லேபிள்கள்

புதன், 5 அக்டோபர், 2011

குழந்தை சாப்பிட மறுப்பதற்கு...



இன்றைக்கு பெரும்பாலான வீட்டின் பெற்றோர்கள் தம் குழந்தைகளை அழைத்துக்கொண்டு மருத்துவரிடம் சென்று "குழந்தை சாப்பிட மறுக்கிறது டாக்டர், எவ்வளவுதான் திட்டி, அடிச்சாலும், அல்லது பாராட்டி, வீதிக்கு சென்று ஊட்டினாலும் சாப்பிட மறுக்கிறது. இதற்காக நாங்கள் கஷ்டப்படுகிறோம். ஏதாவது பசி எடுக்கிற மாதிரி மருந்து கொடுங்கள்" என்கின்றனர். 

பொதுவாக குழந்தை வளரும் பருவத்தில் உடல்நலமும் மனநலமும் பெற்றிருந்தால்தான், பிற்கால வாழ்க்கை மகிழ்ச்சியும் பயனும் நிறைந்ததாக இருக்கும். மாறாக குழந்தைப் பருவத்தில் ஏதாவது சிக்கல் ஏற்படின் அது மனநலத்தை அப்பருவத்திலும் பிற்கால வாழ்க்கையிலும் வெகுவாகப் பாதிக்கிறது. இதைப் பெற்றோரும் மற்றோரும் அவர்களது அனுபவங்கள் வாயிலாக அறியலாம்.
 

இத்தகைய பாதிப்புகள் அன்றாடச் செயல் குறைபாடுகள், நடத்தைக் குறைபாடுகள், இசைவின்மைப் பழக்கங்கள், என்று கொண்டு செல்லும் என்கிறார். தமிழ்நாடு மாநில மனநல சங்கத்தின் தலைவர் எஸ்.எம். பதூர் மொய்தீன் அவர் மேலும் கூறியதாவது:-
 

உணவு உண்பதில் சில குழந்தையிடம் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவை இருவகைப்படும். அவை உண்ணமறுப்பது, அளவுக்கதிகமாக உண்பது.
 

உடல்நோய் ஏதுமில்லாமல் இருக்கும்போது குழந்தை உணவு உண்ண மறுத்தால் நிச்சயமாக மனம் சம்பந்தப்பட்ட காரணமாகத்தான் அது இருக்க முடியும்.
 

பெரும்பாலும் இதற்கடிப்படையானது, பெற்றோர் உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொண்டுள்ள கோட்பாடுகளும் குழந்தைகளைக் கையாளும் முறைகளுமேயாகும். பசியின்மை என்று சொல்லுவதற்கும், உண்ண மறுப்பதற்கும் முக்கிய காரணங்கள், கவன ஈர்ப்பு, எதிர்ப்பு மனப்பான்மை, பகற்கனவு, பயம், பதற்றம், பெற்றோரின் மனோபாவம்.
 

கவன ஈர்ப்பு என்பது பெற்றோரின் கவனத்தை உண்ண மறுப்பதின் மூலம் ஈர்க்க எண்ணுவது அல்லது இதன் மூலமாகப் பெற்றோரையும் மற்றோரையும் தன் வசப்படுத்த நினைப்பதேயாகும். உண்ண மறுப்பது மறைமுகமாகத் தனது எதிர்ப்பு மனப்பான்மையை காட்டுவதேயாகும். இரண்டு வயதில் இருந்து மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் இது மிகவும் சாதாரணம். இதனால்தான் இப்பருவம் எதிர்ப்பு பருவம் எனக்கூறப்படுகிறது.
 

பகற்கனவு என்பது குழந்தை தனியாக அமர்ந்து கொண்டு ஏதாவது ஒன்றைப் பற்றி மிகப்பிரமாதமாகக் கற்பனையில் மூழ்குவதாகும். பயம், பதற்றம், கவலை அல்லது பெற்றோரின் மனோபாவத்தைப் பொறுத்தும் குழந்தை உணவு உண்ண மறுக்கலாம். குழந்தையை கேலி செய்தல், அதிக அளவில் செல்லம் கொடுத்தல், எதற்கெடுத்தாலும் பயமுறுத்துதல், எதிர்ப்புத் தெரிவித்தல் போன்ற காரணங்களால் குழந்தைக்கும் பெற்றோருக்கும் அடிக்கடி சிறுசிறு சண்டைகள் உருவாகின்றன.
 

எவ்வளவுக் கெவ்வளவு மன இறுக்கமும், உணர்ச்சியும் மிகுந்தவர்களாகப் பெற்றோர்கள் இருக்கிறார்களோ, அவ்வளவுக் கவ்வளவு ஏற்படுகிறது. இத்தகைய குழந்தைகளைப் பெற்றோர்கள் மிகவும் கவனமாக கையாளவேண்டும். உணவளிக்கும் போது குழந்தையை அடித்தோ பயமுறுத்தியோ, அழவைத்து சாப்பிட வைக்கக்கூடாது. அதன் போக்கில் விட்டு சாப்பிட வைக்கவேண்டும்.
 

குழந்தைக்கு ஏதாவது மனக்கஷ்டமோ, பிரச்சினைகளோ இருப்பின் அவைகளை அறிந்து மனநல மருத்துவர் துணையோடு பெற்றோர்கள் கையாண்டால் இப்பிரச்சினைக்கு மிக எளிதில் தீர்வு கண்டு விடலாம் என்கிறார் மருத்துவர் எஸ்.எம். பதூர் மொய்தீன்.
எப்போதும் குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடுங்க, அது அவர்களை நல்லவர்கள் ஆக்கும் என்கிறது அமெரிக்க ஆராய்ச்சி முடிவு. 

குழந்தைகளின் வளர்ச்சியில் குறுக்கிடும் குடும்பங்களின் பழக்க வழக்கங்கள் பற்றி அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதன் முடிவில் கூறிய அம்சங்கள்:
 

பெற்றோர் எப்போதும் குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். அதனால், குடும்பப் பின்னணியைக் குழந்தைகள் அறிந்து கொள்ள வழி ஏற்படும். அதன்மூலம் அதிக தன்னம்பிக்கை, அடுத்தவருடன் பேசும் முறை, நட்பை வெளிப்படுத்தும் திறன், பல்வேறு கருத்துகளைச் சகித்துக் கொள்ளும் தன்மை ஆகியவற்றைக் குழந்தைகள் அறிந்து கொள்ள முடியும். சேர்ந்து சாப்பிடுவதால் குடும்பப் பாசம், விட்டுக் கொடுக்கும் தன்மை, உதவும் குணம் ஆகியவை அதிகரிக்கும்.
 

அதேபோல, குடும்பத்தில் ஏற்படும் இறப்பு, நெருக்கடி போன்ற எதிர்மறை விளைவுகளைக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மனம் திறந்து விவாதிப்பதால் உணர்ச்சி கரமான சூழலைக் கையாளும் திறனைக் குழந்தைகள் பெறமுடியும். மொத்தத்தில் பெற்றோரின் நெருக்கம் அதிகமாக இருந்தால் குழந்தைகள் நல்லவர்களாக உருவாவது நிச்சயம்.

கருத்துகள் இல்லை:

ஏ.சி வாங்கப் போறீங்களா? இந்த விஷயங்களை மறந்து விடாதீர்கள்!

உடலை சுட்டெரிக்கும் வகையில் வெயில் தாக்கம் எவ்வளவு இருந்தாலும் அதை சமாளிக்க நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ஏ.சிதான். அதை நாம் சரியான ம...

Popular Posts