லேபிள்கள்

செவ்வாய், 29 அக்டோபர், 2013

நீங்கள் கைது செய்யப்பட்டு விட்டால், உங்கள் உரிமைகள் என்ன? ---

நீங்கள் கைது செய்யப்பட்டு விட்டால், உங்கள் உரிமைகள் என்ன? ---
கைது செய்வது எப்படி?
வாய்ச்சொல் அல்லது செயல்மூலம் காவலுக்கு உட்படும்போது கைது முழுமைபெற்று விடுகிறது. இது போன்ற சமயங்களில், அந்த நபரைத் தொடுவதோ, உடம்பைச் சுற்றிப் பிடித்துக் கொள்வதோ தேவையில்லை. ஆனால் காவலர்கள் ஒரு நபரைச் சூழ்ந்து கொண்டு நிற்பது மட்டும் கைது செய்யப்பட்டதாக ஆகாது. (குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 46)
கைது செய்வதை எதிர்த்தால் என்ன நடக்கும்?
கைது செய்வதை நீங்கள் பலவந்தமாகத் தடுத்தால், கைது செய்வதற்குத் தேவையான அனைத்தையும் காவல்துறை அதிகாரி பயன்படுத்தலாம். (பிரிவு – 46) மரண தண்டனை, ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய குற்றம் சுமத்தப்பட்டவராக இருந்தால், அந்த நபரின் உயிரையும் பறிக்கலாம். ஆனாலும் கைது செய்வதற்கு வேண்டிய அளவுக்கு மீறி பலாத்காரத்தைப் பயன்படுத்துவதை அவர் நியாயப்படுத்த முடியாது (பிரிவு – 46). எனவே தேவைப்படாத நிலையில் தேவையற்ற கட்டுப்பாடு அல்லது உடல் அசௌகரியத்தை ஏற்படுத்துதல், கால் களையும் கைகளையும் கட்டி வைத்தல் போன்றவற்றைச் செய்வதற்கு அனுமதிக்கப் படவில்லை.
நீங்கள் கைது செய்யப்பட்டு விட்டால், உங்கள் உரிமைகள் என்ன?
உங்கள் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும் (அடிப்படை உரிமைகள் அரசியல் சாசனம் பிரிவு 22 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 50).
பிடிப்பாணையின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையைப் பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 75).
உங்கள் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரைக் கலந்தாலோசிக்க உரிமை உண்டு. (அடிப்படை உரிமைகள் அரசியல் சாசனம் பிரிவு 22)
24 மணி நேரத்திற்குள்ளாக, அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக நீங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும். (அடிப்படை உரிமைகள் அரசியல் சாசனம் 22)
25 பிணையில் விடுவிக்கப்படக் கூடியவரா என்பது உங்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 50)
விலங்கிடலாமா?
இந்திய உச்ச நீதிமன்றத்தின் (சுப்ரீம் கோர்ட்) தீர்ப்பின்படி, ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்புடையவராகவோ அல்லது தப்பி ஓட முயற்சிப்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பவராகவோ இருந்தாலன்றி, கைது செய்யப்பட்ட நபருக்கு விலங்கிடக் கூடாது. கைது என்பது தண்டனையல்ல. எனவே, தேவைப்படாத நிலையில், தேவையற்ற கட்டுப்பாடுகள் அனுமதிக்கப்படுவதில்லை.
http://pettagum.blogspot.in/2013/01/blog-post_7488.html

--
*more articles click*
www.sahabudeen.com


ஞாயிறு, 27 அக்டோபர், 2013

பிரசரை அளவிடும்போது ....டொக்டர் செய்வதும் நீங்கள் செய்ய வேண்டியதும்

பிரசரை அளவிடும்போது ....டொக்டர் செய்வதும் நீங்கள் செய்ய வேண்டியதும்


'பிரஸர் என்பது அறிகுறிகள் அற்ற நோய். இதனால் பெருந் தொகையான மக்கள் தங்களுக்குப் பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) இருப்பதை அறியாமலே இருக்கிறார்கள்' என சில வாரங்களுக்கு முன் சொன்னேன்.
எனவே பிரஷர் இருக்கிறதா என்பதை அறிய அதை அளந்து பார்ப்பதுதான் ஒரே வழி. நீங்கள் மருத்துவரிடம் செல்லும்போது அவர் அளவிடுவார். இப்பொழுது பலரும் பிரஸர்மானிகளை வாங்கி வைத்து தாங்களாகவே தங்கள் வீடுகளில் அளந்து பார்க்கிறார்கள்.

மருத்துவர்கள் அளவிடுவது

பிரஸரை பிரஸர்மானி கொண்டு அளவிடுவார்கள். பொதுவாக மருத்துவக் கிளினிக்குகளில் மெர்குரி (Mercury) கொண்ட பிரஸர்மானியை உபயோகிப்பார்கள்.

நோயாளியின் கையின் முழங்கைக்கு மேற்பட்ட பகுதியில் துணியினால் மூடப்பட்ட ரப்பர் பை (cuff) போன்ற ஒன்றை இறுக்கமாகச் சுற்றுவார்கள். பின்பு தனது கையிலுள்ள பம்பினால் காற்றை அடிப்பார்கள். இதன்போது உங்கள் கை இறுகுவது போல உணர்வீர்கள். அந்நேரத்தில் காற்றின் அமுக்கத்தால் கைநாடியின் இரத்த ஓட்டம் தடைப்படும். பின் காற்றின் அமுக்கத்தை குறைக்க இரத்த ஓட்டம் வழமையாகும்.
இதன்போது அவர் உங்கள் நாடித்துடிப்பை தனது விரல்களால் நாடிபிடித்துப் பாரப்பார். இப்படிப் பார்ப்பது இரண்டு காரணங்களுக்காகவாகும்.

முதலாவதாக, நாடித்துடிப்பின் வேகம், அளவு, அதன் ஒழுங்குமுறை போன்றவற்றை அவதானிப்பார். இரண்டாவதாக அதில் இரத்த ஓட்டம் தடைப்படுவதையும், மீண்டும் வருவதையும் அவதானிப்பதன் மூலம் உங்கள் பிரசரின் உயர்அளவு (Systalic pressure) பற்றிய மதிப்பீட்டைச் செய்வார்.

பின் ஸ்டெதஸ்கோப்பை உங்கள் முழங்கையின் உட்பகுதியில் வைப்பார்கள்.

நாடித்துடிப்பு தடைப்படுவதையும் அது மீள வருவதையும் ஸ்டெதஸ்கோப் ஊடாகக் கேட்டு அறிவதன் மூலம் பிரஸரின் உயர்அளவு (Systalic pressure), மற்றும் தாழ்அளவு (Diastolic pressure) இரண்டையும் துலக்கமாக அளந்து அறிவார்கள்.

நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியவை

உங்கள் பிரஸர் அளவிடப்படுவதற்கு முன் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில விடயங்கள் உள்ளன.
  • உங்கள் மேலாடை நீளக்கையுடனாக அல்லாமல் அரைக்கையுடன் இருந்தால் Cuff யை சுற்றுவதும், ஸ்டெதஸ்கோப்பால் நாடித்துடிப்பின் ஒலிகளை துல்லியமாகக் கேட்டு பிரஷரை அளவிடுவதும் சுலபமாக இருக்கும்.
  • பிரஸர் அளவிடுவதற்கு முன் குறைந்தது 30 நிமிட நேரத்தினுள் கோப்பி அருந்துவதையும், புகைத்தலையும் தவிருங்கள்.
  • பிரஸர் பார்ப்பதற்கு முன் குறைந்தது 10 நிமிடங்களுக்காவது ஓடியாடித் திரியாது அமைதியாக உட்கார்ந்திருங்கள். முதுகு கதிரையில் சாய்ந்திருக்கும் வண்ணம் வசதியாக உட்காரவேண்டும்.
  • சிறுநீர் நிறைந்திருக்கும் வண்ணம் பிரஸர் பார்க்க வேண்டாம். சற்று நேரம் முன்னரே கழித்து சிறுநீர்ப்பையைக் காலியாக வைத்திருங்கள்.
  • பதற்றமின்றி மனஅமைதியுடன் இருப்பதும் அவசியமாகும்.
  • காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு இருக்கவும் கூடாது(AHA and JNC-7 guidelines) என அமெரிக்க இருதய சங்கம் அறிவித்திருக்கிறது.
  • அளவிடும்போது டொக்டருடனோ அன்றி மற்றவர்களுடனோ உரையாடுவதைத் தவிருங்கள்.

நிற்பதும் இருப்பதுவும் படுப்பதுவும்

பிரஸர் பார்க்கும்போது உட்கார்ந்திருப்பது அவசியம்.
சில வேளைகளில் மருத்துவர் உங்களைப் படுக்க வைத்தும், நிற்க வைத்தும் பிஸைர் பார்ப்பதுண்டு. இது Pழளவரசயட ர்லிழவநளெழைn இருக்கிறதா என அறிவதற்காக ஆகும். நீங்கள் படுத்திருக்கும்போது சாதாரணமாக இருக்கும் இரத்த அழுத்தமானது எழுந்திருக்கும் போது வீழ்ச்சியடைகிறதா என்பதை அறியவே இவ்வாறு அளவிடுவார்கள்.

பீற்றா புளக்கர் (Beta blockers), அல்பா புளக்கர் (Alpha blockers) போன்ற பிரஷர் மருந்துகளால் மட்டுமின்றி, பார்க்கின்சன் நோய், மனவிரக்தி ஆகியவற்றிற்கு கொடுக்கும் சில மருந்துகளாலும் இது ஏற்படலாம்.

வயதான காலங்களிலும், நீரிழிவு போன்ற நோய்களாலும் ஏற்படலாம். கர்ப்பமாயிருக்கும் பெண்களிலும் வருவதுண்டு.

படுக்கையிலிருந்து எழும்போது மயக்கம் போல வருவது இதன் அறிகுறியாகும்.

ஒரு முறை பார்த்தால் போதுமா?

ஒரு முறை பார்த்து உங்கள் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் உங்களை பிரஸர் நோயாளி எனத் தீர்மானத்திற்கு வர மாட்டார்கள்.

ஏனெனில் நேரத்திற்கு நேரம் எங்கள் பிரஸரில் மாற்றங்கள் ஏற்படும். மனப்பதற்றம், மனஅழுத்தம், உணவுவேளை போன்றவற்றாலும் மாறுபடலாம். எனவே சந்தேகம் இருந்தால் உங்களை ஒரு முறையோ பல முறைகளோ மீண்டும் வரச் சொல்லி அளவிட்ட பின்னரே இறுதித் தீர்மானத்திற்கு வருவார்.

ஒருவருக்கு பிரஸர் இருக்கிறது என முடிவானால் பொதுவாக மாதம் ஒரு முறை உங்களை பரிசோதனைக்காக அழைப்பார்கள். அது நல்ல கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டால் மூன்று மாதமொரு முறை பரிசோதிக்கக் கூடும்.

இப்பொழுது இலக்ரோனிக் பிரஸர்மானிகளையும் சில மருத்துவர்கள் உபயோகிக்கிறார்கள்.

வீட்டில் அளவிடுதல்

வீட்டுப் பாவனைக்கான அத்தகைய கருவிகள் இப்பொழுது கிடைக்கின்றன. பரவலாக விற்பனையாகிறது. சரியான முறையில் உபயோகித்தால் அவையும் நல்ல பயனுள்ளவையாகும்.

ஆயினும் அதனை நீங்கள் முதல் முதலாக உபயோகிக்க முன்னர் அதனைச் சரியான முறையில் இயக்குவது எப்படி என்பதை உங்கள் மருத்துவரிடம், தாதியிடம், அல்லது விற்பனையாளரிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
வீட்டில் அளவிடப்படுவதற்கு முன் அவதானிக்க வேண்டியவை
  • அமைதியாக நாற்காலியில் உட்காருங்கள். முதுகு கதிரையில் வசதியாகச் சாய்ந்திருக்க, கால்கள் இரண்டும் நிலத்தில் பதிந்திருக்குமாறு சௌகரியமாக உட்காருங்கள்.
  • இருதயத்தின் உயரத்தில் இருக்குமாறு அருகில் உள்ள மேசையில் உங்கள் கையை வையுங்கள்.
  • பிரஸர்மானியை இயக்கி அது காட்டும் அளவைக் குறித்துக் கொள்ளுங்கள். சுமார் இரண்டு நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் அவ்வாறு அளவிடுங்கள்.
  • இரண்டிலும் வேறுபாடு இருந்தால் சராசரியை அந் நேரப் பிரஸராகக் கொள்ளுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்


--
*more articles click*
www.sahabudeen.com


வெள்ளி, 25 அக்டோபர், 2013

அடிக்கடி தலைவலிக்கும் குழந்தைகள்

அடிக்கடி தலைவலிக்கும் குழந்தைகள்


உங்களது குழுந்தை தலைவலி என அடிக்கடி சொல்கிறதா. அல்லது தலைவலியால் அவதிப்படுகிறதாக நீங்கள் உணர்கிறீர்களா?
பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் தலைவலி பற்றிய அதீத கற்பனைகளுடன் பயந்தடித்து ஓடி வருவது வழக்கம். அதேபோல வயிற்று வலி, கால் வலி என வருவதும் உண்டு. இவை பெரும்பாலும் ஆபத்தான நோய்களால் வருவதில்லை.

சின்ன சின்னப் பிரச்சனைகளே பிள்ளைகளுக்கு இத்தகைய அறிகுறிகளை ஏற்படுத்துவதுண்டு. 'சாப்பிடு சாப்பிடு' என நச்சரிப்பதாலேயே பல பிள்ளைகள் வயிற்று வலி என்று சொல்லித் தப்பிக்க முயல்கின்றன.

'
படி படி' என விடாப்பிடியாக மேசையில் உட்கார வைப்பதாலும் பிள்ளைகளுக்கு தலைவலி ஏற்பட்டுவிடலாம்.
தலைவலியைப்; பொறுத்த வரையில், பொதுவாக  பெரியவர்களை விட குறைவாகவே குழந்தைகளுக்கு வருகிறது. அடிக்கடி வருவதும் இல்லை. வந்தாலும் கடுமையாக இருப்பதில்லை.

தலைவலி வந்தாலும் பெரும்பாலும் மந்தமானதாகவே இருக்கும். இருந்தபோதும் சில குழந்தைகளுக்கு கடுமையான துடிக்க வைக்கும் தலைவலி வரவும் கூடும்.

தலைவலி இருக்கிறதா என அடிக்கடி பெற்றோர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாலும் காரணமின்றியும் வந்துவிடும். கேட்டு அறிவதைவிட குழந்தைகளின் நடத்தையை அவதானித்து அவர்களுக்கு நோயிருக்கிறதா என்பதை அறிபவர்களே சிறந்த பெற்றோராக இருப்பார்கள்.

குழந்தைகளுக்கு தலைவலி வருவதற்கான காரணங்கள் என்ன?

Nemours
அறக்கட்டளையானது குழந்தைகளுக்கு தலைவலி தூண்டப்படுவதற்கு பின் வரும் பொதுவான காரணிகளைக் குறிப்பிடுகிறது.
  • போதுமான தூக்கம் இல்லாமை, அல்லது வழமையான தூங்கும் வழக்கங்களில் திடீரென மாற்றம் ஏற்படுவது ஒரு காரணமாகும். நேரங்கடந்து தூங்கச் செல்வது அல்லது இடையில் முழித்து எழ நேரல், வழமையான நேரத்திற்கு முன்னரே எழ நேருதல்.
  • சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமை, பசியோடு இருத்தல், போதிய நீராகாரம் இன்றி உடல் நா உலர்தல் போன்றவையும் தலைவலியைத் தூண்டலாம்.
  • ஏதாவது மன அழுத்தங்களும் காரணமாகலாம்.
  • நீண்ட நேரமாக கணனியாடு இருத்தல் அல்லது தொலைக்காட்சி பார்ப்பதும் வேறு காரணங்களாகும்.
  • தலையில் லேசாக அடிபடுதல், காயம் ஏற்படுதல் ஆகியவையும் தலைவலியைக் கொண்டு வரலாம்.
  • தடிமன், காய்ச்சல், டொன்சிலைடிஸ், சீழ்ப்பிடித்த புண் போன்ற சாதாரண தொற்று நோய்கள்.
  • கடுமையான மணங்களை நுகர நேர்ந்தாலும் ஏற்படலாம். வாசனைத் திரவியங்கள் (Perfumes), பெயின்ட் மணம், சாம்பராணி மணம் போன்றவை சில உதாரணங்களாகும்.
  • குழந்தைகள் வளருகின்றன. இதன்போது அவர்கள் உடலில் பலவிதமான ஹோர்மோன் மாற்றங்கள் நேர்கின்றன. இவையும் தலைவலியைத் தோற்றலாம்.
  • காரில் நீண்ட நேரம் செல்ல நேரும்போதும் சில குழந்தைகளுக்கு தலைவலி ஏற்படுகிறது.
  • புகைத்தல். வீட்டில் தகப்பன், உறவினர்கள் புகைக்கக் கூடும். அல்லது பொது இடங்களில் யாராவது புகைக்கக் கூடும். இது தன்செயலின்றிப் புகைத்தலாகும். இதுவும் இன்னொரு காரணமாகும்.
  • கோப்பி, கொக்கோ போன்ற கபேன் கலந்த பானங்களை அருந்துவதும் தலைவலியை அவர்களில் ஏற்படுத்தவதாகச் சொல்லப்படுகிறது.
  • சில மருந்துகள் எடுப்பதும்.

பார்வைக் குறைபாடு பெரும்பாலும் காரணமல்ல.

மூளைக்குள் கட்டி வளர்தல், உயிராபத்தான தொற்று நோய்களால் போன்றவற்றால் குழந்தைகளுக்கு தலையிடி வருவது குறைவு. எனவே எடுத்த எடுப்பில் கடுமையான நோய்களை நினைத்து மனத்தைக் குளப்பிக் கொள்ள வேண்டாம்.

மருத்துவரை நாட வேண்டியது எப்போது?

இருந்தபோதும் எத்தகைய  நிலையில் மருத்துவரை அணுக வேண்டும் எனத் தெரிந்திருப்பது நல்லது.
  • தலையில் கடுமையான அடிபடுதல், காயம் ஆகியவற்றைத் தொடர்ந்து தலைவலி ஏற்பட்டால்.
  • தலையிடி மிகக் கடுமையாக இருப்பதுடன் கீழ்க்கண்ட அறிகுறிகள் சேர்ந்திருந்தால்.
1.    வாந்தியெடுத்தல்
2.
    பார்வையில் மாற்றம், இரண்டாகத் தெரிதல்
3.
    கழுத்து உழைவு, கழுத்து விறைப்பு
4.
    குழப்பமான மனநிலை
5.
    சமநிலை பாதிப்பு
6.
    கடுமையான காய்ச்சல்
  • தலையிடியானது குழந்தையின் தூக்கத்தைக் குழப்பமாக இருந்தால் அல்லது காலையில் கண்விழித்து எழும்போதே தலைவலி இருந்தால்.
  • 3 வயதாகும் முன்னரே அத்தகைய தலைவலி ஏற்பட்டால்

பொதுவான காரணத்தைக் கண்டறிந்து நீக்குவதிலேயே பெரும்பாலும் தவலவலித் தொல்லை குழந்தைக்கு நீங்கிவிடும்.

வைத்தியரை நாடி ஓடும் முன்னர் இவற்றைச் சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), MCGP (col)
குடும்ப மருத்துவர்


--
*more articles click*
www.sahabudeen.com


புதன், 23 அக்டோபர், 2013

இஸ்லாமியர்களின் திருமணத்தில் என்னன்ன கொடுமைகள்

இஸ்லாமியர்களின் திருமணத்தில் என்னன்ன கொடுமைகள்
புகழனைத்தும் விண்ணையும், மண்ணையும், அவற்றிற்கிடையே உள்ளவற்றையும், நம்மையும் படைத்த தூயோனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே!
எனது சகோதரியின் அழைப்பிற்கிணங்க அவளுக்கு துணையாக அவளுடைய தோழியின் திருமண வைபவத்திற்கு சென்று இருந்தேன். அங்கு உறவினர்கள் என்றோ அல்லது நண்பர்கள் என்றோ அல்லது அறிமுகமானவர்கள் என்றோ சொல்வதற்கு எவரும் இல்லை, என்னுடைய சகோதரியை தவிர. முஸ்லிம் என்ற வகையில் மனித சமுதாயத்தைப் படைத்த இறைவனிடமிருந்து நமக்கு அருளப்பட்ட வார்த்தைதான் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்பது. அந்த ஸலாமுக்கு பதில் கூட அளிக்க முடியாத அளவிற்கு, திருமண மண்டபத்தில் ஏகப்பட்ட பரபரப்பு. ஸலாம் சொன்னால் அதற்கு பதில் கூட அளிக்காமல், இந்த உலகில் அப்படி எதை தான் சாதிக்கப் போகிறார்கள்?.  எனது சகோதரியோ, "நாம் இங்கு ஏன்டா வந்தோம்" என்பது போல என்னை பார்ப்பதை அவளது பார்வையின்  மூலம் புரிந்து கொண்டேன் .

பொதுவாக
  நிக்காஹ் வைபவங்களில் ஆண்கள் ,பெண்கள் என்று மண்டபத்தில் பிரத்தியேகமாக இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். ஆனால் இங்கு, ஆண்களும் பெண்களுமாக மண்டபமே நிரம்பி வழிந்தது .இங்கு பிரத்தியேகமாக இடம் ஒதுக்கி இருப்பர்களா? என்ற சந்தேகம் வரவே , ஓர் இடத்தில் நாங்கள் உட்கார்ந்து கொண்டோம்.  திருமண மண்டபத்தில் வந்திருந்த (மணமகள் உட்பட) அனைவரையும் காணும் பொழுது,   முஸ்லிமாகிய நாம்  உண்மையில் இஸ்லாமியர்களின் நிக்காஹ் என்னும் திருமண வைபவத்திற்குத் தான் வந்து இருக்கோமா என்ற சந்தேகம் ஒரு புறமும், நாளை நாமும் அல்லாஹ்விடத்தில் இதற்கு சாட்சியாக வேண்டும் என்ற எண்ணம் மறுபுறமும் என்னை ஆட்டிப்படைத்தது. நமது சமுகம் எங்கே சென்று கொண்டு இருக்கிறது ?

நிற்க!
தற்போதுள்ள அறியாமையில் மூழ்கி கிடைக்கும் இஸ்லாமியர்களின் திருமணத்தில் என்னன்ன கொடுமைகள் எல்லாம் நிகழ்கிறது என்பதை பார்த்துவிடலாம்!
  • திருமணத்திற்கு முன்பே திருமணத்தை போன்றே  ஆரம்பரமாக நடத்தப்படும் நிச்சயதார்த்தம்!
  • நிச்சயதார்த்தத்தன்று பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டில்  பால்குடமும் பாலும், 100க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் முட்டையும் , இன்னபிற சீர் வகைகளும் வைப்பது!
  • திருமணத்திற்கு சில இடங்களில் சுமங்கலிகளுக்கு மட்டும் வைக்கபடும் வாவரிசி  விருந்து!
  • மருதாணி வைக்கும் நிகழ்ச்சி! அதில் கைகால்களுக்கு சந்தனம் தடவுதல், பன்னீர் தெளித்தல், பூ தூவுதல் என ஏகப்பட்ட சடங்குகள்
  • திருமணத்தன்று காலையிலேயே பெண் குளிக்க போகும் முன் தலையில் எண்ணெய், பால் ஊற்றுதல்
  • அனைத்தை விடவும்  ஹைலைட்டான விஷயம் தாலி தான்! ஆம்... இஸ்லாம் காட்டித்தராத இந்த வழிமுறையை இஸ்லாம் என்ற பெயரில் அரங்கேற்றி வருகின்றனர்! இதில் பெரிய காமெடி என்னன்னா மணமகனுக்கு பதிலாக  வயதான ஒரு பெண் தான் மணப்பெண்ணுக்கு அந்த தாலியை அணிவிக்கின்றார்!
  • நபி (ஸல்) காட்டித்தராத  துஆக்கள், பாத்தியாக்கள் ஓதுதல்!
  • மாலை மாற்றுதல், மெட்டி அணிதல்
  • பூவால் அலங்கரிக்கப்பட்ட தொப்பி கொண்டு முகம் மூடுவது,
  • திருமணம் நிகழ்வு முடிந்ததும் பாலும் பழமும் ஊட்டிவிடுதல்,
  • மணமகள் வீட்டார் செலவில்  நடத்தபடும்  படுவிசேஷமான விருந்து,
  • மடி நிரப்பாட்டுதல், அரிசி அளத்தல், வெத்தலை பாக்கு மணமகனும் மணமகளும் மூன்று முறை மாற்றிகொள்ளுதல்,  ஆரத்தி எடுத்தல்,  சம்பாயத்துக்காக வீட்டுக்குள் நுழையும் போது நிறைகுடத்தில் முழிப்பது, கண்ணாடியில் பார்ப்பது,  குர் ஆனில் திறந்து ஒரு வசனம் மட்டும் ஓதிவிட்டு மூடுவது...........................
  • இத்துடன்  நின்றுவிடாது... மணமகன் வீட்டில் மேற்சொன்ன சம்பிரதாயங்கள் நடக்கும். அடுத்த நாள் பெண் வீட்டார் மீண்டும் பொருட்கள் அடங்கிய சீர் வரிசை, பழங்கள் அடங்கிய தாம்பூல சீர்வரிசை, உப்பு முதல் அரிசி வரையிலான மளிகை சாமான்கள் (?!!) முதலிவற்றையெல்லாம் மணமகன் வீட்டில் சமர்ப்பித்து இருவரையும் அழைத்துக்கொண்டு வரவேண்டும்.
  • இஸ்லாம் பொருத்தவரை மணமகன் தான் விருந்து கொடுக்க வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் பெண் வீட்டில்  சுமையை தள்ளிவிட்டு தன் கடமையை வெறும் டீ, பிஸ்கட்டுடன் முடித்துவிட்டு இது தான் வலிமா என்பார்கள்.
  • மீண்டும் 3 நாட்கள் கழித்து பெண் மீண்டும் மணமகன் வீட்டுக்கு செல்லும் போது அவர்களுக்கான துணிமணிகளுக்கான பணம் கொடுத்தனுப்புவாங்க.
  • ஏழாம் நாள், பதினைந்தாம் நாள் , 30ம் நாள் என கணக்கே இல்லாமல் அடிக்கடி விசேஷம் நடத்தி மணமகள் வீட்டில் கரப்பதும் வாடிக்கை! இந்த நாட்களில் எல்லாம் பால்சோறு மணமகன் வீட்டில் செய்வார்கள். ஆனால் முந்திரி முதற்கொண்டு இதெல்லாம் மணமகள் வீட்டில் இருந்து வருவது தான் சம்பரதாயமாம்!!!!
  • 40ம் நாள் தாலி பிரித்துக்கோர்க்கும் வைபவம்! தாலி என்ற ஒன்றே இல்லை... பின் எங்கே பிரித்துகோர்க்கும் வைபவமெல்லாம்????  தாலியை பாலில் நனைப்பது, அதுக்கு பூஜை செய்யும் விதமாக அனைவரும் பூ தூவுவது, பாத்திஹா ஓதுவது என இங்கேயும் ஏகப்பட்ட முட்டாள்தனங்கள் புகுத்தப்படும்!

ஆக மொத்தத்தில் இன்றைய இஸ்லாமியர்கள் செயல்படுத்திக் கொண்டிருப்பது முட்டாள்தனமே
  உருவான திருமணம் தான்! எவ்வித தர்க்க ரீதியான காரணங்களும் அல்லாமல் பெண்ணை அலங்காரப்பொருளாக்கி, பலியாடாக்கி நடத்தப்படும் இந்த முட்டாள்தனங்களுக்கும் இஸ்லாத்திற்கும் துளி அளவும் சம்மந்தமில்லை!

அதெல்லாம் விடுங்க. இஸ்லாமிய உடையுடன் பல்கலைகழகம் வரை கல்வியை தொடர்ந்து பட்டமும் பெற்று, இன்று இஸ்லாமிய கொள்கையை மூட்டை கட்டி வைத்துவிட்டு மணமேடையில் முற்றும் முழுவதுமாக அந்நிய கலாச்சார உடையில்
  அனைத்தையும்  அவள் இன்று இழந்து  நின்று கொண்டு இருக்கிறாள். இதற்கு யார் காரணம் ? சிந்தித்துப் பார்த்ததுண்டா?

திருமணம் என்ற விழா எவ்வளவு பெரிய பாவத்திற்கு நம்மை இட்டுச்செல்கிறது? இஸ்லாமிய சம்பிரதாயம் என்று சொல்லிக்கொண்டு இங்கு நடப்பவை எல்லாம் அனாச்சாரங்களே!

 இன்று நம் மத்தியில் நடக்கும் திருமணங்கள் நம் சமுதாயம் மீண்டும்  அறியாமை காலத்திற்கு செல்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அனுதினமும் நடக்கும் திருமண வைபவங்களை பார்த்தால் மூடநம்பிக்கைகள் அற்ற  இஸ்லாமிய  சமூகத்திலா இப்படி இஸ்லாமிய(?) திருமணங்கள் என்று முகத்தை திருப்பிக் கொள்பவர்கள் எத்தனை பேர்?  இஸ்லாமிய திருமணங்கள் என்ற பெயரில் எத்தனை சம்பிரதாயங்கள், ஜாஹிலிய போர்வையில் இஸ்லாத்தை வைத்துப் பூஜிக்க நினைக்கும் சடங்குகள்?

இஸ்லாம் என்றால் என்ன என்று மக்கள்
  மத்தியில் விழிப்புணர்வுகளை உண்டாக்கிட எண்ணற்ற இயக்கங்கள் நம் மத்தியில்  உலா வருகின்றன. இவ்வாறிருந்தும் இந்த கால கட்டத்தில் பாமர திருமணங்களும் ஆங்காங்கே நடந்தேறி வருவது அறியாமையின் வெளிப்பாடு .மார்க்கம் தெரிந்த மகனுக்கு பேரழகியை தேடுவதும் ஊதாரிக்கு ,ஊர்சுற்றியவனுக்கு காரோடு பெண் கேட்பதும் இன்று சர்வ சாதாரணம். இதற்கு மாற்றமானவர்கள் இருந்தாலும் அதிகமானவர்களின் நிலை இதுதான் . வெறுமனே உடல் அழகையும் செல்வத்தையும் மாத்திரம் வைத்து இன்றைய திருமணங்கள் சந்தையில் விலை பேசப்படுவதை பார்க்கிறோம் .இன்றைய திருமணங்கள் இறையச்சத்தை அழித்துக் கொண்டிருக்கிறது.

இஸ்லாம் சொல்லாத நிறைய விஷயங்களை அரங்கேற்றி விட்டு இதற்கு நிக்காஹ் வைபவம் என்று பெயர்
  சூட்டி விடுகின்றனர். அல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கமான இஸ்லாத்தில் பிறந்துள்ள நாம், எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்! ஆனால், துரதிர்ஷ்டவசமாக நாம், அனாச்சாரங்களால் அதை எவ்வளவு தூரம் கறைபடுத்த முடியுமோ அவ்வளவு தூரம் கறைபடுத்திக் கொண்டிருக்கிறோமே இது நியாயமா?

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தந்துள்ள இஸ்லாமியத் திருமணம் வீண் சம்பிரதாயங்கள் எதுவும் இல்லாத எளிய, அழகிய வாழ்க்கை ஒப்பந்தம். பிறப்பிலிருந்து இறப்பு வரை குர்ஆனும், நபிவழியும் சொல்கிறபடி வாழக் கடமைப்பட்டவர்கள் நாம். மாற்றுமதத்தினரின் வீண் சம்பிரதாயங்களை பின்பற்ற ஆரம்பித்ததனால் நம் சமுதாயத்தில் எத்தனைக் குழப்பங்கள்!

'குறைந்த செலவில் குறைந்த சிரமத்துடன் செய்யப்படும் திருமண நிகழ்ச்சியே சிறந்ததாகும்.' என்ற நபிமொழியைக் காலத்துக்கு ஒவ்வாதது என்று ஒதுக்கி விட்டார்களா?

** திருமணத்துக்கு அழைக்கப்பட்டவர்களில் எத்தனை பேர் அல்லாஹ்விடம் பரக்கத்தினை அருளுமாறு துஆ கேட்டு இருப்பார்கள் ?

**எத்தனை திருமணங்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்த்தோடு ஆரம்பிக்கப்படுகின்றன?

**அழகை மட்டும் குறிகோளாக வைத்து நடந்த திருமணங்கள் திருப்தியோடு நீண்ட காலம் நிலைத்திருக்கின்றனவா?

**ஊரையே அழைத்து விருந்து படைத்த எத்தனை குடும்பங்கள் கடன் நீங்கி நிமிர்ந்துள்ளன?

**நம் மத்தியில் எத்தனை திருமணங்கள் இஸ்லாமிய குடும்பத்தை உருவாக்கி பூரணப்படுத்தப் போகின்றன ?

நாம் நம்மை மாற்றிகொள்ள வேண்டும். மகத்துவமிக்க இஸ்லாமிய கொள்கைகள் நம்மிடம் இருந்தும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு ஆசைப்படும் ஒரு மரத்துப் போன சமுதாயமாக நாம் இருக்கக் கூடாது .

அந்நிய கலாச்சாரத்தின் தாக்கங்கள் நம் ஒவ்வொருவரின் வீட்டு கதவுகளையும் நிமிடம் தவறாமல் தட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. வேண்டாத விருந்தாளியை தவிர்த்துக்கொள்வது என்பதில் குடும்பத்தில்
  உள்ள ஒவ்வொருவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். எதிர்வரும் சமுதாயத்திற்கு முன்மாதிரியாக நமது வாழ்க்கையை அமைத்து, இஸ்லாம் வளர நாமும் ஒரு காரணமாக இருக்க அல்லாஹ் உதவி செய்வானாக! ஆமீன்!.

 உங்கள் சகோதரி
பாத்திமா


--
*more articles click*
www.sahabudeen.com


திங்கள், 21 அக்டோபர், 2013

ஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்

ஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்

ஆன்லைன் ஷாப்பிங் தான் இப்போதைய ட்ரெண்ட். கிட்டத்தட்ட நமக்கு தேவையான அனைத்து பொருட்களையும் பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் நமக்கு விற்கின்றன. நிறைய தளங்கள், நிறைய பொருட்கள். எதை நம்புவது? எப்படி வாங்குவது போன்ற விசயங்களை இன்று பார்ப்போம்.

1. Return Policy
 

ஆன்லைன் மூலம் வாங்கும் போது இது மிக அவசியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். ஒரு ஆடையோ, காலணியோ வாங்கும் போது அளவு சரியாக இல்லை என்றால் அதை திரும்ப அனுப்பி வேறு ஒன்றை வாங்கும் வசதி நமக்கு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வாங்கிய பொருள் வீண் தான்.

இதற்கு என்ன விதிமுறைகள் என்பதையும் அறிதல் அவசியம். பெரும்பாலும்  பொருள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வாங்கிய அன்றே அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டி இருக்கும். அதே சமயம் நீங்கள் அதை சேதாரப் படுத்தி இருக்க கூடாது.

2. Shipping Cost and Time

இது மிக மிக அவசியமாக கவனிக்க வேண்டிய விசயம். காரணம் பெரும்பாலான தளங்கள் இப்போது ஒரு டிவி வாங்கினால் கூட இலவசமாக Ship செய்கிறார்கள். இந்த சமயத்தில் shipping க்கு என்று தனியாக பணம் கட்ட சொன்னால் அந்த தளங்களை தவிர்த்தல் நலம்.

இதில் eBay மட்டும் விதிவிலக்கு, காரணம் அது ஒரு சந்தை. பொருட்களை விற்பது பல நிறுவனங்களை சேர்ந்தவர்கள். எனவே விலை குறைவாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது, Shipping க்கு கட்டணம் கேட்கவும் வாய்ப்பு உள்ளது.

பல நேரங்களில் சிறு நகரங்கள். கிராமங்கள் போன்றவற்றிற்கு குறிப்பிட்ட தளம் பொருளை நேரடியாக அனுப்ப முடியாத போது அதை Registered Post வாயிலாக அனுப்புகிறார்களா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். பெரும்பாலான தளங்கள் இதற்கும் கட்டணம் வசூலிப்பது இல்லை.

அடுத்து Shipping Time. அதிகபட்சம் 15 நாட்கள் தான் எந்த ஒரு பொருளுக்கும் Shipping Time, அதற்கு மேல் காத்திருக்க சொன்னால் நீங்கள் வேறு தளத்தில் சென்று வாங்கலாம். பெரு நகரங்கள் என்றால் 4-5 நாட்களுக்குள் பொருட்கள் கிடைத்து விடும்.

உங்களுக்கு வரும் மின்னஞ்சல் உறுதிச் செய்தியில் Expected Delivery Time என்பதை விட முன்னதாகவே பொருள் உங்களுக்கு வந்து சேர வேண்டும், இல்லை என்றால் ஏதோ பிரச்சினை என்பதை நீங்கள் உணரவேண்டும். உடனடியாக பொருள் எங்கே உள்ளது என்பதை Tracking மூலம் செக் செய்யும். இன்னும் Order Ship செய்யப்படவே இல்லை என்றால் Cancel செய்து விட்டு நேரடியாக கடையில் சென்று வாங்கி விடுங்கள்.

3. Cash Back
 

ஒரு பொருளை ஆர்டர் செய்த உடன் நமக்கு அது அவசியமில்லை என்று தோன்றும் அல்லது வேறு ஒரு பொருளை வாங்க தோன்றும். அம்மாதிரியான சமயங்களில் நீங்கள் ஆர்டர் செய்த பொருளை கான்சல் செய்யும் வசதியை குறிப்பிட்ட தளம் உங்களுக்கு வழங்குகிறதா என்று கவனியுங்கள்.

அதோடு முழுப்பணமும் உங்களுக்கு வந்து சேரும்படி இது இருக்க வேண்டும். பெரும்பாலும் 5 முதல் 7 நாட்களுக்குள் உங்கள் பணம் திரும்ப வந்து விடும்.

4. Product Quality & Customer Review
 

பெரும்பாலான தளங்கள் உண்மையான நிறுவன பொருட்களையே வழங்குகின்றன. எனவே பிரபலமான தளத்தில் வாங்கும் போது போலி பொருளோ என்ற பயம் உங்களுக்கு தேவை இல்லை.

பல தளங்கள் உற்பத்தியாளர் வாரண்டி (Manufacturer Warranty) உடன் தான் பொருளை விற்கின்றன. ஒரு குறிப்பிட்ட பொருள் சந்தை விலையை விட மிகக் குறைவாக இருந்தால் அந்த தளம் Manufacturer Warranty தருகிறதா என்று கவனித்து வாங்குங்கள். சில தளங்களில் Seller Warranty என்று இருக்கும், இதனால் ஏதேனும் பிரச்சினை என்றால் பொருளை விற்றவரிடம் தான் செல்ல வேண்டி இருக்கும். eBay தளத்தில் இதை நீங்கள் பார்க்கலாம்.

குறிப்பிட்ட ஒரு பொருள் பற்றி தெரியாமல் வாங்குகிறீர்கள் என்றால் அந்த பொருள் எந்த அளவிற்கு உபயோகமானது, அது எப்படிபட்டது போன்றவற்றை அறிய பல தளங்கள் Customer Review வசதியை கொடுத்துள்ளன. இதில் அந்த பொருளை வாங்கிய பலர் அதன் நிறை, குறைகளை பற்றி சொல்லி இருப்பார்கள். அதை கவனித்து வாங்க வேண்டும்.

குறிப்பிட்ட தளத்தின் சர்வீஸ் பற்றி அறிய இணையத்தில் தேடலாம், அல்லது ஏற்கனவே வாங்கிய அனுபவம் உள்ள நண்பர்களிடம் கேட்கலாம்.

eBay
தளத்தில் பொருளை விற்பது யாரோ ஒருவர் என்பதால், குறிப்பிட்ட விற்பனையாளருக்கு வந்துள்ள Positive Feedback - ஐ பொறுத்து பொருளை வாங்கவும். இது Seller Info பகுதியில் இருக்கும்.

5. Payment Options
 

ஆன்லைன் மூலம் வாங்கும் போது தற்போது பல வகையான Payment வசதிகள் உள்ளன. ஆர்டர் செய்யும் போதே Credit Card, Debit Card (ATM Card), Net Banking மூலம் பணம் செலுத்தும் வசதிகள் உள்ளன. இதில் நீங்கள் Secured ஆகத் தான் பணம் செலுத்துகிறீர்களா என்பதை கவனியுங்கள்.

பணம் செலுத்தும் பக்க URL "HTTPS" என்று ஆரம்பித்து இருக்க வேண்டும். இது உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்.வெறும் HTTP என்று மட்டும் இருந்தால், ஆர்டர் செய்வதை தவிர்க்கவும்.

இதில் பயம் உள்ளவர்கள் Cash On Delivery வசதி இருந்தால் அதை தெரிவு செய்து கொள்ளலாம். இதில் பொருள் உங்களுக்கு வந்து சேரும் நாளன்று நீங்கள் பணம் செலுத்தினால் போதும்.

EMI
மூலம் வாங்கும் போது, பல தளங்கள் Processing Charge என்று ஒன்றை வசூலிக்கும். அப்போது மற்ற தளங்களில் குறிப்பிட்ட பொருளின் விலை மற்றும் EMI - யில் Processing Charge இல்லாமல் வருகிறதா என்று பாருங்கள். இதனால் உங்களுக்கு பணம் மிச்சம் ஆகும்.

6.
மற்ற விஷயங்கள்
  • பொருளுக்கு வரும் இலவசங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
  • ஆர்டர் குறித்து உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை Delivery ஆகும் வரை டெலீட் செய்யாமல் வைத்து இருங்கள்.
இவையே ஆன்லைன் ஷாப்பிங் போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள். வேறு ஏதேனும் உங்கள் பார்வையில் அவசியம் என்று தோன்றினால் கீழே குறிப்பிடுங்கள்.
- பிரபு கிருஷ்ணா
http://www.karpom.com/2013/01/Things-To-Remember-While-Shopping-Online.html

--
*more articles click*
www.sahabudeen.com


இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts