லேபிள்கள்

சனி, 1 செப்டம்பர், 2012

யூத மதகுருவின் கேள்விக்கு இஸ்லாமிய அறிஞரின் சாதுரியமான பதில்கள்


அபூ யஸீத் பிஸ்தாமி ரஹ்மாதுல்லாஹி அலைஹி அவர்கள் மாபெரும் ஆன்மீக மகான். ஒரு நாள் அவர்களுக்கும் ஒரு யூத மதகுருவுக்கும் ஒரு யூத கோயிலில் ஏராளமான யூதர்கள் முன்னிலையில் ஒரு உரையாடல் நிகழ்ந்தது. அப்போது அந்த யூத மதகுரு இவர்களை நோக்கி, "ஏ முஸ்லிமே!! நான் உம்மிடம் சில கேள்விகள் கேட்கிறேன். அதற்கு நீர் சரியான பதிலை கூறினால் நாங்கள் உமக்கு வழிப்படுவோம். இல்லையெனில் உம்மை எம் வாளுக்கு இரையாக்குவோம்" என்று கூறினார். அதற்கு அபூ யஸீத் பிஸ்தாமி ரஹ்மாதுல்லாஹி அலைஹி அவர்கள் " நல்லது. அவ்விதமே செய்யுங்கள். தங்களின் கேள்வி அறிவுக்கு ஏற்றதாயினும் சரியே, ஏற்றதாயில்லாமல் இருப்பினும் சரியே பதில் கூறுகிறேன் " என்று அடக்கத்துடன் கூறினார்கள். 

இதன் பின் அவர்களிடையே பின்வரும் உரையாடல் நிகழ்ந்தது.
 

மதகுரு: ஒன்று உண்டு. இரண்டில்லை அது என்ன?
அபூ யஸீத்: அல்லாஹ்

மதகுரு: இரண்டு உண்டு. மூன்றில்லை அது என்ன?
 
அபூ யஸீத்: இரவும், பகலும்.

மதகுரு: மூன்று உண்டு. நான்கு இல்லை அது என்ன?
 
அபூ யஸீத்: அர்ஷு, குர்ஷு, கலம்

மதகுரு: நான்கு உண்டு ஐந்து இல்லை அது என்ன?
அபூ யஸீத்: தவ்ராத், சபூர், இஞ்சீல், புர்கான்

மதகுரு: ஐந்து உண்டு ஆறு இல்லை அது என்ன?
 
அபூ யஸீத்: ஐந்து கடமைகள் அல்லது ஐந்து வேளை தொழுகை.

மதகுரு: ஆறு உள்ளது ஏழு இல்லை அது என்ன?
அபூ யஸீத்: திட்டமாக நாம் வானங்களையும், பூமியையும் நடுவில் உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம் என்ற திரு குர்ஆன் வசனத்தை ஓதினர்.

மதகுரு: ஏழு உள்ளது எட்டு இல்லை அது என்ன?
அபூ யஸீத்: ஏழு வானங்களையும் நாம் அடுக்கடுக்காக படைத்தோம் என்ற திரு குர்ஆன் வசனத்தை ஓதினர்.

மதகுரு: எட்டு உள்ளது ஒன்பது இல்லை அது என்ன?
அபூ யஸீத்: அர்ஷை எட்டு வானவர்கள் சுமந்து கொண்டுள்ளனர் என்ற திரு குர்ஆன் வசனத்தை ஓதினர்.

மதகுரு: ஒன்பது உள்ளது பத்து இல்லை அது என்ன?
அபூ யஸீத்: ஒன்பது மனித கூட்டத்தினர் உலகில் குழப்பம் விளைவித்தனர் என்ற திரு குர்ஆன் வசனத்தை ஓதினர்.

மதகுரு: பூர்த்தியான பத்து உள்ளது பதின்னொன்று இல்லை அது என்ன?
அபூ யஸீத்: ஹஜ்ஜு செய்து விட்டு குர்பான் கொடுக்க இயலாதவர்கள் அங்கு மூன்று நோன்புகளும், ஊர் திரும்பியதும் ஏழு நோன்புகள் பிடித்து பத்து நோன்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற திரு குர்ஆன் வசனத்தை ஓதினர்.

மதகுரு: பதின்னொன்று என்ன?
அபூ யஸீத்: யூசுப் அலைஹிசலாம் அவர்களின் பதினொரு அண்ணன்மார்கள்.
 

மதகுரு: பன்னிரண்டு என்ன?
அபூ யஸீத்: ஆண்டின் பன்னிரண்டு மாதங்கள்.

மதகுரு: பதின்மூன்று என்ன?
அபூ யஸீத்: யூசுப் அலைஹிசலாம் அவர்கள் கண்ட கனவு. நான் பதினொரு நட்ச்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் பார்த்தேன் என்ற திரு குர்ஆன் வசனத்தை ஓதினர்.

மதகுரு: வஸ்ஸாரியாத்திஸர்வா என்றால் என்ன?
அபூ யஸீத்: அது நான்கு வகை காற்று.

மதகுரு: fபல் ஹாமிலாத்தி விக்ரா என்றால் என்ன?
அபூ யஸீத்: இடி.

மதகுரு: fபல் ஜாரியாத்தி யுஸ்ரா என்றால் என்ன?
அபூ யஸீத்: கடலில் செல்ல கூடிய படகு.

மதகுரு: fபல் முகஸ்ஸீமாத்தி அம்ரா என்றால் என்ன?
அபூ யஸீத்: ஷஅபான் பதின்னைந்தாம் இரவு இரணத்தை பங்கிடும் வானவர்கள்.
 

மதகுரு: உயிர் இல்லாது பேசும் பதின்நான்கு பொருள்கள் என்ன?
அபூ யஸீத்: ஏழு வானமும், ஏழு பூமியும் இறைவனுடன் பேசுகின்றன என்ற திரு குர்ஆன் வசனத்தை ஓதினர்

மதகுரு: ஒரு புதைகுழி. தன்னில் அடக்கப்பட்ட ஒருவரை தூக்கி கொண்டு அலைந்தது அது என்ன?
அபூ யஸீத்: யூனுஸ் அலைஹிசலாம் அவர்களின் மீன்.

மதகுரு: உயிரில்லாது மூச்சி விடுவது யாது?
அபூ யஸீத்: வைகறை நேரம். வைகறை நேரம் மூச்சு விடுகிறது என்ற திரு குர்ஆன் வசனத்தை ஓதினர்.

மதகுரு: விண்ணில் இருந்தோ மண்ணில் இருந்தோ வராத தண்ணீர் என்ன?
அபூ யஸீத்: சுலைமான் நபி அவர்கள் பல்கீசுக்கு அனுப்பிய குதிரையின் வியர்வை நீர்.

மதகுரு: இறைவன் ஒன்றை படைத்து ஒன்றை வெறுத்தான் அது என்ன?
அபூ யஸீத்: கழுதையின் குரல்.
 

மதகுரு: ஹஜ் கடமையாக இல்லாத போதிலும் அது ஹஜ்ஜும், தவாபும் செய்தது அது என்ன?
அபூ யஸீத்: நூஹ் நபியின் கப்பல்.

மதகுரு: நான்கு பொருள்கள் உள்ளது அவற்றுக்கு மூலம் ஒன்றாயினும் அதின் ருசியும், நிறமும் வெவ்வேறானவை. அது என்ன?
அபூ யஸீத்: கண்களும் காதுகளும் மூக்கும் வாயும் ஆகும். கண்ணீர் கைப்பு, மூக்கு நீர் புளிப்பு, காதின் நீர் கசப்பு, வாய் நீர் இனிப்பு இவை அனைத்திற்கும் மூலம் மூளை.

மதகுரு: ஜின் மனிதர் வானவர் ஆகியோரல்லாத ஒன்றின் மீது இறைவன் வஹி இறக்கி வைத்தான். அந்த ஒன்று யாது?
அபூ யஸீத்: தேனீ .
 


மதகுரு: தகப்பனின் முதுகுதண்டில் இருந்தோ தாயின் வயிற்றிலிருந்தோ வராத நான்கு உயிர் பிராணிகள் யார்?
அபூ யஸீத்: இஸ்மாயில் அலைஹி ஸலாம் அவர்களுக்காக வந்த ஆடு, ஸாலிஹ் அலைஹி ஸலாம் அவர்களின் ஒட்டகம், ஆதம் அலைஹி ஸலாம், ஹவ்வா அலைஹி ஸலாம்.
 

மதகுரு: பொய் சொல்லி சுவனம் புகுந்த கூட்டம் எது?
அபூ யஸீத்: யூஸுப் அலைஹி ஸலாம் அவர்களின் பதின்னொரு அண்ணன்மார்கள். "பொய்யான இரத்தத்தை சட்டையில் தடவிக் கொண்டு வந்தார்களே அவர்கள்" என்ற திரு குர்ஆன் வசனத்தை அவர்கள் ஓதினர்.

மதகுரு: உண்மை கூறி நரகம் புகுந்தவர்கள் யார்?
அபூ யஸீத்: யூதரும், நசாறாக்களும், "அவர்கள் உண்மையானவர்கள் என்றும் அவர்களை தாம் நரகத்திற்கு அனுப்பியதாகவும் இறைவன் கூறும் திருவசனத்தை ஓதி காட்டினார்கள்.

மதகுரு: இறைவன் ஒன்றை படைத்து அதை வெறுத்தான் அது என்ன?
அபூ யஸீத்: கழுதையின் குரல். "திட்டமாக நாம் கழுதையின் குரலை வெறுக்கிறோம்" என்ற திரு குர்ஆன் வசனத்தை அவர்கள் ஓதினர்.

மதகுரு: இறைவன் ஒன்றை படைத்து அதை மேன்மைபடுத்தினான் அது என்ன?
அபூ யஸீத்: அது பெண்களின் சூழ்ச்சியாகும்."அவளின் சூழ்ச்சி மேலானதாக இருந்தது" என்ற திரு குர்ஆன் வசனத்தை அவர்கள் ஓதினர்.

மதகுரு: பெண்களில் மேலானவர் யார்?
அபூ யஸீத்: ஹவ்வா அலைஹி ஸலாம், கதீஜா ரலியல்லாஹு அன்ஹா, ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, ஆசியா, மர்யம் அலைஹி ஸலாம் ஆகியோர்.

மதகுரு: ஆறுகளில் சிறந்தவை எவை?
அபூ யஸீத்: ஸய்ஹூன், ஜைஹூன், புராத், நீலநதி.

மதகுரு: மலைகளில் சிறந்தது எது?
அபூ யஸீத்: தூர் ஸீனா

மதகுரு: மிருகங்களில் சிறந்தது எது?
அபூ யஸீத்: குதிரை.

மதகுரு: மாதங்களில் சிறந்தது எது?
அபூ யஸீத்: ரமலான்.

மதகுரு: அல்தாமியா என்றால் என்ன?
அபூ யஸீத்: உலக முடிவு நாள்.

மதகுரு: ஒரு மரம் உள்ளது. அதற்கு பன்னிரண்டு கிளைகள் உள்ளன. ஒவ்வொரு கிளையிலும் முப்பது இலைகளும், ஒவ்வொரு இலையிலும் ஐந்து பூக்களும் உள்ளன. அவற்றில் இரண்டு வெயிலிலும் மூன்று நிழலிலும் உள்ளன. அது என்ன?
அபூ யஸீத்: மரம் ஓராண்டாகும். பன்னிரண்டு கிளைகள் பன்னிரண்டு மாதங்களாகும். முப்பது இலைகள் முப்பது நாட்களாகும். ஐந்து பூக்கள் ஐவேளை தொழுகையாகும். அவற்றில் இரண்டு பகலிலும் மூன்று இரவிலும் நிகழ்த்தப் பெறுகின்றன.

மதகுரு: ஸபத், லபத் என்றால் என்ன?
அபூ யஸீத்: செம்மறி, வெள்ளாடு ஆகியவற்றின் மயிர்.

மதகுரு: தம், ரம் என்றால் என்ன?
அபூ யஸீத்: ஆதம் அலைஹி ஸலாம் அவர்களைப் படைப்படதற்கு முன்பிருந்த இனத்தவர்களின் பெயர்களாகும்.

மதகுரு: கழுதை கத்தினால் அதன் பொருள் என்ன?
அபூ யஸீத்: கழுதை ஷைத்தானை பார்த்து சபிக்கிறது.

மதகுரு: நாய் குரைப்பதன் பொருள் என்ன?
அபூ யஸீத்: நரகவாசிகளுக்கு வைல் என்ற ஓடை உள்ளது என்று அது குரைக்கின்றது.

மதகுரு: குதிரை கனைப்பதன் பொருள் என்ன?
அபூ யஸீத்: "அல்லாஹ் பொய் பரவும் பொழுது என்னை காப்பானாக" என்று அது கூறுகின்றது.

மதகுரு: ஒட்டகம் கத்துவதன் பொருள் என்ன?
அபூ யஸீத்: "இறைவன் எனக்கு போதுமானவன்" என்று கத்துகின்றது.

மதகுரு: புல் புல் கத்துவதன் பொருள் என்ன?
அபூ யஸீத்: இறைவன் தூய்மையானவன் என்று கூறுகின்றது.

இப்படியாக அந்த மதகுரு கேட்ட கேள்விகளுக்கு அவர் வாய் மூடும் முன் பதில் குடுத்து கொண்டு இருந்த மகான் அபூ யஸீத் பிஸ்தாமி ரஹ்மாதுல்லாஹி அலைஹி அவர்கள் அந்த மதகுருவை பார்த்து கேட்டார்கள், "சுவர்க்கத்தின் திறவு கோல் என்ன?" என்று. உடனே அந்த மதகுருவும், அங்கிருந்த யூதர்கள் அனைவரும் எழுந்து , சுவனத்தின் திறவு கோல் "லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி" என்ற கலிமாவை கூறி அனைவரும் புனித இஸ்லாத்தை தழுவினார்கள். அல்லாஹு அக்பர்!!

www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts