உயில் எழுதுவது எப்படி?
ஒருவர், தான் சம்பாதித்த சொத்துகளை, தன் இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபர் அல்லது நபர்களுக்கு, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் போய்ச் சேர்வதற்கு, சுய நினைவுடன் எழுதி வைக்கும் முக்கிய ஆவணம்தான் உயில் (விருப்ப ஆவணம்).உயில் என்பதே உறவுகளைச்சிதற விடாமல் பார்த்துக் கொள்ளும் கவசம்தான்.அதைச் சரியாகப் பயன் படுத்தியிருக்கும் குடும்பங்களில் எந்தச் சிக்கலும் வருவதில்லை.
உயில் என்பது சொத்தைப் பிரிப்பதற்கும், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் மட்டும் எழுதப்படும் ஆவணம் அல்ல. உயில் எழுதுபவரின் மனநிலை, ஆசை, விருப்பம், பிறரின் மேல் உள்ள அன்பு போன்ற உள்ளுணர்வுகளையும் விளக்கும் உணர்வுப்பூர்வமான சாதனம் அது!
இருப்பது கையளவு சொத்துதான் என்றாலும் எதிர்காலத்தில் யாரும் அதற்காகச் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. எனவே, முறையாக உயில் எழுதி வையுங்கள்!
உயில் — கட்டாயம் என்ன ?
உயில் எழுதியே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால், எழுதாவிட்டால் சிக்கல் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்ப-தால் எழுதிவிடுவது நல்லது.
''தன்னுடைய மரணத்துக்குப் பிறகு சொத்தின் உரிமை குறித்து பிரச்னை ஏற்படலாம் என்று குடும்பத்தின் சூழ்நிலையை நன்கு அறிந்த குடும்பத் தலைவர் கருதினால், சிறு சொத்துகளுக்குக் கூட உயில் எழுதலாம். ஆனால், பரம்பரையாக அவருக்குக் கிடைத்த சொத்துகள் குறித்து உயில் எழுத முடியாது. பாட்டன் சொத்து பேரனுக்கு என்ற அடிப்படையில் அது குடும்ப வாரிசுகளுக்குத்தான் போய்ச் சேரும்'' என்றார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரிஷிகேஷ் ராஜா.
உயில் – எப்படி எழுதுவது?
''உயில் எழுதுவது மிகவும் எளிமையான நடைமுறைதான். முத்திரைத்தாளில்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. சாதாரண வெள்ளை பேப்பரில்கூட எழுதலாம். எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். கையால் எழுதுவது நல்லது. வழக்கறிஞர் முன்னிலையில்தான் எழுதவேண்டும் என்ற அவசியம் இல்லை.
உயில் எழுதும்போது அடிப்படையாக சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அதன் நம்பகத்தன்மைக்காக குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் தேவை. உயிலில் ஒவ்வொரு பக்கத்திலும் அவர்களின் கையெழுத்து இருக்க வேண்டும். சாட்சிகள் வாரிசாக இருக்கக் கூடாது. அவர்களுடைய நிரந்தர முகவரியைக் குறிப்பிட வேண்டும்.
உயில் எழுதும்போது, சொத்துகள் பற்றிய விவரங்களை மிகத் தெளிவாக எழுத வேண்டும். அதில், முக்கியமாக சொத்தின் வாரிசுகள் யார் என்பதை விவரமாகவும், அவர்கள் ஏன் வாரிசுகளாக அறிவிக்கப்படுகிறார்கள் என்கிற காரணத்தையும் விரிவாக எழுத வேண்டும்''
உதாரணமாக
எனது மகள் பத்மாவுக்குத் தேவையான அனைத்தையும், அவளது கல்யாணத்தின் போதே நகை, சீர்வரிசை, பணம் போன்றவற்றின் மூலம் கொடுத்து விட்டதால், அவளுக்கு நான் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. என் மூத்த மகன் ரவியும் அவனது மனைவியும் பல ஆண்டுகளாக என்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை. அவனை விட்டுப் பிரிந்து எனது இளைய மகன் ரமேஷ் வீட்டுக்குச் சென்றேன்.
கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷ் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டான். எனவே, ரமேஷை என் வாரிசாக அறிவிக்கிறேன். நான் இந்தியன் வங்கியில் வாங்கிய 2 லட்ச ரூபாய் கடன் இன்னமும் முழுவதும் திருப்பிக் கட்டவில்லை. நான் சொந்தமாகச் சம்பாதித்து அண்ணா நகரில் கட்டிய வீட்டை விற்று, வங்கிக் கடனை அடைத்துவிட்டு மீதம் இருப்பவற்றை ரமேஷிடம் கொடுக்க வேண்டும். மேற்கூறப்பட்ட விஷயங்கள் என் குடும்ப நண்பர் ராமமூர்த்தியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்' என்கிற ரீதியில் தெளிவாக எழுதலாம்.
''சொத்து பற்றிய விவரங்களைக் குறிப்பிடும்போது, அவை எங்கு உள்ளன, எவ்வளவு பரப்பு என்பதையும் விரிவாக எழுத வேண்டும். வீடு, மனை, தோட்டம், வங்கிச் சேமிப்பு, பங்கு பத்திரங்கள் போன்ற தகவல்-களைத் தெரிவிக்கும்போது, அவற்றின் சான்றிதழ்கள் மற்றும் பத்திரங்கள் பாதுகாப்பாக உள்ள இடத்தையும் குறிப்பிட வேண்டும்'' என்றும் சொன்னார்.
உயிலில் தோன்றக் கூடிய சிக்கல்கள் பற்றிப் பேசிய சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் வெங்கடேஷ், ''உயிலைப் பதிவு செய்வது கட்டாயமில்லை. இருந்தாலும், இரண்டு சாட்சிகளோடு, சார் பதிவாளர் முன்னிலையில் உயிலைப் பதிவு செய்வதால் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கும். பதிவுக்கான மொத்தச் செலவு 600 ரூபாய்தான்!'' என்றார்.
உயில் அமல்படுத்து-நராக ஒருவரை நியமிப்-பது அவசி-யம். உயிலில் குறிப்பிடப்-பட்டுள்ள விஷயங்கள் சரியாக நடைபெறுகிறதா என்பதை மேற்பார்-வையிடும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. குடும்ப நண்பர்கள், வக்கீல்கள் போன்றவர்-களை உயில் அமல்படுத்-துபவராக நியமிக்கலாம். அவரே சொத்தைப் பிரித்து கொடுப்பதற்கும், கடன்கள் இருந்தால் அதனை அடைப்பதற்கும் பொறுப்பு ஏற்கிறார்.
• நம் நாட்டில் உயிலில் இரு முக்கியப் பிரிவுகள் உண்டு. ஒன்று, இந்து சட்டத்துக்கு உட்பட்ட உயில். மற்றொன்று, முஸ்லிம் சட்டத்துக்கு உட்பட்ட உயில். முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஒரு முஸ்லிம், தன் உயிலில் தான் சுயமாகச் சம்பாதித்த சொத்தில் 2/3 பகுதியைக் கட்டாயமாக தனது வாரிசுகளுக்குக் கொடுக்க வேண்டும். மீதம் உள்ள 1/3 பகுதியை மட்டுமே தன் விருப்பப்படி பிறருக்கு உரிமை வழங்கி உயில் எழுத முடியும்.
• உயில் மூலம் கிடைக்கும் சொத்துக்கு மூலதன ஆதாய வரி கிடையாது.
உயில்கள் பலவிதம்!
குறிப்பிட்ட விஷயங்களை நிறைவேற்றினால் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட உயில், கணவன், மனைவியோ அல்லது வேறு இருவரோ அதற்கு மேற்பட்டவர்களோ எழுதும் கூட்டு உயில், போர்க்களத்தில் உள்ள ராணுவ வீரர்களுக்கான சலுகைக்கு உட்பட்ட உயில் போன்ற பலவகையான உயில்கள் உள்ளன. இதில், சலுகை உயிலுக்கு, சாட்சியாக ஒருவர் கையெழுத்துப் போட்டால் போதும்.
உயில் எப்போது செல்லாமல் போகும்?
குடிபோதையில் அல்லது மனநிலை சரியில்லாத நிலையில் எழுதிய உயில் சட்டப்படி செல்லுபடி ஆகாது. மேலும் மைனர்கள் எழுதும் உயிலுக்கும் மதிப்பு இல்லை.
சில டெக்னிக்கலான வார்த்தைகள்!
Will உயில் (விருப்ப ஆவணம்)
Testator உயில் எழுதியவர்
Executor உயில் அமல்படுத்துநர்
Codicil இணைப்புத் தாள்கள்
Attested சரிபார்க்கப்பட்டது.
Probate
நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டப்படி, உயிலை செல்லுபடியாக்கல்.
Beneficiary, Legatee வாரிசு
Intestate உயில் எழுதாமல் இறந்து போனவர்
Succession Certificate வாரிசு சான்றிதழ்
Hindu Succession Act இந்து வாரிசு உரிமைச் சட்டம்
Muslim personal Act முஸ்லிம் தனிநபர் சட்டம்
Guardian முஸ்லிம் தனிநபர் சட்டம்
Witness சாட்சி
'ஆன் லைன்' உயில்
உயில் எழுதுவதன் முக்கியத்துவம் வெளிநாடுகளில் மிக அதிகமாகப் பரவியுள்ளது. தற்போது இன்டர்நெட்டின் மூலமாக உயில் எழுதும் முறைகூட வந்துவிட்டது. ஒரு வழக்கறிஞர், உயில் எழுத விரும்புவரிடம் இன்டர்நெட் மூலம் கலந்துரையாடல் நடத்துவார். அதன்பின்னர், உயிலை எழுதி விடலாம். 24 மணி நேரத்துக்குள் அந்த உயில் பதிவு செய்யப்பட்டுவிடும். இந்தியாவில் இந்த வசதி இன்னும் வரவில்லை.
ஒருவர் பல உயில்கள் எழுதலாம். அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட உயில்கள் ஒரே சொத்துக்கு இருக்குமாயின், எந்த உயில் கடைசியாக எழுதியதோ அதுவே செல்லும். தேதி, நேரம் படி பார்ப்பார்கள்.
உயில்களை வருமான வரியை மிச்சப் படுத்தும் ஒரு சாதனமாகவும் கையாளலாம்!
ஒருவர் பல உயில்கள் எழுதலாம். அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட உயில்கள் ஒரே சொத்துக்கு இருக்குமாயின், எந்த உயில் கடைசியாக எழுதியதோ அதுவே செல்லும். தேதி, நேரம் படி பார்ப்பார்கள்.
ஓருவர் தான் எழுதிய உயிலை எப்போது வேண்டுமானாலும் மாற்றி எழுத முடியும்.
-நன்றி: ராஜேஷ் ரெட்டி
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக