லேபிள்கள்

புதன், 29 மே, 2013

உங்கள் தங்கநகைகள் தொலையாமல் இருக்க...



கஷ்டப்பட்டு உழைத்து, மாதம் பிறந்தால் பெற்றதைக்கொண்டு, செலவு செய்ய வேண்டிய பலவற்றில் கட்டுப்பாடாக இருந்து, அதை சிறுக சிறுக சேமித்து, கடைசியில்... 'இதுவும் ஒரு பெருகக்கூடிய சேமிப்பே..' என்று, அவ்ளோ காசு போட்டு தங்க நகை வாங்கினால்... அது, புதுசிலேயே அறுந்தாலோ-விட்டாலோ-முறிந்தாலோ-உடைந்தாலோ-நெளிந்தாலோ-நசுங்கினலோ-விரிந்தலோ... நம் மனம் என்னமாய் படாத பாடுபடுகிறது..? அதே நகை இதே காரணமாக எங்கோ தவறி, தொலைந்தாலோ... அப்போதைய நம் மனநிலையை கேட்கவே வேண்டாம்..! எத்தனை மாத உழைப்பின் சேமிப்பு..?
கடந்த சில வருடங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவில்... இப்போதெல்லாம், தங்கம் விலை கண்ணா பின்னா என்று எகிறி விட்டதால்... முடிந்தவரை மிக மிக குறைந்த எடையில் நிரப்பமாக, விஸ்தாரமாக, பறந்து விரிந்த மாதிரியான மிக மிக பெரிய நகைகளே நம்மால் விரும்பப்படுகின்றன. சரிதானே சகோஸ்..? 
மேலும், மறுபதிப்பிடலுக்கு ஏற்றது என்று 916 KDM நகைகள் தற்போது விரும்பப்படுவதால், அதில் காப்பர் சேர்ப்பு குறைவு என்பதால்... தங்க நகையில் பழைய பலம் இருப்பதில்லை. இதனாலும், பழைய திடமான உறுதியோ, நீடித்த ஆயுளோ தற்போதைய நகைகளில் இல்லவே இல்லை.

"இது,
  எங்க பாட்டி நகையாக்கும், அம்மா போட்டு... இப்போ நான் போடுறேன்... என்னா ஸ்ட்ராங்..!" என்றெல்லாம் சொல்ல முடியவில்லை. அவ்ளோ ஏன், அக்கா நகையை சின்னதாகிவிட்டது என தங்கச்சி போடுவதற்குள்... அது உருக்குலைந்து விடுவதைத்தான் காண்கிறோம்..!
நக்லஸ், தோடு போன்ற நகைகளுக்கு உரிய சரியான அளவில் சரியான எடையில் இல்லாமல்... சிறிய மெல்லிய குறைந்த எடையில் செய்யப்பட்ட நகைக்கான மாட்டல் கொக்கி, பெரிய சங்கிலி டாலருக்கு உரியதாக இல்லாமல், மிக மெல்லிய எடை குறைந்த வளையக்கூடியதான ஒரு மெல்லிய வளையம், எடை கூடிய மோதிரத்துக்கு அதற்கு ஏற்றதாக இல்லாமல்... தகடு போன்ற நெளியும் ஒரு ரிங்... இப்படியாகத்தான் இப்பத்தைய நகைகள்... 'லெஸ் வெயிட் -பிக் சைஸ்' என்று மக்களை கவர்ந்து விரைவு ஆயத்த விற்பனைக்காகவே செய்யப்படுகின்றன.

ஒருவேளை, 'வலிமையாக இருக்கட்டும்' என்று எடையை கூட்டி அவர்கள் மிக அழுத்தமான நகைதனை 916KDM
  இல் செய்தால்... "அவ்ளோ அதிக வெயிட்டுக்கு... இவ்ளோ சின்னதாவா நகை இருக்கும்...?" என்று கூறி நமது மக்கள் அதனை வாங்குவதில்லை. புறக்கணித்து விடுகின்றனர். அல்லது... 20 , 18... கேரட்டில் காப்பர் சேர்த்து பலமாக செய்தால் ரீ-சேல் வேல்யூ இருக்காது என்பதற்காக... 916 KDM  அல்லாத தங்க நகைகளை வாங்குவதில்லை.

ஆக, "தரம் அவசியம்... நிரந்தரம் அவசியமில்லை" என்றுதான் நமது நிலை மாறிவிட்டது..! எனவே, இப்போதெல்லாம் நகைக்கடையில்... ஆகக்குறைந்த எடையில் ஆகப்பெரிய நகை என்பதுதான் முக்கியமாக போய் விட்டது..!
 
இதனால் என்ன ஆகிறது..? என்னதான் பூவை விட பதவிசாக பாவித்தாலும்... உபயோகப்படுத்த ஆரம்பித்த சில மாதங்களிலேயே நகை விரைவில் தேய்மானம் ஏற்பட்டு முறிந்து விடுகிறது. பத்தவைப்பு விட்டு விடுகிறது. சிறிய அளவில் ஏதாவது துணியில் மாட்டி இழுத்தாலே கூட போதும்... அந்த ஃபோர்சுக்கே சங்கிலி அறுந்து விடுகிறது. நான்கு பேர் டாலரை 'அழகா இருக்கே' என்று நன்கு தொட்டு பார்த்தாலே கூட போதும்; இழுத்துப்பார்க்க எல்லாம் வேண்டாம்... மெல்லிய வளைய கம்பி அகன்று... கையோடு டாலர் கழண்டு வந்து விடுகிறது..! 
வகுப்பில் டீச்சர் கேட்கும் கேள்விக்கு "ஆமா... இல்லை..." என்று தலையை இடம் - வலமாக சற்று பலமாக ஆட்டினாலே கூட போதும்... காதிலிருந்து தோடு தனியே எகிறி தெரிந்து விழுந்து தொலைந்து விடுகிறது..! திருகாணி மட்டுமே காதில் மிஞ்சிக்கிடக்கிறது..! 
கையில் ஏதாவது... சிறு பளு உள்ள பைகள் போன்ற எடையை தூக்கினால்கூட போதும், மோதிரம் பத்தவைப்பு விட்டு விடுகிறது..! வளையம் நசுங்கி விரிந்து விடுகிறது. லேசா சுவரில் எங்காவது நாம் உணராத அளவுக்கு இடித்தாலே கூட வளையல் நெளிந்து விடுகிறது..! ஓட வேண்டாம்... கொஞ்சம் வேகமாக அடி எடுத்து வைத்து நடந்தாலே கூட போதும்..! தங்க கொலுசு தளர்ந்து தரைக்கு சொந்தமாகி விடுகிறது..!
இதற்கெல்லாம் காரணம்... குறைந்த எடையில் பெரிய நகைகள் மெல்லிய இணைப்புகளில் செய்யப்பட்டு இருந்தாலும், அதன் உறுதியின் ஆழத்தை பார்க்காமல், பரப்பளவை மட்டுமே பார்த்து வாங்குதலே..!
உதாரணமாக... எட்டு பவுனில்... இரண்டு இன்ச் அளவுக்கு செய்யப்பட்டு அழுத்தமான ஒரு நெக்லஸ் இருக்கும். ஆனால், பக்கத்திலேயே... அதே பரப்பளவில், அதே டிசைனில், அதே அளவில் வேறொரு நக்லஸ் ஏழு பவுனுக்கு இருக்கும்..! நாம் முன்னதை வாங்க மாட்டோம். பின்னதைத்தான் வாங்குவோம். "எங்கே அந்த 8 கிராமை குறைத்துள்ளார்கள்?" என்று நன்றாக கவனித்து பார்த்தால்... அந்த ஒரு பவுனை பெரும்பாலும் அவர்கள்... பின் கழுத்து சங்கிலியில்... அதன் வலையைத்தில்... அதன் வளைய எண்ணிக்கையில்... கொக்கியில் இறுதியில் இவை அனைத்தின் உறுதியில் தான் எடையை குறைத்து இருப்பார்கள்..! கவனியுங்கள் சகோஸ். இது ஆபத்து. சிமென்ட் சிக்கனத்தை அஸ்திவாரத்திலே காட்டலாமா..?
இதை கவனிக்காமல், 'குறைந்த பவுனில் நிறைந்த நகை' என்று நாம் நகைமுறுவளுடன் வாங்கி வந்து விட்டு... மெல்லிய சங்கிலி  முறிந்து விட்டாலோ... சிறிய வளையம் நெகிழ்ந்து விட்டாலோ... உறுதியற்ற ஹூக் நெளிந்து விட்டாலோ... போச்சு... ஏழு பவுன் மொத்தமாக தொலைந்தே போயே போச்சு..! அப்புறம் எங்கே குறுநகை.. இளநகை.. நகைமுறுவல் சிரிப்பு எல்லாம் வரும்..?
எனவே, இதை கவனத்தில் வைத்து, அதிக உறுதியான பின் கழுத்து சங்கிலி மற்றும்  தடினமான வளையம், உறுதியான கொக்கி உடைய அந்த எட்டு பவுன் அதே சைஸ் நக்லஸ் நகையை... வாங்கி இருந்தால்...? சிந்திக்கவும் சகோஸ்..!
இதேபோலத்தான்... தோடு வாங்கினாலும்... அதன் தொங்கட்டானுக்கும் காதில் உள்ள திருகாணி பகுதிக்கும் இடையே உள்ள வளைய இணைப்பு மிகவும் பலமாக இருக்க வேண்டும்..!
சங்கிலி என்றால்... முடிந்த வரை அதன் கொக்கி இல்லாத தலை வழியே போடும்படியான உறுதியான அடர்த்தியான சங்கிலியை வாங்கவும். கழுத்தில் ஹூக் மாட்டும்படியான... கழுத்தை ஒட்டிய சங்கிலி என்றால்... அந்த ஹூக் அதிக திடமானதாக இருக்க வேண்டும். 
பொதுவாக 'S' டைப் இணைப்புத்தான் பயன்படுத்தப்படுகிறது. அடிக்கடி கழட்டி மாட்டினால் இதன் பலம் குன்றி விரிந்து எங்காவது தவறிவிட வாய்ப்புள்ளது. முடிந்தவரை இதனை தவிர்க்கவேண்டும். இதற்கு பதிலாக புதிய ஸ்ப்ரிங் ப்ரெஸ் லாக் ஹூக் வைப்பது பாதுகாப்பானது.
இன்னும், டாலர் ச்செயினில் டாலர் மாட்டி தொங்கவிடும் ஹூக் 'O' டைப் வளைய இணைப்பாக இல்லாமல்... 'W' டைப் ஹூக்காக இருக்க வேண்டும். டபிள்யு ஹூக்கில் இந்த பிரச்சினை இல்லை. ச்செயின் & டாலர் மிஸ் ஆகாது. ஆனால், படு மெல்லிய 'O'  டைப் வளையம் விட்டுக்கொண்டால் டாலர் போயி.. பின்னாடியே ச்செயினும் போயிடும்..! கவனம்..!
மோதிரம் வாங்கும்போது, நாம் அதன் முகப்புக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் அதன் வளைய அழுத்தத்துக்கும் அதன் உறுதிக்கும் முக்கியத்துவம் தரவேண்டும்.
வளையல் வாங்கும்போது, முடிந்த வரை அதன் உட்புறம் ஒரு பிளாஸ்டிக் வளையல் வைத்து கூடுதல் உறுதி தர முடியும்படியான ஒரு உட்புற ஒடுக்கு இருக்கும்படியாக பார்த்து வாங்கவும். இது, வளையல் நீண்ட காலம் நெளியாமல் இருக்கும்படி பாதுகாக்கும்..!
சரி, ''இதெல்லாம் இனி நகை வாங்கும் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய சிந்தனைகள். தற்போது வாங்கப்பட்ட தகடு போன்ற நகைகளை தொலையாமல் காக்க என்ன வழி?'' என்று கேட்கிறீர்களா சகோஸ்..?
இதற்கு ஒரே சிறந்த செக்யூரிட்டி சேஃப்டி பின்..! அதாவது ஊக்கு..! கழுத்துப்புறத்தில் சங்கிலியின் ஹூக் பற்றவைக்கப்பட்ட ஏதாவது ஒரு பலமான வளையத்துக்குள் (அல்லது எந்த நகையின் எந்த பகுதி பலமானதோ அதில்) விட்டு கழுத்துப்பக்க பிளவுசுடன்/சுடிதாருடன் சேர்த்து ஊக்கை குத்திக்கொள்ள வேண்டியதுதான். மறுபுறம் சங்கிலி இணைப்பு அறுந்தாலும்... ஊக்கு குத்தி உள்ள சைடில் இணைந்தபடி, சங்கிலி இணைப்பு விட்டாலும்... கீழே விழுந்து காணாமல் போகாமல் ப்ளவுசுடன்/ சுடிதாருடன் சேர்த்து தொங்கிக்கொண்டு இருக்கும்..!

பல சங்கிலி நக்லஸ் இருந்தால் அனைத்தையும் ஒரே ஒரு பெரிய ஊக்கில் ஒன்றிணைத்து விட வேண்டியதுதான். அப்புறம், கழுத்தை ஒட்டிய பிளவுஸ் அணிவது
 இல்லை எனில்... ஒரு நைலான் நூல் மூலம் சங்கிலியின் ('S' டைப் ஹூக்குக்கு இரு பக்கமும் உள்ள) இரு இணைப்புகளை கழுத்து பின்பக்கமாக இணைத்து பிரியாத முடிச்சிட்டு ஒரு 'எக்ஸ்டிரா பாதுகாப்பு நைலான் லிங்க்' தந்து விட வேண்டியதுதான்..!
தோடுக்கு... காதை சுற்றிய மாட்டல் போட்டுக்கொள்வது நல்லது. அல்லது, தொங்கட்டானை  ஒரு மெல்லிய வண்ணம் இல்லாத நைலான் நரம்பு கயிறை திருகாணி பார்ட்டுடன் இணைத்து பிரியாத முடிச்சிட்டு விட வேண்டியதுதான். கொலுசுக்கும் இதேதான்..!

சிலசமயம்
  வளரும் பிள்ளைகள் என்பதால், வளையல் சற்று லூஸ் சைஸ் வாங்கி இருப்போம். இதனால், கையை சற்று உதறினால் கழண்டு விழ வாய்ப்புள்ளது. எனவே, வளையலில் ஒருதடிமனான நூலை சுற்றி முடிச்சிட்டு அதை கையில் (வளையலுக்குள்) கட்டிக்கொள்ளலாம்.
என்ன பண்ண சகோ..? எந்நேரம் தொலையுமோ... என்ற அளவுக்கு பாதுகாப்பற்ற- தரமுள்ள நிரந்தரமற்ற தங்க பலகீன நகைகள்...தொலையும் அபாயம் எப்போதும் இருக்கவே செய்கிறது..! நாம் தான் இனி அதை வாங்கும் போதும், அணிந்திருக்கும் போதும் சற்று அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் சகோஸ்..! காணாமல் போனவுடன் அப்புறம் வருத்தப்பட்டு பயனில்லை..! உழைப்பு & சேமிப்பு... இதில் வேண்டாம் இழப்பு..!

கருத்துகள் இல்லை:

ஏ.சி வாங்கப் போறீங்களா? இந்த விஷயங்களை மறந்து விடாதீர்கள்!

உடலை சுட்டெரிக்கும் வகையில் வெயில் தாக்கம் எவ்வளவு இருந்தாலும் அதை சமாளிக்க நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ஏ.சிதான். அதை நாம் சரியான ம...

Popular Posts