லேபிள்கள்

புதன், 23 ஜூலை, 2014

மயக்கும் அழகுக்கு மல்லிச் சாறு! இயற்கை தரும் இளமை வரம்!

மயக்கும் அழகுக்கு மல்லிச் சாறு! இயற்கை தரும் இளமை வரம்!
மலர்களிலேயே அழகான மலர் மல்லிகைதான். தன் கொள்ளை அழகை நமக்கும் அள்ளித்தரும் குணம் கொண்ட மல்லிகையை கொடை வள்ளல் என்றே அழைக்கலாம்! வாசம் தரும் மல்லிகைப் பூ, வற்றாத வனப்பை வாரி வழங்குவது எப்படியென்று பார்ப்போமா..

சிலருக்கு கன்னங்களில் கருமையும், மூக்கின் மேல் கரும்புள்ளிகளும் தோன்றி, முக அழகைக் குலைக்கும்.
ஒரு கப் உலர்ந்த மல்லிகைப் பூவுடன், 4 லவங்கத்தைச் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் சந்தனப் பொடி சேர்த்து இவை கலக்கும் அளவுக்கு சுடு தண்ணீர் விட்டு பேஸ்ட் ஆக்குங்கள். முகம், மூக்கு, கன்னப் பகுதிகளில் இந்த பேஸ்ட்டால் 'பேக்' போடுங்கள். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். கருமையும், கரும்புள்ளியும் காணாமல் போவதுடன்.. பருக்களும் நீங்கிவிடும்.

சற்று முன் மலர்ந்த மலர் போல உங்கள் முகம் பிரகாசிக்க வேண்டுமா?
ஓட்ஸ் பவுடர் - அரை கப், பச்சைக் கற்பூரம் - 2 சிட்டிகை, மல்லிகைப் பூ சாறு - அரை கப் (ஃப்ரெஷ் மல்லிகைப் பூவை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்).. இவை கலக்கும் அளவுக்கு வெந்நீரைக் கலந்து, முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் ஒளி வீசி மினுமினுக்கும்.

ஒரு டீஸ்பூன் அரைத்த சந்தனத்துடன் மல்லிகைச் சாறு கலந்து பூசி வந்தால்.. வெயிலால் ஏற்படும் கருமை நீங்கும். பெண்கள் சிறிது கஸ்தூரி மஞ்சளையும் கலந்து கொள்ளலாம்.

தோலின் மேற்புறம் உள்ள இறந்த செல்களை அகற்றி, புத்துணர்ச்சி தருவதிலும் மல்லிகைக்கு நிகர் மல்லிகைதான்.
உலர்ந்த மல்லிகை - ஒரு கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், தோல் சீவிய ஆப்பிள் - 4 துண்டுகள்.. இவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை முகத்தில் நன்றாகத் தேயுங்கள். பின்னர், ஒரு கைப்பிடி மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரால் முகத்தைக் கழுவினால்.. இறந்த செல்கள் பறந்து, இரட்டிப்பு பளபளப்பு முகத்தை ஆட்சி செய்யும்.

அடிப்படையில் குளிர்ச்சியைத் தரும் தாவரமான மல்லிகையில் கண் மையும் செய்யலாம்.

ஒரு விளக்கில் விளக்கெண்ணெயை ஊற்றி, விளக்கின் பின்னால் இருக்கும் (கரி படியக்கூடிய பகுதி) ஸ்டாண்ட் பகுதியில் அரைத்த சந்தனத்தை தடவுங்கள். பிறகு விளக்கை ஏற்றி, ஸ்டாண்ட் பகுதியில் கரி படிந்ததும் அந்தக் கரியை வழித்து, அதில் மல்லிகைப் பூ சாறு 5 (அ) 6 சொட்டுக்கள் கலந்து கொள்ளுங்கள். இந்த மையால் கிடைக்கும் குளிர்ச்சி, பார்வையைப் பிரகாசமாக்கும்!

பிசுக்கு, பொடுகு, நுனி பிளவு போன்ற 'தலை'யாய பிரச்னைக்கும் தீர்வு தருகிறது மல்லிகை.
உதிரி மல்லிகையை வாங்கி வெயிலில் உலர்த்தி, அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடர் 2 டீஸ்பூனுடன், 2 டீஸ்பூன் வெந்தயத்தூள் கலந்து வாரம் இரு முறை தேய்த்துக் குளியுங்கள். மேற்கண்ட பிரச்னைகளைக் களைவதுடன், கூந்தலை மிருதுவாக்கி.. செழிப்பாக வளரவும் செய்கிறது இந்த மல்லிகை பவுடர்.

வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பவர்கள்.. கால் கிலோ நல்லெண்ணெயைக் காய்ச்சி, அதில் 2 கப் ஃப்ரெஷ் மல்லிகைப் பூவை போட்டு வையுங்கள். இந்த எண்ணெயைத் தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால்.. தலை குளிர்ச்சியாக இருப்பதோடு, கூந்தலும் மணமணக்கும்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை உற்சாகமூட்டும் மல்லிகைத் தைலமும், குளியல் பவுடரும் தயாரிப்பது எப்படி தெரியுமா?

தைலம் தயாரிக்க..

20 கிராம் உலர்ந்த மல்லிகைப் பூவுடன், மனோரஞ்சிதம், ரோஜா, மகிழம்பூ, ஆவாரம் பூ.. இவற்றை தலா 10 கிராம் கலந்து அரை கிலோ தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சுங்கள். வடிகட்ட வேண்டாம். அடி தங்கும் பூவிதழ்களை விட்டு விட்டு, மேலோட்டமாக எண்ணெயை மட்டும் ஊற்றி, உடலில் தடவி கால் மணி நேரம் ஊற விடுங்கள். மல்லிகை, தோலில் உள்ள சுருக்கங்களைப் போக்கும். ரோஜா, மகிழம்பூ, மனோரஞ்சிதம், ஆவாரம் பூ.. இவையெல்லாம் உடலுக்கு பொன்னிறத்தையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

குளியல் பவுடர் தயாரிக்க..
உலர்ந்த மல்லிகைப் பூ 100 கிராம், புங்கங்காய் தோல் - 50 கிராம், ஓமம் - 10 கிராம், தவனம், ரோஜா இதழ், மரிக்கொழுந்து ஆகியவை தலா 50 கிராம் சேர்த்து பவுடராக்குங்கள்.
வாரம் இரு முறை இப்படி குளிப்பதால் குளிர்ச்சியும் வாசனையும் சேர்ந்து குற்றால அருவியிலே குளித்ததுபோல் இருக்கும்.

"மணமே மருந்து!"
டாக்டர் ஜீவா சேகர், நேச்சுரோபதி மருத்துவர், சென்னை:
மல்லிகைப் பூவின் மணமே மருந்துதான் என்பது சித்த ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்ட நிஜம். மனக் கலக்கம் நீங்கி நிம்மதி பிறக்கச் செய்யும் சக்தி மல்லிகையின் மணத்துக்கு உண்டு.

குழந்தைகள் சரியாக தாய்ப்பால் குடிக்கவில்லையெனில் தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிவிடும். மல்லிகைப் பூவை மார்பில் வைத்து கச்சைக் கட்டிக் கொண்டால்.. பால் கட்டியது கரையும். (இப்படிச் செய்யும்போது குழந்தைக்குப் பால் கொடுக்கக் கூடாது.)

அடிபட்டு வீங்கிய இடத்தில் மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மல்லிகைப் பூ இலையை வாயில் போட்டு மெல்வதால் வாய்ப்புண் நீங்கும்.

காதில் ஏற்படும் வலி, குத்தல், சீழ் போன்றவற்றுக்கு மல்லிகை இலை எண்ணெயை 2 சொட்டு விட்டால் சரியாகிவிடும்.

கால் ஆணியால் அவதிப்படுபவர்கள் மல்லிகை இலையின் சாறெடுத்து காலில் தடவி வந்தால் வலி குறைந்து குணமாகும்.

மல்லிகை இலையை நெய்யில் வறுத்து, ஒரு துணியில் கட்டி தொண்டைக்கு ஒத்தடம் கொடுத்தால் தொண்டை புண், எரிச்சல் உடனடியாக நீங்கும்.



--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

பழங்கள் சாப்பிட நேரம் காலம் உள்ளதா?

ஊட்டச் சத்துக்களின் சுரங்கமாகக் காய்கறிகள் , பழங்கள் உள்ளன. உடலுக்கு ஆற்றல் அளிப்பதுடன் , தேவையான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருப்பதால் ...

Popular Posts