லேபிள்கள்

புதன், 25 செப்டம்பர், 2013

ராசி பலன்களில் உண்மை உள்ளதா? அறிவியல் விளக்கம்!

ராசி பலன்களில் உண்மை உள்ளதா? அறிவியல் விளக்கம்!

அந்தச் சட்டை எனக்கு இராசியானது இந்த சைக்கிள் அவனுக்கு இராசியானது அந்த வீடு அவர்களுக்கு இராசியானது இந்தப் பொண்ணு இராசி சரியில்லை என்று பலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏன், நீங்களேகூடச் சொல்லியிருப்பீர்கள். இப்படிப்பட்ட இராசி நம்பிக்கை உண்மையா? என்றால் இல்லவே இல்லை என்பதே சரியான பதில். ஆனாலும், படித்தவர்கள்முதல் பாமரர்கள்வரை இந்த நம்பிக்கை பரவலாகக் காணப்படுகிறது. இது ஒரு தனி மனிதனின் ஒரு பொருள் சார்ந்த நம்பிக்கையாக இருக்கும்வரை அதனால் அவனுக்கோ பிறருக்கோ அதிக பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால், அதுவே ஒரு நபர் மீதான நம்பிக்கையாக இருந்தால் அதனால் ஏற்படும் பாதக விளைவுகள் மிக மோசமாக இருப்பதுண்டு.
பொதுவாக, இந்த நம்பிக்கை சில நிகழ்வுகளின் அடிப்படையில் எழுகிறது. ஒருவர் ஒரு சட்டையை அணிந்துகொண்டு சென்றபோது, காரியம் நல்ல முறையில் முடிந்தால் மீண்டும் அந்தச் சட்டையைப் போட்டுக்கொண்டு முக்கியமான காரியத்திற்குச் செல்வார். அந்த முறையும் காரியம் நல்முறையில் முடிந்தால் அந்தச் சட்டை இராசியான சட்டை என்று முடிவிற்கு வந்துவிடுவார். ஒரு வீட்டிற்குக் குடிவந்தவர், வந்த சில நாட்களில் ஏதாவது ஒரு கேடு வந்துவிட்டால் அந்த வீடு இராசி இல்லாத வீடு என்ற முடிவுக்கு வந்துவிடுவார். எந்தப் பாதிப்பு வந்தாலும், அது அந்த வீட்டிற்கு வந்ததால் என்ற முடிவிற்கு வந்துவிடுவார்.
இப்படித்தான் பல பொருள்களின் மீது இராசி நம்பிக்கை ஏற்படுகிறது. சிலர், சில மனிதர்களையே இராசி இல்லாதவர்கள் என்று ஒதுக்கி விடுவர். ஒருவரால் ஒரு காரியம் தொடங்கப்பட்டு அது தோல்வியில் முடிந்தால் அவர் இராசி இல்லாதவர் என்று வெறுக்கப்படுகிறார்.
சில வீடுகளில் சில பெண்கள் இந்த இராசி நம்பிக்கையால் அடையும் துன்பத்திற்கு அளவே இருக்காது. ஒரு வீட்டிற்கு மருமகளாக ஒரு பெண் வந்த பின் அந்த வீட்டில் ஏதாவது கேடு அல்லது இழப்பு வந்தால் அந்தப் பெண் வந்த இராசிதான் இப்படி நடக்கிறது என்று அப்பாவிப் பெண்மீது அபாண்டமாகப் பழியைப் போட்டுவிடுவர். அத்துடன் நில்லாமல், அடுத்தடுத்து வரும் எல்லாப் பாதிப்புகளுக்கும் இழப்புகளுக்கும் அவள் வந்த இராசிதான் என்று பழி போட்டு பாடாய்ப்படுத்துவர்.
இப்படி எல்லாம் சொல்லப்படுவதிலும் நம்பப்படுவதிலும் ஏதாவது உண்மை உள்ளதா என்றால், இல்லை என்பதே ஆய்வின் முடிவு. நல்லது கெட்டது நடப்பதற்கு ஒரு பொருளுக்கோ, ஒரு இடத்திற்கோ, ஒரு நபருக்கோ உள்ள இராசி காரணம் அல்ல. இயல்பாய் நடப்பதை இவற்றுடன் பொருத்திப் பார்க்கும் அறியாமையே இவைகளுக்குக் காரணம். ஒரு சட்டையைப் போட்டுச் சென்றபோது நல்லது நடந்தால் அந்தச் சட்டையைப் போட்டுக்கொண்டு செல்லும்போதெல்லாம் நல்லதே நடக்கும் என்பது உண்மையல்ல.
நான்கைந்து முறைக்குப் பதிலாக நாற்பது அய்ம்பது முறை சோதித்துப் பார்த்தால் நல்லதும் கெட்டதும் கலந்தே நடக்கும். ஒரு ரூபாய் நாணயத்தைச் சுண்டி விட்டால் மூன்று நான்கு முறை தலையாகவேகூட விழும். அப்படியானால், அந்த நாணயத்தைச் சுண்டி விட்டால் தலையாகவேதான் விழும் என்று எண்ணினால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ அவ்வளவு பெரிய முட்டாள்தனம் இந்த இராசி நம்பிக்கை.
அதே ஒரு ரூபாய் நாணயத்தை 100 முறைச் சுண்டிவிட்டால் தலைவிழும் எண்ணிக்கையும், பூ விழும் எண்ணிக்கையும் சற்றேறக்குறைய சம எண்ணிக்கையிலேயே இருக்கும். எனவே, ஓரிரு சம்பவங்களை வைத்து ஒன்றை அல்லது ஒருவரை இராசியானவர் (வை), இராசியற்றவர்(வை) என்று நம்புவதும், நம்பிச் செயல்படுவதும் அறியாமையாகும். எனவே, பிஞ்சுக் குழந்தைகள் தங்கள் நெஞ்சில் இதுபோன்ற அறியாமைகளைப் பதியச் செய்யாமல் அறிவோடு சிந்தித்துச் செயல்பட்டால் வாழ்வில் சிறக்கலாம்.
புதிய உலகம்


--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts