எகிறி வரும் எரிபொருள்களின்
விலை உயர்வால், குதிரை வாங்கியும், சாட்டை வாங்காத குறையாக பலர் காரை வாங்கி வீட்டில் அழகு பொருளாக
நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் ஆடம்பர பொருளாக கருதப்பட்ட கார்கள்
இன்றைக்கு அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது.
எரிபொருள் விலை உயர்வு அதிகரித்தாலும், அலுவலகம், வர்த்தக தேவைகள், சுற்றுலாக்களுக்கு காரை பயன்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று. எனவே, காரில் செல்லும்போது சில எளிய நடைமுறைகளை கடைபிடித்தால், எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.
எரிபொருள் சிக்கனத்திற்கான சில டிரைவிங் டிப்ஸ்
1. தேவையில்லாமல் கிளட்சை அடிக்கடி மிதிப்பதை தவிர்க்க வேண்டும். கியரை மாற்றும்போது மட்டும் கிளட்சை மிதிக்க வேண்டும். கிளட்சை அடிக்கடி பயன்படுத்துவதால் கூடுதல் எரிபொருள் செலவாகும் என்பதை நினைவில் கொண்டு டிரைவிங் செய்யவும்.
2. நிறுவனங்கள் கூறியுள்ளபடி, வேகத்திற்கு தக்கவாறு சரியான கியரில் காரை இயக்க பழகிக்கொள்ள வேண்டும். சிலர் கார் ஓட்டுவதில் நான் சூரப்புலி என்பதை காட்டுவதற்காக வண்டியை ஸ்டார்ட் செய்தவுடன் உடனுக்குடன் கியரை மாற்றி வேகமெடுத்து திறமையை பறைசாற்றுவர். இது தவறான டிரைவிங் என்பது மட்டுமல்ல, எரிபொருள் செலவு கூடுதல் செலவாவதற்கு முக்கிய காரணமே இதுவாகத்தான் இருக்கும்.
3.நகரங்களில் டிரைவிங் செய்பவர்கள் சிக்னல்களில் நிறுத்தும் சூழ்நிலை ஏற்படுகையில், 20 வினாடிகளுக்கு மேல் தாமதம் ஏற்படும் என்றால் மட்டுமே எஞ்சினை ஆப் செய்யவும். 20 வினாடிகளுக்குள் எஞ்சினை ஆப் செய்து, திரும்ப ஸ்டார்ட் செய்யும்போது சிறிது கூடுதலாக எரிபொருள் செலவாகும்.
4.புதிய காராக இருந்தால்,தயாரிப்பு நிறுவனங்கள் பரிந்துரைத்த கால அளவிலும், பழைய காராக இருந்தால் மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது சர்வீஸ் செய்து விடுவது புத்திசாலித்தனம். இதேபோன்று, அடிக்கடி எஞ்சின் செக்கப் செய்வதும் 50 சதவீதம் எரிபொருள் சிக்கனத்தை உறுதி செய்யும்.
5.காரை எடுப்பதற்கு முன் டயர்களில் காற்றின் அழுத்தம் சரியான அளவில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கிளம்புங்கள். மாதத்திற்கு ஒரு முறையாவது, டயர்களில் சரியான அளவில் காற்று பிடிப்பது நல்லது. டயர்களில் காற்றின் அழுத்தம் குறைந்தால், எஞ்சினுக்கு கூடுதல் பளு ஏற்பட்டு 5 சதவீதம் எரிபொருள் கூடுதல் செலவாகும்.
6.சுற்றுலா அல்லது வெளியூர் பயணங்கள் செல்லும்போது, தேவையில்லாத பொருட்களை கேரியர் தலையில் ஏற்றாதீர். கேரியரில் ஏற்றப்படும் பொருட்களின் எடை காரணமாக எஞ்சின் கூடுதல் சிரமத்தை ஏற்பதால் அதிக எரிபொருள் செலவாகும்.
7.நெடுஞ்சாலை பயணங்களின்போது, 60 கி.மீ., வேகத்தில் சென்றால் அதிக எரிபொருள் சிக்கனம் கிடைக்கும். அதற்கு மேல் செல்லும்போது 5 முதல் 10 சதவீதத்திற்கும் கூடுதலான எரிபொருளை எஞ்சின் விழுங்கும்.
8.தேவையில்லாமல் அடிக்கடி பிரேக் பிடிப்பது, காரை நிறுத்துவது போன்றவற்றை தவிர்ப்பதாலும், எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். தவிர, அடிக்கடி பிரேக் பிடிப்பதை தவிர்ப்பதால், டயர்கள் மற்றும் பிரேக்குளின் ஆயுட்காலம் நீடிக்கும்.
9.குறைந்த வேகத்தில் செல்லும்போது ஏசியை ஆப் செய்துவிட்டு காரின் கண்ணாடி கதவுகளை திறந்துகொள்ளுங்கள். குறைந்த வேகத்தில் செல்லும்போது ஏசி இயங்கும்போது எஞ்சின் கூடுதல் எரிபொருளை எடுத்துக்கொள்ளும்.
10. காரின் வேகத்தில்தான் எரிபொருள் சிக்கனத்திற்கான சூட்சுமம் அடங்கியுள்ளது. எனவே, சராசரியான வேகத்தில் காரை இயக்க பழகிக்கொண்டாலே போதும். அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறமுடியும்.
மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை நினைவில்கொண்டு டிரைவிங் செய்தால், அடிக்கடி பெட்ரோல் பங்க் கியூவில் அடிக்கடி நிற்பதை நிச்சயம் தவிர்க்கலாம்.
தகவல் உதவி: தட்ஸ் தமிழ்
www.sahabudeen.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக