லேபிள்கள்

வியாழன், 24 மே, 2012

தகவலறியும் உரிமைச் சட்டம் - விரிவான விளக்கம்.


RIGHT TO INFORMATION என்னும் RTI அதாவது தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய சுருக்கமான வரலாற்றுடன் இந்த விளக்கத்தைத் தொடங்கலாம்

முதன்முதலில் இந்த சட்டத்திற்கான வேரூன்றியது 1977 ஆம் ஆண்டில் தான். மொரார்ஜிதேசாயின் தலைமையில் காங்கிரஸ் அரசுக்கான எதிர்ப்பாக போட்டியிட்ட ஜனதாக் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வெளிப்படையான அரசு நிர்வாகம் என்னும் கருத்தை தேர்தலில் வைத்து வென்றது. அதன்படி வெற்றி பெற்ற பிறகு மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு உடனடியாக இரகசியப் பாதுகாப்புச் சட்டம், 1923என்னும் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்து மக்களுக்கு அரசின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டி ஒரு குழு நியமித்தது.

ஆனால் அதை வெற்றிபெற வைக்க அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் விரும்பாத நிலையில் கிடப்பில் போடப்பட்டது.காரணம் எந்த தகவலையும் மக்களுக்கு அறிவித்தால் தமது ஊழல்கள் குட்டுகள் வெளிப்படும் என பயந்ததால்தான். மொரார்ஜி அரசும் கவிழ்ந்தது.

1989 ல் தனது தேர்தல் அறிக்கையில் தேசிய முன்னணி வெளிப்படையான அரசு நிர்வாகம்என்ற கருத்தை மையமாக வைத்து தேர்தலை சந்தித்தது. வெற்றி பெற்றவுடன் வி.பி.சிங் நாட்டு மக்களுக்கான முதல் செய்தியில் இரகசிய பாதுகாப்புச் சட்டம், 1923 ல் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும், தகவலறியும் உரிமை அனைவருக்குமானதாக ஆக்கப்படும் என்றும் முன்னறிவித்தார். ஆனால், அதிகார வர்க்கம் மிகச் சாதுர்யமாக அவருடைய முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைப் போட்டது. வி.பி.சிங் அரசும் கவிழ்க்கப்பட்டது

2000 ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஜனதா கட்சி மற்றும் தேசிய முன்னணி ஆகியவற்றைப் போலவே வெளிப்படையான நிர்வாகம் என்பதை முன்வைத்து தேர்தலைச் சந்தித்து ஆட்சியைக் கைப்பற்றியது. தகவல் சுதந்திரச் சட்டம், 2000 யை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. ஆனால், மீண்டும் அதிகார வர்க்கம் ஆளும் கும்பலுடன் இணைந்து கொண்டு 2 ஆண்டுகள் அதை நடைமுறைக்குக் கொண்டுவராமல் தடுத்து வந்தன. எனவே அந்தச்சட்டம், இரண்டு ஆண்டுகள் கழித்துதான் 2002 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட்டது. 2003 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் நாள் ஜனாதிபதி அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். அந்தச் சட்;டம் பல ஓட்டைகளைக் கொண்டிருந்தது. சமூக அக்கறையுள்ளவர்கள் பலரும் தொடர்ந்து அதிலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அதை திருத்த பல முயற்சிகள் எடுத்தனர்.

1. மத்திய மாநில அரசுகளுக்கிடையிலான தகவல் பரிமாற்றத்துக்குத் தடை

2. தகவல் தர மறுக்கும் அதிகாரிகளுக்கும், தவறான தகவல் தருவோருக்கும் தண்டணை இல்லை.

3. மேல்முறையீட்டுக்கும் வழியில்லை.

இத்தகைய குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி திருத்தம் செய்ய வலியுறுத்தியவர்களில் மிக முக்கியமானவர்கள் அருணாராய், சங்கர்சிங் மற்றும் நிகில்தேவ் ஆகியோராவர். அவர்கள் தங்கள் நேரடி அனுபவத்தின் அடிப்படையில் அரசுக்கு பல பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினர். இன்று நாம் பெற்றிருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, 15.06.2005 ல் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டு, 20.06.2005 ல் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று 12.10.2005 ல் நடைமுறைக்கு வந்தது.
மக்களுக்கு இந்தத் தகவலை, சம்பந்தப்பட்ட அதிகாரி 30 நாளில் அளிக்கவேண்டும். தவறினால், கெடு தேதியைக் கடந்த ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250 என அபராதம் செலுத்த வேண்டும். அது மட்டுமல்ல. பெற்ற தகவலில் திருப்தி இல்லை என்றால், மேல் முறையீடு செய்யலாம். இதற்காகத் தகவல் உரிமை ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின் சில பணிகள் சரியாக இயங்கியதற்கு இரு சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

தில்லியில் வசிக்கும் குடிசைவாசிப் பெண் திரிவேணி. அவரது குடும்ப மாத ஊதியம் ரூ.500 தான். அவரது குடும்பத்தில் நான்கு பேர் உள்ளனர். ஏழைமக்களுக்கான ரேஷன் அட்டை திரிவேணிக்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் கோதுமை கிலோ ரூ.2, அரிசி கிலோ ரூ.3 என்ற சலுகை விலையில் கடைகளில் வாங்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது. ஆனால், ஓராண்டாக அவர் கடையில் வாங்கச் சென்றால், சரக்கு இல்லை என்றே பதில் வந்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவர் வழக்குத் தொடர்ந்தார். ஆவணங்களைக் கேட்டார். தன் பெயரில் உணவு விநியோகிக்கப்பட்டதா என்று கேட்டார்.

ஆவணங்களில் அவர் பெயரில் மாதந்தோறும் அரிசியும், கோதுமையும் விநியோகிக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் கையெழுத்திட வேண்டிய இடத்தில் கைநாட்டு வைக்கப்பட்டிருந்தது. இத்தனைக்கும் திரிவேணிக்கு எழுதவும் படிக்கவும் தெரியும்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் கடைக்காரரின் உரிமம் பொதுவாக ரத்து செய்யப்படும். இதை அறிந்த கடைக்காரர் அஞ்சினார். திரிவேணியைத் தேடிச் சென்று, தான் செய்த தவறை மறந்து மன்னிக்குமாறு கெஞ்சினார்.

இவ்வாறு போராடி வென்ற திரிவேணிக்கு அரிசியும் கோதுமையும் தற்போது தொடர்ந்து கிடைத்து வருகின்றன. இதைப் போன்றே உதய் என்பவரும் ஜெயித்துக் காட்டியுள்ளார்.

தில்லியில் வசந்த் கஞ்ச் என்ற இடத்தில் வசிக்கும் அவர் ஐ.ஐ.டி. எதிரில் உள்ள ஒரு சாலை பத்தே நாளில் அவசரகோலத்தில் போடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவ்வாறு குறுகிய காலத்தில் போடப்படும் சாலை எந்த தரத்தில் இருக்கும் என்று அவர் சந்தேகப்பட்டார். தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உதவியை நாடினார்.

அது தொடர்பான ஆவணங்களைப் பார்வையிடக் கோரினார். அங்கு பயன்படுத்தப்பட்ட தார், மணல், கற்களின் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், அந்த சாலையை அமைத்த செயல் பொறியாளர் அவரிடம் வந்து, சாலை முழு அளவில் பழுதுபார்க்கப்படும் என்று உறுதியளித்தார். அதன் பின் உதய் அந்த சாலையைப் பார்வையிட்டார். அவர் சுட்டிக் காட்டிய குறைபாடுகள் அனைத்தும் களையப்பட்டன.

ஊழல், முறைகேடு இல்லாத உலகம் இருக்கும் என்று யாரும் கனவு காண இயலாதுதான். ஆனால், ஒவ்வொரு தனி நபரும் அநீதியை எதிர்த்துப் போராடும் ஆற்றலைப் பெற முடியும். அதைத் தகவல் அறியும் உரிமை சட்டம் நிரூபித்துள்ளது

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts