பிஞ்சுக் குழந்தைகளின் பற்கள் பத்திரமா?
'நொறுங்கத் தின்றால் நூறு வயது' என்பார்கள். ஆனால், நாக்கு விரும்பும் சுவைக்காக மட்டும் உணவை வாய்க்குள் போட்டு, பற்களுக்கு வேலை வைக்காமல், அப்படியே விழுங்கிவிடுவது நம்மில் பலருக்குப் பழக்கம். மனித வாழ்க்கையின் வாழ்நாள் அதிகரித்து இருந்தாலும், பற்களின் வாழ்நாள் என்பது குறைந்து சுலபத்தில் பொக்கை வாயாக மாறிவிடும் அபாயம் உண்டு. இதற்குக் காரணம், சிறுவயதில் பற்களின் மீது அக்கறை காட்டாததுதான்.
''குழந்தைப் பருவத்திலேயே பற்களைச் சரியாகப் பராமரித்துவிட்டால், வாலிப வயதில் வசீகர அழகும், ஆரோக்கியமான வாழ்வும் நிச்சயம்'' - நம்பிக்கையோடு தொடங்குகிறார் சென்னை பல் மருத்துவர் மனோஜ் ராஜன். பற்கள் பராமரிப்பு பற்றி அவர் தரும் பளிச் டிப்ஸ்...
l குழந்தைகள் பிறந்த ஆறு முதல் ஏழு மாதங்களில் பால் பற்கள் வளருவதால், அவர்களுக்கு ஈறு பகுதியில் எரிச்சலாக இருக்கும். அந்த நேரத்தில், பெரும்பாலான குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இந்தப் பால் பற்களின் வளர்ச்சி ஏழாம் வயதில்தான் முடிவடையும். அந்த நேரத்தில் குறைந்தது 20 பற்களாவது குழந்தைகளுக்கு முளைத்திருக்க வேண்டும். ஏழாம் வயதின் முடிவில்தான் பால் பற்கள் விழ ஆரம்பித்து நிரந்தரமான பற்களின் வருகை ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் குழந்தைகளின் தாடை மற்றும் பற்களின் வேர் நன்றாகக் கடினமாக ஆரம்பிக்கும்.
l சிறு வயதில் பால் பற்களின் வளர்ச்சி மற்றும் அதன் வடிவமைப்பு ஒழுங்காக அமையாததன் விளைவால் ஒழுங்கற்ற அமைப்பு, பலம் இழப்பு, அடிக்கடி பல் விழுதல் போன்ற பிரச்னைகள் உண்டாகும்.
l சிறு வயதில் வளரக்கூடிய பால் பற்களின் வளர்ச்சியைப் பொறுத்துதான் ஏழு வயதிற்கு மேல் வளரக்கூடிய நிரந்தரப் பற்களின் வளர்ச்சியும் அமையும்.
l குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததும், அலட்சியமாக இருக்காமல், பெற்றோர்கள் குழந்தையின் பற்களை தங்கள் விரலால் துலக்கி சுத்தம் செய்ய வேண்டும். அதோடு, குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமாக விற்கப்படும் பற்பசையையும், பிரஷையும் வாங்கித் தந்து, அதைப் பயன்படுத்தச் சொல்லி பழக்கவேண்டும். அவர்கள் பயன்படுத்தும் பற்பசையில் கால்சியம் மற்றும் ஃப்ளூரைடின் அளவும் அதிகமாக இருக்க வேண்டும்.
l பல் துலக்கும்போது 20 ஸ்ட்ரோக்கை மீறாமலும், இரண்டு நிமிடங்களுக்கு மேல் மிகாமலும், பல் துலக்கும் பழக்கத்தைச் சொல்லித்தர வேண்டும். குறைந்த நேரத்தில் பல் துலக்கி, அதிக நேரம் வாய் கொப்பளிக்க வேண்டும்.
l கை சூப்பும் பழக்கம் உள்ள குழந்தைகளை, ஒரு வயதிற்குள் அந்தப் பழக்கத்தை மறக்கச் செய்யவேண்டும்.
l குழந்தைகளை சாக்லேட் சாப்பிட அதிரடியாகத் தடை போடாமல், சாப்பிடுகிற எண்ணிக்கையை மெதுவாகக் குறைக்க வேண்டும்.
l அதிகப்படியான இனிப்பு உண்பதால் சொத்தைப் பல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதுபோன்ற கிருமிகளுக்குப் பல்லை இரையாக்காமல் இருக்க, சாப்பிட்டவுடன் நிறையத் தண்ணீரால் வாய்
கொப்பளிக்க வேண்டும். அதே நேரத்தில் நிறையத் தண்ணீரும் அருந்த வேண்டும்.
l இரவு படுக்கும் முன் பாலில் சர்க்கரைச் சேர்க்காமல் கொடுங்கள். காரணம், சர்க்கரையில் உள்ள இனிப்பு பற்களில் தங்கி, சொத்தைப் பற்களை உருவாக்கிவிடும்.
l படுக்கும் முன்பு பல் துலக்குவது அவசியம்.
l பற்கள் பாதுகாப்புடன் இருக்க, ஆறு மாத இடைவெளியில் பல் மருத்துவரை அணுகுங்கள். மறதி, வேலை உள்ளிட்ட காரணங்களால் இதைச் செய்ய முடியாவிட்டால், ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பற்களைக் காட்டலாம்.
- க.பிரபாகரன்,
படங்கள்: ரா.மூகாம்பிகை
பற்கள் பளிச்!
l உணவுகளை மென்று அசைபோட்டுச் சாப்பிடும் பழக்கத்தைச் சொல்லிக் கொடுங்கள். இதனால், கன்னப் பகுதியும் ஒட்டிப் போகாமல் அழகாக இருக்கும்.
l குழந்தைகள் விளையாடும்போது பல் உடைந்து போக வாய்ப்புகள் அதிகம். இதனைத் தவிர்க்க கடுமையான பயிற்சியில் ஈடுபடும்போது, குத்துச் சண்டை விளையாட்டில் பயன்படுத்தும் மௌத் கார்டினைப் பயன்படுத்தச் சொல்லலாம்.
l பற்களின் வளர்ச்சிக்கு கால்சியம் நிறைந்த உணவு முக்கியம். தினமும் உணவில் கீரை வகைகள், பட்டாணி, சுண்டல், ஆப்பிள், பச்சைக் காய்கறிகள், திணை வகைகள் போன்றவற்றை அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்
--
*more articles click*
www.sahabudeen.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக