லேபிள்கள்

சனி, 17 மே, 2014

நீங்கள் அப்பாவாவதற்கு உகந்த வயது எது?

நீங்கள் அப்பாவாவதற்கு உகந்த வயது எது?

விஞ்ஞான முடிவுகளுடன் முரண்படும் சமூகக் கடப்பாடுகள்
அப்பாவாகப் போவது எப்போது?

ஒரு மனிதன் தந்தையாவதற்கு ஏற்ற வயது என்ன?

எனது பாட்டா அப்பாவாகும்போது வயது 18 வயது மட்டுமே. எனது அப்பா 23 வயதில் அப்பாவானார். அப்பாவாகும்போது எனக்கு 32 வயதாகிவிட்டது. இன்றைய இளைஞர்களுக்கு இன்னமும் அதிக காலம் தேவைப்படுகிறது.

நல்ல கல்வி, போதிய வருவாயுள்ள வேலை, புதிய மணவாழ்வில் சற்றுக் காலம் தொல்லையின்றி உல்லாச வாழ்வு. இவற்றையெல்லாம் முடித்துக் கொண்டு குழந்தை பெறுவதையிட்டு சிந்திக்கத் தொடங்குவதற்கு காலதாமதமாகி விடுகிறது இன்றைய இளைஞர்களுக்கு.

வயது அதிகரிப்பும் அப்பாவாதலும்

மேலும் முதிர்ந்த வயதில் அப்பாவாகும் பலர் மேலை நாடுகளில் இருக்கிறார்கள். வேலைப் பளு, இரண்டாவது தரம் மூன்றாவது தரம் என மணம்முடித்தல் போன்ற காரணங்களால் அங்கு தந்தையாவது தாமதமாகிறது பலருக்கு.
இருந்போதும் இன்னமும் பெரும்பாலானவர்கள் 20 முதல் 34 வயதிலேயே அங்கும் அப்பாவாகிறார்கள். ஆனால் 1980 ற்கும் 2002 ற்கும் இடைப்பட்ட காலத்தில் முதிர்ந்தவர்கள் அப்பாவாகும் தொகை அதிகரிக்க ஆரம்பித்தது. 40 - 44 வயதிற்கும் இடையில் 32 சதவிகிதத்தாலும், 45 - 49 வயதிற்கும் இடையில் 21 சதவிகிதத்தாலும், 50 - 54 வயதிற்கும் இடையில் 9 சதவிகிதத்தாலும் அதிகரிப்பதாக அமெரிக்க National Vital Statistics Report கூறுகிறது. புதிய தரவுகள் மேலும் அதிகரித்திருக்கும் என நம்பலாம்.

என் பாட்டா செய்தது சரியா அல்லது இன்றைய தலைமுறையினர் செய்வது சரியா?

நவீன விஞ்ஞான ஆய்வுகள் பாட்டாக்களின் பக்கம் நிற்கிறது.
40
வயதுகளை எட்டும் ஒரு மனிதனது விந்துவின் தரமானது 20 வயதுகளில் இருந்ததைத் போலிருப்பதில்லை.
அவர்களது மரபணுக்களில் பிறழ்வுகள் (genetic mutations) ஏற்படுகின்றன. இவை அவரது வாரிசுகளைச் சென்றடையப் போகின்றது என்பதையிட்டு விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.

ஐஸ்லண்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இன்னமும் சற்று விபரமாகச் சொல்கிறார்கள். Autism or Schizophrenia ஆகிய பாதிப்புள்ள குழந்தைகள் உருவாவதற்கு 40 வயதுடைய ஒருவர் தன்னிலும் ½ மடங்கு வயதுடையவரைவிட இரண்டு மடங்கு அதிகமாக காரணமாகிறார்கள் என்கிறது.
ஓட்டிசம்
ஓட்டிசம் என்பது குழந்தையை மட்டுமின்றி முழு குடும்பத்தின் நிம்மதியையும் தொலைக்கக் கூடிய சிக்கலான நோயாகும். இவர்கள் ஏனைய குழந்தைகள் போலவே பிறந்து வளர்வார்கள். இரண்டு மூன்று வயதாகும்போதே இக்குழந்தையில் ஏதோ பிரச்சனை உள்ளது என பெற்றோருக்கு புரிய ஆரம்பிக்கும்.
இவர்கள் உள, மொழி மற்றும் செயலாற்றல் குறைந்த குழந்தைகளாகும்.
  • கற்பனையுடன் விளையாடும் ஆற்றல் (Pretend play) குறைந்தவர்களாக இருப்பார்கள். உதாரணமாக ஒரு கரடிப் பொம்மையை அல்லது பிளேன் பொம்மையை வைத்து கற்பனைத் திறனுடன் விளையாடும் ஆற்றல் இருப்பதில்லை. 
  • தாய் தந்தை, சகோதரங்கள் ஏனையோருடன் ஊடாடும் திறன் (social interaction)    இவர்களிடம்  இருப்பதில்லை. 
  • வாய் மொழியாலும், செய்கைகளாலும் தனது தேவைகளையும் உணர்வுகளையும் மற்றவர்களுக்கு உணர்த்தும் திறன் (Verbal and nonverbal communication) இருப்பதில்லை.

இவற்றால் ஏற்படும் தனது இயலாமையால் முரட்டுக் கோபம், பொருட்களைப் போட்டு உடைத்தல், மற்றவர்களை அடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். உண்மையில் குழந்தையின் நிலையை விட இவர்களை பராமரிக்கும் பெற்றார்களின் நிலையே பரிதாபமானது. இதைக் குணப்படுத்த மருந்துகள் இல்லாததால் அதற்கான விசேட பள்ளிகளில் சேர்த்தே அவர்களது நிலையை மேம்படுத்த முடியும்.

இத்தகைய பிள்ளைகள் பிறப்பது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் Centers for Disease Control and Prevention அறிக்கையின் பிரகாரம் பிறக்கும் 1000 பிள்ளைகளில் 11.3 பிள்ளைகள் ஓட்டிசம் தொடர்புடைய அறிகுறிகளுடன் இருப்பதாக கணித்துள்ளார்கள். இலங்கையிலும் அண்மைக் காலங்களில் இத்தகைய குழந்தைகளை முன்னரை விட அதிகம் காண முடிகிறது.
மனப் பிறழ்வு Schizophrenia
 மற்றொரு நோயான மனப் பிறழ்வு ஏற்படுவதற்கும் ஓட்டிசம் போலவே, வயது அதிகமான தந்தையர் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சூழல். பரம்பரை அம்சங்களும் காரணமாகலாம். மாயத் தோற்றங்கள், மாய ஒலிகள் உள்ளடங்க எண்ணம், செயல்களில் தெளிவற்ற தன்மையுடைய  மனக்கோளாறு இதுவாகும்.
பதின்மங்களில் அல்லது கட்டிளம் பருவத்தின் ஆரம்பத்திலேயே இதன் அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும். முற்றிலும் குணப்படுத்த முடியாத போதும் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய மருந்துகள் தற்போது உள்ளன.

இதனால் முன்னைய காலங்களில் தனக்குத்தானே பேசிச் கொண்டு அழுக்கு நிறைந்த உடைகளுடனும், குளித்து மாதக்காக நாற்றத்துடனும் வீதிகளில் 'விசரன்' என்ற பெயரோடு அலைந்து திரிபவர்களைக் காண்பது குறைந்து போயிற்று.

நோயாளியை மட்டுமின்றி குடும்பத்தையும் சமூகத்தையும் அதிகளவில் பாதிக்கிற நோயாக இதுவும் இருக்கிறது.
அம்மாக்கள்
அப்பாக்கள் இப்பொழுதுதான் இத்தகைய பிரச்சனைக்கு முகம் கொடுக்கிறார்கள். ஆனால் பெண்கள் பல காலமாகவே இளவயதில் தாய்மை எய்தாமைக்காக குற்றம் சாட்டப்படுகிறார்கள். காலம் தாழ்த்தி தாய்மை எய்தினால் Down syndrome போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகள் உருவாகலாம் என்பது பலகாலமாக அறியப்பட்ட செய்தியாகும்.

பெற்றோராகும் வயததை; தீர்மானிப்பதில் சமூகத்தின் தாக்கங்கள்
இருந்தபோதும் இன்றைய சூழலில் பெண்கள் பிந்திய பதின்மங்களிலோ, 20களின் ஆரம்பங்களிலோ குழந்தை பெறுவது சாத்தியமற்றுப் போகிறது. ஏனெனில் இன்றைய பல பெண்களும்  பொருளாதார ரீதியில் தமது காலில் நிற்பதையே விரும்புகிறார்கள். கல்வியை முடித்து தொழில் தேட 30 வயதைத் தாண்டிவிடுகிறது.

'
நேர காலத்தோடு பிள்ளையைப் பெறு இல்லையேல் குறைபாடுடைய குழந்தை கிடைக்கலாம்' என பெண்கள் மீது ஆண்கள் சுமத்திய அதே குற்றச்சாட்டை இன்று பெண்கள் ஆண்கள் மீது திருப்பியடிக்க முடிகிறது.

குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளிவிட்டு உயிரியல் ரீதியாகச் சிந்தித்தால் ஆண்களும் சரி பெண்களும் சரி பிள்ளை பெறுவதை ஒரு தசாப்த காலம் முன்தள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது. மேலைநாடுகளில் இது பெண்களில் முப்பதுகளின் பிற்கூறும், ஆண்களில் 40க்கு மேலுமாகி விடுகிறது.
இருந்தபோதும் காலக் கடிகாரத்தின் டிக் டிக் ஓசை பெண்களையே அதிகமாக விரட்டித் தொலைக்கிறது. இதனால் பெண்களே அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இது அவர்களது கருத்தங்கும் ஆற்றலுடன் (fertility) சம்பந்தப்பட்டது. 30வயதின் எல்லையை அண்மித்து 40வயதை தாண்டும்போது அவர்களது கருத்தரிக்கும் ஆற்றல் நலிவடையத் தொடங்குகிறது.
ஆண்களின் முகத்தில் அடி
ஆனால் ஆண்கள் நிலை அவ்வாறில்லை. ஒரு குழந்தைக்கு அப்பனாகும் நேரத்தை அவனே தீர்மானிக்கக் கூடியவனாக இருக்கிறான். அல்லது சூழலின் பாதிப்புகளால் அது நிகழலாம். ஆனால் உயிரியல் நியதியாக (biological determinism ) ஒருபோதும் இருப்பதில்லை. உதாரணங்கள் Rupert Murdoch had a child at 72, Saul Bellow at 84, Les Colley, an Australian miner, at 92.
  • 'தன்னால் எப்பொழுதும் முடியும்' என இறுமாந்திருந்த ஆண்களுக்கு விஞ்ஞான உண்மைகள் முகத்தில் அடிப்பது போலானது என்பதில் சந்தேகம் இல்லை. 
  • அப்படியில்லாவிடினும் அவனது மனச்சாட்சியை உலுப்பக் கூடியதாகவே இருக்கிறது. 'குழந்தைக்கு அப்பனாகும் காலத்தைத் தான்  தள்ளிப்போடுதல் தன்னளவில் சௌகரியமானபோதும் அது தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் உடல்நலத்தை அதன் வாழ்நாள் முழுவதும் பாதிக்கலாம்'  என்ற எண்ணம் மனித இனத்தின் சரித்திரத்தில் முதல் முதலாக அவன் முன் எழுந்து நிற்கிறது. 
  • வயதான பெண்கள் அனைவரும் இப்பிரச்சனைக்கு ஏற்கனவே முகம் கொடுத்துக் கொண்டிருப்பது தெரிந்த விடயமே. அவர்கள் தமது வசதிகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப விட்டுக் கொடுப்புகளுடன் சமாளிக்கத் தெரிந்திருக்கிறார்கள்.
இப்பொழுது ஆண்கள் அவர்களது பாதையைப் பின் பற்ற வேண்டியதுதான்.

மாற்றுச் சிந்தனைகள்

விஞ்ஞான முடிவுகள் வேறுவிதமாக இருந்தபோதும், தந்தையாகும் காலத்தை பின்போடுவதில் அனுகூலங்கள் இருக்கின்றனவா?

20
வயதில் இருந்ததைவிட 40 வயதாகும்போது மரபணுக்களில் பழுதுகள் ஏற்படக் கூடுமாயினும், ஆண்களின் வாழ்க்கை முறைகளில், பழக்கவழக்கங்களில், மற்றவர்களுடனான தொடர்பாடல் முறைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவசரமும் பதற்றமும் அடங்கி அமைதி வருகிறது. கோபம் பொறாமை அடங்கிப் பொறுமை அதிகரிக்கின்றது. போட்டி வாழ்வின் வேகமும் அதீத எதிர்பார்ப்புகளும் தளர்கின்றன.

இம் மாற்றங்கள் ஆண்மை வீரியத்தின் தளர்முகத்தைக் குறிக்கின்றபோதும், நல்ல தந்தைக்கு வேண்டிய குணாதிசயங்களுக்கும் வழிவகுக்கின்றன. அவசரக் கோபங்கள் அடங்கிப் புரிந்துணர்வு வளர்வதால் குழந்தையை ஆதரவோடு அணைத்து வளர்க்க முடிகிறது.

20
களிலும் முப்பதிகளிலும் இருந்ததைவிட 40களை அணுகும்போது தந்தைதுவப் பண்புகள் மெருகேறுகின்றன.

பொது நலம் 

மற்றொரு விடயம் பொது நலம் சார்ந்தது.

நீங்கள் இளவயதில் தந்தையானால் உங்கள் வாரிசும் விரைவில் பெற்றோர்ஆவதற்கான சாத்தியம் அதிகம். நீங்கள் சற்றுக் காலம் தாழ்த்தி தந்தையானால் அவர்கள் பெற்றோராவது பிந்தும். சற்று விளக்கமாகச் சொன்னால்.

வயது 40 களில் இருக்கும் உங்களுக்கு மகன் ஆரம்பப் பள்ளியில் கற்கிறான் என வைப்போம், ஆனால் இன்றைய விஞ்ஞானிகள் சொல்வதுபோல நீங்கள் இளவயதிலேயே மணமுடித்திருந்தால் உங்கள் மகன் இப்பொழுது பிரசவ அறையில் மனைவிக்கு துணையாக நின்றிருப்பான். அதாவது உங்கள் குடும்பத்தில் அடுத்த தலைமுறையும் வந்திருக்கும்.

இன்று உலகில் சனத்தொகை பெருகும் வேகத்திற்கு உங்கள் பங்களிப்பும் இருந்திருக்கும். அந்த வகையிலும் பிந்திய வயதில் தந்தையாதல் சனத்தொகை வளர்வதை உலகளாவிய ரீதியில் கட்டுப்படுத்த முடியும்.

குழந்தையைப் பெறுவதிலும் வளர்ப்பதிலும் பழுதடைந்த மரபணுக்கள் என்பது தந்தையின் பங்களிப்பில் ஒரு சிறிய அம்சமே. இருந்தபோதும் மிகவும் முதிர்ந்த வயதில் தந்தையாவதும் நல்லதல்ல. ஏனெனில் குழந்தையின் தலையில் பழுதான மரபணுக்களைச் சுமத்துவது மாத்திரமின்றி வளர்தெடுப்பதிலும் வழிநடுத்துவதிலும் சிக்கல்கள் ஏற்படும்.

நோயும் பிணியும் ஏன் மரணமும் கூட தந்தையின் பங்களிப்பை தடுத்து நிறுத்தலாம்.

விஞ்ஞானமா சமூகக் கடப்பாடுகளா என்ற எதிர் முரணான தேர்வுகளுக்கு இடையில் மனிதன் சிக்கி நிற்கிறான்.

தெளிவான விடையில்லை.

பகுத்தறிவின் துணையோடு தனக்கு ஏற்ற தெரிவைத் தானே தேர்ந்தெடுக்கத்தான் இன்றைய நிலையில் முடியும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), MCGP (col)
குடும்ப மருத்துவர்
http://hainallama.blogspot.in/2013/06/blog-post.html

--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts