்ந்த டயட்டீஷியன் ஷீலா.
''தினமும் தயிர் சாப்பிடுவது நல்லதா? யாரெல்லாம் சேர்த்துக்கொள்ளக் கூடாது?''
'புரதம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி 12, ரிபோஃப்ளோவின் எனப்படும் வைட்டமின் பி2, கொழுப்புச் சத்து எனப் பல சத்துகள் தயிரில் உண்டு. 100 மி.லி தயிரில் 60 கலோரி கிடைக்கிறது. ஒல்லியாக இருப்பவர்கள், நுரையீரலில் பிரச்னை உள்ளவர்கள் நிச்சயம் தயிர் சாப்பிட வேண்டும். மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் செரிமானமாக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவுகள், பிரியாணி போன்ற உணவைச் சாப்பிடும்போது தயிர் அல்லது மோர் சாப்பிட்டால் நல்லது. ஏனெனில், இவை உணவு செரிக்கத் தேவையான பாக்ட்டீரியாக்களை உருவாக்குகின்றன. அதனால்தான் தமிழர்கள் தங்கள் உணவில் கடைசியாக தயிர் அல்லது மோர் சேர்த்துக் கொள்கின்றனர். எடை அதிகரிக்க விரும்புபவர்கள், தயிரில் சர்க்கரை கலந்து லஸ்ஸி போல் சாப்பிடலாம். ஆனால், இரவில் தயிர் சேர்த்துக்கொண்டால், உடனடியாகத் தூங்க செல்லாமல், 10 நிமிடம் நடைப் பயிற்சி செய்தபின்னர்தான் படுக்கைக்குச் செல்லவேண்டும். உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் அதிக அளவு தயிர் சேர்த்துக்கொள்ளக் கூடாது.'
''யாரெல்லாம் மோர் சாப்பிடலாம்?''
''100 மி.லி. மோரில் வெறும் 15 கலோரிதான் கிடைக்கிறது. ஆனால், இதில் நிறைய சத்துகள் இருப்பதால், எல்லோரும் மோர் அருந்தவேண்டியது அவசியம். எந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் மோர் குடிக்கலாம். தினமும் மோர் குடிப்பது உடலுக்கு நல்லது. அதிக எடையால் பாதிக்கப்பட்டவர்கள் மோர் அதிகளவு குடிக்கவேண்டும். மோருடன் இஞ்சி, வெந்தயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றைச் சேர்த்து அருந்துவது இன்னும் நல்லது. மோர் உடல் வெப்பத்தைக் குறைக்கும். சளி பிடித்திருப்பவர்கள் மோரை மிதமான சூடு செய்து குடிக்கலாம். பெப்டிக் அல்சர் வராமல் தடுக்க, பித்தப்பை மற்றும் சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தவிர்க்க தினமும் மோர் அருந்துவது அவசியம்
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக