லேபிள்கள்

திங்கள், 15 நவம்பர், 2010

வாசகர்களின் கேள்விகளுக்கு சுஜாதாவின் பதில்கள்!!!


இரண்டு கண், இரண்டு சிறுநீரகம், இரண்டு காது, கை, கால் என்றிருக்கும்போது, மனிதனுக்கு ஏன் இரண்டு இதயங்கள் இல்லை?

இல்லைதான். ஆனால் இரண்டு இதயத்துக்கான செயல்பாடு ஒரு இதயத்திலேயே இருக்கிறது. பிளட்பிரஷர் சரியில்லை. இதயத்துக்கே ரத்த சப்ளை இல்லை என்றாலும் இதயம் மெல்ல மெல்ல பெரிதாகி 25% வரை மோசமாவதை சமாளிக்கிறது. ரத்தக்குழாய்களுக்கு collateral என்ற மாற்றுப்பாய்ச்சல் அமைக்கிறது. அதனால் மனிதனுக்கு ஒண்ணே முக்கால் இதயம் என்று சொல்லலாம். 

"பாரோ ஸாரஸ்" என்கிற அழிந்து போன மிருக இனத்துக்கு 25 அடி கழுத்து! மூளைக்கு ரத்தம் அனுப்ப அதற்கு ஒரு இதயம் போதாது என்றும் ரிலே ரேஸ் போல எட்டு இதயம் தேவைப்பட்டிருக்கும் என்றும் கணிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த ரத்த ஓட்ட பிரச்சனையால்தான் காலவாக்கில் அந்த மிருகமே வழக்கொழிந்து போய்விட்டது. அதாவது மூளைக்கு முழு ரத்தம் போகவில்லை. செங்குத்தாக நிமிர்ந்து நின்றாலே அந்த மிருகத்துக்கு பலவீனமும் மயக்கமும் வந்திருக்க வேண்டும்



தவளையின் கண் அமைப்பு தத்துவத்தை புரிந்து கொள்ள முடியுமானால், அதை பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி துறைகளில் எண்ணற்ற வகைகளில் பயன்படுத்த முடியும் என்ற தகவலை ஒரு பழைய பத்திரிக்கை துணுக்கில் படித்தேன். தவளை கண்ணில் அப்படி என்ன சிறப்பம்சங்கள் உள்ளன?

தவளையின் கண்களில் சிறப்பம்சம் எனக்குத்தெரிந்தவரை அவைகள் இரையை முழுங்குவதற்கும் கண்கள் உதவுகின்றன என்பதே. ஒரு பூச்சியை நாக்கை நீட்டி ஒட்டவைத்து உள்ளே தள்ளும்போது கண்களும் உள்ளே சென்று, சாப்பிட்டதை தொண்டை வழியாகத் தள்ள உதவுகின்றன. நாம் பாதாம் அல்வா முழுங்கியபின் ஒரு நிமிஷம் அதன் டேஸ்ட்டை ரசிக்க கண்ணை மூடிக்கொள்வதில்லையா?

மேலும் அவைகள் ஏறக்குறைய 270 டிகிரி சுற்றிப்பார்க்கவல்லவை
மாற்று இருதயம் பொருத்துவதுபோல், மாற்று மூளை பொருத்த முடியுமா? அப்படி பொருத்தினால், அதன் செயல்திறன் எப்படி இருக்கும்?

மாற்று மூளை பொருத்தும் அளவிற்கு விஞ்ஞானம் முன்னேறவில்லை. இதயம் ஒரு பம்ப். மூளை என்பது ஒரு மனிதனின் முழு வாழ்க்கை.

இது பற்றி ஒரு ஜோக் உண்டு.

'டாக்டர் எனக்கு மாற்று மூளை வைக்க எனக்கு எவ்வளவு செலவாகும்' என்று நோயாளி கேட்டார்.

'ஆண் மூளை என்றால் 5 இலட்சம், பெண் மூளை என்றால் 2 இலட்சம்!'

நோயாளி, 'அது எப்படி?' என்று கேட்டார்.

'ஆண் மூளை அதிகம் பயன்படாமல் புதுக்கருக் கழியாமல் இருக்குமே' என்றார்.




பறவைகள், மிருகங்கள் எலும்பு முறிவு ஏற்பட்டால் என்ன செய்யும்? இயற்கையாகவே அவை சரியாகிவிடுமா?

பின் எப்படி ஆர்த்தோபீடிக் சர்ஜனிடமா போகமுடியும்? பறவைகளாவது பரவாயில்லை. எனக்கு தெருநாய்கள் மீதுதான் அனுதாபம். தெருப்பையன்களின் செங்குறியாக கல்லடி பட்டு கொஞச நேரம் காள் காள் என கத்திவிட்டு வாலை ஒளித்து வைத்துக்கொண்டு நொண்டி நொண்டி எங்கோ பதுங்கி மூன்று நாட்களில் பழையபடி பிஸியாக ஓட ஆரம்பித்துவிடுகின்றன்.



சில வகை நாய்கள் படுக்கப்போகும் முன், அந்த இடத்தை சில சுற்று சுற்றிவிட்டு படுக்கிறதே.....ஏன்?

அந்த இடத்தை 'என்னுது' என்று ஒருதடவை உலகுக்கு அறிவிப்பதற்கு!

எங்கள் கிவியும், மிமியும் மனைவி இருந்தால் சோபாவில் படுக்கும். நான் வந்தவுடன் இறங்கி மூலையில் போய் படுத்துக்கொள்ளும்.




வாத்து ஏன் அடை காப்பதில்லை? அதற்கு அப்படி என்ன ஞாபக மறதி?

நீங்கள் சொல்வது சரியில்லை. இனத்துக்கு இனம் பத்திலிருந்து பன்னிரண்டு முட்டையிடும். சுமார் 28 நாளில் குஞ்சு பொறிக்கும். 'க்வாக், க்வாக்' என்று நிறைய அரட்டை அடிக்கும். பெண் வாத்து அடைகாத்து பிள்ளைகளை வரிசைகட்டி 'வாக்கிங்' அழைத்து செல்கிறது. ஆண் வாத்து காவல் காக்கிறது. வாத்து முட்டைக்காக மனிதன் அவைகளை பிரிப்பதால்தான் அடைகாப்பதை அது மறந்துவிடுகிறது. சீமைக்கோழிகளை போலத்தான். முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகள் (லகான் கோழிகள்) அடைகாக்கின்றனவா என்ன? முட்டையிடும் மெஷின்கள்தானே அவை!
கடல் எப்படி உருவானது? அதன் பிறப்பு வரலாற்றைக் கொஞ்சம் விளக்குங்களேன்?

இன்றைக்கு சற்றேறக்குறைய 400 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி மிகச்சூடாக இருந்தது. அது மெல்ல ஆறும்போது காற்றும் நீராவியும் பூமியை சூழ்ந்து கொள்ள, மேலும் குளிரக் குளிர நீராவி நீராகி, கடலாகி....இப்படி ஒரு தியரிதான் தற்போது செலவாணியில் உள்ளது.


செயற்கை கோள்களில் பேரழிவு ஆயுதங்களைப் பதுக்கி வைத்துப் பாய்ச்ச முடியுமா?

செயற்கை கோள்களில் அவ்வகை ஆயுதங்களை வைப்பதற்கு மிக அதிகமாக செலவாகும். அதற்குத்தான் கண்டத்துக்கு கண்டம் தாவும் பாலிஸ்டிக் மிசைகள் உள்ளனவே. டெல்லியில் உட்கார்ந்து கொண்டு பட்டனை அழுத்தினால் ராவல்பிண்டியில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அழித்துவிடலாம். அதேபோல் அவர்களும் டெல்லி அகபர் ரோடுக்கு 'வாழ்த்துக்களுடன்' அனுப்பலாம்.


ஆண்களைவிட பெண்களுக்கு பின்புறம் பெரிதாக இருக்க காரணம் என்ன? கேள்வி ரொம்ப அவசியமா என்று கேட்காதீர்கள்.

அவசியம்தான். பெண்களின் biological role பிள்ளை பெறுவது. அதற்காக அவர்களது பெல்விஸ் பகுதி சற்று அகலமாக இருக்கும். இதன் காரணமாக பின்புறம் பெரிதாக தெரியும். ஆண்களின் கவனத்தை கவரும் ஒரு இரண்டாம்பட்சக் காரணமும் உண்டு. இந்த தலைகிராப்பு, ஜீன்ஸ் யுகத்தில் முன்னால் செல்வது பெண்ணா என்று கண்டுபிடிக்கவும் உதவுகிறதே!

கமல் ஒரு அறிவியல் ரீதியான காரணம் சொன்னார். ஆதிவாசிப்பெண்கள் தொடர்ந்து உணவில்லாமல் இருக்கிற நிலை வரலாம் என எதிர்பார்த்து, பின் பக்கத்தில் சதை சேர்த்து வைப்பார்களாம். கொழுப்பு சேர்ந்திருப்பதால் காந்தியை விட அதிக நாட்கள் உண்ணா நோன்பு இருக்க முடியுமாம்.



பரிணாம வளர்ச்சியில் தற்போதைய கடைசி நிலை ஆறறிவு படைத்த மனிதன் என்றால், நமக்கு அடுத்த நிலை ஏழாவது அறிவு என்னவாக இருக்கும்?

ஏழாவது அறிவு என்றால் அது அறிவியல்தான். மனிதன் தன் கண், காது, மூக்கு போன்ற அவயங்களின் திறமையை அறிவியல் உபகரணங்கள் கொண்டு நீட்டித்திருக்கின்றானே. டெலஸ்கோப், மைக்ராஸ்கோப், சாட்டிலைட், டெலிவிஷன் மூலம் பார்வையை நீட்டித்திருக்கிறான். ஏரோப்ளேன் மூலம் பறக்க முடியாததை பறக்க வைத்திருக்கிறான். மெஷின்கள் மூலம் கைகளின் திறமையை நீட்டித்திருக்கிறான். கம்ப்யூட்டரின் மூலம் மூளையின் திறமையை! ஏழாவது என்ன..... எட்டு, ஒன்பது, பத்து என எங்கேயோ போய்விட்டான். அடுத்த அறிவு அம்மா - அப்பா இல்லாமல் சிருஷ்டிதான்.


இதுவரை ஏற்பட்ட சுனாமிகளிலேயே மிகப்பெரியது எது?

1958-ல் அலாஸ்காவில் எழுந்த சுனாமி அலை உயரம் 1720 அடி. இதுதான் ரிக்கார்டாம். இந்த ராட்சத குலுக்கல் அலையிலிருந்து தப்பிக்க ஊரை ஒட்டி பிரம்மாண்ட அளவில் சுவர் எழுப்பி வைத்து... தொடர்ந்து நடுங்கிகொண்டிருக்கிற ஜனங்களும் உண்டு. பூகோள ரீதியாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும்தான் இது திரும்ப திரும்ப வருகிறது.
பூரான் 'ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையானதால் அதை யாரும் அடிக்க கூடாது' என்ற ஆசாரம் தமிழ்நாட்டில் நிலவுவதாக ஒரு துணுக்கு செய்தி படித்தேன். அது எந்தளவுக்கு உண்மை? நிஜமாகவே பூரான் நிறைய குட்டி போடாதா?

அதெல்லாம் இல்லை. அடுத்த தடவை பூரானை பார்த்தால், அது உங்கள் காதுக்குள் போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மிதிப்பதற்கு முன் 'ஏம்பா! நீ உன் தாய்க்கு ஒரே பிள்ளையா?' என்று விசாரித்து கொண்டு இருக்காதீர்கள். ஆனால் அவைகளால் ஆபத்தில்லை. கொஞ்சூண்டு விஷம்தான் வைத்திருக்கும். கடித்தால் லேசாக தடித்து தேனீ கொட்டுன மாதிரி வலிக்கும். பாட்டி வைத்தியம் போதும்.


'விபத்து ஏற்பட்டு ஒரு கப்பல் மூழ்கும்போது அந்தக்கப்பலின் கேப்டன் மூழ்கும் கப்பலுடன் மூழ்க வேண்டும்' என்பது உண்மையா?

முழுக வேண்டும் என்பது உண்மையல்ல. கடைசியாக கப்பலை விட்டு வெளியேறுவது பண்பு. அதற்குள் கப்பல் மூழ்கிவிட்டால் அவரும் முழ்கவேண்டியதுதான்.


நமது நாட்டில் வடக்கே செல்ல செல்ல மனிதர்கள் மட்டுமல்ல..வேப்ப இலை முதல் தேனீ வரை எல்லாமே (ஸைஸில்) 'படா படா' வாக இருப்பது ஏன்? அவர்கள் தட்டும் விராட்டியின் விட்டம் கூட ஒரு அடி இருக்கும்.

மனிதர்கள், பொதுவாக பஞ்சாபிகளும், ஜாட்களும், ராஜஸ்தானியர்களும் சைஸில் தமிழர்களை விட படாவாக இருப்பார்கள். காரணம் அவர்கள் உணவில் உள்ள புரதச்சத்துகளும் ஜீன் சமாச்சாரமும்.

வேப்ப இலை, தேனீ பற்றி பெரிது படுத்த முடியாது. கொய்யாப்பழம் நாவற்பழமெல்லாம் வடக்கே பெரிசாக இருக்கும். இதற்கு விவசாயக் காரணங்கள்தான் அதிகம். பூகோளக் காரணங்கள் இல்லை. கோவையில் ஜி. டி. நாயுடு பெரிய பெரிய காய்கறிகளையும், பழங்களையும் வளர்த்திக் காட்டியிருக்கிறார்.



மடசாம்பிராணி என்பது என்ன?

பல சமயங்களில் நமக்கு கெட்ட வார்த்தைகள் இல்லாத திட்டு வார்த்தைகள் தேவைப்படுகிறது. அந்த வகையில்தான் இது சேரும். ஒருமுறை மழையில் நின்று போன காரைக் கிளப்ப முயற்சித்த டாக்ஸி டிரைவர், அதன் ஸ்டியரிங்கை அழுத்தி 'தேவலோகத்து தென்னை மரமே கிளம்பேன்' என்று திட்டினார். இம்மாதிரி உபத்திரவமில்லாத திட்டு வார்த்தைகள் ஊருக்கு ஊர், மொழிக்கு மொழி வேறுபடும். 'ஜுஜுபி' என்றால் என்ன?..நீங்கள் அர்த்தம் சொல்லுங்களேன் பார்ப்போம்.


கைவிரல்களில் கட்டை விரல் மட்டும் வித்தியாசமாக இருக்கிறதே. இதன் ஆதிகால தத்துவம் என்ன?

கட்டை விரலின் மனித அடையாளங்கள் சுமார் 23 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள். மனிதன் கல்லால் செய்த ஆயுதங்களை பயன்படுத்த துவங்கிய காலம் அது. சிம்பன்ஸி குரங்குகளுக்கு கட்டை விரல் இருக்கிறது. ஆனால், அவைகளின் கட்டை விரல்கள் சிறியவை. நம்மை போல் ஆயுதங்களை இறுக்கிப்பிடிக்க அவற்றால் முடியாது. காரணம், மனித கட்டை விரலில் உள்ள மூன்று தசைகள் அவைகளுக்கு இல்லை.

இன்றைய தினங்களில் கட்டை விரலை எத்தனை விதங்களில் பயன்படுத்துகிறோம் என்பதை யோசித்து பாருங்கள். என் கணக்கில் 12 வருகிறது. மூக்கு நுனியில் வைத்து மற்ற விரல்களை ஆட்டி 'அழகு' காட்டுவதையும் சேர்த்து.

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts