லேபிள்கள்

புதன், 29 பிப்ரவரி, 2012

டிப்ஸ்...டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள்



மிக்சியை கழுவ
மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.
வெள்ளை துணி பளிச்சென்றாக
நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும் 
தரையில் எண்ணெய் கொட்டி விட்டால்
தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்
நைலான் கயிறு நீண்ட நாள் உழைக்க
நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்
துணிகள் சுருங்காமல் இருக்க.
துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்
பீரோ மணக்க
ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.
ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வருகிறதா?
உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.
கைக்குட்டை மணக்க
பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.
சாப்பாட்டு மேஜை
சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது
பழைய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள்
பழைய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது
வாஷ் பேசினில் துர்நாற்றம் வராமலிருக்க
வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

நபிவழித் திருமணத்தில் சோதனைகளா?



அஸ்ஸலாமு அலைக்கும்,
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
பல்வேறு சோதனைகளுக்கு மத்தியிலும் நபிவழியில் திருமணம் செய்ய மனஉறுதி கொண்டிருக்கும் சகோதர சகோதரிகளா நீங்கள்?
அப்படியென்றால் இந்த பதிவின் முதல் இலக்கு நீங்கள் தான். உங்களின் மனஉறுதியை அதிகப்படுத்தி, உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்க முயல்வதே இந்த பதிவின் நோக்கம். இன்ஷா அல்லாஹ்.
பதிவிற்குள் செல்லும்முன், நம் முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்காக, நபிவழி திருமணம் குறித்து சுருக்கமான விளக்கம்.
பெண்ணிடம் இருந்து வரதட்சணை/சீதனம் எதையும் (எவ்வழியிலும்) வாங்காமல், மணப்பெண்ணுக்கு மணக்கொடை கொடுத்து, எவ்வித சடங்குகளும் இன்றி எளிய முறையில் நடைபெறுவதே நபிவழி திருமணங்கள் ஆகும். விருந்து அளிக்க விருப்பமிருந்தால் அந்த செலவு மணமகனுடையதே.
பதிவிற்குள் செல்வோம்.
திருமணங்கள் குறித்த ஒரு உரையாடலின் போது, நபிவழி திருமணம் செய்த சகோதரி ஒருவரிடம் கருத்தை கேட்க, தன்னுடைய அனுபவத்தை மெயிலாக அனுப்பியிருந்தார் அவர்.
அந்த கடிதம் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு களைய சில நிமிடங்கள் ஆனது.
பலவித தடைகள் ஏற்பட்ட போதும், நபிவழியில் மட்டுமே திருமணம் செய்வோம் என்று இந்த மணமக்கள் எவ்வளவு உறுதிப்பாட்டோடு இருந்திருக்கின்றார்கள்!!!! சுப்ஹானல்லாஹ்(1).
நபிவழியில் திருமணம் செய்ய உறுதி பூண்டிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு இவர்களின் அனுபவம் பெரும் உற்சாகமாக இருக்குமென்பதால் அந்த கடிதம் சகோதரியின் அனுமதி பெற்று இங்கே பதிக்கப்படுகின்றது.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ.
எனக்கு திருமணப் பேச்சு ஆரம்பித்த அன்றே நான் சொன்னது,
‍'நபிவழித் திருமணம் மட்டுமே எனக்கு சம்மதம், அதனால் நீங்கள் எந்தநிலையிலும் கொள்கைச் சகோதரர்கள் அன்றி வேறு மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடாது, எந்த ஒரு துரும்பும் கணவன் வீட்டாருக்கு நீங்கள் கொடுக்கக் கூடாது, எனக்கு தேவையானதை நான் விரும்பி, எனக்காக மட்டும் கேட்பதை நீங்கள் எனக்குத் தந்தால் போதும்'
என் பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் நபிவழிக் கொள்கையுடையவர்களே என்பதால், 'இதில் என்ன சந்தேகம், இன்ஷா அல்லாஹ் அதுபோலவே முடிப்போம்' என்றார்கள். பிறகு நான் எதற்கு அதுபோல் சொல்லி வைத்தேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஏதாவது இடையில் வரக்கூடிய சின்ன சின்ன சோதனைக்கூட, மனித மனங்களை மாற்றிவிடும் என்று அஞ்சியிருந்தேன். அதனால் என் திருமணத்தை முடிவு செய்வதில் நான்தான் உறுதியாக இருக்கவேண்டும் என்று உறுதிசெய்து என் விருப்பத்தை முன்கூட்டியே கோரிக்கையாக வைத்துவிட்டேன். நான் அதில் உறுதியாக இருப்பதும் என் வீட்டார்களுக்கு நன்றாகவே தெரியும்.
திருமணப் பேச்சுக்கள் வருவதும், தவ்ஹீத்(2) மாப்பிள்ளை(?)யென வந்தும்கூட (அவர்களின் தாய்மார்களின் பேராசையால்) என்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாத அளவு தடங்கல் ஏற்படுவதும், அந்தப் பேச்சு அப்படியே நின்று கேன்சல் ஆவதுமாக வருடங்கள் ஓடின. ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல, 6 வருடங்கள்! (அப்போது எங்கள் ஊர் மற்றும் சுற்றுப்புறங்களில் தவ்ஹீத் சிந்தனையுள்ள‌ மாப்பிள்ளை அவ்வளவாக‌ இல்லாததும், நெடுதூர சம்ப‌ந்தத்தை நானும், என் பெற்றோரும் விரும்பாததும் இத்தனை வருஷங்கள் ஆனத‌ற்கு மேலும் சில‌ காரணங்கள்).
இதற்கிடையில் மனதைக் கஷ்டப்படுத்தும் (சுற்றத்தாரின்) பேச்சுக்களும், செயல்களும் என் பெற்றோரை கலக்கப்பட வைத்தது. திருமணத்திற்கு காத்திருக்கும் ஒரு பெண் என்ற அடிப்படையில், நானும் மிகுந்த வேதனையடைந்தேன் என்றாலும், என்னுடைய கொள்கையில் சற்றும் மாறாத மன உறுதியை அல்லாஹுதஆலா எனக்குக் கொடுத்திருந்தான், அல்ஹம்துலில்லாஹ்.
ஆனால் என் பெற்றோர்கள் அதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல், பேசிவரும் மாப்பிள்ளை வீட்டாரிடம் எனக்குத் தெரியாமலே கொஞ்சம் வளைந்துக் கொடுக்க முடிவெடுத்தார்கள். மாப்பிள்ளை வீட்டாருக்கு அன்பளிப்பாக‌(?) சில பொருட்கள் கொடுக்க சம்மதித்ததும், ஒரு இடத்தில் தவ்ஹீத்(?) மாப்பிள்ளை முடிவானது. சில நாட்களிலேயே இந்த விஷயம் எனக்குத் தெரியவரவே 'நீங்கள் என்ன காரணம் சொல்லி இதைக் கேன்சல் பண்ணுவீர்களோ தெரியாது, தன் திருமண விஷயத்தில் தன் தாயையும், உடன் பிறந்தவர்களையும் கட்டுப்படுத்தத் தெரியாத மாப்பிள்ளை எனக்கு வேண்டவே வேண்டாம்' என்று அடித்துச் சொல்லிவிட்டேன்.
ஒருவாறாக அதையும் கேன்சல் பண்ணிவிட்டு, என் தாயார் அழுதுக் கொண்டே இருந்தார்கள். 'ஆண்கள் உறுதியாக இருந்தால் பரவாயில்லமா, பெண் இப்படி பிடிவாதமாக இருந்தால் நான் எப்போதுதான் உனக்கு திருமணம் முடித்து பார்ப்பேனோ, உன்னைவிட சின்ன பிள்ளைகளுக்கெல்லாம் கல்யாணம் ஆகிவிட்டதே' என்று பலமுறை கண்ணீரோடு மன்றாடினார்கள் என் தாயார். அவர்களின் ஒவ்வொரு கண்ணீர் துளியும் என்னை ரணப்படுத்தியதே தவிர, கொண்ட கொள்கையில் உறுதியோடு இருந்தேன். தந்தையோ மிகவும் பொறுமை! அவர்கள் இருவருக்கும் மன தைரியத்தைக் கொடுக்க அல்லாஹ்விடம் துஆ(3) செய்துவிட்டு,
'இந்த முறையில் திருமணம் செய்ய இறைவன் எனக்கு நாடியிருந்தால் மட்டுமே என் திருமணம் நடக்கும்; இல்லாவிட்டால் எத்தனை வயதானாலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் சொன்னபடி வாழ்க்கை அமையும்வரை இப்படி காத்திருந்தே என் வாழ்க்கையை சந்தோஷமாக ஓட்டுவேன். ஒருவேளை எனக்குத் தெரியாமல் விட்டுக்கொடுத்து இதுபோல் நீங்கள் மீண்டும் மாப்பிள்ளையை முடிவு பண்ணி, அது கடைசி நேரத்தில் எனக்கு தெரிய வந்தாலும், திருமணத்தன்று சம்மதக் கையெழுத்து தரமாட்டேன், கல்யாணத்திற்கு பிறகு தெரிந்தாலும் அதற்காக கணவரிடமோ அவங்க வீட்டாரிடமோ போராடாமல் விடமாட்டேன், வாங்கியதை திருப்பிக் கொடுக்காவிட்டால் அது தலாக் வரை சென்றாலும் எனக்குக் கவலையில்லை, அல்லாஹ் சொன்ன மணவாழ்க்கைதான் எனக்கு முக்கியம்' என்று சொல்லிவிட்டேன்.
என் கொள்கையை ஒத்த‌ கணவரை அல்லாஹ் அமைக்கும் அந்த நாளும் வந்தது :) இருவீட்டாரும் மாப்பிள்ளை/பெண்ணைப் பார்த்த பிறகு அவரவர் ஊரில் (வெளி மக்களிடம்) மாப்பிள்ளை/பெண் பற்றிய‌ இருதரப்பு விசாரணைகளும் நடந்து முடிந்த‌து.

பிறகு கல்யாண நாள் மற்றும் (அவர்கள் வெளியூர் என்பதால் அதற்கான) முன்னேற்பாடுகள் போன்றவைக் குறித்தவற்றை பேசி முடிவு பண்ணிக் கொள்வதற்காக இருதரப்பு பெரியவர்கள் கூடியபோதே, எனக்கான மஹர்(4) 10 பவுனுக்குரிய‌ தொகை, எங்க ஊரில் திருமணம் என்பதால் வலிமா விருந்தை ஏற்பாடு செய்து வைப்பதற்காக அதற்குரிய தொகை, கல்யாணப் புடவைகள் வாங்கிக் கொள்வதற்கான தொகை என கைநிறைய‌ பணக்கட்டுகளை என்னவர் அனுப்பி வைத்தார். அதுமட்டுமில்லாமல், 'அந்த 10 பவுனுக்கும் நகை இருக்கவேண்டும், அதற்கான செய்கூலியைக்கூட அந்த பணத்திலிருந்து எடுக்கக் கூடாது, அதற்கான கூலி எவ்வளவு என்று (நகை வாங்கிய பிறகு) சொன்னால் அந்தப் பணத்தையும் நான்தான் தருவேன்' என்றும் என்னவர் சொல்லி அனுப்பிவிட்டார் :)
அப்போது நான் இருந்த அந்த குதூகல மனநிலை, அதை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கு மட்டுமே புரியும். கொடுக்கும் நிலை இல்லாமல் வாங்கும் நிலையை அல்லாஹ் எனக்கு ஏற்படுத்தினானே என்ற சந்தோஷத்தில் அல்லாஹ்வைப் புகழ்ந்துக் கொண்டே இருந்தேன். புன்னகையைத் தவிர, யாரிடமும் எந்த வார்த்தையும் பேசக்கூட வரவில்லை. இப்படியொரு நிலை எனக்கு என்று மட்டுமில்லை, எத்தனையோ தவ்ஹீத் பெண்களுக்கு வந்திருக்கலாம். ஆனால் நான் சந்தித்த சோதனைகளையும், அதற்கான போராட்டங்களையும் சொன்னால் அதை எழுத‌ பல பக்கங்கள் தேவைப்படும். அவ்வளவு கஷ்டங்களிலும் அல்லாஹ் ஒருவனை மட்டுமே நம்பி, அவனுக்காக உறுதியாக இருந்ததின் பலனை இன்றுவரை சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அல்லாஹ் மிகப் பெரியவன்!
(முன்பு நான் சொல்லியிருந்ததுபோல் பலவிதமாக தூற்றிய) எங்களின் சுற்றத்தார்கள் இந்த திருமண முடிவுகளைப் பார்க்கவேண்டும் என்பதால், (திருமணத்தை முடிவு செய்த அன்று) என் தந்தை அதுபோன்றவர்களை வலுக்கட்டாயமாக அழைத்திருந்தார்கள். அவர்களின் முன்னிலையில் அந்த ரூபாய்க் கட்டுகளை 'இது பெண்ணுக்காக மாப்பிள்ளை அனுப்பி வைத்துள்ளது' என்று சொல்லி, என் தந்தை என்னை அழைத்து வரச்செய்து என் கையில் கொடுத்ததும் அப்படியே அவர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனார்கள். அன்றிலிருந்து அவர்களும் தன் பிள்ளைகளுக்கு தவ்ஹீத் மாப்பிள்ளை வேண்டும் என்று தேட ஆரம்பித்தது தனிக் கதை :)
அல்ஹம்துலில்லாஹ்(5), திருமணம் நல்லபடி/நினைத்தபடி/நபிவழிப்படி நடந்தேறியது. இவையெல்லாம் மிக குறுகிய காலத்திற்குள் நடந்து முடிந்தன. நினைக்காத புறத்திலிருந்து தன் அடியார்களுக்கு அருள்செய்யும் வல்ல ரஹ்மான், என் எண்ணம்போல் வாழ்வு அமைத்துக் கொடுத்தான். அவனுக்கே புகழனைத்தும்!
என் மாமியாரும், வீட்டார்களும் நபிவழிக் கொள்கைக் கிடையாது என்று திருமணத்திற்கு பிறகுதான் தெரியும்.
'எனக்கு தவ்ஹீத் கொள்கையில் வாழும் பெண்தான் வேண்டும். சீர், நகையெல்லாம் எனக்குத் தெரியாமல் வாங்க ஆசைப்பட்டு நீங்களாகவே யாரையாவது முடிவு பண்ணி வந்தால் அந்த திருமணம் நடக்காது'
என்று என்னவர் தன் வீட்டாரை ஏற்கனவே மிரட்டி வைத்திருந்ததால் :) திருமணம் முடியும்வரை எதற்கும் வாய் திறக்காமல் இருந்திருக்கிறார்கள் என் மாமியார் வீட்டார்கள்
மேலும்,
'அவர்கள் பெண்ணுக்கு விரும்பிப்போட அவர்களுக்குத் தெரியும். அவர்களால் இயலாவிட்டால் உடுத்திய துணியோடுகூட மகளை அனுப்புவார்கள்தான். அதைக் கேட்க நமக்கு உரிமையில்லை. எனவே உங்கள் பெண்ணுக்கு போடுவதை நீங்கள் போடுங்கள் என்ற வார்த்தைக்கூட‌ வரக்கூடாது'
என்பதும் என்னவர் அவர் வீட்டருக்கு இட்டிருந்த‌ கட்டளை :) அதனால் திருமணம் முடியும்வரை மகனுக்கு பயந்து வாய்மூடி இருந்தவ‌ர்கள் திருமணத்துக்கு பிறகு சில பெரிய பிரச்சனைகளை எல்லாம் ஆரம்பித்தார்கள்.
ஆரம்பத்தில் என் கணவருக்கும் என் பெற்றோருக்கும் தெரியாமல் நானே சமாளித்தேன். போகப்போக நான் மறைத்து வந்ததையும் மீறி அவர்கள் எனக்குத் தந்த‌ பிரச்சனைகள் (நான் சொல்லாமலே) என் கணவருக்கு தெரிய ஆரம்பித்தன.
சீர் இல்லாமல் வந்ததால் நான் படும் துயரங்களை கண்ட என்னவர், எடுத்த எடுப்பிலேயே கடுமையாக தன் வீட்டாரை எதிர்க்க ஆரம்பித்தார். நடுவில் நானே சமாதானம் பண்ண வேண்டியிருந்தது. ஒருகட்டத்தில் என் பெற்றோருக்கும் இவை தெரிய வந்ததும், அவர்கள் 'அல்லாஹ் தந்த உன் மாப்பிள்ளைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை, மற்றவர்களின் தொல்லைகளை எவ்வளவு நாட்களுக்குதான் நீ தாங்கமுடியும்?' என்று சொல்லி, என்னை சும்மா பார்க்க வருவதுபோல் வந்து, சில பொருட்களை கொண்டு வந்தார்கள். வந்த என் பெற்றோர்கள் வீட்டிலிருந்து திரும்ப புறப்படும் முன்பே அதற்கான தொகையைக் கணக்கு பண்ணி (தன் வீட்டாருக்கு தெரியாமல்) வலுக்கட்டாயமாக திணித்து அனுப்பினார் என்னவர் :) இப்படியே ஓடியது.
என்னவர் பயணம் போய்விட்டு வந்ததும், 'நாங்க வேண்டாம் என்று சொன்னாலும் அவங்க பிள்ளைக்காக‌ கொடுப்பதற்கு அவங்களுக்கல்லவா அறிவு வேணும்?' என்று யார் மூலமோ என் மாமியார் வீட்டார் (என்னவருக்கு தெரியாமல்) சொல்லியனுப்ப, ஆஹா.. மீண்டும் ஆரம்பித்துவிட்டார்களா என்று பயந்து, சிலபல பொருட்களுடன் மருமகன் பயணத்தை வரவேற்க வந்திறங்கினார்கள் என் பெற்றோர். அவர்கள் கொண்டு வந்த பொருட்களின் விலை அதிகம். அதற்குரிய தொகையைக் கொடுத்தால் என் பெற்றோர்கள் பிடிவாதமாக மறுக்கிறார்கள். என்னவருக்கோ கோபம்!
'பிள்ளைக்கு உதவும் என்றுதான் இவற்றை வாங்கி வந்தோம்' என்று சமாளிக்கிறார்கள். 'எனக்குத் தேவை என்று நான் கேட்டேனா? இந்த சமாளிப்பெல்லாம் எனக்கு ஆகாது என்று உங்களுக்குத் தெரியும்' என்று சொல்லி, கொண்டு வந்தவற்றை எடுத்துச் செல்லும்வரை நீங்கள் போகக்கூடாது என்று நான் பிடிவாதம் பிடிக்க, 'வாங்கி வந்தபிறகு திருப்பிக் கொடுப்பது சரியல்ல, அதற்கான தொகையை நாம் கொடுத்துவிட்டு இந்தப் பொருட்கள் உங்கள் வீட்டிலிருந்து வந்ததாகவே காட்டிக் கொள்வோம், அப்போதாவது கொஞ்சம் இவர்கள் அடங்குவார்கள்' என்று என்னவர் சமாதான முடிவு சொன்ன பிறகு, மீண்டும் அதற்கான‌ தொகை என் பெற்றோரின் கைக்கு வலுக்கட்டாயமாக மாறுகிறது :) மருமகனை மறுத்துப் பேச இயலாமல், வேறு வழியின்றி என் பெற்றோர் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியதாகிப் போனது.
'அவர்கள் எது சொன்னாலும் நீங்கள் பயப்படத் தேவையில்லை, நாங்கள் சமாளித்துக் கொள்கிறோம்' என்று சொல்லி என் பெற்றோர்களை அனுப்பி வைத்தோம். இப்படியே என் மாமியார் வீட்டார் எதற்குமே சரிபட்டு வராததால், கடைசியாக என்னைத் தனிக்குடித்தனம் அழைத்துச் சென்றார் என்னவர். அப்போதும் அவர்களின் தாயையும், குடும்பத்தாரையும் கவனிப்பதை சிறிதும் நாங்கள் குறைத்துக் கொள்ளவில்லை.
பிறகுதான் எங்களின் நடவடிக்கையைக் கண்டு அவர்களே மனம் திருந்தி, இப்போது அவர்களும் கொள்கையை ஏற்றுக்கொண்டார்கள். (அல்ஹம்துலில்லாஹ்). பிறகு என் மாமியார் மௌத்தாகிவிட்டார்கள். அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்து, ரஹ்மத் செய்வானாக! இதுதான் என் நபிவழித் திருமணக் கதை :)
குறிப்பு:
மாப்பிள்ளை வெளியூர் என்பதால், (போக்குவரத்து கஷ்டம் கருதி) கல்யாணத்தன்றுதான் வலிமா(6) விருந்து கொடுத்தார்கள். (அன்றே கொடுப்பதற்கும் நபிவழியில் ஆதாரம் உள்ளது.) எங்கள் குடும்பம் பெரியது என்பதால், கூடுதலாக நாங்களே அழைப்புக் கொடுத்தவர்களுக்கான விருந்து செலவை மட்டும் என் தந்தை செய்தார்கள்.
(திருமணத்திற்கு முன்பே) நானே என் பெற்றோரிடம் விரும்பிக்கேட்ட சில நகைகள், புதிய ஆடைகள், பெண்களுக்கான சில அலங்காரப் பொருட்கள், நான் யூஸ் பண்ணிக் கொண்டிருந்த ஒரு பீரோ இவற்றை நான் என் பெற்றோரிடம் திருப்பிக் கொடுக்கவில்லை. அது ஏற்கனவே என்னுடையதாக இருந்தது. மாமியார் வீட்டிற்கு அந்த பீரோவைக்கூட எடுத்து செல்லக்கூடாது என்று தனிக்குடித்தனம் செல்லும்வரை, எங்க வீட்டிலேயே அதை வைத்துவிட்டேன்.
மற்றபடி என் மாமன்மார்கள், உறவினர்கள், தோழிகள் எனக்கு திருமணத்தில் செய்த அன்பளிப்பு நகைகளும் என்னிடமே. இன்றுவரை என்னிடம் எத்தனை பவுன் நகை உள்ளது என்ற விபரமும் என்னவருக்கு தெரியாது. நான் இஷ்டப்பட்டால் அதை விற்பேன், என் கணவருக்கு தேவைப்பட்டால் அவர் கேட்காமலே கொடுத்து உதவுவேன். அதேபோன்று நான் கேட்காமலே மீண்டும் அதை வாங்கித் தந்துவிடுவார்கள். சில நகைகள் வேண்டாம் என்று என்னவருக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறேன். அப்படி விட்டுக் கொடுத்ததையும்கூட, 'அல்லாஹ் பரக்கத் கொடுத்தால் அதைவிட அதிகமாகவே உனக்கு வாங்கித் தருவேன், இன்ஷா அல்லாஹ்' என்று (நான் மறந்ததையும்) அவர் மறக்காமல் சொல்லிக் கொண்டே இருக்கிறார் :)
மேலும் இங்கு நான் குறிப்பிட்டுள்ள எதுவும் தற்பெருமைக்காக சொல்லவில்லை என்பதை அல்லாஹ் பார்க்கிறான். என் வாழ்க்கை சொல்லும் பாடம் மற்ற‌ யாருக்காவது, பயன்பட‌லாமே என்ற நல்ல நோக்கில்தான் கூறியுள்ளேன்.
என் மகனின் திருமணம் சமயம் இன்ஷா அல்லாஹ்(7) நான் உயிரோடு இருந்தால், அன்றைக்கு அல்லாஹ் எங்களுக்கு வைத்திருக்கும் தகுதிக்கு எவ்வளவு அதிகமாக‌ முடியுமோ அந்த‌ளவு மணப்பெண்ணுக்கு செய்து, அவர்களிடமிருந்து எதையும் கேட்காமல்/எதிர்ப்பார்க்காமல் மணமுடித்து வைக்க நிய்யத்(8) உள்ளது. நிறைவேற துஆ செய்யுங்கள்.
மஅஸ்ஸலாமா!(9)
அன்பு சகோதரி.
அல்ஹம்துலில்லாஹ்.
இஸ்லாமிற்குள் தங்களை முழுமையாக அர்பணித்து கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை அப்படியே பிரதிபலிக்க விரும்புவார்கள்.
பெண் வீட்டார் தாங்களாகவே விருப்பப்பட்டு (??) வரதட்சணை/சீதனம் கொடுக்க முன்வந்தாலும், இவையெல்லாம் நபியவர்கள் காட்டி தந்த வழிமுறைக்கு எதிரானது என்று கூறி தங்கள் எண்ணத்தில் உறுதியோடு நிற்கும் சகோதரர்களுக்கும்,
தாங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் செயல்படாத மணமகன் தங்களுக்கு தேவையில்லை என்பதில் உறுதிப்பாட்டோடு இருக்கும் சகோதரிகளுக்கும்,
இவை அனைத்திற்கும் மேலாக, இறைவன் சொல்லாத ஒன்றை, நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தராத ஒன்றை நாங்கள் செய்யமாட்டோம் என்ற எண்ணத்தில் நங்கூரம் பாய்த்து உட்கார்ந்திருக்கும் பெற்றோருக்கும்,
இந்த பதிவு எவ்விதத்திலாவது உதவியிருந்தால் அந்த புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...
இறைவா, நபிவழி திருமணத்தில் உறுதியோடு இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு மனவலிமையை அளித்து அவர்கள் தங்கள் எண்ணங்களில் வெற்றி பெற உதவுவாயாக...ஆமீன்.
Please Note:

ஒரு உரையாடலின் போது, சகோதரர் ஒருவர், தான் ஒரு தளத்தில் படித்ததாக பின்வருவதை கூறினார்.

அதாவது, தன் மகள் பாத்திமா (ரலி) அவர்களுக்கு, அவர்களது திருமணத்தின் போது, நாயகம் (ஸல்) அவர்கள் பரிசுப்பொருட்கள் கொடுத்தனுப்பியதாக கூறினார் அவர்.

இது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட தகவல். சஹிஹ் ஹதீஸ்களில் இது போன்ற தகவல்கள் காணப்படவில்லை. அதே நேரம் சில வரலாற்று நூல்களில் இதனை காணமுடிகின்றது.

அப்படியே இருந்தாலும் அந்த வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி, பரிசுப்பொருட்கள் கொடுத்தனுப்பியது உண்மைதானென்றாலும் அதன் பின்னணி வேறு.

பின்வருவது தான் அந்த பின்னணி.

நாயகம் (ஸல்) அவர்கள், பாத்திமா (ரலி) அவர்களுக்கான மஹராக தன் மருமகன் அலி (ரலி) அவர்களிடம் இருந்து அவரது கவசத்தை பெற்றார்கள். பிறகு அதனை விற்க சொன்னார்கள். வந்த பணத்தை மூன்றாக பிரித்தார்கள். ஒரு பகுதியை பிலால் (ரலி) அவர்களிடம் கொடுத்து ஒரு வாசனை திரவியத்தை வாங்கி கொள்ள சொன்னார்கள். மற்ற இரு பகுதியை கொண்டு பாத்திமா (ரலி) அவர்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்து அனுப்பினார்கள்.

ஆக, நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்தது மஹராக வந்த பணத்தில். இதற்கும், வரதட்சனை/சீதனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்,
வார்த்தைகளுக்கான விளக்கங்கள்:
1. சுப்ஹானல்லாஹ் - புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக.
2. தவ்ஹீத் - ஓரிறை கொள்கை. இங்கே, நபிவழியில் உறுதிப்பாடோடு இருப்பவர்களை குறிக்கின்றது.
3. துஆ - பிரார்த்தனை.
4. மஹர் - மணமகனால் மணமகளுக்கு கொடுக்கப்படும் மணக்கொடை.
5. அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் இறைவனிற்கே.
6. வலிமா - திருமண விருந்து.
7. இன்ஷா அல்லாஹ் - இறைவன் நாடினால்.
8. நிய்யத் - நோக்கம்/எண்ணம்.
9. மஅஸ்ஸலாமா - பிரியும் போது முஸ்லிம்கள் உபயோகப்படுத்தும் வார்த்தை (ஆங்கிலத்தில் 'bye' என்று சொல்வதுபோல). இதற்கு "அமைதியுடன் (with peace)" என்று பொருள். 

திங்கள், 27 பிப்ரவரி, 2012

தங்களின் கணினியில் மவுஸ் வேலை செய்யவில்லையா


கவலை வேண்டாம்!

தங்களின் மவுஸ் வேலை செய்ய மறுக்கிறதா! நண்பர்களே, கவலை வேண்டாம் ஓர் தற்காலிக தீர்வு. தங்களின் கணினியில் மவுஸானது செயல்படவில்லை போன்ற பிரச்சனைகள் கண்டிப்பாக ஓர் சமயத்தில் நிகழும் நண்பர்களே!

நமது கணினியில் நாம் கீ-போர்டை காட்டிலும் அதிகம் பயன்படுத்துவது மவுஸைதான். அப்படியிருக்கும் போது ஓர் அவசர காலத்தில் தங்களின் மவுஸ் ஆனது வேலை செய்யவில்லை என்றால் எப்படி இருக்கும்...இது மாதிரி நிகழும் இந்த பிரச்சனையை தற்காலிகமாக போக்க ஓர் வழி உள்ளது. தங்களின் கணினி முறையில் சிறிய மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் இந்த முறையை செயல்படுத்தலாம். இதன் மூலம் தங்களின் கீ-போர்டினையே மவுஸ் ஆக பயன்படுத்தலாம். இந்த முறை
 STICKY KEYSஎன அழைக்கப்படும்.

இந்த முறையை தங்களின் கணினியில் செயல்படுத்த வேண்டுமா. முதலில் தாங்கள் செய்ய வேண்டியது.
·         1. தங்களின் கீ-போர்டில் SHIFT கீயை 5 முறை அழுத்துங்கள். தொடர்ந்து,
·         2.தற்போது தங்களின் விண்டோவில் S STICKY KEYSTIஎன்னும் ஓர் சிறிய திரை தோன்றும். அதில் SETTINGS என்பதைனை கிளிக் செய்யவும்.
·         3.பின்னர் தோன்றும் திரையில்MOUSE என்பதைனை கிளிக் செய்யவும். உதவிக்கு மேலே உள்ள புகைபடத்தை காணவும்.
·         4. பின்னர் USE MOUSE KEYS என்பதில் டிக் மார்க் அடையாளத்தை ஏற்ப்படுத்தவும். பின்னர் APPLY---OK என்பதைனை தந்து வெளியேறவும்.
·         5.தாங்கள் மேற்கொள்ள வேண்டிய முறை முடிந்தது.

இனி தங்களின் கீபோர்டினை எப்படி மவுஸ் ஆக பயன்படுத்துவது என காணலாம்.

·         1.தங்களின் மவுஸ் கர்சர் மேலே நகர்த்த வேண்டும் என்றால், தங்களின் கீபோர்டில் வலதுகை ஓரமாக இருக்கும் நம்பர் பட்டன்களில் 8 என்பதை அழுத்தவும்.
·         2.கீழே நகர்த்த வேண்டுமென்றால்-0
·         3.இடதுகை (LEFT)ஓரமாக நகர்த்த வேண்டுமென்றால்-4
·         4.வலதுகை(RIGHT) ஓரமாக நகர்த்த வேண்டுமென்றால்-6

மேலும் ஓர் செயலை
 OK OR SELECT செய்ய வேண்டுமென்றால் 5 என்னும் கீயை அழுத்தவும். அதாவது தங்களின் மவுஸில் LEFT CLICK மேற்கொள்ளும் முறையை இது மேற்கொள்ளும்.

மேலும் மவுஸில்RIGHT CLICK
 மேற்கொள்ளும் முறையை மேலே படத்தில் சுட்டி காட்டப்பட்டுள்ள பட்டனை கீபோர்டில் பயன்படுத்துவதன் மூலம் மேற்கொள்ளலாம்.

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

இண்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எப்படி?



டிரைவிங் லைசன்ஸ் தொடர்பான பல்வேறு விஷயங்களையும் கடந்த இரண்டு இதழ்களில் வாசகர்களுக்கு விளக்கிய சென்னை-மேற்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரி இன்னும் பல உபயோகமான தகவல்களையும் கூறினார். அவற்றின் தொகுப்பு...

இங்கே வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை வைத்துக் கொண்டு, ஒருவர் அமெரிக்கா சென்றால் அங்கே அவர் வாகனம் ஓட்ட முடியுமா?
இந்தியாவிலிருந்து, அமெரிக்காவுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ செல்பவர்கள், அங்கே சென்றவுடனே வாகனம் ஓட்ட வேண்டிய அவசியம் ஏற்படலாம். அந்த நாட்டில் டிரைவிங் லைசென்ஸுக்கு விண்ணப்பித்து, அது கிடைக்கும் வரை காத்திருக்க முடியாத சூழ்நிலையில், இங்கேஇருந்து செல்லும்போதே இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பர்மிட் வாங்கிக்கொண்டு செல்லலாம். இந்தியாவுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, அந்த டிரைவிங் பர்மிட், அந்த நாட்டில் ஓராண்டு காலத்துக்குச் செல்லுபடியாகும்.
சர்வதேச வாகனம் ஓட்டுநர் உரிமையை வாங்குவது எப்படி?
ஒருவர் நிரந்தர டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் மட்டுமே, இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் லைசென்ஸுக்கு விண்ணப்பிக்க முடியும். அதற்குரிய 4ஏ விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதனுடன் டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், விண்ணப்பதாரர் எந்த நாட்டுக்குச் செல்கிறாரோ அதற்குரிய விசா, பயண டிக்கெட் பிரதி, மருத்துவச் சான்றிதழ், மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் ஆகியவற்றை இணைத்து ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த அன்றே, இன்டர்நேஷனல் லைசென்ஸ் வழங்கப்பட்டுவிடும்.
இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வைத்திருந்து, கார் ஓட்டக் கற்றுக் கொண்டால், அவருக்கு இரண்டு வகையான வாகனங்களையும் ஓட்ட தனி லைசென்ஸ் வழங்கப்படுமா? இரண்டுக்குமாக சேர்த்து ஒரே லைசென்ஸ் வழங்கப்படுமா?
இரண்டு சக்கர வாகனம் ஓட்ட லைசென்ஸ் வைத்திருப்பவர். கார் ஓட்டுவதற்கு முதலில் பழகுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே இரண்டு சக்கர வாகனத்துக்குண்டான லைசென்ஸ் இருப்பதால் சாலை விதிமுறைகள் குறித்த தேர்வு எழுதுவதில் விலக்கு அளிக்கப்படும். முப்பது நாட்களுக்கு கார் ஓட்டப் பழகியவுடன், விண்ணப்பம் 8 ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். வாகன ஆய்வாளர் முன்பாக நீங்கள் காரை ஓட்டிக் காட்ட, அவர் திருப்தி அடைந்தால், இரண்டு சக்கரம், நான்கு சக்கரம் என இரண்டு வகை வாகனங்களையும் ஓட்டுவதற்கு புதிதாக ஒரே லைசென்ஸ் வழங்கப்பட்டுவிடும்.
ஒருவருக்கு வழங்கப்பட்ட லைசென்ஸ் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் காலாவதியாகிறபோது புதுப்பித்துக் கொள்ள என்ன வழிமுறை பின்பற்ற வேண்டும்?
பொதுவாக, போக்குவரத்து அல்லாத வாகனங்களை ஓட்டுவதற்கு உரிமம் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு ஐம்பது வயது வரை செல்லத்தக்க ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படும். அதன் பிறகு, அதனை நீட்டிக்க விரும்புபவர்கள், அதற்குரிய படிவம் 9 ஐ பூர்த்தி செய்து, உரிய கட்டணம் செலுத்தி, மருத்துவச் சான்றிதழுடன் விண்ணப்பித்தால், அது பரிசீலிக்கப்பட்டு ஐந்தாண்டு காலத்துக்கு ஓட்டுநர் உரிமம் அனுமதிக்கப்படும். போக்குவரத்து வாகனங்கள் என்றால் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.
இப்போது இரு சக்கர வாகனமோ (பைக்) காரோ வாங்கும்போது 15 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டிய சாலை வரியை ஒரே தடவையில் ஆயுள் கால வரிஎன்ற பெயரில் வசூலித்து விடுகிறார்களே? இப்படி ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என்பது கட்டாயமா?
1998ஆம் ஆண்டிலிருந்து போக்குவரத்து அல்லாத பிரிவில் வரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஆயுட்கால வரியாக வசூலிப்பது நடைமுறையில் உள்ளது. வாகன உரிமையாளர்களுக்கும், அரசாங்கத்துக்கும் இது செளகரியம்தானே? போக்குவரத்து வாகனங்களுக்கு காலாண்டு, அரையாண்டு, ஒரு ஆண்டு மற்றும் ஐந் தாண்டுகளுக்கு வரிப்படி சாலை வரி செலுத்த முடியும். (இன்னொரு விஷயம், வாகனம் வாங்குகிறபோது சாலை வரி என்ற பொதுவான பெயரில் செலுத்தும் தொகையில், வாகனங்களுக்காக செலுத்தப்படும் சாலை வரியைத் தவிர, வாகன பதிவுக் கட்டணம், சாலை பாதுகாப்பு வரி, சேவைக் கட்டணம் என்று இன்னும் சில செலவுகள் அடக்கம்).
ஒருவர் கார் வாங்கும்போது ஆயுள் வரி செலுத்துகிறார். சில ஆண்டுகள் கழித்து, அவர் ஆந்திராவுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிவிடுகிறார். தனது காரை ஆந்திராவுக்குக் கொண்டு செல்லும்போது, அங்கே மறுபடியும் சாலை வரி கட்ட வேண்டுமா?
ஆமாம். சாலை வரி என்பது அந்தந்த மாநிலங்களுக்கு செலுத்தப்படும் வரி. எனவே, நீங்கள் உங்கள் வாகனத்தை ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு எடுத்துக் கொண்டு செல்லும்போது, அங்கே அதை மறுபடியும் ரெஜிஸ்டிரேஷன் செய்யும்பட்சத்தில், அப்படிச் செய்துவிட்டு, அதற்குரிய ஆதாரங்களுடன் எங்களுக்கு விண்ணப்பித்து, மீதி வருடங்களுக்குரிய வாகன வரியை நீங்கள் திரும்பிப் பெற வழி உண்டு. உதாரணமாக வாகனம் வாங்கிய ஐந்தாவது ஆண்டில் நீங்கள் தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலத்துக்கு வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்று மீண்டும் பதிவுசெய்தால், மீதி பத்து ஆண்டுகளுக்குரிய வாகன வரியை நீங்கள் ரீஃபண்டு வாங்கிக் கொள்ள முடியும்.
வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் ஏன் கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது?
இன்று காற்று மண்டலம் எந்த அளவுக்கு மாசுபட்டுப் போயிருக்கிறது என்பதையும், இதில் வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகைக்கு எந்த அளவுக்கு பங்கு இருக்கிறது என்பதையும், நான் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. இந்த நிலைமை இன்னமும் மோசமாகாமல் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் நம் அனைவருக்குமே உண்டு. அதனால்தான், அரசாங்கம் வாகனங்களி லிருந்து வெளிப்படும் புகை இன்ன அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்று கட்டுப்பாடு வைத்துள்ளது.
அதன்படி, வாகன உரிமையாளர்கள் அனைவரும் தங்களுடைய வாகனங்களை மாசுக் கட்டுப்பாட்டு பரிசோதனைக்குட்படுத்தி, சான்றிதழ் பெற்று அதையும் வாகனம் ஓட்டுகிறபோது கையில் வைத்திருக்க வேண்டும். இந்தப் பரிசோதனையை, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு பரிசேதனை மையங்களில் மட்டுமே செய்ய முடியும். இதற்கென அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் கட்டணம் செலுத்தி, பரிசோதனை செய்து, சான்றிதழ் பெறவேண்டியது சட்டப்படி கட்டாயமாகும். இந்தச் சான்றிதழ்களுக்கான ஆயுட்காலம் ஆறு மாதங்கள். மாசுக் கட்டுப்பாடு சான்றிதழுடன், கூடவே ஒரு ஸ்டிக்கர் டோக்கனும் கொடுக்கப்படும். அந்த ஸ்டிக்கரை வாகனத்தில் ஒட்டி வைக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மாசுக்கட்டுப்பாட்டு பரிசோதனை செய்து, சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். வாகனப் பரிசோதனையின்போது, அதிகாரியிடம் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழைக் காட்டவில்லையென்றால், வாகனத்தின் ரகத்துக்கு ஏற்ப அபராதம் வசூலிக்கப்படும்.

சனி, 25 பிப்ரவரி, 2012

பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள்




சிறு சிறு குறிப்புகள் வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பதற்கும், சமையலில் சுவை கூட்டுவதற்கும், உடல்நலத்தை பாதுகாப்பதற்கும் உதவுகின்றன.

அவற்றில் சிலவற்றைப் இப்போது பார்ப்போம்.

பட்டுப் புடவைகள் மடிக்கும் போது ஜரிகையை உள்புறம் வைத்து மடித்தால் ஜரிகை கறுத்துப் போகாமல் பாதுகாக்கலாம்.

வெள்ளி நகைகள் வைத்திருக்கும் டப்பாவில் சிறிதளவு கற்பூரம் போட்டு வைத்தால் நகைகள் கறுக்காது.

வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பூக்கள் தூசியாக இருந்தால், பூவையும், உப்பையும் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு குலுக்கினால் புதியது போல் ஆகிவிடும்.

உடல் பருமன் குறைய உணவில் அடிக்கடி கொள்ளுப்பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

விளக்கெண்ணெயில் மஞ்சள் தூளைக் குழைத்து காலில் உள்ள சேற்றுப்புண் மீது தடவி வந்தால் குணமாகும்.

வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை மோர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது. இவற்றை வேக வைக்கும் போதும் ஒரு ஸ்பூன் மோர் ஊற்றினால் நிறம் வெண்மையாக இருக்கும்.

துவையல்களை அரைக்கும்போது மிளகாயைத் தவிர்த்து மிளகு சேர்த்து அரைத்து உண்டால் உடலில் உள்ள கொழுப்பு குறையும்.

காலிஃப்ளவரை சமைப்பதற்கு முன் வெண்ணீரில் சர்க்கரை கலந்து வேக வைத்தால் புழுக்கள் அழிவதுடன் காலிஃப்ளவரும் வெண்மையாக இருக்கும்.

தேங்காயை சிறு துண்டுகளாக்கி தயிரில் போட்டு வைத்தால் தயிர் புளிக்காமல் இரண்டு மூன்று நாட்கள் கூட இருக்கும்.

துவரம் பருப்பை வேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.

பெண்கள் மாதவிலக்கு காலத்தில் கோதுமைக் கஞ்சி சமைத்து உட்கொண்டு வந்தால் மாதவிலக்கு ஒழுங்காக நடைபெறும்.

துளசி இலை, வேப்பிலை இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

கீரை டிப்ஸ்...உங்களுக்கு மேலும் உதவுவதற்காக...



கீரை !

டாக்டரிடம் எதற்காக போய் நின்றாலும், 'சாப்பாட்டுல நிறைய கீரையைச் சேர்த்துக்கோங்க...' என்ற அட்வைஸே முதல் வந்து விழுவதால்... உடம்புக்கு குளிர்ச்சியையும், சத்துக்களையும் சகட்டு மேனிக்கு அள்ளித் தரும் கீரைகளைப் பற்றி நம்மவர்களுக்கு சந்தேகமே இல்லை.

உங்களுக்கு மேலும் உதவுவதற்காக...

கீரை டிப்ஸ்...

வல்லாரைக் கீரை சாப்பிடுவதால் ஞாபகசக்தி அதிகரிக்கும் என்பது உண்மையே. அதற்காக, அள்ளி வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தால்... தலைவ, மயக்கம் என்று படுத்த ஆரம்பித்துவிடும் ஜாக்கிரதை!

புளிச்சக்கீரை குடலுக்கு வலுவூட்டக்கூடியது. இதில் துவையல் செய்து சாப்பிட்டால், வயிற்றுப் புண், வயிற்றுக் கடுப்பு ஆகியவை குணமாகும்.

கீரைகளில் மசியல், கூட்டு செய்யும்போது பயத்தம்பருப்பை சேர்த்துச் செய்ய வேண்டும். இது சுவையைக் கூட்டுவதோடு... உடலுக்குச் சத்தையும், குளிர்ச்சியையும் தந்து தெம்பும் ஊட்டும்.

பாலக்கீரையில் அதிகமாக இரும்புச்சத்து இருக்கிறது. இந்தக் கீரையில் உப்பு சேர்த்து லேசாக வேக வைத்து, மிக்ஸியில் அரைத்து... கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். மலச்சிக்கலை போக்கி, உடம்பைப் புத்துணர்ச்சியாக வைக்கும்.

வயிற்றில் இருக்கும் அதிகப்படியான சதையை (தொப்பை) குறைக்கச் செய்யும் குணம் பசலைக்கீரைக்கு உண்டு. லேசாக வேக வைத்து பொரியல் செய்துகூட சாப்பிடலாம்.

மணத்தக்காளிக் காய்களை உப்பு, மோரில் பிசிறி வெயில் காய வைத்து, எண்ணெயில் பொரித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். வாய்ப் புண், வயிற்றுப் புண் ஆகியவை குணமாகும்.

இரவு வேளையில் கீரை சமைத்து சாப்பிடக்கூடாது என்பார்கள். சரிவர ஜீரணமாகாமல் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதுதான் காரணம்.

சிறுகீரை என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், அது தரும் பலன்கள் பெரிதுதான். மிளகு, சீரகம், சோம்பு, தக்காளி, வெங்காயம் இவற்றோடு சிறுகீரையைச் சேர்த்து வேக வைத்து, சிறிது பருப்பையும் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால்... பித்தம், நீர்க்கடுப்பு, கை, கால் வீக்கம் குறையும். சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், இன்சுன் இயல்பாக சுரக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

எந்தக் கீரையானாலும் துவையல் செய்தே சாப்பிடலாம். கீரையை நிறம் மாறாமல் நன்றாக வதக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், 2 பூண்டு பல், புளி, உப்பு சேர்த்து சிறிது எண்ணெயில் தனியாக வறுக்கவும். பிறகு, வதக்கிய கீரையுடன் சேர்த்து அரைத்தால் துவையல் தயார். இதைச் சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். ருசியாக இருப்பதோடு, சத்துக்களும் அப்படியே உடல் சேரும்.

ஒரு வரியில் கீரைகளின் மருத்துவ குணங்கள்
நாம் அன்றாடம் உபயோகிக்கும் கீரைகளின் மருத்துவ குணங்கள்
1. அகத்தி கீரை ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.*
2. காசினிக் கீரை சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். சூடு தணிக்கும்.*
3. சிறு பசலைக் கீரை சரும நோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குறைக்கும்.
4. பசலைக் கீரை தசைகளை பல மடையச் செய்யும்.*
5. கொடி பசலைக் கீரை வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.*
6. மஞ்சள் கரிசலை கல்லீரலை பல மாக்கும். காமாலையை விலக்கும்.*
7. குப்பை கீரை பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.*
8. அரைக்கீரை ஆண்மை பெருக்கும்.*
9. புளியங்கீரை சோகையை விலக்கும். கண் நோய் சரியாக்கும்.*
10. பிண்ணாக்கு கீரை வெட்டையை, நீர் கடுப்பை நீக்கும்.*
11. பரட்டைக் கீரை பித்தம், கபம், நோய்களை விலக்கும்.*
12. பொன்னாங்கன்னி மேனி அழகையும், கண் ஒளியை அதிகரிக்கும்.*
13. சீமைப்பொன்னாங்கன்னி மேனியை மினு மினுப்பாக்கும்.*
14. சுக்கா கீரை ரத்த அழுத்தத்தை சீர் செய்யும். சிரங்கு மூலத்தை போக்கும்.*
15. வெள்ளை கரிசலைக்கீரை ரத்த சோகையை நீக்கும்.*
16. முருங்கைக் கீரை நீரிழிவை நீக்கும். கண்கள் உடல் பலம் பெறும்.*
17. வல்லாரை மூளைக்கு பலம் தரும்.*
18. முடக்கத்தான் கீரை கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும்.*
19. புண்ணக் கீரை சிரங்கும், சீதளமும் விலக்கும்.
20. புதினாக் கீரை ரத்தம் சுத்தி செய்யும். அஜீரணம் அகற்றும்.*
21. நஞ்சு முண்டான் கீரை விஷம் முறிக்கும்.*
22. தும்பை அசதி, சோம்பல் நீக்கும்.*
23. கல்யாண முருங்கை கீரை சளி, இருமலை துளைத்தெறியும்.*
24. முள்ளங்கிகீரை நீரடைப்பு நீக்கும்.
25. பருப்பு கீரை பித்தம் விலக்கும். உடல் சூட்டை தணிக்கும்.*
26. புளிச்ச கீரை கல்லீரலை பலமாக்கும். மாலைக்கண் நோயை விலக்கும். ஆண்மை பலம் தரும்.*
27. மணலிக்கீரை வாதத்தை விலக்கும். கபத்தை கரைக்கும்.*
28. மணத்தக்காளி கீரை வாய், வயிற்றுப்புண் குணமாக்கும். தேமல் அகலும்.*
29. முளைக் கீரை பசியை ஏற்படுத்தும். நரம்பு பலமடையும்.*
30. சக்கரவர்த்தி கீரை தாது விருத்தியாகும்.*
31. வெந்தயக் கீரை மலச்சிக்கலை நீக்கும். மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.*
32. தூதுவளை ஆண்மை தரும் சரும நோய் விலக்கும். சளி நீக்கும்.*
33. தவசிக் கீரை இருமலை போக்கும்.*
34. சாணக் கீரை காயம் ஆற்றும்.
35. வெள்ளைக் கீரை தாய்ப்பாலை பெருக்கும்.*
36. விழுதிக் கீரை பசியைத் தூண்டும்.*
37. கொடி காசினி பித்தம் தணிக்கும்.*
38. வேலைக் கீரை தலைவலியை போக்கும்.*
39. துயிளிக் கீரை வெள்ளை வெட்டை விலக்கும்.*
40. துத்திக் கீரை வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.*
41. கார கொட்டிக்கீரை மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.*
42. மூக்கு தட்டை கீரை சளியை அகற்றும்.*
43. நருதாளி கீரை ஆண்மையை பெருக்கும். வாய்ப்புண் அகற்றும்.
***
மேலே குறிப்பிட்ட சில கீரை வகைகளில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் உடலுக்கு சிறு தீங்கு விளைவிப்பவைக்கு உதாரணம்,
44. அகத்தி கீரை மருந்து சக்தியை முறியடிக்கும்.
45. பிண்ணாக்கு கீரை வாத கரப்பான் வரும்.

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts