லேபிள்கள்

வியாழன், 17 ஜனவரி, 2013

குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்தீர்களா?


டாக்டர் கல்பனா நரேந்திரன்
நம் அனைவருக்கும் பொதுவாக உள்ள சந்தேகம், நம் குழந்தைகளை எந்த வயதில் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதுதான். பல பெற்றோர்களிடம் குழந்தைகள் வளர்ந்து ஏழு, எட்டு வயதான பின்னர்தான் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற தவறான கருத்து நிலவுகின்றது. இதனால் பல குழந்தைகளின் பார்வை சிறுவயதிலேயே பாதிக்கப்பட்டு அவர்களின் எதிர்காலமே பாழாகி விடுகின்றது. ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கூடம் செல்லும் முன்பாகவே கண்டிப்பாக கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பெற்றோற்களின் கவனத்திற்க்கு...
பார்வைக் குறைபாடுகள் (Refractive Errors)
பள்ளி செல்லும் குழந்தைகளில் 4 முதல் 5 சதவீதம் வரை பார்வைக் குறைபாடுகள் இருக்கின்றன. பார்வைக் குறைபாட்டை மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. தூரப்பார்வை (Long sight), கிட்டப்பார்வை (Short sight) மற்றும் சமச்சீரற்ற பார்வை (Astigmatism).

பார்வைக்குறைபாடுகளின் அறிகுறிகள்:
* கரும்பலகை, தொலைக்காட்சி ஆகியவற்றை அருகில் சென்று பார்த்தல்.
* புத்தகத்தை முகத்துக்கு அருகில் வைத்துப் படித்தல்.
* கண்களை சுருக்கிப் படித்தல்.
* தலைவலி அல்லது கண்வலி.
* மாறுகண்
- போன்றவை பார்வைக் குறைபாடுகளின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் குழந்தைகளிடம் தெரிந்தால் உடனே கண் மருத்துவரிடம் செல்வது நல்லது.
   
மாறுகண் (Squint)
மாறுகண் அதிர்ஷ்டத்தின் அறிகுறி என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது ஒரு குறைபாடு. இது குழந்தையின் பார்வை மற்றும் தோற்றத்தை பாதிக்கும். இந்த குறைபாடு உள்ளவர்களை எட்டு அல்லது ஒன்பது வயதுக்குள் உரிய சிகிச்சை அளித்தால் மட்டுமே குணமாகும். இல்லாவிட்டால் மாறுகண் நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்தும்.

சோம்பலுற்ற கண் (Amblyopia)
சாதாரணமாக இரண்டு கண்களும் இணைந்து ஒரு பொருளை பார்க்கும்போது, ஒரே மாதிரியான உருவம் மூளையைச் சென்றடையும். அப்படி இல்லாமல், இரண்டு வேறுபட்ட உருவங்கள் தெரிந்தால் இதை சோம்பலுற்ற கண் என்று மருத்துவ அறிஞர்கள் அழைக்கின்றனர். குழந்தையின் மூளை, நல்ல பார்வையுள்ள கண்ணிலிருந்து வரும் உருவத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு, பாதிக்கப்பட்ட கண்ணிலிருந்து வரும் உருவத்தை ஒதுக்கக் கற்றுக் கொள்கிறது. இதனால் அந்த கண்களில் நாளடைவில் பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது.

சோம்பலுற்ற கண் ஏற்படக் காரணங்கள்:
* மாறுகண்
* பிறவியிலேயே ஏற்படும் கண்புரை
* கருவிழியில் தழும்பு
* குறைமாதக் குழந்தை
* இரண்டு கண்களிலும் வேறுபட்ட பார்வைத் திறன் இருந்தும், ஆரம்பத்திலேயே உரிய கண்ணாடி அணியாமல் இருத்தல்.
   
நோய் கண்டவுடன் செய்ய வேண்டியது
இந்த குறையை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளித்தால் மட்டுமே குணப்படுத்த முடியும். இல்லாவிட்டால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படும். தாமதமாக சிகிச்சை பெறும்போது இருக்கும் பார்வையை பாதுகாக்கலாம்.

கண்புரை (Cataract)
கண்புரை என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, பிறந்த குழந்தைக்கும் ஏற்படலாம்! கண்களில் அடிபடும்போதும் கண்புரை ஏற்படும். கண்புரையை கண்டறிந்தால், உடனே அறுவை சிகிச்சை செய்வது அவசியம். இல்லாவிட்டால் பார்வை இழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே குழந்தைகளை பள்ளி செல்வதற்கு முன்பு, ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம்.
டாக்டர் கல்பனா நரேந்திரன், டி,ஒ., டி என் பி. அரவிந்த் கண் மருத்துவமனை, கோவை.

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts