இணையக் கட்டணம்... தொலைபேசி கட்டணம்... இப்படி சேமிக்கலாம்!
இந்த நவீன யுகத்தில் இணையம், அலைபேசி உதவியுடன் இருந்த இடத்தில் இருந்துகொண்டே மின்னஞ்சல், குறுஞ்செய்தி, ஆன்லைன் தேர்வு, இ-புத்தகம்/இ-பேப்பர், மின்சாரம் என அனைத்து காரியங்களையும் எப்படி சுலபமாக முடிக்கலாம் என்பது பற்றி 'இதெல்லாம்கூட சேமிப்புதானுங்க!' என்ற தலைப்பில் கடந்த இரு இதழ்களில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இன்னும் பல சேமிப்பு
வழிகள் இங்கே..!
இணையக் கட்டணம்... சிக்கனம்!
கணினி மற்றும் செல்போனில் இணைய இணைப்பை பயன்படுத்துபவர்கள், தங்களின் தேவைக்கு ஏற்ப டேட்டா கார்டு, இன்டர்நெட் பூஸ்டர் கார்டை பயன்படுத்தலாம். அனைத்து நாட்களிலும் இணையம் பயன்படுத்துபவர்கள் 'அன்லிமிட்டட் இன்டர்நெட் பேக்'கையும், இரண்டொரு நாளுக்கு பயன்படுத்துபவர்கள் குறைந்த எம்.பி. கொண்ட 'இன்டர்நெட் பேக்'கையும் பயன்படுத்தலாம். இதற்கெனவே ஏகப்பட்ட திட்டங்களை, தங்களின் இணையப்பக்கத்தில் வைத்துள்ளன சம்பந்தப்பட்ட நிறுவனங்கள். அதை கொஞ்சம் அலசினால், லாபம் நமக்குத்தான்.
இணையத்திரை... இலவசத்திரை!
www.youtube.com போன்ற வலைதளத்தில் குறும்படங்கள் தொடங்கி திரைப்படங்கள் வரை இலவசமாகப் பார்க்க முடியும். அதுமட்டுமில்லாமல், இதை டவுன்லோடும் செய்துகொள்ளலாம். மேலும் நமது வீடியோக்கள், பாடல்கள் என இந்த வலைதளத்தில் இலவசமாக எதை வேண்டுமானாலும் அப்லோடு செய்து, அதை மற்றவர்களையும் பார்க்கும்படி செய்யலாம். இன்றைக்கு வெள்ளித்திரை, சின்னத்திரை இதையெல்லாம் தாண்டி, இந்த இணையத்திரை (கணினித்திரை), இணையவாசிகளிடம் வேகமாகவே பரவிக் கொண்டிருக் கிறது. இன்றைய சூழலில் ஒரு குறும்படத்தை வெளியிடவே லட்சங்களில் செலவாகும். ஆனால், இதுபோன்ற வலைதளங்களில் அப்லோடு செய்வதன் மூலம் இலவசமாக உலகம் முழுவதும் உலவச் செய்துவிடலாம்.
கட்டணமில்லா பேச்சு!
வெளிநாட்டில் இருப்பவர்களிடம் தொலைபேசியில் பேச, நிமிடத்துக்கு நிமிடம் எகிறும் கட்டணம். ஆனால், இணையத்தின் மூலமாக மிகமிகக் குறைந்த செலவில் இன்றைக்கு மணிக்கணக்கில் பேசமுடியும். உதாரணமாக, நமது ஜி-மெயில் அக்கவுன்ட்டை எடுத்துக்கொள்வோம். இதன் மூலமாக, சாட் ஆப்ஷனுக்கு அருகே உள்ள 'ஸ்டார்ட் வீடியோ கால்' ஆப்ஷனை கிளிக் செய்து வெப்கேமரா மற்றும் மைக் உதவியோடு உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் நண்பர்களுடனும் சுலபமாக வீடியோ கால் பேசமுடியும். இதேபோல் 'ஸ்கைப்' உள்ளிட்ட தளத்தில் வாய்ஸ் கால் பேசமுடியும். ஃபேஸ்புக், கூகுள் ப்ளஸ், யாஹூ தொடங்கி பல்வேறு வலைதளங்கள் மூலமாகவும் இந்தச் சேவையை பயன்படுத்தலாம்.
முதல்வருக்கு ஒரு மனு!
'எங்கள் ஏரியாவுக்கு தண்ணீர் வரவில்லை', 'எங்கள் ஊருக்கு சாலை வசதி இல்லை' - இது போன்ற பல்வேறு புகார்களுக்கு முன்பெல்லாம் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்குச் சென்று மனு கொடுப்பதே வழக்கமாக இருந்தது. இன்றோ வீட்டிலிருந்தபடியே இன்டர்நெட் உதவியுடன் கிராம நிர்வாக அதிகாரி முதல் முதல்வர் வரை சம்பந்தப்பட்ட யாருக்கு வேண்டுமானாலும் மெயில் அனுப்பலாம். உதாரணமாக, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தினருக்கு அரசு வழங்கும் சலுகைகள் எதுவும் சரிவர கிடைக்கவில்லை என்று எடுத்துக்கொள்வோம். அவர்கள், www.cmcell.tn.gov.in என்ற வலைதளத்தின் மூலமாக தங்களது புகாரினை முதல்வருக்கு தெரிவிக்கலாம். இப்படி எல்லா அரசு அலுவலகங்களுக்கும் இன்று வலைதளங்களும், இ-மெயில் முகவரிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இலவச சாஃப்ட்வேர்!
இன்று பல சாஃப்ட்வேர்கள் இணையத்தில் குவிந்துகிடக்கின்றன. அவற்றை இலவசமாகவும், ஆன்-லைன் மூலமாக பணம் செலுத்தியும் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். உதாரணமாக, செல்போனில் இன்டர்நெட்டை பயன்படுத்துபவர்கள், செல்போனுக்குத் தேவையான சாஃப்ட்வேர்களையும், கணினியில் இணையத்தை பயன்படுத்துபவர்கள் தங்களது கணினிக்கு தேவையான சாஃப்ட்வேர்களையும் அதற்கான வலைதளங்கள் மற்றும் கூகுள் சர்ச் மூலமாகவும் தேடி டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
இலவசமாக விளம்பரம் செய்ய!
தொலைக்காட்சி, செய்தித்தாள் என்று விளம்பரம் செய்து வந்த நிறுவனங்கள் பலவும், இன்று டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை, தங்களின் விளம்பரங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பல நிறுவனங்கள் தங்களுக்கென்று பிரத்யேக ஃபேஸ்புக் பக்கத்தையோ அல்லது டிவிட்டர் பக்கத்தையோ உருவாக்கி, தங்களது விளம்பரங்களை கோடான கோடி இணையவாசிகளிடம் சென்று சேர்க்கின்றனர்.
இலவச வலைபக்கம்!
நமக்கென்று ஒரு வலைபக்கத்தை உருவாக்கி, நம் தகவல்களை பதிவேற்றம் செய்யலாம், விளம்பரப்படுத்தலாம். உதாரணமாக, www.blogger.com வலைதளத்தில் நமது ஜி-மெயில் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டைக் கொண்டு உள்நுழைந்து, நமக்கான பிளாக் ஆரம்பிக்கலாம். அதில் நாம் விரும்பும் தகவல்கள் தொடங்கி புகைப்படங்கள் வரை பதிவேற்றலாம். எதற்கும் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை
--
*more articles click*
www.sahabudeen.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக