லேபிள்கள்

செவ்வாய், 1 நவம்பர், 2011

நவீன முஃப்திகளும் நூதன ஃபத்வாக்களும்!


எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
அன்பு சகோதர, சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
அல்லாஹ் கூறுகிறான்: -
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(அல்குர்ஆன் 51:56)
வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை” என்ற வாசகத்தை கவனமாக நோக்குகின்ற போது நமக்கு ஒரு பேருண்மை விளங்கும். அதாவது மனிதர்களின் வேலை இறைவனை வணங்குவதாக மட்டும் தான் இருக்க வேண்டும். வேறு எந்த வேலையும் அவன் செய்யக்கூடாது. அப்படியென்றால் அவன் இவ்வுலகில் வாழ்வது எவ்வாறு என்ற கேள்வி எழலாம். ‘வணக்கம் – இபாதத்’ என்பதன் பொருள் அறியாததால் தான் இத்தகைய சந்தேகங்கள்  வருகின்றது.
ஒரு முஸ்லிம் தன்னுடைய வாழ்க்கையை, இறைவன் தன் திருமறையில் கூறிய சட்ட திட்டங்களுக்கு ஏற்பவும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளுக்கு ஏற்பவும் அமைத்துக் கொண்டு வாழ்வானானால் அதுவே இபாதத் ஆகிவிடுகிறது. இன்னொரு வகையில் சுருக்கமாக கூறுவதென்றால், ஒரு மனிதன் திருமறை மற்றும் நபிவழிக்கேற்ப,‘ஏவல் – விலக்கல்களை’ கடைபிடித்து வாழ்ந்தால், ‘ஹராம் – ஹலால்’ ஆகியவற்றை முறையே பேணி நடந்தால் அதுதான் அவன் தன் இறைவனை வணங்குவதாகும். இவ்வாறு அவன் தன் வாழ்நாள் முழுவதும் அமைத்துக்கொள்ளும் போது அவன் வாழ்நாளை இவைனை வணங்கியவனாக கழித்தவனாகின்றான்.
ஹலால் – ஹராமை தீர்மானிப்பது யார்?
ஒருவன், ஏவல்-விலக்கல்களை, ஹலால்-ஹராமை தன்னுடைய வாழ்வில் முறையாகப் பேணி நடந்தால் அதுவே ‘வணக்கம் – இபாதத்’ எனும் போது அந்த இபாதத்தையும் இறைவன் ஒருவனுக்கே செய்ய வேண்டும். வேறு வகையில் கூறுவதானால், ஹராம்-ஹலால் என்பதை தீர்மானிக்கும் ஏக உரிமை அல்லாஹ்வுக்கே முற்றிலும் உரியது என்றும் விளங்க முடியும்.
ஹராமை ஹலாலாகவும், ஹலாலை ஹராமாகவும் ஆக்குவது இறைவனுக்கு இணை கற்பிப்பது போன்றதாகும்!
இன்று நமது சமூகத்தில் பரவலாகக் காணப்படக்கூடிய மாபெரும் தீமைகளுல் ஒன்றாக இது விளங்குகின்றது. சிலர் போதிய மார்க்க அறிவின்மையாலும், தங்களின் மனோ இச்சைகளுக்கு கட்டுப்பட்டும், இன்னும் சிலர் இறை நிராகரிப்பாளர்களின் செல்வ செழிப்பில் மயங்கியவர்களாக அவர்களைப் போல நாமும் வாழ வேண்டும் என்ற பேராவலில் இறைவன் ஹராம் என்றதைக் கூட ஹலால் என்றோ அல்லது இறைவன் கூறுவது வேறு; இன்றைய நடைமுறையில் உள்ளது வேறு என்றெல்லாம் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் சுயவிளக்கம் கொடுத்து தம்முடைய மனோ இச்சைகளுக்கு வழிபட்டவர்களாக, இறைவன் திட்டவட்டமாக ஹராம் எனக்கூறியதைக் கூட ஹலால் ஆக்குவதற்கு முற்படுகின்றனர். இன்னும் சிலரோ மத்ஹபுகளின் பெயரால் முன்னோர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றி,  கண்ணியமிக்க இமாம்களின் பெயரைப் பயன்படுத்தி அல்லாஹ் ஆகுமானதாக்கியதைக் கூட ஹராம் எனத் தடுத்துக் கொள்கின்றனர்.
அல்லாஹ் ஹராமாக்கியவற்றை ஹலாலாகவும் அல்லாஹ் ஹலாலாக்கியவற்றை ஹராமாகவும் ஆக்கும் ஒருவரின் இத்தைகய செயல்களை மற்றவர்கள் மனமுவந்து ஏற்று அதைப் பின்பற்றுவது என்பது  மிகப் பெரும் பாவமாகிய இறைவனுக்கு இணைவைத்தலுக்கு ஒப்பானது ஆகும் என்பதையும் நாம் உணர வேண்டும். ஹலால், ஹராம் ஆக்குகின்ற இந்த உரிமை அல்லாஹ்வை தவிர மற்றவருக்கும் இருக்கிறது என்று நம்புவதை அல்லாஹ் மிகப் பெரும் இணைவைப்பு என பின்வரும் வசனத்தில் கூறியுள்ளான்:
“அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை – அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்” (9:31)
இந்த வசனத்திற்கு பின்வரும் ஹதீஸ் மூலம் நாம் விளக்கம் பெறலாம்.
(முன்பு கிறிஸ்தவராக இருந்த) அதிய்யுப்னு ஹாதிம் (ரலி) இந்த வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிடக் கேட்டபோது அந்த மக்கள் அவர்களை (பாதிரிகளையும், துறவிகளையும்) வணங்கிக் கொண்டிருக்கவில்லையே என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், சரிதான்! ஆனால் அந்த பாதிரிகளும், துறவிகளும் அல்லாஹ் ஹராமாக்கியவற்றை ஹலால் என்றும், அல்லாஹ் ஹலாலாக்கியவற்றை ஹராம் என்றும் கூறும்போது அவர்களும் அவ்வாறு ஏற்றுக் கொண்டார்களே! அதுதான் அவர்களை அவர்கள் வணங்குவதாகும். (என்று கூறினார்கள்) (திர்மிதி, பைஹகி)
திருமறை மற்றும் எவ்வித நபிமொழி ஆதாரமில்லாமல் தம் மனோஇச்சைகளின் அடிப்படையில் ஒருவர் அல்லாஹ் ஹலால் என்றதை ஹராமாகவோ அல்லது அல்லாஹ் ஹராமாக்கியதை ஹலால் ஆகவோ மாற்றிக் கூறுபவர்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்காமல் அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்வது என்பதும் இணைவைப்பே என்பதை மேற்கண்ட வசனம் மற்றும் ஹதீஸ் மிகத் தெளிவாகவே  விளக்குகின்றது.
ஹலால் – ஹராமை தீர்மானிக்கும் உரிமை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு உண்டா?
தம் மனைவியின் திருப்தியை நாடி தேன் சாப்பிடமாட்டேன் என்று கூறிய நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ் பின்வரும் கேள்வியை எழுப்பியதை நாம் அறிந்திருக்கின்றோம்.
“நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்” (66:1)
நபி (ஸல்) அவர்களுக்கே அல்லாஹ் ஹலாலாக்கியதை எவ்வாறு தடை செய்து கொள்ள முடியும்? என்று கூறி அல்லாஹ் கேள்வி எழுப்பினால் நம்மவர்களின் நிலை என்ன என்பதை நாம் சற்று சிந்திக்க வேண்டும்.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே!) நீர் கூறும்: ‘அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்! (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?’ (10:59)
இன்றைய காலகட்டத்திலே நம்மில் சிலர், ஏன் குர்ஆன் ஓதத் தெரியாதவர்கள் கூட நாங்கள் ஏகத்துவத்தைப் பின்பற்றுபவர்கள் எனக் கூறிக்கொண்டு, சிலர் கூறுவதை கண்மூடித்தனமாகப் பின்பற்றி, எவ்வித மார்க்க அறிவுமின்றி சில விஷயங்களில் ‘ஹலால்-ஹராம்’ என ஃபத்வா கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர். எந்த அடிப்படையில் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்டால் பதில் கூட சொல்லத் தெரியாது! இவ்வாறு ஃபத்வா கூறுவது எத்தகைய விபரீதமான செயல் என்பதை இவர்கள் சிறிதும் உணர்வதில்லை. இது தற்போது நம்மர்களைப் படித்திருக்கின்ற மிகப்பெரிய கேடு! இவர்கள் மேற்கண்ட திருமறை வசனங்களையும், நபிமொழிகளையும் சற்று கவனமாகப் படித்து தெளிவு பெற வேண்டுகிறேன்.
அதேபோல, சிலர் குர்ஆன் மற்றும் ஹதீதுகளின் அடிப்படையில் ஒரு சிலவற்றை இறைவன் ஹராம் எனத் தடுக்கிருக்கின்றான் என நன்கு அறிந்திருக்கின்ற நிலையில், ஷைத்தானின் மாயவலையில் சிக்குண்டு, இறைவனின் மேற்கூறப்பட்ட எச்சரிக்கைகள் மறக்கடிக்கப்பட்ட நிலையில், தம் மனோ இச்சகைகளைப் பின்பற்றியவர்களாக, பெரும்பாண்மையானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகவும், பிறரிடம் கண்ணியம் தேடியும், அழியக் கூடிய அற்பபொருளாதாரத்தை அடைய வேண்டியும், மார்க்கத்தில் இவை பற்றி தெளிவாக விளக்கப்படவில்லை என்றெல்லாம் காரணம் கூறி அவற்றை ஹலாலாக்க முற்படுவர். இவர்களின் கூற்றுக்கு மார்க்கத்தில் போதிய ஆதாரமோ அல்லது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலே தெளிவான சான்றுகளோ எதுவும் இருக்காது! இருப்பினும் ஷைத்தான், இந்த ஹராமான செயல்களை அவர்களுக்கு அழகாக்கி அவர்களை அதைப் பின்பற்றுமாறு செய்யவைக்க முயற்சிப்பதோடு அவர்கள் மூலம் பிறரையும் இந்த வழிகேட்டைப் பின்பற்ற வைத்து மாபெரும் வழிகேட்டின் பக்கம் அவர்களை அழைத்துச் செல்கிறான்.
ஏகத்துவ வாதிகளைப் பொருத்தவரை ‘ஷிர்க்’ வைத்தால் தான் நிரந்தர நரகம்! மற்ற பாவங்களை அல்லாஹ் மன்னிக்க கூடியவனாக இருக்கின்றான் என்ற அதீதமான நம்பிக்கையில் இருக்கின்றார்கள். ஆம் உண்மைதான்! அல்லாஹ் இணைவைப்பைத் தவிர ஏனைய பாவங்களை தான் நாடியோருக்கு மன்னிப்பதாக வாக்களித்திருக்கின்றான்!
ஆனால் என்ன பரிதாபம்! அல்லாஹ் ஹராமாக்கியதை ஹலால் எனக் கூறுபவரை பின்பற்றினால் அவரை வணங்கிய குற்றத்திற்கு ஆளாவோம் என்பதைக்கூட இந்த ஏகத்துவவாதிகள் ஏனோ உணர்வதில்லை! மத்ஹப் வாதிகள் ஹலால்-ஹராம் விசயத்தில் திருமறை மற்றும் நபிவழிக்குப் பதிலாக இமாம்களைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு அவர்களுக்கு அறிவுரை கூறும் போது இதுபற்றிய வசனம் (9:31) மற்றும் நபிமொழியை ஆதாரமாக கூறும் இவர்கள், ஏனோ தம்முடைய வாழ்வில் பின்பற்றுவதில்லை!
இன்னும் சிலரோ தர்க்கரீதியாக வாதாட முற்படுவர். அதாவது ஒரு குறிப்பிட்ட விசயத்தின் நவீன பெயரைக் குறிப்பிட்டு இவற்றை இறைவன் ஹராம் எனத் தடுக்கவில்லை! எனவே நாமும் அதை ஹராம் என்று கருத தேவையில்லை! எனக் கூறுவர். ஒரு முக்கியமான விசயத்தை இவர்கள் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். இவர்கள் குறிப்பிடும் அந்த விசயத்தில் இறைவன் தடைசெய்த அம்சம்கள் நிறைந்திருக்குமானால் அதுவும் தடைசெய்யப்பட்டதாகவே அமையும். அவைகளை நாம் எந்தப் பெயர்களில் அழைத்தாலும் சரியே!
உதாரணமாக, தற்போது குறிப்பாக தமிழகத்தில் நடைமுறையில உள்ள சினிமாவை எடுத்துக் கொண்டால் அவற்றில் இஸ்லாம் தடை செய்திருக்கின்ற விபச்சாரத்தைத் தூண்டுகின்ற ஆபாசம், வன்முறை, கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், இசை இன்னும் ஏராளமான மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் இடம் பெற்றிருப்பதால் நிச்சயமாக இவ்வகையான சினிமாக்களை மார்க்கத்தில் அனுமதி உள்ளதாக ஒருபோதும் கருதமுடியாது.  மேலும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உறுதியாக நம்புகின்ற முஃமினான ஒருவர், ‘விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள்’ என்ற இறைவனின் கட்டளைக்கேற்பவும் இன்னும் பல திருமறை வனங்களின் எச்சரிக்கைகளுக்கேற்ப இவற்றை விட்டும் முற்றுமுழுதாக விலகியிருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
‘ஹலால் என்னும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது; ஹராம் என்னும் விலக்கப்பட்டதும் தெளிவானது; அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன. பாவம் எனச் சந்தேகப்படுபவற்றை விட்டுவிடுகிறவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை நிச்சயம் விட்டுவிடுவார்; பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைச் செய்யத் துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும். பாவங்கள் அல்லாஹ் போட்ட வேலிகளாகும். வேலியைச் சுற்றி மேய்கிறவர் அதற்குள்ளும் சென்று விடக்கூடும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: நுஃமான் இப்னு பஷீர்(ரலி); நூல்: புகாரி
ஹராமான விசயங்கள் பலவற்றை தன்னுள்ளே ஒட்டுமொத்தமாக இத்தகைய சினிமாக்கள் அடக்கியுள்ளதால் இவையும் ஹராம் எனும்போது, இதற்கு ஆதரவு தருவதோ அல்லது இவற்றை நமது பத்திரிக்கைகளிலோ அல்லது இணைய தளங்களில் பிரசுரிப்பது அல்லது பதிவதன் மூலம் அவற்றிற்கு விளம்பரம் தேடித்தருவதோ கூடாது என்பதை மிகத்தெளிவாகவே அறியலாம்! ஆனால், இறைவனின் எச்சரிக்கைகளையெல்லாம் உதாசீனம் செய்து, வரம்பு மீறியவர்களாக, அற்ப இவ்வுல வாழ்க்கையின் வெற்றியையே முக்கிய குறிக்கொளாகக் கொண்டு இவற்றை நாம் செய்கின்ற வேளையில், இறைவனால் தடை செய்யப்பட்ட தீமைகளை ஒட்டு மொத்தமாக உள்ளடக்கிய இந்த சினிமாவை நாம் அங்கீகரித்து அவற்றிக்கு ஆசிர்வாதம் வழங்கியது போலாகும். நம்முடைய இத்தகைய செயல்களினால் முஸ்லிம் ஒருவர் வழிதவறிச் சென்றால் அவரின் பாவமூட்டைகளையும் நாம் மறுமையில் சுமக்க வேண்டிவரும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
அல்லாஹ் கூறுகின்றான்:
“கியாம நாளில் அவர்கள், தங்கள் (பாவச்) சுமைகளை முழுமையாக சுமக்கட்டும்! மேலும் அறிவில்லாமல் இவர்கள் எவர்களை வழி கெடுத்தார்களோ, அவர்களுடைய (பாவச்) சுமைகளையும் (சுமக்கட்டும்)! இவர்கள் (சுமக்கும்) சுமை மிகவும் கெட்டதல்லவா?” (16:25)
ஹராமானவைகள் தான் அல்லாஹ்வின் வரம்புகளாகும்; அல்லாஹ் விதித்த வரம்புகளை மீறாதீர்கள்:
அல்லாஹ் கூறுகிறான்:
“எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்! அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்! மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.” (4:14).
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
‘நான் உங்களுக்கு எதைத் தடுத்துள்ளேனோ அதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு எதை ஏவியுள்ளேனோ அதை முடிந்த அளவு செய்யுங்கள்’. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்.
எனவே அன்பு சகோதர, சகோதரிகளே மேற்கண்ட திருமறை வசனங்கள், ஹதீஸ்கள் மற்றும் விளக்கங்களிலிருந்து நாம் பெறும் தெளிவு என்னவெனில்,
  • இறைவன் விதித்த ஹராம் மற்றும் ஹலாலைப் பேணுவதும் வணக்கமாகும்
  • இறைவன் ஹராம் என்று விலக்கியிருப்பதை மீறுவது இறைவனின் வரம்பை மீறியதாகும்
  • இறைவனின் வரம்புகளை மீறியோருக்கு கடுமையான தண்டனைகள் இருக்கின்றது
  • ஒருவர் இறைவன் ஹலால்-ஹராம் என விதித்திருப்பதை தம் சுய விருப்பத்திற்கு இணங்க, மனோ இச்சைகளுக்கு கட்டுப்பட்டவராக இறைவனின் வரம்புகளான ஹராம் – ஹலால் என்பதை மாற்றியமைப்பது இறை நிரகாரிப்பு ஆகும்
  • ஒருவர் இவ்வாறு மாற்றியமைத்ததைப் பின்பற்றுவது அவரை வணங்குவது போலாகும். இது மாபெரும் பாவமாகிய இணைவைப்பு ஆகும். இது இறைவன் நம்மைப் படைத்த நோக்கமான அல்லாஹ்வை வணங்குவதை விட்டும் பிறரை வணங்கியதாக ஆகிவிடும். (அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக)
  • தவறான வழிகாட்டுதலின் மூலமாக ஒருவர் வழிதவறிச் சென்றால் மறுமையில் அவருடைய பாவச் சுமையயையும் தம்முடையதுடன் சேர்த்து சுமக்க நேரிடும்.
  • இறைச்சட்டங்களில் விளையாடுவோர்களை நாம் புறக்கணித்து அல்லாஹ்விடம் பாதுகாவல் கோரியவர்களாக திருமறையையும், அல்-குர்ஆனின் வழிமுறைகளையும் பின்பற்றி வாழ்வதற்கு முயற்சிக்க வேண்டும்.
கருனையாளனான அல்லாஹ் ஹலால், ஹராம் என விதித்த வரம்புகளை மீறாதவர்களாக அவனுக்கே முற்றிலும் கட்டுப்பட்டு வாழ்வதன் மூலம் அவனையே வணங்குபவர்களாக நம் அனைவரையும் ஆக்கியருள்வானாகவும். ஆமீன்.
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts