லேபிள்கள்

வியாழன், 6 பிப்ரவரி, 2014

பெண் குழந்தைகளுக்கு காது குத்தலாமா?

பெண் குழந்தைகளுக்கு காது குத்தலாமா?

இஸ்லாம் பெண்களுக்கென தடைசெய்யப்பட்ட விஷயங்களில், காது குத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று கூறி காது குத்தக்கூடாது என விலக்குவதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை! மாறாக, நபித்தோழியர் காது குத்தி காதணிகளும் அணிந்திருந்தனர் என்பதற்கு மறுக்க முடியாத மார்க்க ஆதாரமுள்ளது. அவற்றைப் பார்ப்பதற்கு முன், பெண்களுக்கென தடைசெய்யப்பட்ட சிலவற்றை அறிந்து கொள்வோம்!

பச்சை குத்திக் கொள்வதும், பச்சை குத்தி விடுவதும் பொதுவாக ஆண், பெண் இருபாலினத்தாருக்கும் தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பான சில செயல்களுக்காக, பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சபித்தார்கள் என ஆதாரப்பூர்வ நபிமொழிகளிலிருந்து அறிந்து வைத்திருக்கிறோம்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்' என்று கூறினார்கள்.

இச்செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, 'உம்மு யஅகூப்' எனப்படும். ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் வந்து, 'இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே' என்றார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக்கூடாது?' என்று கேட்டார்கள்.

அதற்கு அந்தப் பெண், '(குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டதை நான் அதில் காணவில்லையே!' என்று கேட்டதற்கு அவர்கள், 'நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். 'இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தடுப்பதைவிட்டும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்' எனும் (திருக்குர்ஆன் 59:7 வது) வசனத்தை நீ ஓதவில்லையா?' என்று கேட்டார்கள். அந்தப் பெண், 'ஆம் (ஒதினேன்)' என்று பதிலளித்தார். அப்துல்லாஹ்(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் (மேலே குறிப்பிட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்' என்று கூறினார்கள். அந்தப் பெண்மணி, 'உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக கருதுகிறேன்' என்று கூறினார். அப்துல்லாஹ் (ரலி), 'சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்!' என்று கூறினார்கள். எனவே, அந்தப் பெண் சென்று பார்த்தார். தம் எண்ணப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால், அவளுடன் நான் சேர்ந்து வாழமாட்டேன்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அல்கமா இப்னு கைஸ் (ரஹ்) நூல்கள்: புகாரி 4886, முஸ்லிம் 4311)

பச்சை குத்திக் கொள்வது, முகத்தில் முளைக்கும் முடிகளை அகற்றுவது, அரத்தால் தேய்த்து முன் பற்களைப் பிரித்துக் கொள்வது, ஒட்டுமுடி வைத்துக்கொள்வது இவையெல்லாம் நபித்துவ காலத்திற்கு முன்னரே பெண்களிடம் நடைமுறை வழக்கமாக இருந்தவை போன்றே, பெண்கள் காது குத்தி, காதணிகள் அணியும் வழக்கமும் நடைமுறையில் இருந்தது.

பெண்களுக்கு மேற்கண்ட தடைகளை விதித்த இஸ்லாம், பெண்கள் காது குத்திக்கொள்வது அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்வதாகும் எனில் காது குத்துவதையும் நேரடியாகத் தடைசெய்திருக்க வேண்டும்!

''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நோன்புப் பெருநாள் அன்று உரையாற்றிய போது கூட்டம் மிகுதியாக இருந்ததால் தமது உரையைப்) பெண்களுக்கு கேட்க வைக்க முடியவில்லை என்று அவர்கள் கருதி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள். அங்கு அவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு அவர்களிடம் தர்மம் செய்யும்படி ஏவினார்கள். உடனே பெண்கள் தம் காதணிகளையும், மோதிரத்தையும் கழற்றிப் போட ஆரம்பித்தார்கள். பிலால் (ரலி) தம் ஆடையி(ன் ஒரு புறத்தை விரித்து அதி)ல் அவற்றைப் பெற்றுக் கொண்டே சென்றார்கள்" (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி 98, முஸ்லிம் 1605, ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிப்பு: முஸ்லிம் 1607)

மேற்காணும் அறிவிப்பில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களிடம் ''தர்மம் செய்யுங்கள்'' என்று
  கூறியதும் பெண்கள் காதணிகளையும், மோதிரங்களையும் கழற்றித் தர்மம் செய்தார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நபி (ஸல்) அவர்களின் காலத்தில், பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதற்காக காதில் ஆபரணங்கள் அணிந்திருந்தனர் என்பதை மறு கருத்துக்கு இடமின்றி தெளிவுபடுத்துகின்றது.

பெண்கள் காது குத்தி காதணிகள் அணிந்திருந்ததை அல்லாஹ் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்ததாக எவ்வித அறிவிப்பும் இல்லை! பெண்கள் காது குத்தி காதணிகள் அணிந்திருந்ததைக் கண்ட நபித்தோழர்கள் எவரும் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள் என அறிவித்து பெண்களை எச்சரிக்கை செய்ததாகவும் அறிவிப்புகள் இல்லை!

''...இத்தூதர் உங்களுக்கு எதை வழங்கினாரோ அதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதை உங்களுக்குத் தடுத்தாரோ (அதை விட்டும்) விலகிக்கொள்ளுங்கள் இன்னும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன். (அல்குர்ஆன் 59:007)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதை அனுமதித்தார்களோ அவற்றை ஏற்று, எதை விலக்கினார்களோ அதைவிட்டும் விலகிக்கொள்வதும் முஸ்லிம்களின் பண்புகளுக்கு இலக்கணமாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களுக்கு அனுமதித்தவையும், விலக்கியவையும் ஆதாரப்பூர்வ அறிவிப்புகளில் தெளிவுபடுத்தப் பட்டுள்ளன.

ஆகவே, பெண்கள் காது, மூக்கு குத்தக்கூடாது என்பதற்கு இஸ்லாமில் தடையேதும் இருப்பதாக அறியவில்லை!
 
''உமது இறைவனின் கட்டளையைக் கொண்டேயன்றி நாம் இறங்குவதில்லை. எமக்கு முன்னுள்ளவையும் எமக்குப் பின்னுள்ளவையும், அவற்றிற்கிடையே உள்ளவையும் அவனுக்கே உரியனவாகும். உமது இறைவன் (எதையும்) மறப்பவனாக இல்லை!'' (என ஜிப்ரீல் கூறினார்) (அல்குர்ஆன் 19:064)
 
குறிப்பு: காது குத்து என்கிற பெயரில் சடங்கு சம்பிரதாயங்கள் செய்வதற்கும், விழா எடுப்பதும் பெண் பிள்ளைகளுக்கு தர்கா சென்று காது குத்திவிடுவதற்கும் இஸ்லாத்தில் அறவே அனுமதி இல்லை. இவ்வாறு செய்வது பித்அத் மற்றும் இறைவனுக்கு இணைகற்பிக்கும் செயலாகும்.

(இறைவன் மிக்க அறிந்தவன்)
http://pettagum.blogspot.in/2013/09/blog-post_550.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts