உழைப்பின் சிறப்பு
இஸ்லாம் உழைக்காமல் சோம்பேரிகளாக வாழ்வதனை விரும்புவதில்லை. இதனால் அனைவரும் உழைத்து வாழ வேண்டும் என தூண்டுகின்றது. இதனை பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் விளக்குகின்றன."அவன் எத்தகையவனென்றால் உங்களுக்கு பூமியை வாழ்வதற்கு எளிதானதாக அவன் ஆக்கிவைத்தான். ஆகவே அதன் பல பாகங்களில் சென்று, அவன் உங்களுக்கு அளித்திருக்கும் உணவிலிருந்து உண்ணுங்கள். உங்களுடைய மண்ணறைகளிலிருந்து உயிர்பெற்றெழுதல் அவன்பாலே இருக்கிறது" (76:15)
"பின்னர் ஜும்ஆத் தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால் பள்ளியிலிருந்து வெளிப்பட்டுப் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய பேரருளைத் தேடிக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூருங்கள்" (62:10)
நபி (ஸல்) அவர்களும் உழைப்பின் முக்கியத்துவத்தை பல சந்தர்ப்பங்களில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
"தன்கையால் உழைத்து உண்பதை விட வேறு எந்தச் சிறந்த உணவையும் எவரும் உண்ணுவதில்லை" புகாரி
இதனாலேயே நபிமார்கள் எல்லோரும் தமது வாழ்க்கைத் தேவைக்காக ஏதோ ஒரு தொழிலை செய்பவர்களாக இருந்துள்ளனர். அவர்களில் சிலர் விவசாயம் செய்தனர். இன்று சிலர் கைத்தொழில், வியாபாரம், மந்தை மேய்த்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர். முஹம்மது நபி (ஸல்) அவர்களும் வியாபாரம், ஆடு மேய்த்தல் போன்றவற்றில் ஈடுபட்டார்கள். ஸஹாபாக்களும் வியாபாரிகளாகவும் விவசாயிகளாகவும் இருந்துள்ளனர்.
நபி தாவூத் (அலை) கொல்லராகவும் ஆதம் (அலை) விவசாயியாகவும், நூஹ் (அலை) தச்சராகவும், இத்ரீஸ் (அலை) தையல் காரராகவும் மூஸா (அலை) இடையராகவும் இருந்துள்ளனர். – அல் ஹாகிம்
இஸ்லாம் ஒரு மனிதன் பிறரிடம் கை நீட்டாது. சுய மரியாதையுடனும் கெளரவத்துடனும் வாழ வேண்டும் என எதிர்பார்க்கின்றது. இதன் மூலம் உழைக்குமாறு தூண்டுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனது ஆன்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக உங்களில் ஒருவர் தனது கயிற்றை எடுத்துச் சென்று விறகு சேர்த்துத் தொழில் செய்து வருவதானது ஒரு மனிதன் கொடுத்தாலும் மறுத்தாலும் அவனிடம் சென்று கை நீட்டி யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். -புகாரி, முஸ்லிம்
உழைக்காமல் சோம்பேரிகளாக பிறரிடம் கை நீட்டி யாசகம் கேட்பவர்கள் நாளை மறுமையில் முகத்தில் கறுப்புப் புள்ளிகளுடன் வருவார்கள்.
ஒரு முறை ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். தமக்கு ஏதாவது தருமாறு கேட்டார். இது கேட்ட நபி (ஸல்) அவர்கள் 'உங்களுடைய வீட்டில் ஏதாவது இருக்கின்றதா" எனக் கேட்டார்கள்" ஒரு போர்வையும் ஒரு பாத்திரமும் இருப்பதாக அவர் பதிலளித்தார். இவற்றைக் கொண்டு வருமாறு நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள். இவ்விரு பொருள்களும் கொண்டு வரப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் அவற்றை ஏலத்தில் விற்றார்கள். அதற்கு இரண்டு திர்ஹம்கள் கிடைத்தன.
"இதில் ஒரு திர்ஹத்திற்கு உணவு வாங்கி குடும்பத்துக்கு கொடுக்குமாறும் அடுத்த திர்ஹத்துக்கு ஒரு கோடரி வாங்கி வாருங்கள் என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்கள். கோடரி வாங்கி வரப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட நபி (ஸல்) அவர்கள் அதற்கொரு பிடியைப் பொருத்தி இந்த மனிதரிடம் ஒப்படைத்தார்கள்.
"நீங்கள் விறகு வெட்டி விற்பனை செய்யுங்கள். பதினைந்து நாட்களுக்கு இந்தப் பக்கம் தலைகாட்டக் கூடாது" என்று கூறி அனுப்பி வைத்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்கள் கூறியபடி விறகு வெட்டி விற்பனை செய்து வந்தார். 15 நாட்களில் பின் நபி (ஸல்) அவர்களைச் சத்தித்து தனது வருமானத்தைப் பற்றிக் கூறித் திருப்தியடைந்து இதற்கு நன்றி கூறினார். அப்போது " இறுதி நாளில் முகத்தில் கறுத்த குறிகளுடன் வருவதைவிட இத் தொழில் உமக்கு மிகவும் சிறந்ததாகும்" திர்மிதி என்று நபி (ஸல்) அவர்கள் போதனை செய்து அவரை அனுப்பி வைத்தார்கள்.
உமர் (ரழி) அவர்கள் உழைக்காமல் அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்து விட்டோம் எனக் கூறிக்கொண்டு பள்ளிவாசலில் முடங்கிக் கிடந்த சிலரைக் கண்டு அவர்களை நோக்கித் தமது சாட்டையை உயர்த்தி 'உழைக்காமல் வருமானத்தைத் தேடி வெளியேறிச் செல்லாமல் உங்களில் எவரும் இருக்கக் கூடாது" அல்லாஹ்வே எனக்கு ரிஸ்கை வழங்கு' எனப் பிரார்த்தனை செய்தால் மாத்திரம் போதாது: வானம் தங்கத்தையோ வெள்ளியையோ மழையாகப் பொழியப் போவதில்லை" எனக் கூறினார். மேலும் அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குமாறும் தொழிலாளியின் வியர்வை உலருமுன் கூலியை கொடுத்து வருமாறும் பணிக்கின்றது.
அதன் மூலம் இஸ்லாம் வறுமை ஒழிப்புக்கான திட்டத்தை முன்வைக்கின்றது என்பது தெளிவாகின்றது. எனவே சமூகங்களிலுள்ள வசதிபடைத்த செல்வந்தர்கள் அனைவரும் அவரவர் வாழ்நாளில் காணப்படும் சுயதொழியை ஏற்படுத்தி கொடுப்பார்களாயின் எமது நாடு வறுமையற்ற நாடாக மாறுவது சந்தேகம் இல்லை.
ஆகவே, நாமும் இஸ்லாம் கூறியபடி உழைத்து வாழ்ந்து பிறரையும் வாழ வைப்போமாக!
ஏ. எம். அஸ்லம்…-
http://www.readislam.net/portal/archives/3495
--
*more articles click*
www.sahabudeen.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக