லேபிள்கள்

புதன், 5 அக்டோபர், 2011

தாய்ப்பாலை சேமித்து வைப்பது எப்படி?




குழந்தை பிறந்ததுமே தாய்க்கு முதன் முதலில் வரக்கூடிய பாலை சீம்பால் (Colostrum) என்கிறோம். இதன் அருமை பலருக்குப் புரிவதில்லை. இந்த சீம்பாலைக் குழந்தைக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும். காரணம் பாப்பாவுக்கான நோயெதிர்ப்பு சக்தி இதிலிருந்துதான் அதிகப்படியாகக் கிடைக்கிறது. அதனால் தவறாமல் சீம்பால் கொடுங்கள்! 

தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் திருப்தியே தனிதான்!
 

தாய்ப்பால் கொடுப்பதால் தாய் ஒரு விதமான திருப்தியை உணர முடியும். அதைக் கொடுப்பதன் மூலம் தாயின் மன அழுத்த நிலை பெருமளவு குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
 

தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு மார்புப் புற்று நோயிலிருந்து இயற்கையான பாதுகாப்பும் கிடைக்கிறது.
 

பாப்பா தாயிடமிருந்து பாலை உறிஞ்சிக் குடிக்கும்போது அந்தச் செயலானது தாயின் மூளையிலிருந்து ஒரு ஸ்பெஷல் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. இதுதான் தாயின் மார்பகத்தின் மீது செயல்பட்டு பால் சுரக்கவே செய்கிறது! மேலும் இந்த ஹார்மோன் அம்மாவின் கர்ப்பப்பையின் மீதும் செயல்பட்டு அதை இயல்பாகச் சுருங்கச் செய்யவும் உதவுகிறது.
 

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிகவும் குறைகிறது என்கிறது இன்னொரு ஆராய்ச்சி.
 

சில குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே டயாபடீஸ் நோய் வந்து, அவர்களை வாழ்நாள் முழுவதும் அவஸ்தைப்பட வித்திட்டு விடுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் இந்த Juvenile Diabetes வருவது வெகுவாகக் குறைவதாகவும் தெரிகிறது.
 

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தை அதிபுத்திசாலியாக இருக்கும் வாய்ப்புகளும் அதிகம் என்றும் ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
 

எப்பொழுதெல்லாம் தாய்ப்பால் கொடுக்கக்கூடாது?
 

அம்மாவுக்கு சளி, ஜுரம் பிடித்து அதற்கான மருந்தை அவர் சாப்பிட்டு வந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம். அதில் தவறெதுவும் இல்லை. காரணம், இன்று இதற்காக வரக்கூடிய பல மருந்துகள் பாதுகாப்பானவையாகவே இருக்கின்றன. ஆனால், தாய் எந்த மருந்து சாப்பிடுவதாக இருந்தாலும் (அது கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவர் பலமுறை பயன்படுத்திப் பழகிய மருந்தாக இருந்தாலும் கூட) டாக்டரின் ஆலோசனை பெற்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.
 

தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்த முதல் சில நாட்களில் மார்பகக் காம்பில் (நிப்புள்) அம்மாவுக்குப் புண் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் வலி ஏற்பட்டு சிலர் குழந்தைக்குப் பால் கொடுப்பதைத் தற்காலிகமாக நிறுத்திவிடுகிறார்கள். இப்படிச் செய்வது தவறு. தொடர்ந்து பால் கொடுக்கத் தவறினால் அம்மாவுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அதுவும் பெரிய அவஸ்தையாகிவிடும். இதனால் தாய்க்கு ஜுரம் கூட வரும். அதை கவனிக்காவிட்டால் அங்கு சீழ் உருவாகிவிடும் அபாயமும் உள்ளது.
 

இப்படி நீங்கள் விஷயத்தை சீழ் வரை எடுத்துச் சென்றால் அதற்கான ட்ரீட்மெண்ட் கொடுக்க, ஒரு சின்ன அறுவை சிகிச்சையேகூட செய்ய வேண்டி வந்துவிடலாம். அதனால் விஷயத்தை சீழ்வரை எடுத்துச் செல்லாமல் ஜாக்கிரதையாக செயல்படுங்கள். ஆனால் இந்த நிலையிலும்கூட அம்மா, பாப்பாவுக்கு இன்னொரு மார்பகத்தில் தொடர்ந்து பால் கொடுத்து வரலாம்.
 

இப்படிப் பால் கட்டிக்கொண்ட சமயங்களில் மார்பகத்தில் சுடூநீர் ஒத்தடம் கொடுத்து, கட்டிக்கொண்ட பாலைப் பீய்ச்சி எடுக்கவேண்டும். குழந்தைக்கு சரியான நேர இடைவெளிவிட்டு ஒவ்வொரு தரமும் பால் கொடுக்க வேண்டும். இப்படி பால் கொடுக்கும் நேர இடைவெளி அதிகமாகும் சமயங்களிலும் கூட சில சமயம் அம்மாவுக்குப் பால் கட்டிக் கொள்ளும் வாய்ப்புள்ளது.
 

அதேசமயம் புண்ணாகிவிட்ட நிப்புளை என்னதான் செய்வது? அந்த அவஸ்தைக்கு விடிவுதான் என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது...
 

பாப்பாவுக்கு பால் கொடுக்காத நேரங்களில் நிப்புளில் வேஸலின் போன்ற க்ரீமைத் தடவி (டாக்டரிடம் ஆலோசனை பெற்ற பிறகு) வரலாம். பால் கொடுக்கும் சமயத்தில் மார்பகத்தை தண்ணீர் மற்றும் மைல்டான சோப்பு கொண்டு சுத்தம் செய்த பிறகு பாப்பாவுக்குப் பால் கொடுக்கலாம்.
 

குறைப் பிரசவத்தால் பிறந்த குழந்தைக்கு எப்படி பாலூட்டுவது?

ஒரு சில நேரங்களில் குழந்தை சரியாகப் பாலைக் குடிக்கத் தெரியாமல் திணறலாம். அல்லது நிப்புள் புண்ணாகிவிட்டது போன்ற சில சங்கடமான நேரங்களில் அம்மாவும் குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாமல் போகலாம். இந்த மாதிரியான நேரங்களில் என்ன செய்வது?
 

மேலும் சில சமயங்களில் குழந்தை ஃப்ரீ _ மெச்சூராக அதாவது, டெலிவரிக்கான தேதிக்கு வெகுநாட்கள் முன்பாகவே பிறக்கும் என்று சொல்லி இருக்கிறேன். அந்தக் குழந்தைகளை தாயிடம் உடனே கொடுத்துவிடாமல் பெரும்பாலும் இன்குபேட்டர் பெட்டியில் வைத்துதான் பராமரிப்போம். இன்னும் சில குழந்தைகள் பிறக்கும் போதே உதடு பிளந்தது போன்ற (CLEFT LIP) நிலையில் பிறக்கலாம். இப்படி சில பிரச்னைகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கிடைக்கச் செய்ய இதோ ஒரு வழியிருக்கு..
 

இதுபோன்ற சமயங்களில் பாப்பாவுக்கு Expressed Milk கொடுக்கலாம்.
 

இது ஒன்றும் பெரிய விஷயமில்லை... தாய்ப்பாலைத் தாயிடமிருந்து வேறு வழிகளில் எடுத்துச் சேகரித்துக் கொடுப்பதுதான்.
 

இதை எப்படிச் செய்வது?
 

தாயின் மார்பகத்திலிருந்து பாலை ஒரு சுத்தமான பாத்திரத்தில் பீய்ச்சி எடுத்து பாப்பாவுக்குக் கொடுக்கலாம். அல்லது பாலை எடுப்பதற்கென்றே இன்று மார்க்கெட்டில் விற்கக் கூடிய பிரெஸ்ட் பம்புகள் வாங்கி அதைப் பயன்படுத்தியும் பாலைச் சேகரிக்கலாம்.
 

இந்த பிரெஸ்ட் பம்புகள் நாமே இயக்கக்கூடிய வகையிலும், பாட்டரியால் இயங்கக் கூடியதாகவும் இருவகையாகக் கிடைக்கின்றன. இப்படி எடுக்கப்படும் பாலை மூடிபோட்டு பத்திரப்படுத்தி வைத்துக் குழந்தைக்கு அவ்வப்போது கொடுத்துவரலாம்.
 

இந்தப் பாலை ஃப்ரிட்ஜில் (ஃப்ரீசரில் அல்ல..) 24_48 மணிநேரம் வரைக்கும் பத்திரப்படுத்தி பாப்பாவுக்குக் கொடுக்கலாம்.
 

இன்று தாய்ப்பாலை ஃப்ரீசரில் சுமார் மூன்று மாதங்கள் வரைக்கும் கூட ஃப்ரீஸ் செய்து வைத்து, அதன் தன்மை மாறாமல் பாப்பாவுக்குக் கொடுத்து வருகின்றனர்.
 

ஃப்ரிட்ஜிலோ ஃப்ரீசரிலோ வைத்து பத்திரப்படுத்திய பாலைப் பாப்பாவுக்கு எப்படி சூடுபடுத்திக் கொடுப்பது?
 

சேமிக்கப்பட்ட பாலை நேரடியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்க வைக்கக் கூடாது. அகலமான ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து அதை லேசாக சூடுபடுத்தி, பால் இருக்கும் பாத்திரத்தை அதற்குள் வைத்து பதமாக சூடுபடுத்தி பாப்பாவுக்குக் கொடுக்கவேண்டும். அந்த சூட்டையும் விரல்விட்டெல்லாம் பார்க்கக்கூடாது.
 

ஃப்ரீஸ் செய்த பாலை முதலில் ஐஸ்கட்டி நிலையிலிருந்து கரையவிட்டுப் பிறகு மேற்கூறிய முறையிலேயே சூடுபடுத்திக் கொடுத்தால் போதும்.
 

பாலூட்டும் அம்மா எல்லாவற்றையும் சாப்பிடலாமா?
 

குழந்தை பிறப்பதற்கு முன் குழந்தைக்கு ஆகாது என்று சொல்லி ‘அதை சாப்பிடக் கூடாது... இதை சாப்பிடக் கூடாது’ என்று வீட்டுப் பெரியவர்கள் தடை விதிப்பது வழக்கம். குழந்தை பிறக்கும் வரையில்தான் இந்தக் கட்டுப்பாடெல்லாம் என்று நீங்கள் நினைத்தால்.. அதுதான் தவறு! குழந்தை பிறந்த பிறகுதான் இந்தக் கட்டுப்பாடுகள் இன்றுமே அதிகமாகும்..
 

அம்மா இளநீர் சாப்பிட்டாலோ அல்லது எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ் குடித்தாலோ குழந்தைக்கு சளி இருமல் வர வாய்ப்புள்ளது என்பார்கள். பேரீச்சம் பழம் போன்ற சில விஷயங்கள் சாப்பிட்டால் பேதியாகும் என்பார்கள். இதெல்லாம் உண்மை இல்லை.
 

அம்மா சாப்பிடும் எந்த விதமான உணவுமே பாப்பாவுக்கு நேரிடையாக. அதாவது, அதே உணவாகச் செல்வதில்லை. அந்த உணவெல்லாம் தாயின் உடலில் செரித்து கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து மற்றும் புரதச்சத்தாகப் பிரிந்து, பிறகு உடலால் கிரகிப்படுகிறது. இந்தச் சத்துக்கள்தான் பாப்பாவுக்குப் பாலாகக் கிடைக்கிறதே ஓழிய பாலிலிருந்து அவ்வளவு சுலபமாக எல்லாம் நோய்த் தொற்று ஏற்பட்டுவிடாது.
 

அம்மாவுக்கு சில சமயம் ஏதாவது நோய் தாக்கும்போது அது பாப்பாவுக்கும் பரவுவதற்குக் காரணம், இருவரும் எந்நேரமும் ஒன்றாகவே ஒரே அறையில் இருப்பதுதான்! மற்றபடி வேறொன்றும் இல்லை.

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts