லேபிள்கள்

சனி, 7 ஜூன், 2014

நோய் எதிர்ப்பு மருந்துகள் தீர்வா? தீங்கா? எச்சரிக்கை ரிப்போர்ட்

நோய் எதிர்ப்பு மருந்துகள் தீர்வா? தீங்கா? எச்சரிக்கை ரிப்போர்ட்

''சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, உடல்வலி என்று ஏதாவது அடிக்கடி வந்து நம்மை பெரும் அவஸ்தையில் முடக்கிவிடுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல்போனால், பல்வேறு நோய்களும் படையெடுக்கத்தானே செய்யும். 

இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் நோய் எதிர்ப்பு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் ஒழுங்காக வேலைசெய்கிறதா? ஓரு மாத்திரைக்கு இரண்டு மாத்திரைகள் போட்டாலும், பலருக்குப் பாதிப்பு குறைவதே இல்லை.

''மருத்துவ ஆலோசனை இன்றி, கடைகளில் வாங்கி உட்கொள்ளும் மருந்துகளால், நம் உடலில் இருக்கும் நோய்க் கிருமிகள் நோய் எதிர்ப்பு சக்திக்குப் பழகிவிடுகின்றன' என்ற தகவல் அதிரவைக்கிறது.
கோயமுத்தூர் 'சிங்கை சர்க்கரை மையத்தின்' சர்க்கரை நோய் நிபுணரான த.ராஜேந்திர குமார், ஆன்டிபயாட்டிக்ஸ் பற்றிய பல விஷயங்களை விரிவாய் பேசுகிறார்.

''நோய்களுக்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோதே அதை உருவாக்குகிற பாக்டீரியாவைக் கொல்லும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளும் தொடங்கிவிட்டன. ஆன்டிபயாட்டிக் என்றால், உயிரியல் பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டு, நோய்க் கிருமிகளான பாக்டீரியாவை அழிக்கும் திறனுள்ளவை என்பது பொருள்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை ஏகப்பட்ட நோய்க் கிருமிகள் நோயைப் பரப்பக் காத்திருந்தாலும், உடலில் போதுமான எதிர்ப்பு சக்தி இருக்கும் வரை எந்தக் கிருமியும் நம்மிடம் நெருங்காது. கிருமியின் வீரியம் அதிகமாகும்போதோ, உடல் எதிர்ப்பு சக்தி குறையும்போதோதான் நோய் நம்மைத் தாக்குகிறது. எந்தக் கிருமி தாக்கியிருக்கிறது, அதை அழிக்க எந்த மருந்தை என்ன அளவில், எத்தனை நாள், எந்த முறையில் கொடுக்க வேண்டும் என்பதை ஒரு மருத்துவர்தான் தீர்மானிப்பார். ஆனால், பொதுவாக அந்த மருந்தை எவ்வளவு வாங்குவது என்பதை, பணமும் மருந்தின் விலையுமே தீர்மானிக்கின்றன.

நோயின் அறிகுறிகள் சற்றே குறைந்தாலும், மருந்து எடுத்துக்கொள்வதை நிறுத்திவிடுகிறார்கள் பல நோயாளிகள். தீ, பகை, கடன், நோய் இவற்றை முழுவதும் அழிக்காமல் விட்டுவிட்டால், மீண்டும் பல்கிப் பெருகி பெரும் சேதத்தை உண்டுபண்ணும். பாதியிலேயே மருந்தை நிறுத்தும்போது, மருந்துகளுக்கு நோய்  கட்டுப்படாமல், அதை எதிர்க்கும் சக்தியை பாக்டீரியா உருவாக்கிக்கொள்கிறது. அதாவது, நோய் பரப்பும் கிருமியை விரட்டுவதற்காகக் கொடுக்கப்படும் மருந்தை பாதியிலேயே நிறுத்திவிடுவதால், அரைகுறையாகக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கிருமி இன்னும் பலம்பெற்றுவிடுகிறது. இப்படிப் பெரும்பாலான நோய்க் கிருமிகள் எந்த மருந்துக்கும் கட்டுப்படாத சூப்பர் கிருமிகளாக, வளர்ந்து, மருத்துவ உலகையே அச்சுறுத்துகிறது. எனவேதான் உலக சுகாதார நிறுவனம். 'தேவை இல்லாதபோது ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துவது மிகவும் தவறான பழக்கம். அதை உடனடியாக நிறுத்துங்கள்' என எச்சரிக்கை செய்திருக்கிறது.

நோ ஆன்டிபயாட்டிக்

'பொதுவாக, வைரஸ் நோய்களான சளி, சாதாரணக் காய்ச்சல், அம்மை, அக்கி, மஞ்சள் காமாலை போன்ற பல நோய்களுக்கு, ஆன்டிபயாட்டிக் மருந்து தேவை இல்லை. காரணம், அவை நோயைக் குணப்படுத்தாமல், தேவையில்லாத பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும்.

தேவையில்லாத சமயத்தில், ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உபயோகித்தால், அந்த மருந்துகள் கிருமிகளைக் கொல்வதோடு நிறுத்திவிடாமல், ஜீரண சக்திக்கும், பி12 போன்ற உயிர்சத்துகளைத் தரும் நல்ல பாக்டீரியாவையும் கொன்றுவிடுகின்றன. இதனால், வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று எரிச்சல், அலர்ஜி போன்றவையும் ஏற்படக்கூடும்.

தேவையில்லாத இடங்களில் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உபயோகத்தைத் தவிர்க்க வேண்டும். நோயாளிகள் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மருத்துவரின் அனுமதி இல்லாமல் வாங்குவதை அரசு தடைசெய்ய வேண்டும். இல்லாவிட்டால், அடுத்த தலைமுறைக்கும் நோய்கள், மருந்துக்குக் கட்டுப்படாத கிருமிகள் இருக்கும். ஆனால் அதற்கான ஆன்டிபயாட்டிக் மருந்துகள் இருக்காது' என்று முடித்தார்.
'நூற்றுக்கு இரண்டு பேர் சாதாரணக் காய்ச்சல் வந்து இறக்கின்றனர். காரணம், அவர்களுக்குத் தரப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வேலை செய்யாததுதான்' என்கிறார் திருவாரூரைச் சேர்ந்த டாக்டர் ஜெயசேகர்.  

''நடைமுறையில் எந்தப் பரிசோதனையும் செய்யாமலேயே மருந்துகளைப் பெரும்பாலான மருத்துவர்கள் எழுதித் தருகிறார்கள். மேலும் வயிற்றுவலி வந்த ஒருவர் மருந்துக் கடைக்குப் போய், 'எனக்கு வயித்து வலி. ஏதாவது மாத்திரை கொடுங்க' என்று கேட்பதும், கடைக்காரர் ஒரு மாத்திரையை எடுத்துக் கொடுத்துவிடுவதும் சர்வசாதாரணமாக நடக்கும் நிகழ்ச்சி. பல இடங்களில் நோயாளிகளின் பாதிப்புக்குத் தேவையான மருந்து கொடுக்கப்படாமலும், தேவை இல்லாத மருந்து கொடுக்கப்படுவதும் நிகழ்கிறது. இதனால் உடலில் நன்மை செய்யும் பாக்டீரியா அழிகின்றன: புதிதாகத் தோன்றும் பாக்டீரியா, மாத்திரை மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் பெருகுகின்றன. இதைத்தான் 'டிரக் - ரெசிஸ்டென்ட்' நிலை என்கிறோம்.

ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எதிர்க்கும் கிருமிகள் இருபதே நிமிடங்களில் இரு மடங்காக வளரும் ஆற்றல் படைத்தவை. நன்றாக இருக்கும்போது அவை ஒன்றும் செய்யாது, விபத்து, அவசர சிகிச்சை காலங்களில் ஆன்டிபயாட்டிக் கொடுக்கும்போது தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும்.'' என்கிற டாக்டர் ஜெயசேகர்,

'ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வேலை செய்யாததை, எப்படி அறிந்துகொள்வது?' என்பது குறித்தும் விளக்கினார்.

''இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் எந்த நோய்க்கு மருந்து சாப்பிடுகிறோமோ, அது கட்டுப்படாமல் இருக்கும். அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். தாங்க இயலாத வயிற்று வலி ஏற்படும். திடீரென்று சருமத்தில் தடிப்பு, வீக்கம், கட்டி அல்லது சதையில் பளபளப்பு தோன்றும்.

மருந்துகளுக்குக் கட்டுப்படாத வீரியத்துடன் இருக்கும் பாக்டீரியாவைக் கட்டுப்படுத்த, புதிய மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது வருத்தமான விஷயம். எவ்விதக் கட்டுக்குள்ளும் வராமல், யார் வேண்டுமானாலும், எந்த மருந்துகளையும் பரிந்துரைக்கலாம் என்ற நிலை மாற வேண்டும். நோய்கள், புதிய தொற்றுக்கள், கண்டறிந்த தகவல்கள் போன்றவற்றை பொது சுகாதாரத் துறைக்கு உடனுக்குடன் தெரியப்படுத்துவதன் மூலம், இந்த பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்!''
- உமா ஷக்தி, லதானந்த்,
படங்கள்: ரா.மூகாம்பிகை
 மருந்தில் கவனம்!

l மருந்துகளை வாங்கும்போது, அதன் உற்பத்தித் தேதி, காலாவதியாகும் தேதியைக் கவனிக்கவேண்டும்.  

l அரசு அங்கீகாரம் பெற்ற மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும்.

l மருந்துச் சீட்டில் டாக்டர் பரிந்துரைத்திருக்கும் மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும்.

l மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளுக்கு மாற்றாக வேறு ஒன்றை மருந்துக்கடைக்காரர் பரிந்துரைத்தாலும் அம்மருந்துகளை வாங்கக் கூடாது.

l மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத ஈரம்படாத இடத்தில் வைக்க வேண்டும்.

l உங்களுக்கு இருக்கும் நோயின் அறிகுறிகள் வேறு ஒருவருக்கு இருந்தாலும், நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளை அவருக்கு பரிந்துரைக்கக்கூடாது



--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts