லேபிள்கள்

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

முத்துக்கள் பத்து!

முத்துக்கள் பத்து!

விண்ணைத் தாண்டி மேலே சென்று கொண்டிருக்கும் விலைவாசி, அதிர்ச்சியில் ஆழ்த்தும் கல்விக் கட்டணங்கள்... இவற்றை தங்கள் வருமானத்தைக் கொண்டு பெரும்பாலானவர்களால் எளிதில் சமாளிக்க முடிவதில்லை. சில எளிய சூத்திரங்களைக் கடைப்பிடித்தால்... கஷ்டத்தில் உள்ளவர்களின் கரன்ஸி கரைவது குறையும்... 'கஷ்டம் இல்லை' என்கிற நிலையிலிருப்பவர்களுக்கு சேமிப்பு உயரும். அந்த சூத்திரங்கள் 'முத்துக்கள் பத்து' என ஆங்காங்கே இடம்பெறுகின்றன.
 தொகுப்பு: லதானந்த்

கேஸில் மிச்சமாக்கலாம் காசு!
 அடுப்பை முறையான இடைவெளியில் நன்கு பராமரித்தாலே கேஸ் கணிசமான அளவு மிச்சமாகும். தீயின் ஜுவாலை நீல நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் இருந்தால், பர்னரில் கோளாறு மற்றும் கேஸ் விரயம் என்று தெரிந்து கொள்ளலாம். இயன்றவரை 'சிம்'மில் வைத்து சமைத்தால் காய்கறிகளின் சத்தும் வீணாகாது. கேஸும் மிச்சமாகும். அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு கடுகு, எண்ணெய் என்று பொருட்களை எடுக்க அலைமோதாதீர்கள். சமையலுக்குத் தேவையான அனைத்தையும் கையருகில் வைத்துக்கொண்டு அடுப்பைப் பற்றவையுங்கள். ஃப்ரிட்ஜில் இருந்து பொருட்களை எடுத்தவுடன் சமைக்க ஆரம்பித்தால்... எரிபொருள் அதிகம் செலவாகும்.

மொத்த விற்பனைக் கடையை நாடுங்கள்!
பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்காமல், கடைவீதியில் மொத்தமாக மளிகைப் பொருட்கள் விற்கும் கடைகளில் மாதத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கினால்... 10 சதவிகிதத்துக்கும் அதிகமாகப் பணம் மிச்சமாகும். மேலும் பெரும்பாலான சூப்பர் மார்க்கெட் கடைகளில் பல பொருட்களுக்கு எம்.ஆர்.பி விலையில் இருந்து சல்லிக்காசுகூடக் குறைக்கமாட்டார்கள். ஆனால், மொத்த விற்பனைக் கடைகளில், தங்கள் லாபத்தில் சிறு பகுதியை விட்டுக்கொடுத்து விலை குறைவாக விற்பனை செய்வார்கள்.

பெட்ரோல் சிக்கனம்!
சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தால் இன்ஜினை அணைத்து விடுங்கள். வாகனங்களை ஒழுங்காகப் பராமரித்தால் வாகன எரிபொருள் செலவு மட்டுப்படும். கிளட்ச், பிரேக் போன்றவற்றை தேவை இல்லாமல் அழுத்திக் கொண்டிருந்தாலும் மளமள என்று எரிபொருள் காலியாக ஆரம்பிக்கும். வெளிவேலைகளைக் குறித்து வைத்துக் கொண்டு, ஒரு முறை வாகனத்தை எடுக்கும்போதே அனைத்து வேலைகளையும் முடிக்கப் பாருங்கள். ஒரே திசையில் ஒரே நேரத்தில் பயணம் செய்யும் நண்பர்கள் இருந்தால், பயணத்தையும், எரிபொருள் செலவையும் பகிர்ந்துகொள்ளுங்கள். நிழலில் வாகனத்தை நிறுத்தினால்... பெட்ரோல் ஆவியாவது பெருமளவு தவிர்க்கப்படும்.

 'ஸ்விட்ச் ஆஃப்' செய்ய மறக்காதீர்கள்!
ஆளில்லாத அறைகளில் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறி, விளக்குகள், தொலைக்காட்சிப் பெட்டி, கணிப்பொறி போன்றவற்றை அணையுங்கள். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மின்சாதனங்களின் ஸ்விட்ச்கள் அணைக்கப்பட்டு இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். குறிப்பாக, மின்வெட்டு சமயங்களில் இதை நிச்சயமாக கடைப்பிடிப்பதன் மூலம், கரன்ட் போகும்போது 'ஆன்' ஆகியிருந்த சாதனங்கள், கரன்ட் வரும்போது செயல்பட்டு மின்சாரம் வீணாவதைத் தடுக்கலாம்.

தவறான பழக்கத்துக்கு 'தடா' போடுங்கள்!
உங்களது குடும்ப அங்கத்தினர் யாருக்கேனும் புகை மற்றும் குடிப்பழக்கம் இருப்பின் அதை கைவிட உங்களால் ஆனதைச் செய்யுங்கள். உடல் நலன் பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதோடு... இந்த பழக்கங்களுக்கு செய்யப்படும் மிக அதிகமான செலவையும் கட்டுப்படுத்தி, அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.

தண்ணீர்... தண்ணீர்!
 வேலைகளைச் செய்யும்போது குழாய்களை திறந்து வைத்துக் கொண்டு செய்யாமல், சில நொடிகளே என்றாலும்... தேவை இல்லாதபோது, குழாய்களைச் சரியாக மூடினாலே பெருமளவு தண்ணீரைச் சேமிக்கலாம். மிகச் சரியான முறையில் திட்டமிட்டுக் குளித்தால் அரை வாளி முதல் ஒரு வாளிவரை தண்ணீரே சுத்தமாகக் குளிப்பதற்குப் போதும். இதுபோல நாம் யோசித்து செயல்பட்டால், சமையலறை பயன்பாடு உட்பட பல வழிகளிலும் தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.

குண்டு பல்பு வேண்டாமே!
குண்டு பல்புகள் அதிகம் மின்சாரத்தை உறிஞ்சும். எனவே, குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் சி.எஃப்.எல். வகை பல்புகளுக்கு மாறுங்கள். இதன் மூலம் மின்சாரம் 70% அளவுக்கு சேமிக்கப்படுகிறது. சி.எஃப்.எல். பல்புகளின் ஆயுட்காலமும் அதிகம்.

 கிச்சன் இருக்க ஹோட்டல் எதற்கு?
அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுவது இப்போது ஃபேஷன் ஆகி வருகிறது.  வெளியில் சாப்பிட்டால் ஒரு நபருக்கு 100 ரூபாய்க்கும் குறைவில்லாமல் செலவு ஆகும். புத்தகம், டி.வி-யில் இடம்பெறும் தரமான ரெசிபிகளை முயற்சித்துப் பாருங்கள். நீங்களே தயாரித்தது என்ற பெருமிதமும் இருக்கும்; வெளியில் செல்லும் அலைச்சலும், பண விரயமும் தவிர்க்கப்படும். இது, ஆரோக்கியத்துக்கும் நல்லது.

நேரத்தை பணமாக்குங்கள்!
வெட்டி அரட்டை, அதிகப்படியான தூக்கம் போன்றவற்றில் விரயமாகும் நேரத்தை சேமித்து, உருப்படியான வழியில் செலவிடுங்கள். படைப்பாற்றல், புதிய தொழில் கற்றுக்கொள்ளுதல், ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ளுதல் இவற்றின் மூலம் உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.
செலவு குறைக்கும்  செல்போன் 'பேக்கேஜ்'!
குடும்ப அங்கத்தினர் அனைவர் கையிலும் தனித்தனி செல்போன் இருக்கும் காலம் இது. அப்புறம் வீணாக லேண்ட் லைன் தொலைபேசி எதற்கு? மேலும் குடும்ப அங்கத்தினர் அல்லது அடிக்கடி நாம் பேசும் நபர்களுடன் குறைந்த செலவில் தொடர்பு கொள்ள பலவிதமான பேக்கேஜுகள் இருக்கின்றன. அவற்றில் எது சிறந்தது, சிக்கனமானது என்பதைத் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்


--
*more articles click*
www.sahabudeen.com


வியாழன், 27 பிப்ரவரி, 2014

நான் - ஸ்டிக்- முக்கிய குறிப்புகள்!

நான் - ஸ்டிக்- முக்கிய குறிப்புகள்!
நான் - ஸ்டிக் கடாய், தவா போன்ற பாத்திரங்களை பயன்படுத்துகிறீர்களா? கீழே உள்ள குறிப்புகளை படித்து, மனதில் பதித்துக் கொள்ளவும்.

* குறைந்த மிதமான சூடு போதுமானது.

* சமைக்கும் பொருட்கள் ஏதுமின்றி, தீயின் மேல் இருக்கக் கூடாது. அப்படி அதிக நேரம் வைத்தால், பூசப்பட்ட கோட்டிங் பாழாகி விடும்.

* மென்மையான துணி அல்லது ஸ்பாஞ்ச் போன்றவற்றால் துடைக்க வேண்டும்.

* உபயோகிக்கும் முன்பும், பின்பும், பாத்திரத்தை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும்.

* சுத்தம் செய்யும் போது, சோப்புத் தூள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். கிளீனிங் பவுடர் பயன்படுத்தக் கூடாது.

* கூர்மையான உலோகக் கரண்டி மற்றும் கத்தியை பாத்திரத்தில் பயன்படுத்தக் கூடாது.

* மரத்தினாலான கரண்டியோ அல்லது பிளாஸ்டிக் கரண்டியோ பயன்படுத்துவது நல்லது.

* நான் - ஸ்டிக் பாத்திரங்களை, மற்ற பாத்திரங்களோடு உரசல் ஏற்படாமல், அதற்கென்று உள்ள ஆணியில் மாட்டி பாதுகாக்க வேண்டும்.

* பல முறை உபயோகித்த பின், சில காரணங்களால் பாத்திரத்தில் கறையோ அல்லது படிவமோ தென்படலாம். அச்சமயம், பாத்திரத்தின் பாதி அளவிற்கு நீர் ஊற்றவும். அதில்,
ஒரு தேக்கரண்டி ப்ளீச்சிங் பவுடரை கலக்கவும். சிறிது வினிகர் ஊற்றவும். பிறகு மிதமான சூட்டில், பத்து நிமிடங்கள் சூடேற்றவும். கொதி வரும் நிலையில், மரக்கரண்டி கொண்டு, அழுத்தமில்லாமல் தேய்த்தால், சுத்தமாகி விடும். பின், சோப்பு நீரில் கழுவி, சிறிது எண்ணெய் தடவி பயன்படுத்தலாம்
http://pettagum.blogspot.in/2013/04/blog-post_9116.html

--
*more articles click*
www.sahabudeen.com


புதன், 26 பிப்ரவரி, 2014

சாட்சி கையெழுத்து: நில்… கவனி… போடு!

சாட்சி கையெழுத்து: நில்கவனி போடு!


மீபத்தில் நில அபகரிப்பு புகாரில் மாட்டிக் கொண்டார் நண்பர் ஒருவர். யாரோ ஒருவர் போலியாக தயாரித்த ஆவணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்டதுதான் நண்பர் செய்த தவறு. இதற்காக நீதிமன்றத்திலிருந்து அவரை விசாரிக்க அழைப்பு வர, நண்பரின் குடும்பமே மிரண்டு போனது. நல்லவேளையாக, அவருடைய வழக்கறிஞர் நண்பர்கள் சிலர் அவருக்குத் தைரியம் சொல்ல, நீதிமன்றத்திற்குச் சென்று, பதில் சொல்லிவிட்டு வந்தார். சாட்சி கையெழுத்து போட்ட இன்னொருவரோ, நீதிமன்ற விசாரணை என்றவுடன் ஊரை விட்டே ஓடிவிட்டார்.  

சாட்சி கையெழுத்து போடலாமா? கூடாதா? சாட்சி கையெழுத்து போட்டால் பிரச்னை வருமா? பிரச்னையில் மாட்டாமல் இருக்க வேண்டுமெனில் எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பல கேள்விகளை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

கையெழுத்து கட்டாயம்!

"சாட்சி கையெழுத்து என்பது எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்து இட்டதற்கு சாட்சியாக இரண்டு நபர்களை கையெழுத்து போட வைப்பதுதான். அதாவது, அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டவர் இந்த நபர்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் போடும் கையெழுத்துதான் சாட்சி கையெழுத்து.

 பதிவுத் திருமணம், பத்திரப் பதிவு, உயில் எழுதுவது, பாகப்பிரிப்பு பத்திரம் போன்ற ஆவணங்களில் சாட்சி கையெழுத்து போடுவார்கள். பொதுவாக குறைந்தபட்சம் இரண்டு சாட்சி கையெழுத்து வாங்குவது வழக்கமாக உள்ளது. சில ஆவணங்களில் சாட்சி கையெழுத்தைக் கட்டாயமாக வைத்துள்ளது சட்டம். உதாரணமாக, உயில், தானம் போன்ற ஆவணங்களில் சாட்சி கையெழுத்து அவசியம்.
 கட்டாயமில்லை!

சில ஆவணங்களில் சாட்சி கையெழுத்து வாங்குவது சட்டப்படி கட்டாயம் இல்லை என்றாலும், தொன்றுதொட்டு வந்த பழக்கத்தால் சாட்சி கையெழுத்து போடப்படுகிறது. இந்த ஆவணங்களில் சாட்சி கையெழுத்து இல்லையென்றாலும் அந்த ஆவணம் செல்லுபடியாகும். இதற்கு உதாரணம் புரோநோட். பொதுவாக புரோநோட்டில் சாட்சி கையெழுத்து வாங்குவது வழக்கம். ஆனால், சட்டப்படி புரோநோட்டில் சாட்சி கையெழுத்து இல்லையென்றாலும் செல்லு படியாகும். பாதுகாப்பிற்காக சாட்சி கையெழுத்து வாங்கப்படுகிறது.

 கேரன்டி Vs சாட்சி கையெழுத்து!

வங்கியில் கடன் வாங்கும்போது கேரன்டி கையெழுத்து கேட்பார்கள். கேரன்டி கையெழுத்து என்பது கடன் வாங்கும் நபர் கடனை திரும்பச் செலுத்தவில்லை எனில் கேரன்டி கையெழுத்து போட்டவர்தான் அந்த கடனை திரும்பச் செலுத்த கடமைப்பட்டவர் ஆவார். நேரடியாக கடன் வாங்கிய நபரை அணுகாமல் கேரன்டி கையெழுத்து போட்டவரிடமே கடனை கேட்க வங்கிக்கு உரிமை உண்டு. அந்த கடனில் அவருக்கும் பங்குண்டு என்பதே கேரன்டி கையெழுத்தின் சாராம்சம்.

 ஆனால், சாட்சி கையெழுத்து அப்படியில்லை. எந்த ஆவணமாக இருந்தாலும் அந்த ஆவணத்தை எழுதிக் கொடுத்தவர் எனக்கு முன்பாகதான் கையெழுத்து போட்டார் என்பதை ஊர்ஜிதப் படுத்த கையெழுத்து போடுவதுதான் சாட்சி கையெழுத்து. கேரன்டி கையெழுத்துக்கும், சாட்சி கையெழுத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஆவணத்தில் தனக்கு முன்பாக அதை எழுதிக் கொடுத்தவர் கையப்பமிட்டார் என்பதற்கு ஆதாரம்தான் சாட்சிக் கையெழுத்து. அதற்கு மட்டுமே சாட்சி பயன்படுவார். தவிர, அந்த ஆவணத்தில் இருக்கும் மற்ற விஷயங்களுக்கு சாட்சி கையெழுத்து போட்டவர் பொறுப்பாக மாட்டார்.
 சாட்சி கையெழுத்து போடும் போது அந்த ஆவணத்தில் இருக்கும் சங்கதிகள் அல்லது தகவல்கள் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது ஆவணத்தின் தன்மை, உரிமை மாற்றம் என எதுவாக இருந்தாலும் அதை சாட்சி தெரிந்து கொள்ள, தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக, உங்கள் வீட்டை போலியாக வேறு ஒரு நபர் விற்கிறார். அந்த ஆவணத்தில் சாட்சியாக உங்களிடமே கையெழுத்து வாங்குகிறார் எனில், நீங்கள் சாட்சி கையெழுத்து போட்டதனாலேயே அந்த வீட்டை விற்க நீங்கள் ஒப்புக் கொண்டதாக ஆகிவிடாது. நீங்கள் அந்த ஆவணத்தின் தரப்பினராக சட்டப்படி கருதப்பட மாட்டீர்கள்.
 ஆனால், சில விதிவிலக்கான நேரத்தில் சாட்சி கையெழுத்து போடுபவருக்குச் சிக்கல் வரவாய்ப்பிருக்கிறது. அதாவது, நெருங்கிய உறவினர் தயாரித்த ஆவணத்தில் கையெழுத்து போடுகையில் அந்த ஆவணத்தில் இருக்கும் தன்மை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, ஒரு தந்தை தனது மகளுக்கு ஒரு சொத்தை செட்டில்மென்ட் செய்து கொடுக்கிறார் எனில், அப்போது தனது மகனை அந்த செட்டில்மென்ட் டாக்குமென்டில் சாட்சியாக கையெழுத்து போட வைக்கிறார். இந்த சூழ்நிலையில் அந்த மகன், 'அந்த டாக்குமென்டில் இருக்கும் தன்மை எனக்கு தெரியாது' என சொல்வது நம்பும்படியாக இருக்காது.

என்ன சிக்கல் வரும்?

சாட்சி கையெழுத்து போடுபவருக்கு என்ன சிக்கல் வரும்? தற்போது நில அபகரிப்பு மோசடிகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. ஒரு நிலத்தை ஒருவர் பெயரிலிருந்து இன்னொருவர் பெயருக்கு விற்கும்போது அந்த நபர்கள் போடும் கையெழுத்தை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் சாட்சி கையெழுத்து போடும் நபர் கையெழுத்து போடுவார். ஏதாவது பிரச்னை வரும்போது இந்த நிலத்தை நான் விற்கவில்லை இந்த கையெழுத்து என்னுடையது இல்லை என அந்த நிலத்தை விற்ற நபர்கள் சொல்லும்போது.அல்லது புரோநோட்டை எழுதி கொடுத்தவர் அதில் உள்ள கையெழுத்தை மறுக்கும்போது அந்த ஆவணத்தில் சாட்சி கையெழுத்து போட்ட நபர்களை நீதிமன்றம் விசாரணைக்கு வரச் சொல்லும். இந்த இடத்தில்தான் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு பொறுப்பு வருகிறது. அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டது இவர்தான் என சாட்சி கையெழுத்து போட்ட நபர் சொல்லும் சாட்சிதான் மிக முக்கியமாக கருதப்படும். இந்த நேரத்தில் மட்டும்தான் சாட்சி கையெழுத்து போட்டவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார்.

 எந்த விவரமும் தெரியாமல் ஒருவர் சாட்சி கையெழுத்து மட்டும் போட்டிருந்தால்  எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஒருவேளை சாட்சி கையெழுத்து போடுபவரும் போலி நில விற்பனைக்கு உடந்தையாக இருந்திருந்தால், பிரச்னைகளை சந்திக்க நேரிடும். போலியான ஆவணங்கள் தயாரிக்க சாட்சி கையெழுத்து போடுபவர்கள் உடந்தையாக இருந்துவிடாமல் கவனமாக இருப்பது நல்லது.
 நன்கு தெரிந்தவர் உங்களிடம் கேட்டுக் கொண்டால் ஒழிய, முன்பின் தெரியாதவர்களுக்கு சாட்சி கையெழுத்து போட வேண்டாம். சிலர் நூறு அல்லது இருநூறு கொடுப்பதாகவும் ஆசை காட்டுவார்கள். பணத்திற்காக ஆசைப்பட்டு யார் யாருக்கோ கையெழுத்து போட்டால் பிற்பாடு நீதிமன்றத்தின் படிகளை அடிக்கடி ஏற வேண்டியிருக்கும்!
நன்றி : vikatan.com


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

ஸ்மார்ட் போன் தொலைந்தால்..?

ஸ்மார்ட் போன் தொலைந்தால்..?

பிரைவஸி பாதுகாப்புக்கான ஸ்மார்ட் டிப்ஸ்!

''எங்கள் நட்புக் குழுவில் பலரிடமும் ஸ்மார்ட் போன் உண்டு. சமீபத்தில் தோழி ஒருவரது ஸ்மார்ட் போன் திருடு போனதில் தடுமாறி தவித்துப்போனாள். காரணம், மொபைல் பேங்கிங், சமூக வலைதளங்கள், இ-மெயில் என பலவற்றையும் தனது ஸ்மார்ட் போன் மூலமாக எளிதில் அணுகும் வகையில் ஆக்டிவேட் செய்திருந்தாள். தவிர புகைப்படங்கள், வீடியோ ஃபைல்கள் அடங்கிய மெமரிகார்டும் அந்த மொபைலில் இருந்தது. பிரைவஸி போச்சு, பணம் போச்சு என்று காவல் நிலையத்துக்கும், மொபைல் போன் சென்டருக்குமாக அலைந்து கொண்டிருக்கிறாள். இந்த கசப்பு அனுபவத்துக் குப் பிறகு, ஸ்மார்ட் போன் திருட்டுக்கு எதிரான முன்ஜாக்கிரதை குறிப்புகளைத் தேட ஆரம்பித்திருக்கிறோம். இதில் உதவ முடியுமா?''

''ஸ்மார்ட் போன் அனுகூலங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள துடிப்பாக இருக்கும் பலரும், அது தரும் பாதுகாப்பு அம்சங்களை கட்டமைத்துக் கொள்ள தவறுகிறார்கள். ஒரு ஸ்மார்ட் போனை வாங்கிய கையோடு அதன் 'செட்டிங்ஸ்' வழங்கும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் ஆராய்ந்து பாதுகாப்பை இறுக்கிக்கொள்ளுங்கள். இதற்கு விற்பனை பிரதிநிதி அல்லது அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் தேவையான உதவி கிடைக்கும்.

'பின் நம்பர்' எனப்படும் பர்சனல் ஐடண்டிஃபிகேஷன் நம்பர், பேட்டர்ன் லாக் எனப்படும் பல பூட்டுகள் உங்கள் ஸ்மார்ட் போனை அந்நியர் பயன்படுத்துவதற்கு எதிராக பாதுகாக்கும். இதே செட்டிங்ஸில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலாக தவறான முறைகளில் மேற்படி பாதுகாப்பை திறக்க முயற்சித்தால், செல்போன் தானாக தனது டேட்டா அனைத்தையும் அழித்துக்கொள்ளும் வகையில் கட்டமைத்துக் கொள்ளலாம். மொபைல் ட்ராக்கிங் என்னும் வசதியை ஆக்டிவேட் செய்வதன் மூலம், உங்களது சிம்கார்டு தவிர்த்து வேறு சிம்கார்டுகளை உங்கள் மொபைலில் பொறுத்தினால்... அந்த சிம்கார்டு குறித்த விவரங்களை உங்கள் குடும்பத்தினர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் வரச்செய்யுமாறு உள்ளிடலாம்.  

அடுத்ததாக, மொபைல் திருட்டுக்கு எதிரான இன்ஷூரன்ஸ் பற்றி பார்ப்போம். பல ஆயிரங்கள் மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட் போனுக்கான இன்ஷூரன்ஸ் பிரீமியம் நூற்று சொச்ச ரூபாய்தான். மொபைல் காணாமல் போனது உறுதியானதும் விரைந்து சந்தாதாரராக இணைப்பில் இருக்கும் செல்போன் நிறுவனத்தை தொடர்புகொண்டு உங்கள் சிம் கார்டை செயல்படாது செய்யுங்கள். பிறகு, அருகிலிருக்கும் கிளையை அணுகி அதே எண்ணில் புதிய சிம்கார்டை, பேலன்ஸ் டாக் டைமுடன் பெற்றுக் கொள்ளுங்கள். சிம்கார்டை பிளாக் செய்ததற்கும், புதிய சிம் வழங்கியதற்குமான அவர்கள் வழங்கும் அத்தாட்சி நகலோடு, செல்போன் பில் நகலையும் இணைத்து, காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள்.

முடிந்தால் திருடுபோன செல்போனை கண்டுபிடித்து தருவார்கள் அல்லது சில நாட்களுக்குப் பிறகு, 'கண்டுபிடிக்க முடியவில்லை' என்பதற்கான சான்றை தருவார்கள்.
இந்த சான்றோடு மொபைல் வாங்கியதற்கான பில், காப்பீட்டு விவரம் இவற்றை இணைத்து காப்பீட்டு நிறுவனத்திடம் நேரடியாகவோ தபால் மூலமோ அணுகினால், தொலைந்த போனுக்கான காப்பீடு கிடைக்கும். இந்தத் தொகை, அநேகமாக அதே ஸ்மார்ட் போனின் சரிந்திருக்கும் தற்போதைய விலைக்கு இணையாக இருக்கும் என்பது ஆறுதல். இந்த வகையில் பண இழப்பை சரிசெய்துவிடலாம்.

ஸ்மார்ட் போன் தொலைந்து போவதில், இன்னுமொரு பண இழப்பை தவிர்க்கும் நடவடிக்கை... மொபைல் பேங்கிங் செயல்பாட்டை முடக்குவதுதான். இதற்கு உங்கள் வங்கி சேவையாளர் மையத்தை கால்சென்டர் உதவியுடன் அணுகி மேற்படி இணைப்பில் இருக்கும் மொபைல் பேங்க் வசதியை ரத்து செய்யுமாறு    கோரலாம். செல்போனில் உங்களது பிறந்தநாள், வங்கிக்கணக்கு தொடர்பான விவரங்கள், மொபைல் பேங்கிங் பாஸ்வேர்டு போன்றவற்றை எக்காரணம் கொண்டும் பதியக்கூடாது. இது ஸ்மார்ட் போன் திருடுபோன சூட்டில் உங்கள் வங்கி கணக்கின் இருப்பையும் காணாமல் போக வழி செய்துவிடும்.

இ-மெயில் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தனிப்பட்ட கணக்கு தகவல்களை பிறர் அணுகாமல் தவிர்க்க அவ்வப்போது அவற்றிலிருந்து வெளியேறியதும் லாக் அவுட் செய்ய வேண்டும். ஆனால், பலரும் தங்கள் வசதிக்காக, ஒற்றை தொடுகையில் இ-மெயில், ஃபேஸ்புக் போன்றவை திறக்குமாறு வைத்திருப்பார்கள். இவர்கள், ஸ்மார்ட் போன் தொலைந்ததை உறுதிபடுத்திக் கொண்டதும் உடனடியாக வேறு இணைய இணைப்பின் மூலம் தங்கள் இ-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகளின் பாஸ்வேர்டுகளை மாற்றிவிட்டால், பிரச்னையிலிருந்து தப்பலாம்.

தனிப்பட்ட மற்றும் அந்தரங்க படங்கள், வீடியோக்களை ஸ்மார்ட் போனில் இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும். அந்த மாதிரியான பர்சனல் படங்களை எடுக்காமல் தவிர்ப்பதே உத்தமம். காரணம், எடுத்த படங்களை அழித்துவிட்டாலும் அவற்றை மீட்பதற்கான உபத்திரவ தொழில்நுட்பங்கள் நமக்கு பெரும் அச்சுறுத்தலே! மற்றபடி ஸ்மார்ட் போனில் சேகரிக்கும் ஏனைய படங்கள், வீடியோக்களை அவை பதிந்திருக்கும் ஃபோல்டருக்கு தனியாக பாஸ்வேர்டு உபயோகிப்பதன் மூலம் பாதுகாக்கலாம்.

உங்கள் போனில் இந்த வசதி இல்லாவிட்டால் இலவசமாக கிடைக்கும் ஆன்ட்ராய்டு போன்ற அப்ளிகேஷன்கள் உதவியோடு இந்த பாதுகாப்பை இறுக்கிக்கொள்ளலாம். ஸ்மார்ட் போனின் உள்ளடங்கிய மெமரி தவிர்த்து, மெமரி கார்டு போன்ற எளிதில் அகற்றக்கூடிய சேமிப்பு அம்சங்களிலும் இதேபோல அப்ளிகேஷன்களை செயல்படுத்திக் கொள்ளலாம். தனிப்பட்ட பாஸ்வேர்டு தருதல், குறிப்பிட்ட ஹேண்ட்செட்டில் இணைத்தால் மட்டுமே அந்த பாஸ்வேர்டும் செயல்படுவது என பல வகைகளிலும் மெமரி கார்டு பாதுகாப்புக்கு அப்ளிகேஷன்கள் கைகொடுக்கும். அரிய படங்களை எப்போதும் மெமரி கார்டிலேயே வைத்திராது, அவ்வப்போது 'பேக்கப்' எடுத்து பாதுகாத்துக் கொள்வது நல்லது.''


--
*more articles click*
www.sahabudeen.com


திங்கள், 24 பிப்ரவரி, 2014

பிஸினஸை வளர்த்தெடுப்பது எப்படி

பிஸினஸை வளர்த்தெடுப்பது எப்படி

இப்படி ஒரு கேள்வி பலர் மனதிலும் இருக்கும். பால் ஹாவ்கென் என்பவர் எழுதிய 'குரோயிங் ய பிஸினஸ்' புத்தகம் இந்தக் கேள்விக்கான தெளிவான பதிலை நமக்குச் சொல்கிறது.
பால் ஹாவ்கென் எழுதிய இந்தப் புத்தகம் 1988-ல் வெளியானது. புத்தகம் வெளியாகி 25 வருடம் ஆனபோதிலும் இன்றைக்கும் புதிதாக பிஸினஸ் ஆரம்பிக்க நினைப்பவருக்கு மிகவும் உதவியாக இருக்கும் புத்தகம் இது.
அமெரிக்காவில் ஆண்டுக்கு 10 லட்சம் சிறிய நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டு அவற்றில் பல தோல்வியைச் சந்திக்கின்றது என்கிறது ஒரு புள்ளிவிவரம். இருப்பினும் ஜெயிக்கும் பல நிறுவனங்கள் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்கிறது அதே புள்ளிவிவரம்.
அமெரிக்கா என்றில்லை; எல்லா நாடுகளிலும் சிறிய பிஸினஸ்கள் நிறைய வேலை வாய்ப்பை அள்ளித் தருகின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆக, சிறிய அளவில் பிஸினஸ் ஆரம்பிப்பதை நாம் எந்தவகையிலும் இளக்காரமாக நினைக்கத் தேவையே இல்லை.
ஒரு பிஸினஸ் எப்படி பிறக்கிறது என்பதற்கு ஆசிரியர் தன்னுடைய அனுபவத்திலிருந்தே சுவாரஸ்யமாக எடுத்துச் சொல்கிறார். ஒவ்வாமையினால் வரும் ஆஸ்துமாவினால் அவதிப்பட்டு வந்த பால் ஹாவ்கென் தனது உணவுப் பழக்கத்தை மாற்றியமைத்தால் பிரச்னை தீரும் என்று தெரிந்துகொண்டு, அவருடைய உடலுக்கு ஒவ்வாமை தரும் உணவுகளைத் தவிர்த்து இயற்கையான உணவுகளை வாங்கி உட்கொள்ள முடிவு செய்தாராம். இயற்கையான உணவு தேடி கடை கடையாக ஏறி இறங்க, எல்லாக் கடையிலும் ரசாயன உரங்கள்கொண்டு வளர்க்கப்பட்ட காய்கறிகளே கிடைத்தன. இயற்கையாக விளைவிக்கப்பட்ட பல  விளைபொருட்களை ஒரே இடத்தில் வைத்து விற்கிற மாதிரி ஒரு கடை இல்லையே! பேசாமல் நாமே அப்படி ஒரு கடையை ஆரம்பித்தால் என்ன என்று யோசித்ததன் விளைவுதான், பாஸ்டனில் முதன்முதலாகத் தொடங்கப்பட்ட இயற்கை விளைபொருட்களுக்கான கடை.
'தொழில் சிறியதாக இருக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். கஸ்டமர்களுக்கும் சப்ளையர்களுக்கும் மிக அருகாமையில் இருந்ததால் மிகவும் பெர்சனல் டச்சுடன் இருந்தது பிஸினஸ்' என்று இயல்பாக தன் கதையைச்  சொல்ல ஆரம்பிக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் பால் ஹாவ்கென்.
"வருடங்கள் உருண்டோட ஆரம்பித்தது. கம்பெனி நிறைய லாபம் பார்த்தது.  சில சமயம் நஷ்டமும் வந்தது. நிறைய தொழிலாளர்களை வேலைக்குச் சேர்த்தேன். லாரிகள் வாங்கினேன். கிளைகளைத் திறந்தேன். வேர்ஹவுஸ் மற்றும் குடோன்களைத் திறந்தேன். நிறையப் போட்டிக் கம்பெனிகளை உருவாக்கினேன் அதில் பலர் என்னுடைய முன்னாள் பணியாளர்கள்  - பலர் என்னுடைய நண்பர்கள். ஒரு நாள் என்னுடைய பிஸினஸ் திவாலும் ஆனது" என்று தன் வாழ்க்கைக் குறிப்பிலிருந்தே வெற்றி, தோல்விக்கான காரணங்களை எடுத்துச் சொல்லும் பால் ஹாவ்கென், பிஸினஸை வளர்ப்பது எப்படி என்பதைச் சொல்லித்தர சகலவிதங்களிலும் தகுதியானவர்.
தன்னுடைய பிஸினஸை விற்ற ஆசிரியர் பெரும்பாலான இளமைப் பருவத்தை பிஸினஸில் தொலைத்ததால் வேலைக்குப் போகலாமா என்று நினைத்து ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் வேலை வாய்ப்பு விளம்பரங் களைப் பார்க்க ஆரம்பித்தார். எல்லா கம்பெனிகளுமே வேலைக்கு வரும் நபர்களுக்கு வேலையில் முன்அனுபவம் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இவருக்கோ ஒரு தொழிலை நிறுவி நடத்திய அனுபவம் மட்டுமே இருந்தது. ஆனால், ஒரு விளம்பரம்கூட எங்களுக்கு ஒரு தொழிலை நிறுவி நிர்வகித்துத் தரவேண்டும் என்று சொல்லவில்லை. என்ன செய்வது! வேலைக்குப் போவதற்கான தகுதி எதுவும் இல்லாமல் இருக்கின்றோமே என நினைத்து வருத்தப்பட்ட பால் மீண்டும் தொழிலதிபராக மாறினார்.
இந்த முறை நேரடியாகத் தொழிலில் இறங்காமல் மறைமுக மாக இறங்கினார். உணவுப் பொருள், பப்ளிஷிங் மற்றும் வேஸ்ட் கன்வர்ஷன் துறைகளில் ஏற்கெனவே செயல்படும் மூன்று கம்பெனிகள் சிரமத்தில் இருந்தன. அதற்கு ஆலோசனை தந்து அந்த மூன்று நிறுவனங்களையும் மறுபடியும் லாபத்துடன் செயல்பட வைத்தார். அதன் பின்னர் ஸ்மித் அண்ட் ஹாவ்கென் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.
'முதன்முதலாக தொழில் ஆரம்பிக்கும்போது தொழில் ஞானம் ஏதுமில்லை எனக்கு. ஆனால், ஆரம்பித்தத் தொழில் என் கைக்குள்ளே இருந்தது. தொழில் ஞானம் பெறவேண்டும் என நினைத்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் படித்தேன். ஃபார்ச்சூன் 500 மேகஷினைப் படித்தேன். அவையெல்லாம் பெருந்தொழில்கள் பற்றிப் பேசின. நானோ சிறிய பிஸினஸ்மேன். ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூல் நடத்தும் பயிற்சிகளுக்குக்கூடச் சென்று பார்த்தேன். இவற்றிலெல்லாம் நான் தெரிந்துகொண்ட விஷயங்களையும் என்னுடைய பிஸினஸையும் இணைத்து ஒப்பீடு செய்து பார்த்தால், நான் பிஸினஸில்தான் இருக்கின்றேனா என்று எனக்கே சந்தேகம் வந்தது. அவர்கள் சொல்வதற்கும் நான் செய்வதற்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது.
நான் செய்ததோ சிறிய தொழில். அதை வளர்க்க நிறைய விஷயங்கள் தேவைப்படும். சிறுதொழிலை வளர்க்கவேண்டுமெனில், முதலில் உலகத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளவேண்டும்; அடுத்தவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வது மற்றும் உங்களை மாற்றிக் கொள்வது என்பதற்கும் பெரும்பங்கு இருக்கிறது" என்று சிறுதொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை வளர்த்தெடுக்கத் தேவையான விஷயங்களை புட்டுப்புட்டு வைக்கிறார்  ஆசிரியர்.
இந்தப் புத்தகம் உங்களுக்கு சரியான மாற்று மற்றும் எதிர்மறை ஐடியாக்களைத் தரும் என்று சொல்லும் ஆசிரியர், உதாரணத்திற்கு ஒரு விஷயத்தை விளக்குகிறார்.
"புதிய பிஸினஸ்களில் பெரும்பான்மையானவை முதலீடு (கேப்பிட்டல்)  குறைவான காரணத் தினால் கஷ்டப்படும் என்பது பொதுவாக பல எக்ஸ்பர்ட்கள் சொல்லும் கருத்து. இது  தவறு என்கின்றார் ஆசிரியர். அதிகப் பணம் இருப்பதே ஒரு புது பிஸினஸிற்கு பிரச்னை என்கின்றார் அவர்.
அது மட்டுமல்ல, புத்தகங்களைப் படிப்பதன் மூலமும், கருத்தரங்குகளுக்குச் செல்வதன் மூலமும் புதிய பிஸினஸ் ஐடியாக்களை வேகமாகப் பெறலாம் என்று சொல்லும் ஆசிரியர், புதிய நூதனமான (இன்னோவேட்டிவ்) ஐடியாக்கள் அனுபவத்தினால் வருவதே, வெறும் படிப்பினால் மட்டும் வந்துவிடுவதில்லை என்கிறார்.
இறுதியாக ஒரு குட்டிக் கதையுடன் முடிகிறது இந்தப் புத்தகம். பிரிட்டனில் இருக்கும் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் உதவியாளராக வேலைபார்த்த ஒருவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. நீண்டநாள் வேலை பார்த்தபின்னர் சட்டதிட்டங்கள் மாறியதால் மூன்று மாதத்துக்குள் எழுதப்படிக்க கற்றுகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வேலையைவிட்டு அனுப்பிவிடுவோம் என்றார்கள்.
அவரால் அந்த மூன்று மாதத்தில் எழுதப் படிக்க கற்றுக்கொள்ள முடியவில்லை. மூன்றாவது மாதம் முடிந்தபின் அவரை வேலையைவிட்டு அனுப்பிவிட்டார்கள்.
வேலைபோன சோகத்தில் ஒரு தம் போடலாமே என்று நினைத்து சிகரெட் கடையைத் தேடி நடந்தாராம். ஒரு கடையும் இல்லை. இவ்வளவு பெரிய ரோட்டில் எத்தனைபேர் போகின்றார்கள். ஒரு கடையில்லையே என நினைத்து தன்னுடைய சேமிப்பில் இருந்து அந்த ரோட்டில் ஒரு கடையைத் தொடங்கினாராம்.
கொஞ்சநாளில் அந்த ஏரியாவின் நியூஸ் பேப்பர் ஏஜென்டாகவும் மாறிவிட்டாராம். கடை நன்றாக நடக்க லாபம் கிடைக்க ஆரம்பித்தது. இன்று அந்த ஏரியாவிலேயே அவருடைய கடைதான் பெரிது!
அன்றைக்கு அவர் கஷ்டப்பட்டு எழுதப் படிக்கத் தெரிந்துகொண்டிருந்தால், ஒரு  உதவியாளராக மட்டுமே இருந்திருப்பார். அதற்கான முயற்சியை எடுக்காமல், அவரால் இயல்பாகச் செய்ய முடிந்ததை அவர் செய்ததால்தான், பெரிய பிஸினஸ்மேனாக அவரால் முடிந்தது.
உங்கள் பிஸினஸின் நோக்கம், எதையாவது உருப்படியாகச் செய்வது என்பதற்காக இருக்கட்டும் என்று முத்தாய்ப்பாக முடியும் இந்தப் புத்தகத்தை பிஸினஸ் துவங்க நினைப்பவர்களும், ஏற்கெனவே பிஸினஸில் இருப்பவர்களும் கட்டாயம் படிக்கவேண்டும்.
- நாணயம் விகடன் இதழில் இருந்து


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

பயனுள்ள குறிப்புகள்...

பயனுள்ள குறிப்புகள்...
* வெங்காயத்தை நறுக்கும்போது நம் கண்ணுக்குப் புலப்படாத ஆவி வரும். இந்த ஆவியை நெருப்புச் சுட்ட புண்கள் மீது படும்படி வைத்தால் விரைவில் புண் ஆறும். வெங்காயச் சாற்றில் அமிலத் தன்மை இருப்பதே இதற்குக் காரணம்.

* தும்பைப் பூவை தினமும் கொஞ்சம் வாயில் போட்டு மென்று வந்தால் தொண்டையில் சதை ஏற்படாமல் தடுக்கும். தொண்டைப்புண்ணும் ஆறும்.

* காலையிலும் இரவிலும் காய்ச்சிய ஒரு டம்ளர் பசும்பாலில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் சோகை நோய்க்கு மருந்தே தேவையில்லை.

* பெருங்காயத்தைத் தினமும் ஒருவேளையாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வாயுவை வெளியேற்றுவதில் பெருங்காயம் பெரும்பங்கு வகிக்கிறது.

* கரிசலாங்கண்ணி கீரையைப் பருப்பு மட்டும் சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

* விவசாயிகளுக்கும், சலவைத் தொழிலாளிகளுக்கும் தண்ணீரில் நின்று வேலை பார்ப்பவர்களுக்கும் சாதாரணமாக வரக்ககூடிய கால் நோயான சேற்றுப்புண்ணிற்கு கால்களை ஈரம் போகத் துடைத்துவிட்டு மஞ்சள் தூளைத் தேனில் குழப்பி கால் இடுக்குகளில் தடவி வந்தால் சேற்றுப்புண் ஆறும்.

* தோல் வியாதிகள் காரணமாக உடம்பின் மேல் பகுதி தடித்துச் சொரசொரப்பாக இருக்கும். கொத்துமல்லி இலையை நன்றாக அரைத்து சொரசொரப்பான இடத்தில் மேல் பூச்சாகப் பூசி வந்தால் மூன்று நாட்களிலேயே தோல் மிருதுவாகும்.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், இரத்தக் குழாயிலே கொலஸ்ட்ரால் படியாதவாறு தடுக்கும்.

* வாய்ப் புண் வந்தவருக்குப் பகை காரம். முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் ஆறும்.

 அருகம்புல்லின் பயன்கள்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.

அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்

நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
வயிற்றுப் புண் குணமாகும்.
இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
மலச்சிக்கல் நீங்கும்.
புற்று நோய்க்கு நல்ல மருந்து.
உடல் இளைக்க உதவும்
இரவில் நல்ல தூக்கம் வரும்.
பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
மூட்டு வலி நீங்கும்.
கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.
http://pettagum.blogspot.in/2013/04/blog-post_9799.html

--
*more articles click*
www.sahabudeen.com


சனி, 22 பிப்ரவரி, 2014

வாய்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?

வாய்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?

அந்த முதியவர் வந்து உட்கார்ந்து தனது நோயைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
நான் எனது சுழலும் கதிரையைச் சற்றுப் பின் நகர்த்திக் கொண்டேன்.
இப்பொழுது என்னால் சலனமின்றி அவர் சொல்வதைக் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
வாய்நாற்றம் என்பது பொதுவாக அப்பிரச்சனை உள்ளவரை விட அவரோடு தொடர்பாடல் செய்ய வேண்டியவர்களையே முதலில் உணரச் செய்கிறது.
அவரைச் சுற்றியுள்ளவர்கள் இவரது வாய்நாற்றத்தை உணர்ந்தும் நாகரீகம் கருதி நேரடியாகச் சொல்வதைத் தவிர்ப்பர்.
அந்த மணம் இவருக்கு பழக்கப்பட்டுப் போவதால் இவரது நாசி அதை உணர்ந்து அச் செய்தியை மூளைக்கக் கடத்தத் தவறிவிடுவதால் இவ்வாறு நேர்கிறது.
அதே நேரம் வாய்நாற்றம் உள்ளவர்களையே அதிக பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது என்பதும் உண்மையே.
மற்றவர்கள் இவரோடு உரையாடுவதை விரைவில் வெட்டிவிடவே முயல்வர். இதனால் தொழில் ரீதியாகவும்,
நட்பு உறவு ரீதிகளாகவும் பாதிப்புகள் ஏற்படுவதுடன்,
தாழ்வு மனப்பான்மைக்கும் இட்டுச் செல்லும்.
பொதுவாக எவருக்குமே காலையில் நித்திரைவிட்டு எழும்போது வாய் நாற்றம் சற்று இருக்கவே செய்யும். இது இயற்கையானது. தூக்கத்தின்போது உமிழ் நீர் சுரப்பது குறைவாக இருப்பதால் வாய் வரண்டு கிருமிகள் அதிகரிப்பதால் இது நேர்கிறது.
நாம் பல்விளக்கி, வாய் கொப்பளிக்க அது நீங்கும். அத்தகைய உதயகால வாய்நாற்றமானது வாயைத் திறந்து கொண்டு தூங்குபவர்களில் அதிகமாகும்.
பல்லுகள் மிதப்பாக இருப்பவர்கள், மூக்கடைப்பு உள்ளவர்கள் குறட்டை விடுபவர்களில் அதிகம் இருக்கக் கூடும்.
இதைத் தவிர காய்ச்சல், வயிற்றோட்டம், டொன்சிலைடிஸ், போன்ற பல்வேறு நோய்களின் போதும் ஏற்படலாம். ஆயினும் நோய் குணமாக இவை மாறிவிடும்.
உள்ளி, வெங்காயம், சீஸ் போன்ற உணவுச் சுவையூட்டிகளும், மது, புகைத்தல் போன்ற பழக்கங்களும் காரணமாகின்றன.
இவற்றிற்கு மணத்தைக் கொடுக்கும் இராசாயனப் பதார்த்தங்கள் உணவுக் கால்வாயால் உறிஞ்சப்பட்டு குருதிச் சுற்றோட்டத்தில் கலந்து மீண்டும் சுவாசக் காற்றில் வெளிப்படுவதாலேயே வாய் மணம் ஏற்படுகின்றது.
ஆயினும் நாட்பட்ட அல்லது நீண்ட காலம் தொடரும் வாய்நாற்றம் மிகவும் பிரச்சனைக்கு உரியது.
வாயை ஒழுங்காகச் சுத்தம் செய்யாததால் பற்களுக்கிடையே உணவுத் துகள்கள் தங்கி நிற்கும்போது அதில் பக்டீரியா தொற்று ஏற்படுவதாலேயே இது நேர்கிறது. பக்றீரியா தொற்றுள்ள சீழ் நாறுவதை ஒத்தது இது.
பற்களிடையே இடைவெளி இருப்பவர்களும், ஒழுங்கான அமைப்பின்றி பல்வரிசை தாறுமாறக இருப்பவர்களும் கூடிய அவதானம் எடுப்பது அவசியம்.
ஏனெனில் அத்தகையவர்கள் அதிக அக்கறையோடு சுத்தம் செய்தால் மாத்திரமே பற்களுக்கு இடையே சிக்கியுள்ள உணவுத் துகள்களை முற்றாக அகற்ற முடியும்.
பற்சொத்தை உள்ளவர்கள் முரசு கரைதல் போன்ற முரசு நோயுள்ளவர்களிலும் வாய்நாற்றம் அதிகம் ஏற்படுகிறது.
நீரிழிவு கட்டுப்பாடில் இல்லாதவர்களில் முரசு நோய்கள் அதிகம். அதனால் வாய்நாற்றமும் அதிகம்.
மூக்கில் உள்ளபிரச்சனைகளும் வாய் நாற்றத்திற்குக் காரணமாகலாம்.
மூக்கடைப்பு உள்ளவர்கள், மூக்கில் நீர்க்கட்டி (Nasal Polyp) உள்ளவர்களிலும் ஏற்படுகிறது.
சிறு பிள்ளைகளில் இவ்வாறான மணம் இருந்தால் அது ஏதாவது மூக்கினுள் வைக்கப்பட்ட அந்நியப் பொருள் காரணமாகலாம்.
மூக்கினுள் குண்டுமணி, ரப்பர் துண்டுகள், அழிரப்பர் போன்ற பல பொருட்களை பிள்ளைகளின் மூக்கினுள் இருந்து அகற்றி துர்நாற்றத்தை ஒழித்த அனுபவம் எனக்கு நிறையவே உண்டு.
உணவுகளால் வாய் நாற்றம் ஏற்படுவது போலவே உணவு உண்ணமால் பட்டினி கிடப்பதும், விரதம் அனுஷ்டிப்பதும் கூட வாய் நாற்றத்தை ஏற்படுத்தலாம்.
அதற்குக் காரணம் பட்டினியிருக்கும் நேரங்களில் எமது உடலின் சக்தித் தேவைகளுக்காக கொழுப்பு கரைக்கப்படுகிறது. இதன்போது 'கீட்டோன்' என்ற இரசாயனப் பொருள் உற்பத்தியாகிறது. இது சுவாசத்தோடு வெளிவரும்போது வாய்நாற்றமாகத் தோன்றும்.
இவ்வாறு பல காரணங்களைச் சொன்னாலும் பெரும்பாலும் வாயிலிருந்தே இது ஏற்படுகிறது.
  • ஏற்கனவே குறிப்பிட்டது போல சரியாகச் சுத்தம் செய்யாததால் பல் இடுக்குகளுக்குள்ளும், முரசுகளிலும ஒட்டிக்கொண்டிருக்கும் உணவுத்துகள் முக்கிய காரணமாகும்.
  • ஒட்டியிருக்கும் உணவுத் துகள்களில் பக்டிரீயா கிருமிகள் சேர்ந்து அழுகிச் சேதமடையும். அதன்போது வெளியேறும் வாயுக்கள்தான் துர்நாற்றத்திற்குக் காரணமாகும்.
  • பற்களின் மேல் ஒட்டியிருக்கும் உணவுத் துகள்களில் உமிழ் நீரும், பக்டீரியா கிருமிகளும் சேரும்போது பிளாக் (Dental Plaque) எனப்படும் மென் படலமாகப் படியும். இதில் கல்சியமும் சேர்ந்து இறுகிக் காரையாகப் (Tartar)படியும்.
  • அத்தகைய காரையை அகற்றாவிட்டால் பற்கள் ஆட்டம் கண்டு விரைவில் விழுந்துவிடும். ஆதலால் பல்மருத்துவரிடம் காட்டி அவற்றைச் சுத்தம் செய்வது அவசியம். காரை இறுக்கமாக பற்களின் மேல் ஒட்டிக்கொள்ளும். பற்களுக்கும் முரசுக்கும் இடையேயும் பரவி முரசு நோய்களுக்கும் இட்டுச் செல்லும். இதனால் முரசுகள் அழற்சியடைந்து வீங்கும். பற்களை துலக்கும் போது இரத்;தம் வடிவதற்குக் காரணம் இத்தகைய (Gingivitis) முரசு நோய்தான். இவை யாவுமே வாய் நாற்றத்தைக் கொண்டுவரும்.
  • சிலருக்கு நாக்கின் பிற்பகுதியில் வெள்ளையாக அழுக்குப் படர்வதுண்டு. இது பொதுவாக மூக்கின் மேற்பாகத்திலிருந்து சளி உட்புறமாகக் கசிவதால் (Post Nasal Drip) ஏற்படலாம். இதுவும் வாய்நாற்றத்திற்குக் காரணமாகலாம்.
இவ்வாறு வாய்நாற்றத்திற்குக் காரணங்கள் பல. அடிப்படைக் காரணத்தைக் கண்டு பிடித்து அதை நிவரத்தி செய்ய வாய்நாற்றம் முற்றாக நீங்கும்.
வாய்நாற்றத்தை நீக்க நீங்கள் அவதானிக்க வேண்டிய விடயங்களை மற்றொரு கட்டுரையில் பார்க்கலாம்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
நன்றி :- தினக்குரல்


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts