லேபிள்கள்

திங்கள், 12 மார்ச், 2012

சேமிப்பின் சிறப்பு !சேமிக்கும் திறன்! டிப்ஸ்-100





சின்னச் சின்ன 'பண' த்துளியை சேர்த்து வைப்போமே ...
'வரவு எட்டணா...
செலவு பத்தணா...
அதிகம் ரெண்டனா...
கடைசியில் துந்தனா... துந்தனா..!'
சிக்கனம், சேமிப்பு இல்லாத வாழ்க்கையின் விளைவு என்னாகும் என்பதை சிரிப்போடு சிந்திக்க வைக்கும் சினிமா (பாமா விஜயம்) பாடல் இது.
ஒவ்வொரு குடும்பத்திலும் பட்ஜெட் போடும் பழக்கம் குடும்பத் தலைவிக்கோ, தலைவனுக்கோ அவசியம் தெரிந்திருக்க வேண்டும். வரவு, செலவு எவ்வளவு என்பதை அறிந்து அதற்குள் வாழ்க்கை நடத்துவதுதான் மிகவும் பாதுகாப்பானது. அதிலும், எதிர்காலத்துக்கான சேமிப்பே நம் முதல் செலவாக இருப்பது மிக மிக முக்கியமானது. அந்த சேமிப்புக்கான வழிகள் என்ன, அது நமக்கு வழங்கும் பாதுகாப்புகள் என்னென்ன, சில சமயங்களில் 'சேமிப்பு' என்று பெயரில் நம் பணத்தை சுருட்ட வரும் வில்லங்கங்கள் என்ன என்பது பற்றியயெல்லாம் 'அலர்ட் டிப்ஸ்'களை அள்ளி வழங்குகிறது இந்த இணைப்பு!
அதேபோல, 'சிக்கனமே சிறந்த சேமிப்பு!' என்பதை தங்களின் அன்றாட அனுபவத்திலிருந்து ஆங்காங்கே எடுத்து வைக்கிறார்கள் குடும்பத் தலைவிகள் சிலர்.
சேமிப்போம்... சாதிப்போம்!
தங்கமான சேமிப்பு!

1. காலம் காலமாக பின்பற்றப்படும் சேமிப்பு, தங்கம். அதன் மீதான சேமிப்பு புத்திசாலித்தனமான ஒன்று.

2. டாலர், பவுண்ட் உட்பட எந்தப் பணமானாலும் அதன் மதிப்பு குறைய வாய்ப்பு உண்டு. ஆனால், தங்கத்தின் மதிப்பு மட்டும் எப்போதும் வளர்ந்துகொண்டேதான் இருக்கும். கடந்த பத்து ஆண்டுகளில் இதன் வளர்ச்சி 200 சதவிகிதத்துக்கும் மேல். எனவே, தங்கத்தில் சேமிப்பது எப்போதுமே உத்தரவாதம் மிக்கது.

3. ஷேர் மார்க்கெட், ரியல் எஸ்டேட் போல தங்கம் வாங்குவதில் சட்டச் சிக்கல்கள் இல்லை. நம்பிக்கையான தரத்தில் கிடைத்தால் சட்டென வாங்கிவிடலாம்.

4. ஸ்விஸ் கோல்ட் போன்ற நம்பிக்கையான 24 காரட் தங்கம் வாங்கினால், அதை எந்த நாட்டுப் பணமாகவும் மாற்றலாம், எந்த நாட்டில் வேண்டுமானாலும் மாற்றலாம்.

5. தங்க முதலீட்டில் நகைகள், நாணயங்கள், தங்கப் பத்திரங்கள் என பல்வேறு வடிவங்கள், வகைகள் உண்டு. வசதி, விருப்பத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கலாம்.

6. பொதுவாக, தங்கத்தை பிஸ்கட்டாகவோ, நாணயமாகவோ வாங்கிச் சேமிப்பதுதான் ரிஸ்க் இல்லாதது.

7. முழுவதும் நகைகளாக வாங்கி வைப்பது செய்கூலி, சேதாரம் உட்பட பல்வேறு செலவினங்களை உள்ளடக்கியிருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

8. லட்சக்கணக்கான ரூபாய்க்கு வாங்கும் தங்கம், நகைகளைப் பாதுகாக்க சில ஆயிரம் செலவு செய்யத் தயங்காதீர்கள். நல்ல நம்பிக்கையான வங்கியின் லாக்கரில் பத்திரப்படுத்துங்கள்.

9. தங்கம் வாங்கும்போது தரத்தை உறுதிபடுத்திக் கொள்வது முக்கியம். அது 18 காரட்டாக கூட இருக்கலாம். திரும்ப விற்கும்போதோ அல்லது அடகு வைக்கும்போதோதான் வில்லங்கம் தெரியவரும். ஆபரண நகை என்பது 22 காரட் இருந்தால்தான் தரமான தங்கம். எனவே, நம்பிக்கையான நகைக்கடைகளில் வாங்குவதே நல்லது.

10. 'கொஞ்சம் கொஞ்சமாக பணம் கட்டுங்க. ரெண்டு வருஷத்துல அஞ்சு பவுன் உங்க கையில...' என்றெல்லாம் யாராவது சொன்னால் யோசியுங்கள். சொல்லும் கம்பெனியின் தரம், வரலாறு, தற்போதைய நிலை அனைத்தையும் தெரிந்தபின் இறங்குங்கள்.

ரியல் எஸ்டேட் நல்ல தேர்வு!

11. நிலத்தில் போட்ட பணம் நிலைக்கும் என்பார்கள். படிப்படியாக நீண்டகாலத்தில் விலையேறும். அதேசமயம், வேகமாக இறங்க வாய்ப்பில்லை.

12. பக்காவான நிலத்தை வாங்கிப் போடுவதில் உள்ள முக்கியமான நன்மை, அந்த அசையா சொத்தை யாரும் திருடிக்கொண்டு போக முடியாது என்பது. சரியான டாக்குமென்ட், பத்திரம், பட்டா என சர்வமும் இருக்கிறதா என்பதை சரிபார்த்தபின் சந்தோஷமாக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யுங்கள். வாங்கிப்போட்ட நிலத்தை யாரும் ஆக்கிரமிக்காமல் இருக்க... அடிக்கடி சென்று பார்த்துக் கொள்வது முக்கியம்.

13. நிலத்தை வாங்கினால் லோன் பெறுதல் போன்றவற்றுக்கு அது கை கொடுக்கும். நிலத்தில் வீடு கட்டிய பின்பு மார்க்கெட் விலைக்கு ஏற்ப மேலும் லோன் எடுக்க முடியும்.

14. வங்கி வட்டி விகிதம், பணவீக்கம் என எல்லாவற்றையும் மீறி வளரும் தன்மை நிலத்துக்கு உண்டு. குறிப்பாக நகர்ப்புறங்கள், அதிக போக்குவரத்து வசதியுடைய இடங்கள் போன்றவை எப்போதுமே 'ஜாக்பாட்' நிலங்கள்தான்.

15. விளைச்சல் நிலங்களில் முதலீடு செய்தால் வருடாந்திர குத்தகை போன்றவற்றின் மூலமும் லாபம் பெறலாம். ரப்பர், முந்திரி, தேயிலை போன்ற தோட்டங்களில் முதலீடு செய்தால் சிறப்பான மாதாந்திர வருமானமும் நிச்சயம்.

16. நிலத்தை நினைத்த நேரத்தில் விற்றுப் பணமாக்க முடியாது என்பது ஒரு சிக்கல். அதுபோல சமூக விரோத சக்திகள், அரசியல் பின்புலத்தில் உள்ள கில்லாடிகளெல்லாம் நம் நிலத்தை வளைத்துப் போட்டு அராஜகம் பண்ண வாய்ப்பு உண்டு. ஒரே நிலத்தை இரண்டு மூன்று பேருக்கு விற்கும் திருட்டுத்தனமும் உண்டு. இவையெல்லாம் உஷாராக இருக்க வேண்டிய சங்கதிகள்.

17. நிலத்தின் வருவாய் நீண்ட காலத்துக்கு உரியது. சரியான நிலத்தை வாங்கினால் காலம் முழுதும் நமக்குப் பயன் தரக்கூடியதாக இருக்கும்.

18. கையில் பணம் இல்லாவிட்டாலும் வங்கிக் கடன் மூலமாக நிலத்தை வாங்க முடியும். அதேசமயம், வங்கிக் கடன் வாங்கும்போது கவனமாக இருப்பதோடு, தகுந்த ஆலோசனைக்குப் பிறகே வாங்க வேண்டும் என்பது முக்கியமான விஷயம்.

ஷேர் மார்க்கெட் பாதுகாப்பானதா?

19. அதிக ரிஸ்க் உடைய ஒரு முதலீடு இது. அதேபோல அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ள இன்வெஸ்ட்மென்ட்டும் கூட! அடிக்கடி வெளியாகும் செய்திகளை வைத்து ஏகப்பட்ட நஷ்டம் போன்று தோன்றும். ஆனால், விழிப்போடு இருந்தால்... ஷேர் என்பது பெரும்பாலும் லாபகரமானதே! திறமையும் பொறுமையும் இருந்தால் கலக்கலாம்.

20. நல்ல நம்பிக்கையான கம்பெனிகளில் இன்வெஸ்ட் செய்தால் அதிக லாபம் கிடைப்பது உறுதி. அதற்கு நல்ல அலசல் திறமை அவசியம். கம்பெனிகளின் வரவு, செலவு, லாப விவரங்கள் தெரிந்திருப்பது அவசியமானது.

21. போனஸ் ஷேர்ஸ் கிடைப்பது ஷேர் மார்க்கெட்டில் உள்ள ஒரு அட்வான்டேஜ்.

22. வங்கி வட்டியை விட பலமடங்கு அதிக பணம் டிவிடென்ட் மூலம் வருவதற்குரிய வாய்ப்பு உண்டு. மார்க்கெட் நன்றாக இருந்தால் அதிக லாபம் ஈட்டலாம்.

23. ஷேரை எளிதில் பணமாக்கிக் கொள்ளலாம். அதிக அலைச்சலோ, குழப்பமோ, பயமோ இல்லாமல் இருந்த இடத்தில் இருந்துகொண்டே 'ஆன்லைன்' மூலமாகப் பணமாக்கிக் கொள்ளும் வசதி இதில் உண்டு.

24. எந்த கம்பெனி ஷேர் ரிஸ்க்கானது என தோன்றுகிறதோ அதை சட்டென விட்டுவிட்டு வேறொன்றை வாங்குவது வெகு எளிது.

25. ஷேரில் உள்ள மிகப் பெரிய சிக்கல், நம்பகத்தன்மை. இன்று ஒரு லட்சம்... நாளை பத்து லட்சம்... என்று உயரும். அதேசமயம், மறுநாள் பத்தாயிரம்... வெறும் ஜீரோ என்றுகூட ஏற்ற, இறக்கங்கள் இங்கே சர்வசாதாரணம். எனவே, தொடர்ந்து கவனிக்க இயலாதவர்கள், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் ஷேர் மார்க்கெட்டை நாடாமல் இருப்பதே நல்லது.

மியூச்சுவல் ஃபண்ட், மிக நன்மை!

26. ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவர்களில் பலருக்கும் தயக்கமும் பயமும் இருக்கும். அவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் மியூச்சுவல் ஃபண்ட். இதுவும் ஷேர் சமாசாரம்தான். ஆனால், ரிஸ்க் குறைவான சமாசாரம்.

27. வங்கிக் கணக்கு, பான் கார்டு... இரண்டும் போதும் நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட்-ல் இன்வெஸ்ட் செய்ய. அதேபோல சில நூறு ரூபாய்கள் தொடங்கி, பல லட்சக்கணக்கான ரூபாய்களையும் தாண்டி சேமிக்க இதில் வழி இருக்கிறது.

28. மற்ற முதலீடுகளைப் போலில்லாமல் 'மியூச்சுவல் ஃபண்ட்' என்பது இந்திய அரசின் 'செக்யூரிட்டி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போர்ட்'-ன் கண்காணிப்பில் வருகிறது. அதேபோல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஆடிட் போன்றவைகளுக்கும் கட்டுப்பட வேண்டும். இது முதலீட்டாளர்களுக்கு அதிக நம்பிக்கை தரும் விஷயமாகும்.

29. மியூச்சுவல் ஃபண்ட்டில் போடும் பணம், பல நிறுவனங்கள், பாண்டுகள், அரசு நிறுவனங்கள் என கலந்து கட்டி முதலீடு செய்யப்படும். அந்த முடிவை நல்ல ஒரு திறமையான நிதி நிபுணர் குழு தீர்மானிக்கும். எனவே, ஒரு கம்பெனி வீழ்ச்சியடைந்தாலும் ஒட்டுமொத்த பணத்தையும் பாதிக்காது.

30. மியூச்சுவல் ஃபண்ட்டில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை நம்பிக்கையான பாண்ட், அரசு நிறுவனம் போன்றவற்றில் போட்டு விடுவதால் குறைந்தபட்ச லாபம் பெரும்பாலும் கிடைத்து விடுகிறது.

31. ஓபன் எண்ட் (open-End) மற்றும் குளோஸ்டு எண்ட் (Closed-end) என்று இரு வகைகளில் மியூச்சுவல் ஃபண்ட்கள் உள்ளன. ஓபன் எண்ட் என்பது... எப்போது வேண்டுமானாலும் விற்றுப் பணமாக்கிக் கொள்ளக்கூடியது. குளோஸ்டு எண்ட் என்பது குறிப்பிட்ட கால வரையறைக்குப் பிறகே விற்கக் கூடியது. தேவைக்கு ஏற்றபடி தேவை யானதை தேர்வு செய்வது நல்லது.

32. வருமான வரியை சேமிக்கும் வகையிலான மியூச்சுவல் ஃபண்டுகளும் உண்டு. அவற்றை ஈக்விடி லிங்டு சேவிங்ஸ் ஸ்கீம் (ELSS) என்பார்கள்.

33. சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்ற முறையிலான மியூச்சுவல் ஃபண்ட்களும் உண்டு. மாதந்தோறும் சிறுசிறு தவணையாக முதலீடு செய்யலாம். மாதாந்திர சேமிப்பைக்கூட இப்படி முதலீடு செய்து நல்ல லாபம்
 
பார்க்கலாம்.

34. மியூச்சுவல் ஃபண்டில் வரும் லாபத்தை, அப்படியே மியூச்சுவல் ஃபண்டில் மறுபடி மறுபடி இன்வெஸ்ட் செய்வது வெகு எளிது. வேறு சிக்கல் இல்லாமல் இந்த முதலீட்டுச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும்.

35. லாபத்தை மீண்டும் முதலீடு செய்ய விரும்பவில்லை எனில் வீட்டுக்கே 'செக்' வர வைக்கலாம். வேறு சிக்கல்களோ, கவலைகளோ, அலைச்சல்களோ இல்லை.

இன்ஷுரன்ஸ் மேல் இஷ்டமா?!

36. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நம்பும் ஒரு முதலீடு, இன்ஷுரன்ஸ்தான். பொதுவாக இன்ஷுரன்ஸ் முதலீடு என்பது மிகக் குறைந்த வருவாய் கொண்டது என்பார்கள். ஆனால், சிறுசேமிப்பு எனும் நோக்கில் பார்த்தால் நிச்சயமாக அது லாபகரமானதுதான். அதுமட்டுமல்ல... நம்முடைய ரிஸ்க்கையும் சேர்த்து அது தாங்குகிறது என்பதுதான் முக்கியம்.

37. இன்ஷுரன்ஸ் போட்டால்... எதிர்காலம் பாதுகாப்பானது என்பதனால் மக்களின் முதல் தேர்வு இதுவாகிறது. கடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின்படி... சுமார் 44 சதவிகித மக்கள் இன்ஷுரன்ஸைத்தான் விரும்புகிறார்கள்.

38. முதலீடு எனும் நிலையைத் தாண்டி, விபத்து, மரணம் போன்ற எதிர்பாராத சிக்கல்களுக்குக் கைகொடுக்கும் என்பதுதான் இன்ஷுரன்ஸ் மக்களைக் கவரக் காரணம். மெச்சூரிட்டி அல்லது அசம்பாவித சமயங்களில் பணம் கிடைக்கும்.

39. இன்ஷுரன்ஸில் பலவிதங்கள் உள்ளன. அதில் மணி பேக் பாலிஸியில் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிட்ட அளவு தொகை உங்களுக்கு வழங்கப்படும். மற்றபடி வழக்கமான காப்பீடு வசதியும் உண்டு.

40. ரிட்டயர்மென்ட் இன்ஷுரன்ஸ்கள், இன்னொரு வசீகரத் திட்டம். எதிர்காலத்தின் நிலையைக் கணிக்க முடியாது என்பதால் இது பரவலாக விரும்பப்படுகிறது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட பணம் செலுத்தினால், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மாதம்தோறும் பென்ஷன் போல பணம் வந்து கொண்டிருக்கும். இந்தப் பென்ஷனைப் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது நாற்பது. பென்ஷன் தொடங்கும் வயதை உங்கள் விருப்பம் போல தேர்வு செய்யலாம்.

41. இன்ஷுரன்ஸ் மூலமாக குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு லோன் எடுத்துக் கொள்ளலாம். எந்த அளவுக்கு இன்ஷுரன்ஸ் எடுத்திருக்கிறீர்களோ... அதன் அடிப்படையில் உங்களுக்கு லோன் கிடைக்கும். வங்கிக் கடனைவிட வட்டி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

42. மாதாந்திர சம்பளம் வாங்குவோருக்கு இன்ஷுரன்ஸ் என்பது முதலீடு மட்டுமல்ல. அது வரி சேமிப்பு வழியும்கூட. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல. அதனாலேயே இது அவர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.

43. கல்வி, திருமணம், படிப்பு, வீடு என பல்வேறு திட்டங்களுடன் இன்ஷுரன்ஸில் முதலீடு செய்யலாம். எந்தத் திட்டம் சரிவரும் என்பதை மட்டும் கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும்.

44. குழந்தைகள் பெயரில் வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் போடுவதுபோல, இன்ஷுரன்ஸிலும் போடலாம். இது இன்ஷுரன்ஸுக்கு இன்ஷுரன்ஸ்... முதலீட்டுக்கு முதலீடு!

45. நம்முடைய இன்ஷுரன்ஸ் பணத்தை தகிடுதத்தம் மூலம் அபகரிப்பதற்கு பெரும்பாலும் வாய்ப்பே இல்லை. எனவே, அதிக நம்பகத்தன்மை இந்த முதலீட்டில் உண்டு.

46. இன்ஷுரன்ஸ் கம்பெனிகளும் இப்போது அதிக லாபம் தரும் முதலீட்டுத் திட்டங்களுடன் களமிறங்கியிருக்கின்றன. அவற்றுள் நல்ல, நம்பிக்கையான இன்ஷுரன்ஸ் கம்பெனியைத் தேர்ந்தெடுத்துப் பயன்பெறலாம்.

வங்கிகளில் சேமிக்க வாருங்கள்!

47. வங்கியில் சேமிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் பிரசித்தம். சேமிப்பில் எப்போது வேண்டுமானாலும் பணத்தை அதிகரிக்கலாம்... தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம் போன்றவை இதன் நல்ல அம்சங்கள்.

48. வங்கியில் குறைந்த லாபமே ஆனாலும் நிச்சயமாக அதிக நம்பிக்கை உண்டு. எனவே, வங்கிச் சேமிப்புகளில் பயம் வேண்டாம்.

49. நல்ல நம்பிக்கையான தேசிய வங்கிகள் பாதுகாப்பானவை. அதிலும்கூட, பணத்தை ஒரே வங்கியில் போடாமல், பல வங்கிகளிலும் பிரித்துச் சேமிப்பதால் உங்கள் பணம் அதிக உத்தரவாதத்துடன் இருக்கும்.

50. அதிக வட்டி கிடைக்கும் என்பதற்காக, திடீர் தனியார் வங்கிகளில் முதலீடு செய்யவேண்டாம். பின்னணியை முழுதும் அறியாமல் உங்கள் வியர்வைப் பணத்தை யாரோ ஒருவரின் பாக்கெட்டில் போடாதீர்கள்.

51. சேமிப்புக்கு வங்கியிலேயே பல திட்டங்கள் உள்ளன. மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தும் ஆர்.டி, ஃபிக்ஸட் டெபாசிட், முதியோருக்கான சிறப்பு வட்டி திட்டங்கள் என பல உள்ளன. அவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து முதலீட்டைத் துவக்கினால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

52. கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இந்தப் பணம் தேவைப்படாது என்பதைத் தெரிந்த பின்பே 'ஃபிக்ஸட் டெபாசிட்' செய்யுங்கள்.

53. காலம் மாறுகிறது. திட்டங்கள், லாபங்கள் எல்லாம் மாறுகின்றன. எனவே, 'ஃபிக்ஸட் டெபாசிட்' போன்றவற்றை பத்து ஆண்டு, இருபது ஆண்டு என நீட்டாமல் இருப்பது நல்லது. ஓரிரு வருடங்கள் என்பது சரியான அணுகுமுறை.

54. ஃபிக்ஸட் டெபாசிட்-ன் விதிமுறைகளை கவனமாகப் படியுங்கள். குறிப்பாக, பணத்தை எடுக்கும்போது ஏதாவது கட்டணம் வசூலிப்பார்களா... குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே திரும்பப் பெற்றால், உங்களுடைய லாபத்தில் எவ்வளவு குறையும் என்பதையெல்லாம் கண்டறியுங்கள்.

55. வங்கிகளில் நீண்டகால சேமிப்புகள் வைக்கும்போது 'வாரிசு' பெயரைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள். அது சரியாகக் குறிப்பிடப்படவில்லை எனில், சேமிப்பவருக்கு ஏதேனும் ஆபத்து நேரும்போது, 'வாரிசு' அந்தப் பணத்தை எளிதாக எடுக்க முடியாது. தேவையற்ற அலைச்சல்கள் நேரிட வாய்ப்பு உண்டு.

56. வங்கிகளில் பெரும்பாலும் சர்வீஸ் சார்ஜ், மறைமுகக் கட்டணம் போன்றவை இருப்பதில்லை என்பது வங்கி முதலீட்டின் இன்னொரு சிறப்பு அம்சம். அதேபோல எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் உங்கள் சேமிப்பை நீட்டிக் கொள்ளலாம் என்பதும் இன்னொரு சிறப்பம்சம்.

போஸ்ட் ஆபீஸில் சேமியுங்கள்!

57. கிராமப்புறங்களில் இன்றும் சேமிப்பில் சிறப்பிடம் போஸ்ட் ஆபீஸுக்குத்தான். கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்கலாம், எளிதில் போய் சேமிக்கலாம், எல்லா ஊர்களிலும் சேமிக்கலாம் போன்றவையெல்லாம் போஸ்ட் ஆபீஸ் சேமிப்புகளின் சிறப்பம்சம்.

58. கிஸான் விகாஸ், நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட் போன்றவை தபால் அலுவலகங்களில் உள்ள பாப்புலர் முதலீடுகள்.

59. கிஸான் விகாஸ் பத்திரங்களில் முதலீடு செய்தால், உங்கள் பணம் எட்டு ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்களில் இரட்டிப்பாகும். நூறு முதல் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். இவற்றுக்கு எட்டு சதவிகித வட்டி உண்டு.

60. 'டைம் டெபாசிட்' எனும் ஒரு ஃபிக்ஸட் டிபாசிட் திட்டமும் இங்கு உண்டு. சில நூறு ரூபாய்கள் தொடங்கி, லட்சக்கணக்கிலும் சேமிக்கலாம். ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டு, மூன்று ஆண்டு மற்றும் ஐந்து ஆண்டு என நம் வசதிக்கேற்ப கால நிர்ணயம் வைத்துக் கொள்ளலாம்.

61. மாதாந்திர சேமிப்புத் திட்டம் என்பது அதிக வட்டி தரும் தபால் அலுவலக சேவைகளுள் ஒன்று. இதில் ஆயிரம் ரூபாய் தொடங்கி, மூன்று லட்சம் வரை சேமிக்கலாம். எட்டு சதவிகித வட்டி, வரி விலக்கு, ஆறு ஆண்டுகள் சேமித்தால் அதன் பின் பத்து சதவிகித போனஸ் என பல சிறப்பு அம்சங்கள் இதில் உண்டு.

62. 'பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட்' (பி.பி.எஃப்), தபால் அலுவலகத்தின் சிறப்பு சேமிப்புத் திட்டங்களில் ஒன்று. ஆண்டுக்கு 500 முதல் 70,000 ரூபாய் வரை சேமிக்கலாம்.

63. பி.பி.எஃப்-க்கு வரிச் சலுகை உள்ளது. சேமிப்புக்குத் தக்கபடி தபால் அலுவலகத்திலிருந்து லோன் எடுத்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் சலுகை.

64. ஊர் மாறிப் போகிறீர்கள் என்றால், நீங்கள் செல்லும் இடத்தில் உள்ள தபால் அலுவலகத்துக்கு உங்கள் சேமிப்புகளை எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.

65. 'மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு பணத்தைக் கட்டுவது வசதியாக இருக்குமே...' என விரும்புபவர்களுக்கு இருக்கிறது 'ரெக்கரிங் டெபாசிட்' திட்டம். இதில் அறுபது மாதங்கள் தொடர்ந்து பணம் கட்ட வேண்டும்.

66. தபால் நிலைய சேமிப்புகளில் 'வாரிசு' நியமிக்கும் வசதி உண்டு. எப்போது வேண்டுமானாலும் அதை மாற்றிக் கொள்ளலாம்.

67. இந்திய அரசு சார்ந்தது, மிக அதிக பாதுகாப்பானது, நம்பிக்கையானது என்பவையெல்லாம் தபால் அலுவலகங்களின் முதலீட்டுத் திட்டங்களுக்கான அரண்.

குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள் சேமிப்பு பழக்கத்தை!

68. குழந்தைகள் முதலில் நாணயத்தின் மதிப்பை அறியும்படி செய்யுங்கள். 10 ரூபாயில் மொத்தம் 10 ஒரு ரூபாய் இருக்கிறது போன்ற அடிப்படையான விஷயங்களை தெளிவுபட சொல்லித் தாருங்கள்.

69. கடைகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது அவர்கள் கையாலேயே பணம் கொடுக்க சொல்லுங்கள். அப்போதுதான் அந்த பொருட்களின் மதிப்பு புரியும்.

70. அவர்களை கவரக் கூடிய கலர்ஃபுல் உண்டியலை வாங்கிக் கொடுத்து ஆர்வம் ஏற்படுத்தி, சேமிக்க உற்சாகப்படுத்துங்கள்.

71. தினமும் இரண்டு ரூபாய் அவர்களின் 'பாக்கெட் மணி' என்றால், கூடுதலாக ஒரு ரூபாய் கொடுத்து தினமும் உண்டியலில் போடச் சொல்லுங்கள்.

72. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களுக்குள் போட்டி போல வைத்து யார் அதிகம் சேமித்திருக்கிறார்களோ... அவர்களுக்கு சின்னச் சின்ன பரிசுகள் கொடுக்கலாம். இதனால் சேமிப்பில் அதிக ஆர்வம் ஏற்படும்.

73. மாதம் ஒருமுறை குறிப்பிட்ட தேதியில் அவர்கள் சேர்த்த பணத்தை அவர்களையே எண்ணச் சொல்லி, ஒரு நோட்டில் எழுதச் சொல்லுங்கள்.

74. குழந்தைகள் அடிக்கடி கேட்டு அடம்பிடிக்கும் தேவையில்லாத பொருட்களை அந்த சேமிப்பு பணத்தில் இருந்தே வாங்கிக் கொடுங்கள். அப்போதுதான் அத்தியாவசியம் இல்லாத பொருட்களின் மீது அவர்களுக்கு மோகம் குறையும்.

75. நீங்கள் போடும் மாத பட்ஜெட்டை குழந்தை களுக்கும் காண்பியுங்கள். அப்போதுதான் அவர்களுக்காக நீங்கள் செய்யும் செலவு அவர்களுக்குப் புரியும்.

கலைப் பொருட்களிலும் சேமிக்கலாம்!

76. கலைப் பொருட்களில் சேமிப்பது என்பது ஒரு தனி ரகம். அதற்கு கொஞ்சம் விஷய ஞானமும், ரிஸ்க் எடுப்பதும் தேவைப்படும். ஆனால், ஜாக்பாட் அடித்தால் ஒரு சேமிப்பே நமது வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாற்றிவிடக் கூடும்.

77. கலைப் பொருட்கள் வாங்கும்போது அதன் காலத்தை அறிந்து கொள்ளுங்கள். அந்த கலைப்பொருளுக்குச் சொந்தக்காரர் யார் என தெரிவதும், அது நிரூபிக்கக் கூடியதாக இருக்க வேண்டியதும் மிக முக்கியம்.

78. பெயின்ட்டிங் பொருட்களை வாங்கிச் சேமிப்பாக வைக்கலாம். ஆனால், அவை ஒரிஜினல் பெயின்ட்டிங்காக இருந்தால்தான் பயனளிக்கும். விலை குறைவான டிஜிட்டல் பிரின்ட்டுகள் பார்க்க ஒரிஜினல் போலவே இருக்கும். மலிவான விலைக்குக்கூட கிடைக்கும். ஆனால், அவை பிற்காலத்தில் விலை போகாது.

79. மிக அதிகமான ஏமாற்றுகள் நடப்பதும் இந்த கலைப் பொருள் விற்பனையில்தான் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். குறிப்பாக, இணையம் மூலமாக எந்தக் கலைப்பொருளையும் வாங்காமல் இருப்பது உசிதம். கலைப்பொருட்களை அந்தந்த கலை ஏரியாவில் கில்லாடியான நபர் மூலமாக ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள்.

வளமான வாழ்க்கைக்கு சேமிப்புதான் ஆக்ஸிஜன்!

80. குழந்தைகளின் எதிர்கால படிப்பு, வீடு வாங்குவது போன்ற தெரிந்த தேவைகள் முதல், உடல் நலம், அவசர பயணம் போன்ற திடீர் தேவைகள் வரை அனைத்துக்குமே சேமிப்பு மிக முக்கியம்.

81. தொடர்ச்சியான சேமிப்புகளில் நிலைத்திருங்கள். உங்களுக்கு நீங்களே தரும் சம்பளமாக அதைக் கணக்கில் வையுங்கள். எல்லா மாதமும் உங்களுக்குச் சம்பளம் கொடுங்கள்.

82. சேமிப்பு சமாசாரங்களுக்கென ஒரு தனி வங்கிக் கணக்கு வைத்திருப்பது நல்லது. நாம் எப்போதும் பயன்படுத்தும் டெபிட் கார்டுடன் இருக்கும் வங்கியிலேயே அந்தப் பணமும் இல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது.

83. தொழில் தொடங்குவது, கடை ஆரம்பிப்பது என உங்களுடைய தீவிரமான லட்சியங்களுக்கு சேமிப்பு கை கொடுக்கும். அதற்காக குறைந்தபட்சம் 20% சம்பளத்தை ஒதுக்கி வைப்பது பயன் தரும்.

84. ஓய்வு பெற்றபின் வரும் தேவைகளுக்காக சேமியுங்கள். உங்கள் சேமிப்பு உங்கள் முதுமையை தன்னம்பிக்கையுடனும், இயல்பாகவும், மனஉளைச்சல் இல்லாமலும் அனுபவிக்க உதவும். எவ்வளவுதான் அன்பைப் பொழியும் பிள்ளைகள் இருந்தாலும் முதுமைக்காக சேமிக்கத் தவறாதீர்கள்.

85. எதற்காக சேமிக்கிறோம், எவ்வளவு சேமிக்கப் போகிறோம் என்பதை கணவன், மனைவி இருவரும் சேர்ந்து முடிவெடுங்கள். குழப்பமில்லாத தெளிவான திட்டமிடுதல் மிகவும் அவசியம்.

86. 'ஒரு மாதம் என்னென்ன செலவு செய்கிறோம், அதில் எவையெல்லாம் தவிர்க்க முடியாதவை, எவையெல்லாம் தவிர்க்கக் கூடியவை...' எனப் பட்டியலிடுங்கள். அதன்படி செலவிடுங்கள்.

87. வீட்டுக் கடன் வட்டி, மின்சார பில், ஸ்கூல் ஃபீஸ் என்று வரும் தவிர்க்க முடியாத செலவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். ஹோட்டல், சினிமா, கேளிக்கை போன்ற தவிர்க்கக் கூடியவற்றுக்கு பின்னுரிமை கொடுங்கள்.

88. மிச்சமிருப்பதைச் சேமிப்பது என்று நினைத்தால் சேமிக்கவே முடியாது. சேமித்தபின் மிச்சமிருப்பதை செலவு செய்ய முடிவெடுங்கள். அப்போது சேமிப்பும் நிற்காது... வாழ்க்கையும் முடங்காது.

89. உங்கள் சேமிப்புப் பணத்தை உப்பு சப்பில்லாத காரணங்களுக்கெல்லாம் எடுக்காதீர்கள். தவிர்க்கவே முடியாத இயற்கைச் சீற்றம், மருத்துவத் தேவை போன்றவை தவிர எதற்கும் தொடாதீர்கள்.

90. குடும்பத்தினருக்கு பரிசுகள் கொடுப்பது, அன்பை வெளிப்படுத்துவதையெல்லாம் கொஞ்சம் பயனுள்ள வகையில் செலவிடலாம். சேமிப்புக்கு உதவும் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்கிப் பரிசளிக்கலாம்.

பொதுவான எச்சரிக்கைகள்!

91. 'அதிக லாபம்' என ஆசை காட்டும் இடங்களில் எல்லாம் முதலீடு செய்யாதீர்கள். அந்த கம்பெனி அதிக வருடங்களாக நம்பகத்தன்மையுடன் இருக்கிறதா, அதற்கு அரசின் அங்கீகாரம் இருக்கிறதா என்பதைப் பாருங்கள். அந்த கம்பெனி கடந்த காலங்களில் எப்படிச் செயல்பட்டது என்பதையும் அலசுங்கள்.

92. 'உடனே முதலீடு செய்யுங்கள்... இன்றே கடைசி!' என்றெல்லாம் உங்களை அவசரப்படுத்தும் நிறுவனங்களின் அழைப்புகளை அலட்சியப்படுத்துங்கள். இவையெல்லாம் உங்களை சிந்திக்க விடாமல் திடீரென முடிவெடுக்க வைப்பவை. இவை, பெரும்பாலும் ஏமாற்று வேலைகளாகத்தான் இருக்கும்.

93. மற்றவர்கள் வாங்குகிறார்கள் என கண்மூடித்தனமாக நீங்களும் போய் மாட்டாதீர்கள். பெரும்பாலான சிக்கல்களுக்கு இதுதான் காரணம். உங்களுக்கு முழுமையான நம்பிக்கை வராவிட்டால் எதிலும் இறங்காதீர்கள்.

94. முதலீடு செய்யும்போது அது தொடர்பான எல்லா ஆவணங்களையும் பாதுகாத்து வையுங்கள். பணம் கட்டிய ரசீது, கடிதங்கள்... அது, இது என அனைத்து சமாசாரங்களையும் பத்திரப்படுத்துங்கள். எதுவும் தேவையில்லை என உதாசீனப்படுத்தாதீர்கள். எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் இல்லாத முதலீடுகள் ஆபத்தானவை. அவற்றில் இறங்க வேண்டாம்.

95. முதலீட்டில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அதை உடனடியாக எழுத்து மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தெரிவியுங்கள். நீங்கள் அனுப்பும் கடிதங்களின் ஒரு காப்பியையும், அதற்கு வரும் பதில்களையும் பாதுகாத்து வையுங்கள்.

96. இணையம் மூலமாக ஏதேனும் இன்வெஸ்ட் செய்கிறீர்கள் என்றால் இரட்டைக் கவனம் தேவை.

97. ஒருவருடைய முதலீட்டு திட்டங்கள் எல்லோருக்கும் பொருந்துவதில்லை. எனவே, 'கலைவாணி போட்டிருக்கா, நானும் போடறேன்' என ஓடாதீர்கள்.

98. 'கோயில்ல உங்களைப் பார்த்தேன். எனக்கும் வாரத்துக்கு எட்டு நாள் (!) கோயிலுக்கு போகலேனா தலையே வெடிச்சுடும்...' என்றெல்லாம் ஒரு பில்டப் கொடுத்து உங்களிடம் கொஞ்ச நாளாக பழகும் நபர், நைஸாக முதலீட்டுத் திட்டத்தை அவிழ்த்தால், எச்சரிக்கையாக இருங்கள். பகவான் பக்தன் என ஏமாந்து விடாதீர்கள். இது போன்ற எமோஷனல் ஏமாற்றுவேலை இப்போது பெருகிவருகிறது... உஷார்.

99. 'ஆஸ்திரேலியாவில் தேக்குத் தோட்டம். அற்புதமான ஒரு வீடு. அடிக்கடி நீங்கள் போய் தங்கலாம்...' என்றெல்லாம் காற்றில் கோட்டை கட்டும் முதலீடுகளை மறுதலிப்பதே புத்திசாலித்தனம்.

100. 'ஒரு செமினாருக்கு வாங்க, சாப்பாடு ஃப்ரீ...' என்றெல்லாம் விளம்பரம் வந்தால் போகாதீர்கள். கோட்டு, சூட்டுடன் பத்து பேர் உங்களைச் சுற்றி உட்கார்ந்து முதலீட்டு விஷயம் பேசுவார்கள். கொஞ்சம் ஏமாந்த சோணகிரிகளைக் கொண்டு அவர்கள் பணத்தைப் பிடுங்குவதே இவர்களின் ஒரே நோக்கம்.

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள்.

- குறள்

சேமிக்கும் திறம் அறிந்து, தீமையன்றும் இல்லாமல் சேர்க்கப்பட்ட பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும்; இன்பத்தையும் கொடுக்கும்!

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts