லேபிள்கள்

புதன், 1 மே, 2013

இஸ்லாமிய ஆண்மகன்!- எப்படியிருக்க வேண்டும்?



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ...

ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும் தன்மகனையும் சமாளிக்குறதை பத்தி ரொம்ப பொலம்பிட்டு இருந்தாள் என் தோழி!
  ஆனா, ஒரு பெரிய மிஸ்டேக் பண்ணிட்டாள்.... என்னன்னா, பொலம்பினது  தன் தம்பிக்கிட்ட! அவன் உடனே "அக்கா, டோன்ட் க்ரிப் அபௌட் திஸ்! இட் இஸ் ஒன்லி யுவர் ஜாப்"!! அப்படின்னான்! மவனே! வந்துச்சு பாருங்க கோவம்!

ஒரே ஒரு கேள்வி தான் அவனை கேட்டேன். கப் சிப். புள்ளை அதுக்கப்புறம் வாயே திறக்கல. இப்ப அதே கேள்வியை எல்லாருக்கும் கேட்கலாம்னு இருக்கேன்!

முஹம்மது நபி ஸல் அவர்கள் வீட்டிலிருக்கும்போது என்ன செய்வார்கள் தெரியுமா? மனித குலம் அத்தனைக்கும் மிகப்பெரிய தூது செய்தியைக்கொண்டு வந்து நமது அன்பு நபியவர்கள் வீட்டிலிருக்கும்போது, வீட்டை பெருக்குவதிலும், துணிகளை தைப்பதிலும் ஆட்டிடம் பால் கறப்பதிலும் உதவி செய்தார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா?!
 "உங்களில் சிறந்தவர்கள் உங்கள் மனைவியரிடம் சிறந்தவரே" என்ற ஹதீஸை எல்லோருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்!

ஆனா எத்தனை பேர் இதை கடைப்பிடிக்கிறீங்க சொல்லுங்க? வீட்டுக்கு வந்தவுடன், "நானே டயர்டா ஆஃபீஸ்ல இருந்து வந்திருக்கேன், என்னை தொந்தரவு பண்ணாத"ன்னு சொல்லாத ஆண்களை காட்டுங்க பாப்போம்! குளு குளுன்னு ஏஸியில உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் நீங்க, பொறுக்க முடியாத வெயிலில், மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த நபி ஸல் அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டது என்ன?

வீட்டை நிர்வகிப்பதில் ஒரு பெண்ணுக்கு மட்டும் தான் கடமை, ஆணுக்கு அதில சம்பந்தமே இல்லைன்னு நினைப்பவர்கள் கொஞ்சம் நபி வழியையும் கடைப்பிட்க்கட்டும். இஸ்லாத்தை பொறுத்த வரை உங்கள் வேலையும் வீட்டில் தான் துவங்குகிறது. அந்த வீட்டை நடத்துவதற்க்கு தான் நீங்கள் வெளியே
 சென்று சம்பாதிக்கிறீர்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் வெளியில் சென்று பொருள் ஈட்டுவதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள். அதுவும் பிள்ளை கொஞ்சம் அழுதாலும் போதும், எரிச்சல் வந்து விடுகிறது. 

ஒரு வீட்டில் உள்ள ஆண் தனது குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு பொறுப்பாளி ஆகிறார். அவர்களின் உணவு, உடைமை, அனைத்திலும் செலவழிக்க வேண்டியது அவரது கடமையாகிறது. தனது தந்தை, மகன், கணவர், சகோதரர், இவர்களின் சம்பாத்தியத்தில் அப்பெண்ணுக்கு உரிமை இருக்கிறது. மாறாக, அப்பெண் எவ்வளவு தான் செல்வம் படைத்தவள் என்றாலும், வீட்டின்மீது செலவழிக்க அவளுக்கு கடமையில்லை, அவர்களுக்கு உரிமையும் இல்லை. எத்தகைய சூழ்நிலையிலும், ஒரு வீட்டுக்காக உழைத்து கொண்டு வருவது ஆணின் கடமையே. இதனால் தான் பெண்களுக்கு ஆண்களை அல்லாஹ் பொறுப்பாளி ஆக்கியுள்ளான்.

இவ்வாறு கடினப்பட்டு உழைத்துக்கொண்டு வந்த பணத்தை வீணடிக்கும் பெண்களும் இருக்கிறார்கள். அதைப்பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம். இப்போது இந்த ஒரு பொறுப்பை பெரும்பாலானவர்கள் எப்படி தவறா பயன்படுத்துறாங்கன்னு பார்ப்போம்.

நம்மை சுத்தி நடக்குற விஷயங்களை பார்க்கும்போது நம்மை நாமே சுயபரிசோதனை செஞ்சிக்கிறது நல்லது இல்லையா?

பெரும்பாலான முஸ்லிம் வீடுகள் பெற்றோர்கள் எப்படி இருக்காங்க தெரியுமா? வீட்டிலுள்ள ஆண்கள் நபிவழி பேணி தாடி வைக்கிறாங்களோ இல்லையோ, வேளா வேளைக்கு பள்ளி சென்று தொழுகிறார்களோ இல்லையோ பெண்கள் அபாயா போடக்கூடியவர்களாக இருக்காங்க. தன் மகள் பத்தாவது, பனிரென்டாவதோட படிப்ப நிறுத்தினா போதும்னு ஒரே புடியா புடிப்பாங்க. என்ன காரணம்னு கேட்டா: "ஆம்பளைங்க எப்படி போனாலும் பரவாயில்லை, ஆனா பொம்பளை புள்ளைக்கு ஒண்ணுன்னா ஊரு தப்பா பேசும்"னு வீட்டு பெரியவங்க சொல்வாங்க.

ஸுப்ஹானல்லாஹ்!
 இதுவா அல்லாஹ் நமக்கிட்ட கட்டளை? இந்த பதில்ல எங்கயாச்சும் தக்வான்னு ஒண்ணு இருக்கா? நாம முஸ்லிம் என்றால் என்ன அர்த்தம்?நம்முடைய வணக்கம், தொழுகை, ஈமான், செயல்கள், எண்ணங்கள் இது எல்லாமே அல்லாஹ் ஒருவனுக்காக மட்டும்தானே இருக்க வேண்டும்? இங்கே ஊர் தப்பா பேசும், பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கனும், ஆம்பளை எப்படி இருந்தாலும் பரவாயில்லைன்னு பேசுவது வெட்ககேடு இல்லையா? 

ஒரு பெண் தன்னை முழுவதுமாக மறைத்துக்கொண்டுதான் ஆடை அணிய வேண்டும் என்பது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கட்டளை; அதற்கு நாம் அடிபணிகிறோம். இதையல்லாது வேறு எந்த
 காரணம் சொன்னாலும் அது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுமா? பெண்கள் கட்டுக்கோப்பாக இருக்கனும்னு கட்டளை போடும் ஆண்கள், தங்களுடைய ஒழுக்கத்தை பேணுவதில் கவனமா இருக்காங்களா? அவர்களின் பார்வைகளில் தவறிருந்து அதை சுட்டிக்காட்டினால் உடனே "ஆமா, அவ ட்ரெஸ் பண்ணினா, நாங்க அபப்டித்தான் பார்ப்போம், அதுக்குத்தானே பெண்களை புர்கா போட சொல்லிருக்கு?"ன்னு தெனாவெட்டா ஒரு பதில் வரும். அப்படியா? பெண்களை மட்டும்தான் புர்கா போட சொல்லிருக்கானா அல்லாஹ்? உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லையா?
"நம்பிக்கை கொண்ட ஆண்களே, உங்கள் பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுங்கள்" (அந்நூர், 24:30)
இதைவிட பெரிய விஷயம், அதுவும் குறிப்பா இந்த காலத்து இளைஞர்களிடம் அதிகமா காணப்படுவது வட்டி! பெண்களை எப்பவும் வீண் விரயம் செய்பவர்கள் என்று குறை கூறும் ஆண்கள், உண்மையில் எப்படி இருக்காங்க? நம்ம ஊருல க்ரெடிட் கார்ட் இல்லாத ஒரு இளைஞர காட்டுங்க பார்ப்போம்?
இஸ்லாத்தில கடன்படுவது என்பது அல்லாஹ்வின் சோதனைகளில் ஒன்று, அதிலிருந்து நமது நபி ஸல் அவர்கள் பாதுகாவல் தேடி அல்லாஹ்விடம் துவா செஞ்சாங்க. ஆனா இதை நம்மாளுங்க கிட்ட சொன்னா என்ன சொல்லுவாங்க?
'சும்மாதானே கிடைக்குது', 'ஆத்திர அவசரத்துக்கு உதவும்', 'வட்டி போட முன்னாடி கட்டிடுவேன்' இப்படி எத்தனையோ சப்பகட்டு கட்டுவாங்க. க்ரெடிட் கார்ட கொண்டு ஐ ஃபோனும், ஐ பேடும், 'சும்மா கிடைக்கிற' வங்கி கடனில் சொகுசு காரும் உங்களுக்கு தேவைதானா?
 க்ரெடிட் கார்ட் என்பது கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சு நம்மை ஆழ்துளை கிணற்றுல தள்ளிவிடக்கூடிய ஒரு பெரிய ஆபத்து, அது தெரிஞ்சிருந்தும் நம்ம சகோதரர்கள் அதில் சென்று விழுவது பெரிய வேதனை. கடன் என்பது நாம் மிகவும் முடியாத நேரத்தில் வாங்குவது, கடன் கொடுப்பதோ ஒரு தர்மச்செயல் போன்றது. நல்ல நிலையில் இருக்கும் நாம், பிறரிடம் தர்மம் வாங்குவதை விரும்பமாட்டோம், அப்படி இருக்கும்போது ஏன் இந்த க்ரெடிட் கார்ட் பின்னாடி ஓடனும்?

 இது போலத்தான் நம்முடைய சகோதரர்கள் பலர் இப்ப ரொம்ப சாதரணமா வங்கிகளிலும் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளிலும் கொஞ்ச கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல் வேலை செய்கிறார்கள். கல்யாணத்துக்குன்னு வரன் தேடும்போது தான் தெரியுது, நம் சமூகத்தவர்கள் வட்டியை எவ்வளவு தவறாக புரிந்துக்கொள்கிறார்கள் என்று. "வட்டி என்பது கந்து வட்டியைத்தான் குறிக்கும், சாதரணமா வங்கிகளில் நாம் வாங்கும் கடனுக்கு வட்டி கட்டலைன்னா அவன் எப்படி வங்கியை நடத்துவான்? இப்பல்லாம் வட்டியில்லாம வியாபரம் செய்யவே முடியாது'ன்னு சொல்றவங்களை பார்ப்பது நம் சமூகத்தில் ஒன்றும் அரிதல்ல.
'யார் வட்டி வாங்கித் தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்டவனாக எழுவது போலல்லாமல் (வேறு விதமாக) எழ மாட்டான். இதற்குக் காரணம், அவர்கள் 'நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கி இருக்கிறான்...' (அல்குர்ஆன் 2:275)
இதையெல்லாத்தையும் விட மிகவும் வேதனையான விஷயம் நம்முடைய வீடுகள்ல பெரும்பாலான ஆண்கள் தொழுவ பள்ளிக்கே போவதில்லை! தொழுவாதவங்களை தொழுங்க, தொழுங்கன்னு எவ்வளவு சொன்னாலும் பாங்கு சொல்லி முடிஞ்சதும் நைசா முசல்லாவை எடுத்துப்போட்டு வீட்டுலேயே தொழுது கடமை முடிஞ்சுதுன்னு நினைச்சுக்குறாங்க. 

சுப்ஹானல்லாஹ்! சகோதரர்களே, நீங்கள் செய்யும் தவறை இனியாவது திருத்திக்கொள்ளுங்கள். நம் சகோதரரிகள் பலர் இப்பல்லாம் துணிவோடு புர்காவுடனும் நிகாபுடனும் வேலைக்கு செல்வதை பார்க்கிறோம். ஆனால் சகோதரர்கள் பலருக்கு இன்னுமே தாடி வைக்க தயக்கம். கேட்டா, ஆஃபிஸ்ல ட்ரெஸ் கோட்னு சொல்லிடுவாங்க. நிச்சயமா தாடி வைப்பது வாஜிபான காரியம். வெறும் சுன்னத்து தானேன்னு விட முடியாது. உங்கள் மேன்லினெஸை லேட்டஸ்ட் மாடல் செல்போன் வைத்திருப்பதிலும், பைக்கை வேகமாக ஓட்டுவதிலும், ஸ்டைலாக இருப்பதிலும் காட்டாதீர்கள்! நபி வழியை அல்லாஹ் ஒருவனை வணங்குவதற்க்காக மட்டுமே கடைப்பிடியுங்கள். உங்களை நீங்களே ஒருமுறை கேட்டுக்கொள்ளுங்கள் நபிவழிபடி தான் நடந்துக்கொள்கிறோமா? அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடந்துக்கொள்கிறோமா என!
  உங்களை நோக்கி கேள்விகணைகள் வரும் முன்பே உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள்! ஒரு முஸ்லிம் ஆண் தன் தோற்றத்திலும், ஒவ்வொரு செயலிலும் நபிவழியை கடைப்பிடித்தால் மட்டுமே அவன் உண்மையான முஸ்லிமாகிறான்.

இதை எனக்கும் ஒரு படிப்பினையாக்கிக்கொள்கிறேன். மார்க்கத்தில் பெண், ஆணுக்கு அடிமையில்லை, ஆண், பெண்ணுக்கு அடிமையில்லை. ஆனால் அல்லாஹ் இட்ட கட்டளைக்கிணங்க பெண்களாகிய நாம் திருமணத்துக்கு முன் நம் வலீயாகிய தகப்பனாருக்கு பணிந்து நடக்கிறோம். அதுபோல திருமணத்துக்கு பின் நம் கணவருக்கு பணிகிறோம். ஏனெனில் அவர்களை அல்லாஹ் நமக்கு பொறுப்பாளர்களாக்கியிருக்கிறான். இதை புரிந்து கொண்டு, நமது வீடுகளிலும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் அல்லாஹ் ஒருவனுக்காக அன்றி வேறெதற்காகவும் இல்லை என்ற நிய்யத்தின் படி நடக்க பழகிக்கொள்ள வேண்டும்.

உங்கள் சகோதரி
நாஸியா

கருத்துகள் இல்லை:

ஏ.சி வாங்கப் போறீங்களா? இந்த விஷயங்களை மறந்து விடாதீர்கள்!

உடலை சுட்டெரிக்கும் வகையில் வெயில் தாக்கம் எவ்வளவு இருந்தாலும் அதை சமாளிக்க நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ஏ.சிதான். அதை நாம் சரியான ம...

Popular Posts