லேபிள்கள்

சனி, 23 பிப்ரவரி, 2013

தவிர்ப்போம் சஹர் நேரத்தில் டிவி ப்ரோகிராம்களை..!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
 நள்ளிரவு நேரம்..!
 சாதாரண நாட்களில் நம்மில் பலர் தூங்கி விடுவது உண்டு. வெகுசிலரே நள்ளிரவு நேரமான தஹஜ்ஜத் நேரத்தில் எழுந்து அதை தொழுகிறோம். நைட் ஷிப்டில் இருக்கும் போது மட்டும் எனக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும். நம்மில் பலர் மற்ற ஐந்து வேலை நேர தொழுகைகளை அதன் அதன் நேரத்தில் சரியாக நிறைவேற்றுபவர்கள் கூட தஹஜ்ஜத் கடமையான தொழுகை இல்லாததால் அதில் அவ்வப்போது கவனக்குறைவாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.

தஹஜ்ஜத் என்ற நள்ளிரவு தொழக்கூடிய தொழுகை மற்ற ஐந்து வேலை தொழுகைகள் மற்றவைகளுக்கு கடமை ஆவதற்கு முன்னரே அல்லாஹ் தான் தூதருக்கு மட்டும் இஸ்லாமிய பிரச்சாரத்தின் ஆரம்ப நாட்களிலேயே அதனை கடமை ஆக்கி இருந்தான்..! அதுபற்றிய குர்ஆன் வசனங்கள்...

73:1. போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
73:2. இரவில் - சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக;
73:3. அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக!
73:4. அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக; மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.

தஹஜ்ஜூத் என்ற அத்தியாயத்தில் வரும் சில ஹதீஸ்கள்..!

நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழும்போது பல் துலக்குவார்கள்.

ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
புஃஹாரி-1136

நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுவார்கள். அதுவே அவர்களின் (வழக்கமான) தொழுகையாக இருந்தது. அத்தொழுகையில் உங்களில் ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதக் கூடிய நேரம் ஒரு ஸஜ்தாச் செய்வார்கள். ஃபஜ்ருத் தொழுகைக்கு முன்னால் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு ஃபஜ்ருத் தொழுகைக்காக முஅத்தின் அழைக்கும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள். ஆயிஷா(ரலி) அறிவித்தார். புஃஹாரி-1123.

சில சமயம் நபி(ஸல்) அவர்கள் கால்கள் வீங்கும் அளவுக்கு (இரவில்) நின்று தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது 'நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?' என்று கேட்பார்கள். (முகீரா(ரலி) அறிவித்தார். புஃஹாரி 1130

நபி(ஸல்) அவர்கள் நோயுற்றபோது ஓர் இரவோ, இரண்டு இரவுகளோ தொழவில்லை.
ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.1124

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகை (வக்த் வந்திருக்குமோ என்று அதன் நேரத்தை) பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்" என்று கூறினார்கள்.
 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்புஃஹாரி 990.

இறைத்தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்: 
"இரவுகளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்'.
 
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
 புஃஹாரி 998.
ரமலானின் இரவுத்தொழுகை ஜமாஅத்  தொழ-தொழவைக்க ஆக சிறந்த நேரம் எது..?

வருடம் பூராவும் நள்ளிரவில் சுன்னத்தான நபிவழி தொழுகையாக அதிக நன்மைக்காகவேண்டி... தொழ வேண்டிய  தஹஜ்ஜத் தொழுகையை ரமளானில் இஷா ஜமாஅத் முடித்த உடனேயே தொடந்து தராவீஹ் என்ற பெயரில் இமாம் ஜமாத்தோடு தொழுதுவிட்டு தூங்கிவிடுகிறோம். தூய இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும் இயக்கங்கள் உட்பட இதே வழிமுறையைத்தான் ஜமாஅத் விஷயத்தில் பின்பற்றுகின்றன. ஆனால், ஹதீஸ்களில் இந்த தொழுகையை நபி ஸல் அவர்கள் இஷா தொழுதுவிட்டு தூங்கிவிட்டு நள்ளிரவில் எழுந்துதான் தொழுது உள்ளார்கள் என்று பல ஹதீஸ்கள் மூலம் அறிகிறோம்.

ரமலானின் இரவுத்தொழுகை ஜமாஅத் பற்றி வந்துள்ள ஹதீஸ்கள்...!

புஃஹாரி 2010. அப்துர்ரஹ்மான் இப்னு அப்தில் காரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் உமர்(ரலி) அவர்களுடன் ரமளான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து, பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர்(ரலி) 'இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே!" என்று கூறிவிட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை இப்னு கஅபு(ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றொரு இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) 'இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது; இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வணங்குவதை விட உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) வணங்குவது சிறந்ததாகும்!" என்று கூறினார்கள். மக்கள் இரவின் முற்பகுதியில் தொழுது வந்தனர்.
இரவின் கடைசி நேரத்தில் தொழுவதைக் குறித்தே இவ்வாறு உமர்(ரலி) கூறினார்.

புஃஹாரி 2012. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இதுபற்றிப் பேசிக் கொண்டார்கள். (மறுநாள்) முதல்நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபி(ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இது பற்றிப் பேசிக் கொண்டார்கள். இந்த மூன்றாம் இரவில் பள்ளிவாசலுக்கு நிறையப் பேர் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவில், பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர்; ஆனால், நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகைக்குத்தான் வந்தார்கள். ஸுப்ஹுத் தொழுகையை முடித்தும் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மொழிந்து, 'நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன்; நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும், இது உங்களின் மீது கடமையாக்கப்பட்டு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்!' எனக் கூறினார்கள்.
"நிலைமை இப்படியே இருக்க, (ரமளானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க) நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள்!" என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

சஹர் நேரத்தில் டிவி ப்ரோகிராம்கள் தேவையா...?

இந்நிலையில்.... ரமளானில் கடமையான நோன்பை நோற்க ரஹ்மத்தான சஹர் உணவை சாப்பிட எப்படியும் துயில் எழுந்து விடுகிறோம். அதற்கு ஒரு மணி நேரம் முன்னர் எழுந்து நம்மில் பலர் தஹஜ்ஜத் தொழலாம். மற்ற நாட்களை விட ரமளானில் இது இலகு. ஆனால் அதை செய்யாமல்... ஸஹர் நேரத்தில் முன்னரே எழுந்து இப்போது டிவிக்கு முன்னர் அமர்ந்து விடுகிறோம். காரணம்...? எல்லா இயக்கங்களும் எக்கச்சக்க சஹர் ப்ரோகிராம்கள் போடுகின்றன. இதனை அவசியம் பார்க்க சொல்லி ஏகப்பட்ட விளம்பரங்கள் வேறு. அதிலும் இசையுடன் கூடிய ஏகப்பட்ட வர்த்தக விளம்பரங்கள். குறைந்த நேரமே இருந்தும், அதில் தட்டை பார்த்து சாப்பிடாமல்... டீவியை பார்த்துக்கொண்டே சாப்பிடுகிறோம். ஒரே டிவியில் முடிந்த வரை விளம்பர இடைவெளியில் சில நிகழ்ச்சிகளை காண்கிறோம்.

ஏன்..?

கொஞ்சம் பொறுத்தால்... அதே உரை சிடியாக நமக்கு கிடைக்க போகிறது..! அல்லது ஃப்ரீ டவுன்லோடு ஆப்ஷன் அவர்கள் வெப்சைட்டில் வைக்கிறார்கள்..! அல்லது ரமளான் முடிந்தவுடன்  தங்கள் வழமையான மாலை/இரவு நேர ப்ரோகிராம்களில் மறுஒளிபரப்பு செய்ய போகிறார்கள்...! அப்போது ஆற அமர அமர்ந்து பார்ப்பதைவிட்டுவிட்டு... எதுக்கு நாம் நமது நன்மையை... அதுவும்  வணக்கத்திற்கு சிறந்த ஆயிரம் மாதங்களை விட சிறப்பான லைலத்துல் கத்ர் எல்லாம் வரப்போகிற ரமளானில்... அதுவும்... துவா கேட்கும் சிறந்த நேரத்தை.... ஏன் இழக்கனும்..?   சிந்திக்கவும் சகோஸ்..!

பிரார்த்தனையும் வணக்கமே..!

அல்லாஹ் நம்மை பிரார்த்திக்கவும் சொல்கிறான் எனபதை அறிவோம்.
நபி (ஸல்) அவர்களும் கூட, "பிரார்த்தனையே வணக்கமாகும்" எனக் கூறியுள்ளார்கள்.

இறைவனை வணங்கும் வணக்கத்திற்கு நிகராகக் கருதப்படும் "பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட குறிப்பிட்ட சில நேரங்கள் உள்ளன" என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

மக்கள் உறக்கத்திலும் உலக இன்பங்களிலும் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறான் என்று புரியலாம்.

அல்லாஹ் நமக்கு ஒரு பிரத்தியேகமான பதிலளிக்கும் நேரம் ஏற்படுத்தி தூக்கத்தை வென்று அவனிடம் தமது எல்லாவித தேவைகளை கேட்பவர்களுக்கு அருள நாடுகின்றான் என்றும் புரியலாம்.

பிரார்த்தனைக்கு ஆக சிறந்த நேரம் எது...?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "இரவின் பகுதியில் ஒரு நேரம் இருக்கிறது அந்நேரத்தில் எந்த முஸ்லிமும் இந்த உலகத்தின் விஷயத்தில் அல்லது மறுமையின் விஷயத்தில் கேட்டு அது அளிக்கப்படாமல் இருப்பது இல்லை; இது ஒவ்வொரு இரவிலும் இருக்கிறது." (முஸ்லிம் : 757)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒருவர் தமது வணக்கத்தின் போது இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருக்க வாய்ப்புள்ள நேரம் இரவின் இறுதி பகுதி நேரம் ஆகும். ஆகையால் உங்களால் அந்நேரத்தில் இறைவனை நினைவுகூர்ந்து வணங்குபவர்களில் ஒருவராக இருக்க இயன்றால் அதை செய்யுங்கள். (அம்ரு இப்னு அபஷ் அவர்கள் அறிவிக்கிறார்கள்:  திர்மிதி, நஸாயீ

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒவ்வோர் இரவின் இறுதியில் மூன்றாம் பகுதியில் நமது இரட்சகனும் ரப்புமாகிய அல்லாஹ் அடிவானத்திற்கு இறங்கிவருகிறான். மேலும், 'என்னை அழைப்பவர் உண்டா?, நான் அவருக்கு பதிலளிப்பேன். என்னிடம் தமது தேவைகளை கேட்பவர் உண்டா? நான் அவருக்கு வழங்கக் கூடும். என்னிடம் பாவமன்னிப்பு கேட்பவர் உண்டா? நான் அவர்களை மன்னிக்கக்கூடும்' என்று கூறுகின்றான்" (அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிகிறார்கள்:ஸஹீஹ் புகாரி)

அந்த நேரம்..., இரவுத்தொழுகைக்கான நேரம் அல்லவா..? அதைவிட அல்லாஹ்வே வலியுறுத்திய துவா கேட்க சிறப்பான நேரம் அல்லவா..? அந்த நேரத்தை எந்த ஜமாஅத்தும் ஜமாஅத் தொழுகையில் ஹயாத் ஆக்கக்காணோம்...! ஆனால், நம்மை துவா கேட்கவும் விடுவதாக இல்லையே..? இது சரியா..?

ஆகவே, அந்த நேரம் தஹஜ்ஜத் தொழும் நேரம். தொழுதுகொண்டே சஜ்தாவில்... அல்லது தொழுதுவிட்டு இருகரம் ஏந்தி... மனம் ஒருமித்து.... நமது தேவைகளை நாம் கேட்கும் துவாவுக்கான அல்லாஹ் ஏற்படுத்தி தந்த சிறந்த நேரம். இதை பாழ்படுத்துகின்றன இந்த சஹர் நேர ப்ரோகிராம்கள்..!

எவரும் இதை சஹர் நேரத்தில் மக்களுக்கு சொல்வதில்லை. சொன்னால் அது அவர்களுக்கே நஷ்டம். நாம் தான் நம்மிடையே இதை பரப்பிக்கொள்ள வேண்டும்..! யார் அதிக நேரம் ப்ரோகிராம் போடுவது... எந்த இயக்கத்துக்கு முன்னணி சேனல்கள் கிடைத்தன... எவ்வளவு விளம்பரம் வருகின்றன.... டிஆர்பி ரேட் எப்படி.... என்பதிலேயே போட்டி... இவற்றில் லீடிங் என்றால் அது பெருமை..!

(குறிப்பு: இது ஐந்து - ஆறு வருடங்களுக்கு முன்னர் உள்ள நிலை. இப்போது என்ன நிலை என்று தெரியவில்லை. ஏனெனில், நான் ஸஹர் நேரத்தில் டிவி போட்டு ஐந்தாறு வருடங்கள் ஆகிவிட்டன.)

"என்னிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்." (அல்குர்ஆன் 4:60)

ஆகவே.... இஸ்லாமிய தாவா நோக்கத்தில் அமைந்த சொற்பொழிவு என்றாலும்... அந்த  ஸஹர் நேர டிவி ப்ரோக்ராம்களை எல்லாம் ஒதுக்கி விட்டு... நாம் நமக்கான நன்மையை சரியான நேரத்தில் தொழுது சிறப்பான நேரத்தில் பிரார்த்தித்து பெற்றுக்கொள்ள முயல்வோமாக. வல்ல நாயன் அல்லாஹ் அதற்கு நமக்கு கிருபை செய்வானாக. ஆமீன்.

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts