கருவில்
இருந்து குழந்தை பிறந்த உடனே கொண்டுபோய் குளிப்பாட்டிய பின்னர்தான் பெற்றோரிடம்
ஒப்படைப்பார்கள். கருப்பையில் நீர்மத்தில் ஊறிப்போயிருந்த குழந்தை வெளி
உலகத்திற்கு வந்த உடன் இயல்பான நிலைக்கு வருவதற்காகவே முதலில் அவ்வாறு
குளிப்பாட்டப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
தினசரி குழந்தையை குளிப்பாட்டலாம் குழந்தையை குளிக்க வைக்க முடியாத சூழ்நிலையில் உடலை சுத்தமான துணியை சுடுநீரில் நனைத்து துடைத்து விடலாம். எதுவாக இருந்தாலும், குழந்தையின் தொப்புள் கொடியை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
குழந்தையை நீங்கள் குளிக்க வைக்கும் போது தொப்புள் கொடிமீது சில சொட்டு தேங்காய் எண்ணெய் வைத்த பிறகு குளிப்பாட்டினால் ஈரத்தினால் சீழ் பிடிப்பது தவிர்க்கப்படும்.தொப்புள் கொடி நன்கு காய்ந்து விழ வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தலைக்கு குளிப்பாட்டுங்கள்
குளிக்க வைக்கும் ஒவ்வொரு முறையும் குழந்தையின் தலையையும் அலச வேண்டியது மிகவும் முக்கியம். அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாளாவது குழந்தையை தலைக்கு குளிக்க வைக்க வேண்டும்.
குழந்தையின் தலையை கால்களின் இடுக்கில் வைத்து முகத்தை கீழ் நோக்கிப் பிடித்தபடி தலை முடியை அலசலாம். இதனால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படாது.
குழந்தைக்குப் போடும் சோப்பு அல்லது ஷாம்புவையே தலைக்குப் பயன்படுத்தலாம். குழந்தையின் தலையில் சோப்பு அல்லது ஷாம்புவோ எதைத் தேய்த்தாலும், அதன் தன்மை அகலும் வரை நன்கு அலச வேண்டும். இல்லையெனில் அலர்ஜி ஏற்படும். குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு தலையில் எண்ணெய் தேய்ப்பதை தவிர்க்கலாம். குழந்தையின் தலையில் எண்ணெய் தேய்ப்பதால் க்ராடில் கேப் உண்டாவதால் எண்ணெய்த் தேய்க்கக் கூடாது.
வாயால் ஊதவேண்டாம்
குளிப்பாட்டிய உடன் குழந்தையின் வாய், காது, மூக்கில் தங்களுடைய வாயை வைத்து ஊதுவார்கள். இதுதவறான பழக்கம். தொற்றுக்கிருமிகள் குழந்தையினுள் எளிதாக புகுந்து ஆபத்தை ஏற்படுத்திவிடும். எனவே இதுபோன்ற ஊதும் பழக்கத்தை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
பட்ஸ் வேண்டாம் ஆபத்து
குழந்தைகளின் மூக்கு தும்மல் மூலமாகவே சுத்தப்படுத்தப்படும். சுவாசப் பாதை சரியாகிவிடும். எனவே குழந்தையின் மூக்கை சுத்தப்படுத்த வேண்டிய அவசியமிருக்காது. மூக்கிலிருந்து சிறிதளவு உலர்ந்த சளி வெளியேற்றப்படாமல் இருந்தால், சுத்தமான துணியை சூடாக்கி ஆறிய தண்ணீரில் நனைத்து மூக்கைத் துடைத்து எடுக்கலாம்.
குழந்தைகளின் மூக்கையும், காதையும் பட்ஸ்களால் எப்போதும் துடைக்கவே கூடாது. காதுகளிலும், மூக்கிலுமுள்ள மென்தசைகள் காயப்படும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். குழந்தையின் வெளிப்பக்க காது மட்டுமே சுத்தப்படுத்தப்பட வேண்டுமேத் தவிர, காதுக்குள் எதையும் நுழைத்து சுத்தப்படுத்தக் கூடாது.
குழந்தைகளின் கண்களை அவ்வப்போது சுத்தப்படுத்த வேண்டும். கண்களில் அழற்சியோ அல்லது நோய்த் தொற்றோ ஏற்படாத நிலையில் சுத்தமான தண்ணீரில் சுத்தப்படுத்துவதைவிட வேறு எந்தக் கூடுதல் பராமரிப்பும் வேண்டாம்.
அதற்கு சுத்தமான பருத்தித் துணியை வைத்து குழந்தையின் ஒவ்வொரு கண்ணையும், உட்புற ஓரத்திலிருந்து வெளிப்புறம் வரை எச்சரிக்கையாக துடைத்தெடுக்க வேண்டும்.
கண் மை போடாதீங்க
குழந்தைக்கு அழகு படுத்துகிறேன் பேர்வழி என்று சீவி சிங்காரித்து பவுடர் போட்டு, கண்மை தீட்டியிருப்பார்கள் இது ஆபத்தானது அலர்ஜியை ஏற்படுத்திவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். எந்த காரணத்தைக் கொண்டும் குழந்தையின் கண்களின் இமைக்கு மை தீட்டவேக் கூடாது.
கண்களில் ஏதேனும் ஒழுகல் ஏற்பட்டாலோ, கண்கள் சிவந்திருந்தாலோ நோய்த்தொற்று ஏற்பட்டிக்கக் கூடும். ஆனால் அதற்கு நீங்கள் கை மருந்து எதையும் செய்ய வேண்டாம். மிகவும் குளிரான சமயங்களில் காதை அணைத்தபடி துணையை சுற்றி வைப்பதும் அவசியம். இதனால் குளிர் காற்று காதினுள் புகுவது தடுக்கப்படும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.
www.sahabudeen.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக