லேபிள்கள்

செவ்வாய், 23 அக்டோபர், 2012

நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்!


நாம் ஒருவர் மீது கொண்டுள்ள அன்பையும், மரியாதையையும் காட்டுவதற்காக அதன் அடையாளமாகக் கொடுப்பதே அன்பளிப்பாகும்..! உங்கள் அன்பளிப்பு உன்னதமாக நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்...
அன்பு என்றால் மகிழ்ச்சியான உணர்வு. அன்பைப் பகிர்ந்துகொள்வதால் மகிழ்ச்சி பெருகும். ஒருவரை முக மலர்ச்சியோடு உபசரிப்பதே அன்பு. பேச்சு மட்டுமின்றி கைகுலுக்குதல், கட்டிப்பிடித்தல், தட்டிக்கொடுத்தல் மூலமும் அன்பை பகிர்ந்துகொள்வது உண்டு.
பேச்சு, செயல், பார்வை ஆகிய மூன்றினாலும் அன்பை வெளிப்படுத்தலாம். இதில் செயல் என்பது நேசத்துக்குரியவர்களுக்கு சில பொருட்களை வாங்கி கொடுத்து அன்பை வெளிப்படுத்துவது. உண்மையான அன்போடு நாம் மற்றொருவருக்கு ஒரு பொருளை வாங்கிக் கொடுத்தால் அதுதான் அன்பளிப்பு ஆகும்.
மெய்யான அன்பைக் காட்டுவதற்கு நாளும் தேவையில்லை, சமயமும் தேவையில்லை. எப்போது வேண்டுமானாலும் தெரியப்படுத்தலாம். ஒரு காதலன் தன் காதலிக்கு சிறு சிறு பரிசுகளை வழங்குவதற்கு நேரம் காலம் பார்ப்பதில்லை. அதேபோல கணவன் தன் மனைவிக்கு சில அன்புப் பரிசுகளை வாங்கிக் கொடுப்பதற்கும் கால நேரம் பார்க்க வேண்டியதில்லை.
ஆனால் காதலன்-காதலி, கணவன்-மனைவி இவர்களைத் தவிர உறவினர் மற்றும் நண்பர்களை பொறுத்தவரை அன்பளிப்பு கொடுப்பது அரிதான ஒன்றாக உள்ளது. பிறந்த நாள், திருமண நாள், பண்டிகை நாள், விழா நாள் போன்ற விசேஷமான காரணம் ஏதாவது இருந்தால் தான் அன்பளிப்புகளை வாங்கிக் கொடுப்பார்கள்.
இப்படி அன்பளிப்புகளை வழங்குவதற்கு ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் எத்தனையோ வாய்ப்புகளும், நாட்களும் வரத்தான் செய்கின்றன. அவ்வாறு வரும் ஒவ்வொரு விசேஷ நாட்களுக்கும் என்னென்ன பொருட்களை அன்பளிப்பாகக் கொடுக்கலாம் என்று இனி பார்க்கலாம்.
நாம் ஒருவர் மீது கொண்டுள்ள அன்பையும், மரியாதையையும் காட்டுவதற்கு அடையாளமாக கொடுப்பதே அன்பளிப்பாகும். அப்படிப்பட்ட அன்பளிப்பு பொருட்கள் எவை? என்ற கேள்விக்கு விடை அளிப்பது கடினமான விஷயம்தான். ஏனென்றால் இன்னென்ன பொருட்களைத்தான் அன்பளிப்பாக கொடுக்க வேண்டும் என்று யாராலும் வரையறுத்துக் கூறிவிட முடியாது. எனவே, நாம் பொதுவாக அன்பளிப்புக்குரிய சில பொருட்களை பட்டியலிட்டுக் கூறலாமே தவிர, இவை மட்டும் தான் அன்பளிப்புக்கு உரிய பொருட்கள் என்று கூற முடியாது.
ஒருவருக்கு அன்பளிப்பு செய்வதன் நோக்கம் என்ன? அவரை மகிழ்விப்பதற்காகத்தான். எனவே ஆணோ, பெண்ணோ, யாராக இருந்தாலும் ஒருவருக்கு அன்பளிப்பு செய்வதற்கு முன்னால் அவர்களுக்கு என்ன மாதிரி பொருளில் விருப்பம் அதிகம் என்று தெரிந்து கொண்டு, அவருக்குப் பிடித்தமான பொருளை வாங்கி அன்பளிப்புச் செய்தால் அது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
அன்பளிப்பு பொருட்களில் பரவலாக இடம் பெறத்தக்கவை வருமாறு:
 
பேனா செட்:
 
பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் முதல், அலுவலகப் பணியாளர், தொழிலாளி, முதலாளி, தொழிலதிபர், வியாபாரி வரை எல்லாருக்குமே இன்றியமையாத ஒன்று பேனா ஆகும். யாருக்கு அன்பளிப்பு செய்கிறோம் என்பதை எண்ணிப்பார்த்து, அவருக்கு எப்படிப்பட்ட பேனாவை பரிசளித்தால் அது பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் கருத்தில்கொள்வது நல்லது.
கைக்கடிகாரம்:
 
படித்தவர் முதல் பாமரர் வரை, ஏழை முதல் பணக்காரர் வரை எல்லா வயதினரும் விரும்பி ஏற்கும் ஒரு பொருள் கடிகாரம் ஆகும். கைக்கடிகாரத்தில் ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் தனித்தனி டிசைன்களில் கடிகாரங்கள் உள்ளன. உள்நாட்டுக் கடிகாரங்களோடு ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கக் கடிகாரங்கள், வைரக்கல் பதித்த கடிகாரங்கள் என்று வகைவகையான கடிகாரங்கள் உள்ளன. பேனாக்களைப் போலவே கடிகாரங்களைப் பரிசளிக்கும் போதும், யாருக்கு எது பயன்படும் என்பதையும், யாருக்கு எது விருப்பம் என்பதையும் கவனித்து, கருத்தில் கொண்டு பரிசளிக்க வேண்டும்.
சுவர்க் கடிகாரம்:
 
இந்தப் பட்டியலில் டைம்பீஸ் என்னும் கடிகாரமும், சுவர்க் கடிகாரமும் அடங்கும். புதுமனை புகுவிழா போன்ற சமயங்களில் பரிசளிக்க ஏற்றவை சுவர்க் கடிகாரங்கள். தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள், குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்குச் செல்ல வேண்டிய தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு அலாரம் வைக்கும் அமைப்பைக் கொண்ட டைம்பீஸ்கள் பயனுள்ளதாக அமையும். அவர்களுக்கு டைம்பீஸ்களை பரிசளித்தால் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஏற்கனவே இந்தப் பொருட்கள் இருப்பவர்களுக்கு இவற்றை வாங்கிப் பரிசளிப்பது தேவையற்றது. எனவே கடிகாரங்களைப் பரிசளிப்பதற்கு முன்னர் இந்த விஷயத்தை கவனத்தில்கொள்ள வேண்டும்.
கூலிங் கிளாஸ்:
 
அன்பளிப்புக்கு ஏற்ற பொருட்களில் மூக்குக் கண்ணாடியும் ஒன்று. கண் குளுமைக்காகவும், தூசு, துரும்புகள் கண்ணில் படாமல் பாதுகாக்கவும், சூரிய வெப்பம் கண்களைத் தாக்காமல் காக்கவும் இவற்றை பெரும்பாலானவர்கள் அணிந்துகொள்கிறார்கள். கண்ணாடிகளை அன்பளிப்பாக அளிக்க விரும்புகிறவர்கள், அவற்றை யாருக்கு அளிக்கிறார்களோ அவர்களுடைய முக அமைப்புக்கும், அளவுக்கும், ஏற்றதாகவும், கவர்ச்சிகரமானதாகவும் பார்த்து வாங்கிப் பரிசளிப்பது பயனுள்ளதாக இருக்கும்.
புத்தகங்கள்:
 
திருமணங்களின் போதும், சாதனை நிகழ்த்தும் மாணவ மாணவியரைப் பாராட்டும் போதும் பரிசளிப்பதற்கு பெரிதும் உகந்த பொருள் நல்ல தரமான நூல்களாகும். மாணவர்களுக்கு வாழ்க்கை முன்னேற்றத்தை விளக்கும் நூல்களும், விஞ்ஞானம், வரலாறு, விளையாட்டு மற்றும் சாதனை நூல்களும் பரிசளிக்கலாம். முதியவர்களுக்கு இதிகாசம், புராணம், இலக்கியம், வரலாற்று நூல்களையும், பெண்களுக்கு அழகுக் குறிப்புகள், சமையற்கலை, குழந்தை வளர்ப்பு போன்ற நூல்களையும் பரிசளிக்கலாம்.
ஆடை, அணிகள், சால்வைகள்:
 
அரசியல் தலைவர்களுக்கும், பேச்சாளர்களுக்கும் சால்வைகளும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆடைகளையும் வாங்கி வந்து அன்பளிப்பு செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. இந்த பழக்கத்தை தொடரலாம். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் குழந்தைகளுக்கும், சிறுவர், சிறுமிகளுக்கும் ஆடைகளை வாங்கிக் கொடுத்தால் அவர்கள் மட்டுமின்றி பெற்றோரும் அகமகிழ்வார்கள்.
பொம்மைகள்:
 
பொம்மைகளைப் போலக் குழந்தைகளை மகிழ்விக்கும் அன்பளிப்புகள் வேறு எதுவும் இல்லை என்றே கூறலாம். சிறுவர், சிறுமியர் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட பிறந்த நாள் விழாக்களில் பொம்மைகளைப் பரிசளிப்பது மிகவும் புத்திசாலித்தனம் ஆகும்.
வீட்டு உபயோகப் பொருட்கள்:
 
டி.வி, பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் போன்றவைகளை திருமணம், புதுமனை புகுவிழா போன்றவைகளுக்கு அன்பளிப்புச் செய்யலாம்.
காமிராக்கள், கால்குலேட்டர்கள்:
 
சாதனைகள் புரியும் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பெற்றோரும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் காமிராக்களையும், கால்குலேட்டர்களையும் அன்பளிப்பு செய்யலாம்.
வாழ்த்து அட்டைகள்:
 
பண்டிகைகள், விழாக்கள் போன்றவைகளுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பலாம். வாழ்த்து அட்டைகளை நண்பர்கள், உறவினர்கள், காதலர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தலாம்.
கலைப் பொருட்கள்:
 
காட்சிக்கு வைக்க வேண்டிய கலை நுணுக்கம் மிக்க பொருட்களை வசதியானவர்களுக்கு வழங்குவதே பொருத்தமானதாகும்.
செலவில்லாத அன்பளிப்பு:
 
அன்பளிப்புகள் எல்லாமே காசு கொடுத்து வாங்குவது தான் என்று அர்த்தமில்லை. யாருக்கு எது பிடிக்குமோ, யாருக்கு எது தேவையோ, அதை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதுதான் வெற்றிகரமான அன்பளிப்பு கொள்கை ஆகும். புன்னகையை கொடுங்கள், புன்னகையோடு வாழுங்கள். இந்தக் கொள்கையை மறக்காமல் கடைப்பிடித்தால் நமக்குத் தெரிந்தவர்களிடமும், உறவினர் மற்றும் நண்பர்களிடமும் நல்லவர் என்ற பெயர் எடுப்பது மிக சுலபம். இந்த சுலபமான வழி இருக்கும்போது, அன்பளிப்பு கொடுக்க யோசிக்க வேண்டுமா என்ன?

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts