லேபிள்கள்

திங்கள், 15 ஜூலை, 2013

லேடீஸ் ஹாஸ்டல்

     கல்லூரிகள் திறக்கும் நேரம் இது. புதிய கல்லூரியில் காலடி வைக்கும் பெண்கள் தங்கள் கல்லூரியில் இருக்கும் விடுதிகளில் தங்கி படிப்பார்கள். சிலர் தனியார் பெண்கள் விடுதியில் தங்குவார்கள். படிக்கும் பெண்கள் மட்டுமல்ல, பணிக்கு செல்லும் பெண்களும் சென்னைக்கு வந்தால் தனியார் விடுதிகளில் தங்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

     நாம் பணத்தை கொடுத்தும் சரியான உணவு கிடைக்காதது, மற்றும் பல அசவுகரியங்களை உண்டாக்கும் விடுதிகளும் இருக்கிறது. சென்னைக்கு புதிதாக வரும் இளம் பெண்கள் எந்தெந்த விஷயங்களை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு விடுதிகளை தேர்வு செய்ய வேண்டும் என இதோ சில டிப்ஸ்.

1. சென்னையில் எப்படியும் உங்களுடைய உறவினர், நண்பர்கள் வீடு இருக்கும் ஏரியாவுக்கு அருகில் விடுதி பார்ப்பது நல்லது. விடுதியில் திடீரென மோட்டார் ரிப்பேராகி தண்ணீர் வரவில்லை என்றால் கூட அவர்கள் வீட்டுக்கு சென்று தயாராகிக் கொள்ளலாம். ஏதேனும் அவசர உதவி என்றால் அவர்களிடம் கேட்கலாம்.

2. ரயில் நிலையம் அல்லது பேருந்து நிலையத்திற்கு அருகில் விடுதி இருப்பது அவசியம். வெளியூரிலிருந்து வரும் பெண்கள் பெரும்பாலும் டூ-வீலர் பயன்படுத்தாமல் இருப்பதால், அதிக தூரம் நடக்க வேண்டியதை தவிர்க்கலாம். மேலும் நேரம் தாமதமாகி விடுதிக்கு வரும் போது நிகழ வாய்ப்பிருக்கும் பிரச்னைகளையும் தவிர்க்க இது உதவும்.

3. உணவைப் பொறுத்தவரை சேரும் முன் அங்கே சாப்பிட்டு பார்ப்பது நல்லது. விடுதி என்றாலே சாப்பாடு அப்படி இப்படி தான் இருக்கும் என்றாலும் ஓரளவுக்கு நன்றாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தட்டை நீட்டினால் அவர்களாக அளவு சாப்பாடு வழங்கும் விடுதிகளை தவிர்க்கலாம்.

4. ரூமுக்கு தனியாக டி.வி. இருந்தால் அந்த ஹாஸ்டல் பற்றி பரிசீலித்து கொள்ளலாம். ஆரம்பத்தில் ரூமில் டி.வி. இருக்கிறதே பாட்டு, சினிமா பார்த்துக் கொள்ளலாம் என சந்தோஷமாக தான் இருக்கும். ஆனால் நாம் கல்லூரிக்கோ அல்லது வேலைக்கோ சென்று அலுப்பாக திரும்பி வரும் போது ரூமில் இருக்கும் மற்ற நபர்கள் டி.வி. யை இரவு நெடுந்நேரம் வரை அலறவிடுவது மிகவும் தொந்தரவாக இருக்கும்.

5. விடுதியில் சேரும் முதல் நாளே அங்கிருக்கும் கார்டியன் உங்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்கிறாரா? இது உங்களை வேறு ஹாஸ்டல் போக விடாமல் மனதை மாற்றும் வித்தை. அந்த அக்காதான் நல்லா பேசுறாங்களே, அந்த தாத்தா பாசமா லக்கேஜ்லாம் எடுத்து கொடுக்கிறாரே என்று உணர்ச்சி வசப்பட்டு அங்கேயே தங்கிவிட வேண்டாம். விடுதி சரியில்லை என்றால், கிளம்பி விடுங்கள். உங்கள் சவுகரியமும் பாதுகாப்பும் தான் முதலில். அதற்குப் பிறகு தான் எல்லாமே.

6. சாப்பாடு பிடிக்கவில்லை என்றால் கூட வெளியில் சென்று சாப்பிட்டு வரலாம். தண்ணீர் பிரச்னை என்றால் எங்கு போக முடியும்? அதனால் ஒன்றுக்கு இரண்டு முறை ஹாஸ்டலில் தங்கியிருக்கும் நபர்களிடம் கோடை காலத்திலும் தண்ணீர் பிரச்னை இல்லாமல் வருமா எனக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

7. பண விஷயத்தில் அட்வான்ஸ் வாங்கி கொள்ளும் விடுதிகள், நீங்கள் ஹாஸ்டலை காலி செய்வதென்றால் மூன்று மாதத்திற்கு முன்பே நிர்வாகத்திடம் சொல்ல வேண்டும். அதுவும் அட்வான்ஸ் தொகையை பணமாக கொடுக்க மாட்டோம் காசோலையாகதான் கொடுப்போம் என சொல்பவர்களை மறுபரிசீலனை செய்யுங்கள்.

8. சில விடுதிகளில் செல்போன் சார்ஜ் போட பிளக் பாயின்ட் உங்கள் ரூமில் இல்லாமல் வெளியில் பொது ஹாலில் மட்டுமே பிளக் பாயின்ட் இருக்கும். மின்சாரத்தை குறைக்கும் நடவடிக்கை இது. காஸ்ட்லி மொபைல் வைத்திருக்கும் நபர்கள் போனில் சார்ஜ் ஏறும் வரை பக்கத்திலே அமர்ந்திருக்கும் சூழ்நிலை ஏற்படும். உங்கள் செல்போன் சார்ஜ் ஏறும்வரை நீங்களும் அங்கேயே இருக்க வேண்டி வரும். உங்கள் நேரம் விரயமாகும்.

9. லேப்டாப் பயன்படுத்தினால் அதற்கு தனியாக கட்டணம். அயன்பாக்ஸ் பயன்படுத்தினால் அதற்கு தனியாக கட்டணம். வாஷிங் மெஷின் பயன்படுத்த தனியாக கட்டணம், என பலவித கட்டணங்கள் வசூலிக்கும் விடுதிகளும் இருக்கின்றன. முதலிலேயே எல்லாவற்றையும் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

10. மிகவும் அவசியமான விஷயம் பாதுகாப்பு. விடுதிக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் இருந்தாலோ, அதிகப்படியான ஆண்கள் கூடும் இடங்களுக்கு அருகில் விடுதி இருந்தாலோ. கொஞ்சம் கவனம் தேவை. அதைத் தேர்வு செய்வது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல.

11. எப்படியிருந்தாலும் எடுத்ததுமே அட்வான்ஸ், வாடகை என முதல் நாளே அனைத்து தொகையும் செட்டில் செய்துவிடாமல் பாதித் தொகை மட்டும்கொடுத்துவிட்டு, பாக்கித் தொகையை இரண்டு நாட்கள் கழித்து தருகிறேன் என சொல்லுங்கள். ஒருவேளை நீங்கள் அங்கு சென்று தங்கிய பிறகு ஹாஸ்டல் பிடிக்கவில்லை என்றால் கொடுத்த பணத்தை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டாலும் நஷ்டம் பெரிதாக இருக்காது.

12. ஹாஸ்டல் எனபது நாம் பெற்றவர்களை விட்டு தனியாக இருக்கும் இடம். மனது பல விஷயங்களுக்கு அலைபாயும் என்பதால் கூடுதல் கவனம் தேவை. ரூமில் உங்களுடன் தங்கும் தோழிகளுடன் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். அவர்களின் நல்ல விஷயங்களை பின்பற்றலாமே தவிர, கெட்ட விஷயங்கள் உங்களை அண்டாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

     சொந்த ஊரைவிட்டு, பெற்றோர், சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்களை விட்டு வெளியூருக்கு வரும் போது தங்கும் இடம் சவுகரியமாக இருந்தால் மட்டுமே நிம்மதியாக படிக்கவோ அல்லது வேலைக்கு செல்லவோ முடியும்.

     ஹாஸ்டல் வாழ்க்கை என்பது உங்கள் வாழ்க்கையில் மிக முக்கிய திருப்பங்களைத் தரக்கூடிய காலம். தங்கும் இடமும், உடன் இருக்கும் மனிதர்களும் உங்கள் நோக்கத்தை திசை திருப்பவோ, தடுக்கவோ வாய்ப்பளிக்காமல், கவனமாக விடுதியைத் தேர்வு செய்து நிம்மதியாக உங்கள் நோக்கத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள் சகோதரிகளே!

நன்றி : யூத்ஃபுல் விகடன்

--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts