லேபிள்கள்

சனி, 29 செப்டம்பர், 2012

அனுபவங்கள் பேசுகின்றன ! உபயோகமான தகவல்கள்


பவர் கட்... டி.வி. அவுட்!
டி.வி-யை ரிமோட்டில் மட்டும் ஆஃப் செய்துவிட்டு, மெயின் ஸ்விட்சை ஆஃப் செய்யாமல் விடுவது இங்கு பலருக்கும் உள்ள கெட்ட பழக்கம். சமீபத்தில் நானும் அப்படித்தான் ரிமோட்டில் ஆஃப் செய்துவிட்டு, கிச்சன் வேலைக்குச் சென்றுவிட்டேன். மறுபடியும் டி.வி-யை ஆன் செய்தபோது, அது பழுதாகியிருந்தது. காரணம் புரியாமல் எலெக்ட்ரீஷியனை அழைக்க, அவர் சொல்லித்தான் புரிந்தது நான் செய்த தவறு. ''பவர் கட்டான பிறகு, மீண்டும் பவர் சப்ளை வரும்போது, சில நேரங்களில் சப்ளை அதிகமாக வரும். அப்போது டி.வி. மெயின் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்படாமல் இருந்தால்... பழுதாக வாய்ப்புள்ளது. டி.வி. மட்டுமல்ல... கிரைண்டர், மிக்ஸி என்று எல்லா மின் சாதன பொருட்களுக்கும் இது பொருந்தும்'' என்றார்.
இப்போதெல்லாம், தேவையில்லாதபோது அனைத்து எலெக்ட்ரானிக் பொருட்களின் மெயின் ஸ்விட்ச்களையும் ஆஃப் செய்யப் பழகிக் கொண்டுவிட்டேன். குறிப்பாக, பவர் ஆஃப் ஆகும் சமயங்களில் கூடுதல் கவனத்தையும் சேர்த்துக் கொண்டுவிட்டேன்! இனி நீங்களும்தானே..?!
அடுப்பை ஊதி அணைக்காதீர்கள்!
என் தோழி சமையல் செய்து கொண்டிருந்தபோது, அவசரமாக மளிகைப் பொருள் ஒன்று தேவைப்பட்டிருக்கிறது. கேஸ் ஸ்டவ்வை 'சிம்’-ல் வைத்துவிட்டு, பக்கத்திலிருக்கும் கடைக்கு சென்றிருக்கிறாள். அதற்குள்ளாக அடுப்பில் தீய்வது போன்ற வாசனை வர, கிச்சனுக்குச் சென்று பார்த்த அவளுடைய பாட்டி, விளக்கை ஊதி அணைப்பதைப் போல கேஸ் ஸ்டவ்வை ஊதி அணைத்திருக்கிறார். சில நிமிடங்களில் வீடு திரும்பிய தோழி, 'குப்'பென கேஸ் வாடை வரவே... அலறியடித்து கிச்சனுக்குச் சென்று பார்த்திருக்கிறாள். அடுப்பு அணைந்திருக்க... அதிர்ச்சியாகி அதை அவசரமாக ஆஃப் செய்திருக்கிறாள். அப்போது எட்டிப் பார்த்த பாட்டி, 'நீ பாட்டுக்கு அடுப்பை அமத்தாமப் போயிட்ட... நான்தான்அணைச்சேன்என்றிருக்கிறார், விபரீதம் புரியாமல்.
வீட்டிலிருக்கும் வயதானவர்களுக்கும் கேஸ் ஸ்டவ் போன்ற நவீன சாதனங்களை எப்படி இயக்குவது எனக் கற்றுக் கொடுப்பது, இதுபோன்ற விபரீதங்களைத் தவிர்க்க உதவுமே..?! 
மொத்த சாப்பாடும் டேபிளுக்கு வரக்கூடாது!
கோயிலுக்குச் சென்று திரும்பும் வழியில், தோழிக்கு ஒரு 'ஹாய்சொல்லலாம் என அவள் வீட்டுக்குச் சென்றோம் நானும் என் கணவரும். எங்களைக் கண்டதும் சர்ப்ரைஸ் ஆனவள், ''உப்புமா செஞ்சுருக்கேன்... சாப்பிட்டுத்தான் போகணும்'' என்று வற்புறுத்தி, டைனிங் டேபிளில் தட்டுகளைப் பரத்தியவாறே தன் மகளிடம் உப்புமாவை எடுத்து வரச் சொன்னாள். எட்டாவது படிக்கும் அவள் பெண், உப்புமாவை சமைத்த பாத்திரத்துடன் அப்படியே எடுத்து வந்தாள். ''எப்பவுமே சமைச்ச உணவை, அதே பாத்திரத்தோட வெச்சு பரிமாறக்கூடாதும்மா. இன்னொரு பாத்திரத்தில் மாற்றி எடுத்து வந்துதான் பரிமாறணும். அதுதான் டேபிள் மேனர்ஸ். இன்னொரு பக்கம், சமைத்த பாத்திரத்தோட எடுத்துட்டு வந்தா... சாப்பிடறவங்க, 'மொத்த சாப்பாட்டையும் எடுத்துட்டு வந்துட்டாங்களே... நாம நிறையச் சாப்பிட்டுருவோமோ, வீட்டுக்காரங்களுக்கு மீதம் இருக்காதோ?’னு சங்கடத்தோடயே சாப்பிடுவாங்க...'' என்று ஆதரவாகக் கற்றுக்கொடுக்க, அவள் பெண்ணும் அதையெல்லாம் சரியெனக் கேட்டுக் கொண்டாள்.
பிள்ளைகளுக்கு எல்லாப் பழக்க வழக்கங்களையும் இப்படி விளக்கத்துடன் கற்றுக் கொடுப்பது... நல்ல விஷயம்தானே!
பெற்றோரே... யோசியுங்கள்!
அரசுப் பள்ளி ஒன்றின் ஆசிரியையாக இருக்கிறேன். பொதுவான மாணவர்களுக்கான அந்தப் பள்ளியில்... மாற்றுத்திறனாளிகள், மனநிலை பிறழ்ந்தவர்கள் (குறிப்பிட்ட சதவிகிதம்) என்கிற நிலையில் உள்ள சில குழந்தைகளும் உள்ளனர். தங்கள் பிள்ளைகளின் இயல்பு தெரிந்தும், அவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளில் சேர்க்காமல், இப்படி இயல்புப் பள்ளிகளிலேயே சேர்த்துள்ளனர் சம்பந்தப்பட்ட பெற்றோர். ''இதனால் உங்கள் குழந்தைகளுக்கு எந்தப் பயனும் விளையப் போவதில்லை. சிறப்புப் பள்ளிகளில்தான் அவர்களின் குறைபாட்டுக்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்படும்'' என்றாலும், கௌரவக் குறைச்சலாக நினைத்து, அதை ஏற்க மறுக்கின்றனர். இதே காரணத்துக்காக, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு அரசு அறிவித்திருக்கும் உதவித் தொகையைப் பெறவும் பலரும் முன்வருவதில்லை.
தங்கள் காலத்துக்கு பிறகும் தங்கள் குழந்தைகளைத் தாங்கக்கூடிய சரியான கல்வியையும், அரசு உதவியையும் பெற்றோரே அவர்களுக்குக் கிடைக்காமல் செய்வது எவ்விதத்தில் நியாயம்?!

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts