வரவேற்பறையி ஒரு மூங்கில் சோஃபா செட், பெட்ரூமில்
நேர்த்தியான படுக்கை விரிப்புடன் இருக்கும் கட்டில், சமையலறையில்
வரிசையில் அமர்ந்திருக்கும் எவர்சில்வர் பாத்திரங்கள், பாத்ரூமில்
பேஸ்ட், பிரஷ்களை சுமக்கும் 'மிக்கி'
வடிவ குட்டி பிளாஸ்டிக் கூடை..!
ஆம்... இப்படி நம் வீட்டுப் பொருட்கள்தான் நம் பொருளாதார நிலைமை,
ஒழுங்கு, ரசனை, விருப்பங்களை
நம் வீட்டுக்கு வருபவர்களுக்கு தெரிவிக்கிற கண்ணாடி! அத்தகைய வீட்டு உபயோகப்
பொருட்களை தேர்ந்தெடுக்க... பராமரிக்க... டிப்ஸ்களை அடுக்கியுள்ளோம் இங்கே! உங்கள்
வீட்டுப் பொருட்களின் அழகும் ஆயுளும் அதிகரிக்கட்டும்!
'ஹவுஸ் கீப்பிங்'-ல் குட் வாங்க..!
வீட்டில் உள்ள பொருட்களின் இடைவிடாத பரமாரிப்புதான் நம்
சுத்தத்தையும், அழகியலையும் சொல்லாமல் சொல்லும். அதற்கு...
1. வீட்டை அலங்கரிக்கும் 'ஷோ கேஸ்' பொம்மைகள் அல்லது பொருட்களை அடிக்கடி துடைத்துச் சுத்தப்படுத்தினால்,
அவை எப்போதும் கண்கவர் அழகில் இருக்கும்.
2. ஃப்ளவர்வாஸ் பூக்களை மாதம் ஒரு முறை கொஞ்சம் சோப்புத் தூள் கலந்த
தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து நன்கு அலசினால், புதுப்பொலிவுடன் இருக்கும்.
3. திரைச்சீலைகள், குஷன் கவர், சோபா கவர், பெட் ஸ்ப்ரெட்... இவற்றை மாதம்
இருமுறையாவது மாற்றுவது வீட்டுக்கு அழகை மட்டுமல்ல, வீட்டில்
இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தையும் தரும்.
4. வீடு துடைக்கும் 'மாப்'பை பயன்படுத்திய பிறகு, நன்கு அலசி வெயிலில் காய
வைத்தால் ஈரவாடை வராது; நீண்ட நாள் உழைக்கும். 'மாப்' தேய்ந்துவிட்டால், அதை
மட்டும் மாற்றிக்கொள்ளலாம், ஸ்டிக் மாற்றத் தேவையில்லை.
5. துடைப்பத்தை படுக்க வைக்காமல், அடிப்பாகம்
தரையிலும் நுனிப்பகுதி மேல் நோக்கியும் இருக்குமாறு வைத்தால், அது வளையாமல் எப்போதும் நேராக இருந்து சரியாக சுத்தப்படுத்தும்.
பாத்ரூம்களில் பயன்படுத்தும் தென்னை துடைப்பத்தை பாத்ரூமிலேயே வைக்காமல்
அவ்வப்போது வெயிலில் வைத்தால், ஈரத்தினால் பூஞ்சான் தாக்காது;
வாடையும் வராது.
சமையலறை பொருட்கள்
பராமரிப்பு...
6. ஒவ்வொரு முறை மளிகைப் பொருட்கள் தீரும்போது, அது இருந்த டப்பாக்களில் உடனே மீண்டும் பொருட்களை நிரப்பாமல், அவற்றையெல்லாம் கழுவிச் சுத்தப்படுத்தி காய வைத்து, பின்
கொட்டி வைப்பது நலம். எண்ணெய் கன்டெய்னர்களை மாதம் இருமுறை தேய்த்தால், எண்ணெய்ப் பிசுக்கு சேராது.
7. பாத்திரம் கவிழ்த்து வைக்க எவர்சில்வர் கூடையைப்
பயன்படுத்துபவர்கள், கூடையின் அடியில் ஒரு துணியை விரித்து,
பின்பு பாத்திரத்தைக் கவிழ்த்தால், கூடை
துருப்பிடிக்காமல் நீண்ட நாள் வரும். அவ்வப்போது துணியை மாற்றினால் போதும்.
8. அரிவாள்மனை இப்போதெல்லாம் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் மெட்டீரியலில்தான்
அதிகம் வருகிறது. இதனை வாங்கும்போது, முனையில் தேங்காய்த்
துருவி இல்லாமல் வாங்குவது, நீண்ட நாள் உழைக்க உதவும்.
காரணம்... தேங்காய் துருவும்போது, அந்த ஆட்டத்தால் ஸ்டாண்ட்
உறுதி குலைந்துவிடும் என்பதுதான். தேங்காய் துருவியைத் தனியாகக் கூட வாங்கிக்
கொள்ளலாம்.
சீப்பு, கண்ணாடியைப்
பராமரிக்க...
9. அகலமான பற்கள் கொண்ட சீப்பு, நார்மலான
சீப்பு, சிக்கெடுக்க, வகிடெடுக்க
ஏதுவான 'டெயில் கோம்ப்' எனப்படும்
பின்பக்கம் குச்சிபோல் நீண்ட சீப்பு, பேன் சீப்பு, ஆண்களுக்கான வட்ட சீப்பு, குழந்தைகளுக்கான 'சாஃப்ட் பிரஷ்' சீப்பு என்று அனைத்து ரகத்திலும்
ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
10. வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தனித்தனி சீப்பைப்
பயன்படுத்தினால் தலைமுடி ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். விருந்தினர்களுக்கு என்று
ஒரு சீப்பை ஒதுக்கிவிடுவது இன்னும் நலம், நாகரிகம்.
11. சீப்புகளை வாரம் ஒருமுறை சோப் நீரில் ஊறவைத்து, அதற்கென உள்ள பிரஷ்ஷில் சுத்தம் செய்துவிட்டால், எப்போதும்
சீப்பும் தலையும் சுத்தமாக இருக்கும்.
12. வார்ட்ரோப் கண்ணாடி, பீரோ கண்ணாடி,
நிலைக் கண்ணாடி என்று எதுவாக இருந்தாலும், அதன்மேல்
டால்கம் பவுடரைத் தூவி, ஈரமில்லாத துணியால் துடைக்க, கிரிஸ்டல் கிளியராகும்.
'டாய்லெட் செட்'கள் பராமரிப்பு...
13. குளிக்கும் சோப்பை வைக்கும் டப்பா, சோப்பைவிட
கொஞ்சம் அளவில் பெரியதாக இருந்தால்தான், எடுக்கவும்
வைக்கவும் எளிதாக இருக்கும். சோப் வைக்கும் டப்பாக்களில் ஓட்டைகள் இருப்பதுடன்,
சற்று உயரமாகவும் இருந்தால்தான் நீர் வடிவது எளிதாக இருக்கும்.
14. துவைக்கும் சோப்பை அதற்கான வலைபோன்ற பையான 'மெஷ்'ஷில் போட்டுப் பயன்படுத்தலாம். இதனால் அது
கைகளில் அலர்ஜியை உண்டாக்குவது தவிர்க்கப்படுவதுடன், சோப்பும்
அதிகமாக கரையாது.
15. பல் துலுக்கும் பிரஷ்ஷை 3 மாதத்துக்கு ஒரு
முறை கண்டிப்பாக மாற்றிவிட வேண்டும். முழுக்க முழுக்க தேய்ந்த பின்புதான்
மாற்றுவேன் என அடம் பிடித்தால், விரைவில் பல்லையும் மாற்ற
வேண்டி வரலாம். அதேபோல, பிரஷ், பேஸ்ட்
வைக்கும் ஸ்டாண்ட்டையும் அவ்வப்போது வெந்நீரில் கழுவி வைக்கலாம்.
16. வீட்டில் குழந்தைகளுக்கு பிரஷ் வாங்கும்போது வெவ்வெறு
நிறங்களில் வாங்கிவிட்டால் குழந்தைகள் அடையாளம் கண்டுபிடிக்கத் திணற மாட்டார்கள். 'என் பிரஷ்ஷை அவ எடுத்துட்டா' என காலையிலேயே வீட்டில்
கச்சேரி ஆரம்பமாவதையும் தடுக்கலாம். குழந்தைகளுக்கான பிரத்யேக 'பேபி பேஸ்ட்', அதிக மின்ட், காரம்
இல்லாதது. குழந்தைகளும் இதை விரும்புவார்கள்.
17. பேஸ்ட்டை உபயோகிக்கும்போது, அடியிலிருந்து
அழுத்திக் கொண்டு வந்தால் காற்றுப் புகுந்து அதன் தரம் குறையாது.
18. பித்த வெடிப்புக்கான 'ஃபுட் ஸ்க்ராப்',
'ப்யூமிக் ஸ்டோன்', உடல் தேய்ப்பதற்கான 'பாடி மெஷ்'... இவற்றையெல்லாம் தேவையைப் பொறுத்து
பாத்ரூமில் வாங்கி வைக்கலாம்.
பாத்திரங்கள் பத்திரம்!
மண்பாண்டங்களைப் புழங்கினார்கள் நம் பாட்டன், பூட்டன்கள்.
செம்பு, பித்தளை, அலுமினியம், எவர்சில்வர், காப்பர் கோட்டட் என்று பரிணமித்து,
இப்போது பிளாக் மெட்டல் பாத்திரங்கள் வரை வந்து விட்டோம் நாம்.
அந்தப் பாத்திரங்களை வாங்குவதற்கும் பராமரிப்பதற்குமான பக்குவங்கள் இங்கே...
19. எவர்சில்வர் பாத்திரங்களை வாங்கும்போது தக்கை போல் இல்லாமல்,
நல்ல கனமான பாத்திரங்களாக பார்த்து வாங்க வேண்டும். இல்லையெனில்
சீக்கிரமே நெளிந்துவிடும். பாத்திரத்தின் மேல் போடப்பட்டிருக்கும் பாலீஷ், முழுமையாக எல்லா இடங்களிலும் சரியாக போடப்பட்டிருக்கிறதா என்பதைப்
பார்த்து வாங்கினால், வீட்டுக்கு வந்த பின், 'அடக் கடவுளே... என்ன இது? இந்தப் பக்கம் கறுப்பா,
மங்கலா இருக்கே' என்று புலம்ப
வேண்டியிருக்காது.
20. எவர்சில்வர் பாத்திரங்களை சிலசமயம் பால் காய்ச்ச, உணவை சூடுபடுத்த என்று அவசரத்துக்காக அடுப்பில் வைக்கும்போது, உள்ளே கறை படிந்து கறுப்பாகலாம். அதனை போக்க, எலுமிச்சை
சாறு கலந்த தண்ணீருடன் பாத்திரத்தை சில நிமிடங்கள் அடுப்பில் வைத்து, பின் தேய்த்தால் கறைகள் நீங்கும்.
21. செம்பு, பித்தளைப் பாத்திரங்களில் அதன்
அடிப்பகுதி கனமாக இருக்கிறதா, வார்ப்பு, ஃபினிஷிங் சரியாக உள்ளதா என்றெல்லாம் பார்த்து வாங்குவது
புத்திசாலித்தனம். இல்லையெனில், இடையில் வார்ப்பு
விட்டுப்போய், கையைப் பதம் பார்க்கலாம்.
22. பித்தளைப் பாத்திரங்கள் தண்ணீர், காற்று
அதிகம்பட்டுக் கறுத்துப் போய் விடும். அதனை போக்க எலுமிச்சை, புளி, புளிச்சக் கீரைத் தண்ணீர் போன்ற
புளிப்புத்தன்மை கொண்ட பொருட்களால் துலக்கினால் பளபளக்கும். பித்தளைப்
பாத்திரங்களை துலக்குவதற்கென சில பிரத்யேக பவுடர் வகைகளும் மார்கெட்டில்
கிடைக்கின்றன.
23. இப்போதெல்லாம் 'பிளாக் மெட்டல்
பாத்திரங்கள்' என்று கறுப்பு நிறத்தில் அழகழகான சமையல்
பாத்திரங்கள் கடைகளில் கிடைக்கின்றன. இவையும், அலுமினியம்தான்.
ஆனால், வழக்கமான பாணியில் அல்லாமல் வேறு வகையில்
அலுமினியத்தை உருக்கித் தயாரிக்கப்படும் பாத்திரங்கள். அழகான கிச்சன் லுக்
விரும்பவர்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பராமரிப்பும் எளிதுதான்.
24. நான்-ஸ்டிக் பாத்திரங்கள் அடிப்பிடிக்காது என்பதுதான் அதன்
ப்ளஸ்! இப்போது இதில் 'டிரிபிள் கோட்டட்' பாத்திரங்கள் வரை வந்துள்ளன. நீண்ட நாள் உழைப்புக்கு இவற்றை நம்பலாம்.
25. நான்-ஸ்டிக் பாத்திரங்களை... உப்பு, எண்ணெய்,
முட்டைப் பசை போன்றவற்றை தாங்குமா என்பதை உறுதிசெய்து வாங்கலாம்.
ஸ்க்ராட்ச் ப்ரூஃப் டெஸ்ட், சால்ட் டெஸ்ட், ஆயில் டெஸ்ட், எக் டெஸ்ட் போன்றவற்றின்
முடிவுகளையும் சில நிறுவனங்கள் விளக்கக் கையேட்டில் கொடுத்திருப்பார்கள். அதைப்
பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
26. நான்-ஸ்டிக் பாத்திரங்களில் தவா, கடாய்,
ஆப்பச் சட்டி, பேன், ஃப்ரைபேன்
என இவற்றில் அதிக வகைகள் உள்ளன. இவற்றின் விலை அதிகம். எனவே, இஷ்டத்துக்கு எல்லாவற்றையும் வாங்கி அடுக்காமல், தேவையானதை
மட்டும் வாங்குங்கள்.
27. நான்-ஸ்டிக் பாத்திரங்களை கரகரப்பான மெட்டல் மற்றும் பிளாஸ்டிக்
ஸ்க்ரப் கொண்டு துலக்கினால், அதன் ஒரிஜினாலிட்டி போய்விடும்.
எனவே, ஸ்பான்ச் ஸ்க்ரப்களால் துலக்குவது நலம். கூடவே
நான்-ஸ்டிக் பாத்திரங்களில் எவர்சில்வர் கரண்டிகளைவிட, மரக்
கரண்டிகளை பயன்படுத்துவதே பரிந்துரைக்கத்தக்கது என்பது, நாம்
அறிந்ததுதானே?!
28. சாதாரண பாத்திரங்களைவிட, காப்பர் பாட்டம்
பொருத்தப்பட்டவை, நம்முடைய சமையலை விரைவுபடுத்தும்.
சீக்கிரமாகவே சூடு ஏறுவதுதான் காரணம்.
அடுப்பிலும்
இருக்கட்டும் அக்கறை!
மண்ணெண்ணெய் அடுப்போ, கேஸ் ஸ்டவ்வோ... அதை
ஒழுங்காக இயங்க வைப்பதற்கான 'எரிபொருள் டிப்ஸ்'கள் இங்கு...
29. மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் அடியில் அழுக்குப் படிந்து, ஸ்டவ் ஓட்டையாகலாம். அதைத் தவிர்க்க, மண்ணெண்ணெயை
ஸ்டவ்வில் ஊற்றும் முன், அதை வடிகட்டி ஊற்றினால் நோ
பிராப்ளம்.
30. ஸ்டவ்வை பற்ற வைப்பதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் குச்சியால்
மட்டும் அதை பற்ற வைப்பது, ஸ்டவ்வின் ஆயுள் காலத்தை
அதிகரிக்கும். மாறாக, தீக்குச்சிகளைப் கொளுத்திப் போட்டு
பற்றவைத்தால், அவை உள்ளே அடைத்துக்கொள்ளும்.
31. கண்டிப்பாக செய்யக்கூடாத விஷயம், ஸ்டவ்வை
தண்ணீர் விட்டு அணைப்பது. அது திரியையும், ஸ்டவ்வின்
மேற்பகுதியையும் சீக்கிரம் கெடுத்து விடும். பதிலாக, அணைப்பதற்காகவே
கொடுக்கப்பட்டுள்ள மூடியைப் பயன்படுத்துங்கள். அதுதான் ஸ்டவ்வுக்கு பாதுகாப்பு.
32. கேஸ் ஸ்டவ்களில் இப்போது இரண்டு மேடைகள், நான்கு
பர்னர்கள் உள்ள அடுப்புகள் வரை கிடைக்கின்றன. குடும்பத்தின் தேவையைப் பொறுத்து
வாங்கிக் கொள்ளலாம்.
33. பெரும்பாலும் உள்நாட்டுத் தயாரிப்பு ஸ்டவ்களை பயன்படுத்துவது
நலம். இம்ப்போர்டட் ஸ்டவ்களில் நாம் உபயோகிப்பது போல டியூப் இணைப்பு பக்கவாட்டில்
இல்லாமல், நாம் பார்க்கவே முடியாதபடி கீழே இருக்கும்.
இதற்குப் பழக்கபடாத நாம், அதைக் கையாள்வதில் திணறும்போது
எரிவாயு கசியும் ஆபத்து அதிகம்.
34. சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு கேஸை கடத்தும் டியூப், உறுதியான ரப்பர் டியூப்பாக இருந்தால் எலிக் கடி, லீக்கேஜ்
பிரச்னைகள் இருக்காது. தரமான பலவகை டியூப்களும் தற்போது கிடைக்கின்றன.
35. வீட்டுக்கு வெளியே சிலிண்டரை வைத்து, அடுப்புக்கு
இணைப்பு கொடுத்திருப்பார்கள் சிலர். 'கசிந்தாலும்
வீட்டுக்குள் எந்தப் பிரச்னையும் இருக்காது' என்ற நம்பிக்கை
அவர்களுக்கு அதிகமாக இருக்கும். ஆனால், சிலிண்டர்
மாற்றும்போது ஒயர் இழுக்கப்படுவதால் வீட்டின் உள்ளே ஸ்டவ்வில்
பொருத்தப்பட்டிருக்கும் ஒயரின் முனை லூஸாகி, வீட்டுக்குள்ளும்
கேஸ் லீக்காகலாம். உஷார்!
36. கேஸ் ஸ்டவ்வை சுத்தப்படுத்துவதற்கு தினமும் அதை சோப் தண்ணீரால்
அலச வேண்டிய அவசியம் இல்லை. தினமும் அதை ஈரத் துணியால் அழுந்தத் துடைத்தாலே
போதுமானது. சமையலின்போது அதன் மேல் பாலோ, வடிநீரோ
பட்டுவிட்டால் உடனே துடைத்து விட, ஈரம் தங்காது. இதனால்
பர்னர், ஸ்டாண்ட் துரு பிடிக்காது.
37. ஸ்டவ் ஸ்டாண்டுகளை அவ்வப்போது தேங்காய் எண்ணெய் வைத்துத்
துடைத்தால், துரு தூர நிற்கும்.
38. 'இண்டக்ஷன் ஸ்டவ்' எனப்படும் மின்சார
ஸ்டவ் தற்போது பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதற்கு மின்சாரம் அதிக அளவு
செலவாவது இல்லை. சாதாரண எவர்சில்வர் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம் காப்பர்
பாட்டம் பாத்திரங்களைத் தவிர்ப்பது நல்லது.
அத்தியாவசியம்... இவை
அத்தியாவசியம்!
'இதெல்லாம்கூட இல்லாமலா இத்தன வருஷம் சம்சாரம் பண்ற..?'
- இப்படி ஒரு கேள்வியை எதிர்கொள்ளாமல் இருக்க, ஆடம்பரப் பொருட்கள் இல்லாவிட்டாலும் இந்த அத்தியாவசியப் பொருட்கள்
இருக்கிறதா என்று செக் பண்ணுங்கள்... உங்கள் வீட்டிலும்.
39. பிரம்மச்சாரி என்றாலும், பெருங்குடும்பம்
என்றாலும் அந்தக் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு இட்லி பாத்திரம்,
ஒரு தோசைக்கல், ஒரு சப்பாத்திக்கல் ஆகியவை
இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள். சிலர் தோசைக்கல்லிலேயே
சப்பாத்தியும் சுடுவார்கள். இதனால் அடுத்து அதில் தோசை சுடும்போது, மாவு திரண்டு திரண்டு நின்று படுத்தி எடுக்கும். எனவே, சப்பாத்திக்கு என்று ஒரு தனி கல் வாங்கித்தான் வையுங்களேன்.
40. மிக்ஸியில் பருப்பு கடைந்தாலும், கீரை
மசித்தாலும் அதன் ஒரிஜினல் சுவை கெட்டு விடும். சில நுண்சத்துக்களும்
அழிந்துவிடும். எனவே, பருப்பு மத்து ஒன்று எப்போதும்
இருக்கட்டும்.
41. என்னதான் மளிகைப் பொருட்களை கடைகளில் சுத்தப்படுத்தி, பாலித்தீன் பைகளில் அடைத்து விற்றாலும் தூசு, தும்பு
இருந்தால் புடைக்க ஒரு முறம் வேண்டாமா..? வேண்டும்!
42. 'கரன்ட் கட்' - இன்று தமிழக மக்களைப்
படுத்தும் வார்த்தை. அவசரத்துக்கு ரசத்துக்கு பூண்டு நசுக்கக்கூட மிக்ஸியை
எதிர்பார்த்திருந்தால், வேலைக்கு ஆகாது. எனவே, பெரிய அம்மிக் கல் வாங்கி வைக்க முடியாவிட்டாலும், சின்ன
உரல் கல் ரொம்ப ரொம்ப அவசியம்.
43. எமர்ஜென்ஸி லைட் சேவை இந்தக் கோடை 'கரன்ட்
கட்' காலத்தின் அவசியத் தேவை. கூடவே, எப்போதும்
அதில் போதுமான சார்ஜ் ஏற்றி வைப்பதும் முக்கியம்.
எலெக்ட்ரானிக்
பொருட்களின் அதிக ஆயுளுக்கு!
இன்று வீட்டு உபயோகப் பொருட்களில் பதிக்குப் பாதி மின்சாரத்தை
நம்பித்தான் இருக்கின்றன. அவற்றை வாங்கும்போதும், பராமரிக்கும்
போதும் சில விஷயங்களில் கவனமாக இருந்து விட்டால், காலத்துக்கும்
குடைச்சல், எரிச்சல், துன்பம் இல்லை.
அதற்காக...
44. மின்சாதனப் பொருட்களை வாங்கினால் நல்ல பிராண்டில், வாரண்டி மற்றும் எளிய சர்வீஸ் வசதிகளுடன் வாங்கவும். 'மின்சாரம் சேமிக்கப்படும்' என்ற உத்திரவாதம்
இருந்தால் மிகவும் நல்லது.
45. அனைத்து மின்சாரப் பொருட்களுக்குமான மிக முக்கிய பாதுகாப்பு,
மின் இணைப்பில் 'எர்த்' கனெக்ஷனைக்
கட்டாயம் பயன்படுத்துவதும், சரியான ஸ்டெபிலைஸரை
உபயோகப்படுத்துவதுமே.
46. வீடு முழுவதும் நெருப்பு பொறி வராத தரமான சுவிட்சுகளையே
பயன்படுத்தலாம். அவை விலை அதிகமென்பதால் குறைந்தபட்சம் கிச்சனில் மட்டுமாவது
பயன்படுத்தலாம்.
மிக்ஸி:
47. அதிகம் சத்தம் போடாத மிக்ஸிகளே நல்லது, 'சிறந்த
விமானம் என்பது குறைந்த ஒலியுடன் வேகமாக பறக்கும்' என்ற
அறிவியல் விதி, மிக்ஸிக்கும் பொருந்தும்.
48. அதிகமாக வைப்ரேட்டாகும் மிக்ஸிகள் நல்லவை அல்ல; அந்த வைப்ரேஷனே மிக்ஸியின் ஆயுளைக் குறைத்து விடும்.
49. முன்பெல்லாம் மிக்ஸியின் நடுவே மோட்டாரைப் பொருத்தி
இருப்பார்கள். இப்போது அடித்தளத்திலேயே மோட்டார் பொருத்தப்பட்ட வலுவான மிக்ஸிகளும்
வந்து விட்டன. ஆயினும், அந்த மிக்ஸியியை சரியாகப் பயன்படுத்துவதும்,
பராமரிப்பதும்தான் அதன் ஆயுளை அதிக்கப்படுத்தும்.
50. மிக்ஸியைக் கழுவினால், மோட்டாருக்குள்
தண்ணீர் புகுந்து பழுதாகும். எனவே, ஈரத் துணியால் அழுந்தத்
துடைத்தாலே போதும். அதேபோல, சரியான பிளேடுகளைப்
பயன்படுத்துவதும் முக்கியம்.
கிரைண்டர்:
51. கிரைண்டர் வாங்கும்போது, குடும்பம்
பெரியதாக இருந்து அதிக மாவு அரைக்க வேண்டும் என்றால் மட்டும், பழைய ஒற்றைக்கல் கிரண்டரை வாங்கவும். 'டேபிள் டாப்'
கிரைண்டர்களே இப்போதைய குறுகலான சமையல் கட்டுகளுக்கு நல்லது,
அதனைக் கழுவிப் பராமரிப்பதும் எளிது.
52. கிரைண்டர் வாங்கும்போது அதன் ஆயுளையும் அதிக வேலைத் திறனையும்
தீர்மானிக்கும் R.P.M.. எனப்படும் அதன் சுற்றும் திறன்
எவ்வளவு இருக்கிறது என்று பார்க்க வேண்டும். பொதுவாக 960 R.P.M-ல் ஆரம்பித்து 1,350 R.M.P.வரையுள்ள கிரைண்டர்கள்
மார்கெட்டில் உள்ளன.
53. கல்லின் இயக்கம் கியர் டைப்பா, பெல்ட்
டைப்பா என்பதும் முக்கியம். பெல்ட் டைப்பைவிட, கியர் டைப்
சிறந்தது. காரணம், பெல்ட் டைப்பில் அரிசியைப் போட்டுவிட்டு
ஆன் செய்தால், கல் நகராது. ஓடும்போதுதான் போட வேண்டும்.
கியர் டைப்... லோ வோல்டேஜிலும் நன்றாக உழைக்கும்.
54. பழைய மாடல்களில் கிரைண்டரின் கீழே வடியும் நீர், நேராக மோட்டாருக்கு சென்று மோட்டார் பழுதாவது நடக்கும். இப்போது
மோட்டாருக்கு போகாமல் கீழே வடியும்படி 'டிரைனேஜ்' எனப்படும் வடிகால் அமைப்புகளுடன் கிரைண்டர்கள் வருகின்றன. பார்த்து
வாங்கவும்.
55. மாவு அரைத்த உடனேயே கிரைண்டரை கழுவி வைப்பதும், மோட்டாரின் திறனுக்கேற்ற அளவில் மாவு அரைப்பதும், கல்லைப்பொருத்தும்போதும்
கவனமாக இருப்பதும் கிரைண்டரின் வாழ்நாளை அதிகரிக்கும்.
எலெக்ட்ரிக் ரைஸ்
குக்கர்கள்:
56. 'குக்கர் வெடிப்பு' போன்ற பிரச்னைகளை இது
தவிர்க்கும். ஆட்டோமேடிக்காக இயங்கும் இதில் அரிசியைப் போடுவது மட்டுமே உங்கள்
வேலையாக இருக்கும். வெந்தபின் அதுவே ஆஃப் ஆகிக்கொள்ளும். சில வகைகளில் டைமர்கூட
உண்டு. தேவைக்கு ஏற்ப செட் செய்து கொள்ளலாம். கியாரண்டி, சர்வீஸ்
போன்றவற்றுடன் 'தரச் சான்று' இருக்கிறதா
என்பதையும் கவனித்து வாங்கவும்.
ஃபேன்கள்:
57. இப்போது 'டேபிள் ஃபேன்'கள் குறைந்துவிட்டன. இடுப்புயர ஃபேன்களையும், சீலிங்
ஃபேன்களையும்தான் மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். சுற்றிலும் காற்று இருந்து,
அதனை ஒரே இடத்தில் குவிக்க வேண்டுமென்றால் இடுப்புயர ஃபேன்கள் பலன்
தரும். ஆனால், காற்றை வெளியே இருந்து இழுத்து தர சீலிங்
ஃபேன்களே சிறந்தவை.
58. சீலிங் ஃபேன்களை பொதுவான அளவில் வாங்காமல், அறையின் அளவுக்கு ஏற்ற ஃபேனை வாங்கினால்தான் நல்ல காற்றோட்டம் தரும்.
59. சிறிய அறையாக இருந்தாலும், பெரிய
பிளேடுகளுடன் கூடிய சீலிங் ஃபேன் இருந்தால் நிறைய காற்று வரும் என்று சிலர்
நினைப்பார்கள். இது தவறு. சிறிய அறையில் பெரிய பிளேடுகளுடன் கூடிய ஃபேன்கள்,
சுற்றுவதற்கே சிரமப்படும். எனவே, சிறிய
பிளேடுகள்தான் பொருத்தமாக இருக்கும்.
60. சீலிங் ஃபேன்களை சரியாகப் பொருத்தவும். சுற்ற ஆரம்பித்த உடனேயே 'படக் படக்' என்று சத்தம் வந்தால், சரியாக மாட்டப்படவில்லை என்று அர்த்தம். சரியாக மாட்டப்படாத ஃபேன்கள்
பழுதாகும் வாய்ப்புகள் அதிகம்.
61. ஃபேனின் விசிறிகளை அடிக்கடி நன்றாகத் துடைக்கவும். தண்ணீர்
தொட்டு துடைத்தால் பெயின்ட் பூத்துப் போய்விடும் என்பதால் எண்ணெய் தொட்டுத்
துடைக்கவும்.
CFC(Compact Fluorescent Lamp) பல்புகள்:
62. சுற்றுச்சூழலுக்கு அதிக கேடு தராத... மின்சார சிக்கனத்துக்கு
மிகவும் ஏற்ற பல்புகள் இவை. நல்ல ஒளியையும் தருகின்றன. மின்சார சிக்கனத்தின் பலனை
உணர வீட்டில் ஒரு பல்பை மட்டும் சிதிசி பல்பாக மாற்றினால் முடியாது.
எல்லாவற்றையும் மாற்றினால்தான் பலன் தெரியும். சுற்றுச்சூழலின் மீதுள்ள அக்கறையின்
வெளிப்பாடாக ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு பல்பையாவது இப்படி மாற்றலாம்.
63. CFC பல்புகளின் ஒளி, குண்டு பல்புகளைப்
போல எரிச்சலை உண்டாக்குவதில்லை. எனவே, வெயில் காலங்களில்
குண்டு பல்புகளைப் பயன்படுத்தாமல் இவற்றைப் பயன்படுத்தும்போது சூழலின் வெப்பம்
பெரிதும் குறையும்.
அயர்ன் பாக்ஸ்:
64. மின்சார சேமிப்பும், அதிக வெப்பத்தில்
ஆட்டோமேட்டிக்காக நிற்கும் அமைப்பும் உள்ள சராசரி அயர்ன் பாக்ஸ்கள் வீட்டு
உபயோகத்துக்குப் போதுமானவை.
65. அயர்ன் பாக்ஸின் ஒயர் அடிக்கடி பிரிந்து பிரச்னை கொடுப்பதற்கு
வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர்க்கும் வகையில் அயர்ன்பாக்ஸுடன் ஒயர் இணையும்
இடத்தில், பிளாஸ்டிக் குழாய் பொருத்தப்பட்டவையும்
மார்க்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றை வாங்குவதே சிறப்பு... பாதுகாப்பும்கூட!
66. அயர்ன் பண்ணும்போது தண்ணீரை பயன்படுத்தினால், போர் தண்ணீரை தவிர்ப்பது நலம். நீரில் உப்புத்தன்மை இருந்தால், அயன்பாக்ஸில் துரு ஏறி, கொஞ்சம் கொஞ்சமாக பாக்ஸை
பதம் பார்த்துவிடும்.
டி.வி:
67. சேனல் புரோகிராம்ஸ், டி.வி.டி., சி.டி., என்று எந்தப் பயன்பாட்டுக்காக டி.வி.
வாங்கப் போகிறோம் என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு டி.வி. செலக்ஷன் செய்வதே சரியாக
இருக்கும்.
68. சேனல் புரொகிராம்ஸ் பார்க்கத்தான் டி.வி. தேவை என்றால், சாதாரண கலர் டி.வி-க்களே போதும்.
69. எப்போதாவது டி.வி.டி-யில் படமும் பார்ப்போம் என்றால், சாதாரண கலர் டி.வி. மற்றும் எல்.சி.டி. டி.வி வாங்கலாம்.
70. நல்ல பிரின்ட்டில் உள்ள டி.வி.டி-களையே பார்க்க விரும்புபவர்கள்,
L.C.D., ஹெச்.டி. (HD-High Definition) ரக
டி.வி-க்களை வாங்குவது பயனுள்ளதாக இருக்கும்.
71. அட்வான்ஸான டி.வி-களை வாங்க நினைப்போருக்கு L.C.D. டி.வி-க்கள் சரியான தேர்வு. இவை ஹெச்.டி. டி.வி-க்களைவிட விலை குறைவு.
72. எல்.சி.டி. டி.வி-களில் மானிடர் திரை மீது கவனமாக இருங்கள்.
பழைய கலர் டிவி-க்களை போல இவற்றின் மானிடர்களுக்கு நீண்ட கியாரண்டி கிடையாது.
பழுதானால் சரி செய்து ஆயுளை நீட்டிப்பதும் கடினம். அப்படியே மாற்ற வேண்டியதுதான்.
73. இப்போது நேரடியாகவே USB Stick, Data Cable போன்றவற்றை உபயோகிக்கக் கூடிய டி.வி-க்களும் வந்துவிட்டன. விரும்பினால்
வாங்கிக் கொள்ளலாம். இவற்றில் டி.வி.டி. பிளேயர் இல்லாமலேயே எம்பி-3 பாடல்களைக் கேட்கலாம்.
74. டி.வி. விற்பனையில் இன்னும் பல தொழில்நுட்பங்கள் வந்துள்ளன.
எதுவாக இருந்தாலும் தேவை இல்லாமல், அதன் பயன்பாடு தெரியாமல்
வாங்கும்போது பணம்தான் வீணாகும்! எனவே, பயன்பாட்டை முடிவு
செய்துவிட்டு, டி.வி-யை தேடுவதே சிறந்தது.
வாக்குவம் கிளீனர்:
75. சோஃபா வாங்குபவர்கள் கூடவே வாக்குவம் கிளீனரையும் வாங்குவது
நலம். ஏனென்றால் சோபாவின் அழுக்குகளை முழுமையாக நீக்க, வாக்குவம்
கிளீனரால் மட்டுமே முடியும்.
76. வாக்குவம் கிளீனர்கள் விளையாடத் தூண்டும் அமைப்பு உடையவை
என்பதால், உபயோகத்துக்குப் பின்பு குழந்தைகளிடமிருந்து
மறைத்து வைப்பது நலம்.
77. வீட்டு உபயோகப் பொருட்களை சுத்தம் செய்த உடனேயே வாக்குவம்
கிளீனரையும் சுத்தம் செய்யவும். வீட்டுக்கு வெளியே இதனைப் பயன்படுத்துவதைத்
தவிர்க்கவும்.
வாஷிங்மெஷின்:
78. பொதுவாக 'எக்ஸ்டென்டட் வாரண்டி' உள்ள வாஷிங்மெஷினை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமான முடிவு.
79. உப்பு நீர் பகுதியில் உள்ளவர்கள் 'இன்பில்ட்
ஃபில்டர்' உள்ள வாஷிங்மெஷினைத் தேர்ந்தெடுக்கவும்.
80. ஏற்கெனவே வாஷிங்மெஷின் வைத்துள்ளவர்கள், உப்புநீர்
உள்ள பகுதிகளுக்கு வீடு மாறினால் ஃபில்டரைப் பொருத்தவும். அளவான துணி, சரியான வாஷிங்பவுடர்... இவையே வாஷிங்மெஷினின் ஆயுளை அதிகரிக்கும்.
ஃப்ரிட்ஜ்:
81. தேவைக்கு சரியான அளவில் ஃப்ரிட்ஜ் வாங்கவும். தரமான பிராண்டும்
சர்வீஸும் முக்கியம். மின்சேமிப்பு உத்திரவாதம் இருந்தால் இன்னும் நல்லது.
82. ஃப்ரிட்ஜில் 'இன்ஸ்டன்ட் கூலிங்' போன்ற பல நவீன வசதிகள் இப்போது வந்துள்ளன. ஆனாலும் தேவையில்லாமல் அவற்றை
உபயோகித்து மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள வேண்டாம்.
83. நீண்ட நேரம் ஃப்ரிட்ஜில் கதவைத் திறந்தே வைக்கக் கூடாது.
திறக்கும் முன்பே எதை எடுக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்து, உடனே திறந்து மூடுவது நலம். குட்டீஸ் இருக்கும் வீடுகளில் ஃப்ரிட்ஜை லாக்
செய்துவிடுவது நலம்.
84. ஃப்ரிட்ஜை கட்டாயம் சமையல் அறையில் வைக்கக் கூடாது! எரிவாயு
கசிந்தால், ஃப்ரிட்ஜிலிருந்து வெளியேறும் வாயுடன் சேர்ந்து
வேதிவினை புரிந்து நெருப்புப் பொறிகள் கிளம்பும். இது ஆபத்தை வரவழைக்கும்.
85. ஃப்ரீஸரில் ஐஸ் சேர்ந்தால் அதை வெளியேற்ற, 'டீ-ஃப்ராஸ்ட்' பட்டனை உபயோகிப்பதே சரியான வழி.
டீ-ஃப்ராஸ்ட் பட்டன் வேலை செய்யவில்லை என்றால், அதை சர்வீஸ்
செய்யவேண்டுமே தவிர, குச்சி, கரண்டியை
வைத்து ஃப்ரீஸரில் குத்தினால் அதற்குள் செல்லும் கனெக்ஷன் பைப்புகள் வெடித்து,
ஆபத்தை விளைவுக்கும் ஜாக்கிரதை.
ஃபர்னிச்சர் செலக்ஷன்
மற்றும் புரொடெக்ஷன்!
வீட்டுக்கு ஆசை ஆசையாக ஃபர்னிச்சர்களை வாங்கிப் போடும்போது, இந்த டிப்ஸ்கள் நினைவில் இருக்கட்டும்!
சோஃபாக்கள்:
86. லெதர் சோஃபாக்கள் அதிக வெப்பத்தை வெளியிடும் தன்மையுடைவை
என்பதால், ஏ.சி. ஹால்களில் இதைப் பயன்படுத்தலாம்.
87. லெதர் சோஃபாக்களில் படுத்துத் தூங்குவது நல்லதல்ல. சூடு நம்
உடம்புக்கு ஏறி, வியர்த்து சோஃபா நனைவது மட்டுமல்லாமல்,
உபயமாக இடுப்பு வலியும் கிடைக்கும்.
88. அழகுக்காக ஆசைப்பட்டு, தரையோடு ஒட்டியுள்ள
சோஃபாக்கள் வாங்குவதைத் தவிர்க்கலாம். காரணம்... அதன் அடியில் சுத்தம் செய்வது
கடினம்.
89. அறைக்கு ஏற்ற அளவில் சோஃபாக்களைத் தேர்ந்தெடுத்தால்... அது
அலங்காரம். இல்லையென்றால் அது அவஸ்தை. நம் சின்ன ஹாலுக்கு, பிரமாண்ட
சோஃபாக்கள் பொருந்தாதுதானே! கூடவே, மூன்று பேருக்கான மர
சோஃபா அடைக்கும் இடத்தைவிட, ஒன்றரை மடங்கு அதிக இடத்தை அதே
கொள்ளளவுள்ள லெதர் சோஃபா அடைத்துக் கொள்ளும் என்பதையும் அதை வாங்கும் முன் ஒருமுறை
யோசியுங்கள்.
கட்டில், மெத்தை:
90. சொந்த வீடுகளில் உள்ளவர்கள், நிரந்தரமாக
பொருத்தக்கூடிய வலிமையான கட்டில்களை வாங்கலாம். வாடகை வீடுகளில் உள்ளவர்கள்,
பாகம் பாகமாக கழற்றி மாட்டவல்ல கட்டிலை வாங்கலாம்.
91. 'சோஃபா கம் பெட்' போன்றவற்றை வாங்குவதைவிட,
தனி சோஃபா, தனி கட்டிலே சிறப்பானது. 'மல்டி யூஸ்' எனும்போது அவை பழுதாகும் வாய்ப்புகள்
அதிகம் என்பதோடு மெத்தையைப் போல உடலோடு உறவாட சோஃபாக்களின் பஞ்சுகளால் முடியாது.
92. குழந்தைகள் உள்ள வீடுகளில் உயரம் குறைவான கட்டில்களையே
வாங்குங்கள். ஏறவும் எளிது, விழுந்தால் அடிபடுவது பற்றிய
பயமும் குறைவு. குழந்தைகளுக்காக தடுப்பு வரம்புகள் அமைக்கப்பட்ட கட்டில்களும்
உள்ளன. இவை பாதுகாப்பானவை. ஆனால், விலை அதிகம்.
93. கட்டிலுக்கு அதிக செலவு செய்துவிட்டு, மெத்தையில்
கோட்டை விட்டு விடாதீர்கள். தவறான மெத்தையில் படுப்பதைவிட தரையில் படுப்பதே மேல்!
உங்களின் உடல் அமைப்புக்கும், உடல் வெப்ப நிலைக்கும் ஏற்ற
மெத்தைகளையே வாங்குங்கள். அதன் உள்ளே உள்ள பஞ்சு, நார்,
ஃபோம், துணி... இவற்றில் உங்களுக்குச்
சரியானது எது என்பதை அறிந்த பின்பே முடிவெடுங்கள். இடுப்பு வலி உள்ளவர்கள் இன்னும்
அதிக கவனத்தோடு தேர்வு செய்ய வேண்டும்.
புத்தக அலமாரி:
94. தினசரிகளையோ, வார, மாத
இதழ்களையோ மட்டும் படிப்பவர்களுக்கு ஒரு நல்ல டீப்பாயே போதும். ஓரளவுக்கு அதிக
புத்தகங்களை வைத்திருப்பவர்கள், ஷோ கேஸில்
பொருந்தும்படியாகவோ, வார்ட்ரோபின் ஒரு அங்கமாகவோ புத்தக
அலமாரிகளை திட்டமிட்டு பொருத்தலாம்.
பீரோக்கள்:
95. நம்பிக்கையான பிராண்டுகள் மிக அவசியம். அழகும் பாதுகாப்பும்
முதலில் உறுதி செய்யப்பட வேண்டும். லொட லொட கண்ணாடி, உடையும்
கைப்பிடி போன்றவற்றை செக் செய்து வாங்குங்கள்.
96. ஸ்டீல், மர பீரோக்களுடன் பிரித்து கோக்கக்
கூடிய ஜிப் வைத்த 'கவர்' பீரோக்களையும்
(பார்க்க படம்) பயன்படுத்தலாம்.
97. ஏ.சி. அறைகளில் இரும்பு பீரோக்கள் வைப்பதைத் தவிர்க்கலாம். அவை
அறை குளிர்ச்சியாவதைத் தள்ளிப்போடும். அங்கே, மர பீரோவே
உகந்தது.
புதுசு இது புதுசு!
மார்க்கெட்டில் நித்தமும் புதுப்புது வீட்டு உபயோகப் பொருட்கள்
தினம் குவிந்த வண்ணம் உள்ளன. அவற்றில் சில உங்கள் அறிமுகத்துக்கு...
98. ஹேண்டி சாப்பர்:காய்கறிகளை நறுக்க உதவும் கருவி இது. பார்க்க
மிக்ஸியைப் போல இருந்தாலும் எடை குறைவானது. தயிர் கடைய, முட்டைகளைக்
கலக்கவும்கூட இவற்றை உபயோகப்படுத்தலாம்.
99. ட்விஸ்டிங் சாப்பர்: நாலு பேர் கொண்ட வீட்டின் சமையலுக்குத்
தேவையான பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவற்றை நறுக்க இது
பயனுள்ளதாக இருக்கும். கையால் இதன் மூடியைக் சுழற்றுவதன் மூலமாக சுலபமாக நறுக்கலாம்.
வெங்காயம் நறுக்கும்போது கண்ணீரைத் தடுக்க உதவும். ஆனால், அதிக
சமையலுக்கு உகந்தது அல்ல.
100. நூடுல்ஸ் பாத்திரங்கள் சாதாரண கரண்டிகளால் நூடுல்ஸ்களைக்
கிண்டுவது கடினம். ஆனால், இந்த பிளவுள்ள கரண்டிகள் நூடுல்ஸ்
கிண்டுவதை எளிமையாக்கு கின்றன. அதேபோல, நூடுல்ஸை தட்டுகளில்
சாப்பிடுவது எளிதல்ல, கிண்ணங்களில் சாப்பிடுவது கொஞ்சம்
எளிதாக இருக்கும். லாகவமாக நூடுல்ஸை சாப்பிட என்றே நடுவே பள்ளமாக உள்ள நூடுல்ஸ்
தட்டுகள் வந்துள்ளன. பள்ளத்தில் நூடுல்ஸை அமிழ்த்தினால் அள்ள எளிதாக இருக்கும்.
'ஹவுஸ் ஹோல்ட் திங்ஸ்'ஐ ஹேண்டில் செய்வதில்
எப்போதுமே 'டிஸ்டிங்ஷன்'தான் நம்
பெண்கள். அவர்களை 'அவுட் ஸ்டாண்டிங்' ஆக்கட்டும்
இந்த இணைப்பு!