லேபிள்கள்
- CHILD CARE (158)
- COMEDY (51)
- COMPUTER (137)
- GENERAL (18)
- INFORMATION (542)
- ISLAM (442)
- MEDICAL (854)
- MY ALBUM (5)
- STORY (13)
திங்கள், 15 நவம்பர், 2010
”சில்”லென்று சில விசயங்கள் - கூல் மேன் கூல்
1. வெயிலின் தாக்கத்தை மட்டுப்படுத்த சன் ஸ்க்ரீன் லோஷன் பயன்படுத்தலாம். அது தரமான லோஷனாக இருக்கவேண்டியது அவசியம்.
2. சன் ஸ்கிரீன் லோஷன் போட்டவுடன் வெயிலில் வெளியேறாமல், பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் கழித்து, சருமத்தில் லோஷன் செட் ஆனவுடன் வெளியே கிளம்பினால்தால் அது முழுமையாகவும் எஃபெக்டிவ்வாகவும் வேலை செய்யும்.
3. உதடு வெடித்து உலர்ந்து போய் கிடக்கிறதா..? வாஸ்லின் அல்லது 'லிப் பாம்' உபயோகிக்கலாம். தயிர், வெண்ணெய் போன்றவற்றை உதட்டில் தடவுவதும் நல்ல பலன் தரும்.
4. வெம்மையால் முகம் கறுத்து, எண்ணெய் வழிந்து, அழுக்கு சேர்ந்து பொலிவிழக்கும். வெயிலில் வெளியில் சென்று வந்ததும் காய்ச்சாத பாலை பஞ்சில் தோய்த்து, முகத்தில் சற்று அழுத்தி தேய்த்தெடுக்க, வியர்வையால் சேர்ந்த அழுக்குகள் நீங்கும். கடைகளில் கிடைக்கும் 'க்ளென்சிங் மில்க்' என்பதையும் பயன்படுத்த லாம்.
5. கோடைக் காலத்தில் அதிக வியர்வையால் தலையில் பிசுபிசுவென்றாகி அழுக்கு சேர, முடி கொத்துக் கொத்தாக கொட்டும். இதற்கு, அடிக்கடி தலைக்குக் குளித்து கேசத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் தினமும் இரண்டு டீ ஸ்பூன் நெல்லிச்சாறு குடிப்பது பிரச்னைக்குத் தீர்வைத் தரும்.
6. வெயிலில் கேசம் அதிகம் வறண்டு போகாமல் இருக்க, தினமும் இரவு தலைக்கு எண்ணெய் வைத்து, காலையில் அலசலாம். இதனால் பொடுகும் அண்டாது.
7. வாரம் இருமுறை தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க, உடலின் உஷ்ணம் இறங்கும். குழந்தைகளுக்கும்கூட!
8. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாடாய்ப்படுத்தும் விஷயம்... வேர்க்குரு. வியர்வை வெளியேறும் சருமத் துளைகள், அழுக்கினால் அடைபடுவதால் உண்டாவதுதான் இந்த வேர்க்குரு.
9. கொழுப்புச் சுரப்பிகளின் நுண்துளை வாய்ப்பகுதி வியர்வை, அழுக்கினால் அடைபடுவதால், அதிகமாக பருக்களும் தோன்றும். குறிப்பாக, கோடையில் இளம் பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கும்.
10. 'ஒரு நாளைக்கு ஒரு முறைதான் குளிப்பேன்' என்று கொள்கைப் பிடிப்போடு இருக்காமல், தினமும் காலை, இரவு என இரண்டு முறை குளிப்பதுடன், அடிக்கடி முகம், கை, கால் கழுவிக் கொள்ளலாம். கோடை முழுக்க இறுக்கமான உடைகளைத் தவிர்த்து, வியர்வையை உறிஞ்சும் காற்றோட்டமான பருத்தி ஆடைகள் அணியலாம்.
11. பருத்தி துணி ஒன்றில் ஐஸ் கட்டிகளைப் போட்டு, வேர்க்குரு படர்ந்த இடங்களில் ஒத்தடம் போல் கொடுத்தால், 'டாடா பைபை' சொல்லும் வேர்க்குரு! அதேபோல பனை நுங்கின் மீதிருக்கும் வெண்மையான தோலின் உள்பகுதியை, வேர்க்குரு மீது தேய்த்தாலும் மட்டுப்படும்.
12. மற்றவர்களையும் நம்மையும் தர்மசங்கடத்தில் நெளிய வைக்கும் விஷயம்... நம் வியர்வை நாற்றம். குளிக்கும்போது இரண்டு டீ ஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறை கடைசியில் தண்ணீரில் கலந்து ஒரு முழுக்குப் போட, வியர்வைப் பிரச்னை மட்டுப்படும்.
13. எண்ணெய்ப் பசையான தோல் (ஆயிலி ஸ்கின்) வாகு உள்ளவர்களை, இன்னும் அழுதுவடிய வைத்துவிடும் இந்த வெயில். வெட்டிவேரை அரைத்து முகத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்துக் கழுவினால், முகம் பளபளப்பாகும்.
கோடைக் காலத்தில் 'இதைச் சாப்பிடு... குளிர்ச்சி தரும்' என்றும், 'அதைச் சாப்பிடாதே... சூடு பிடிக்கும்' என்று ஆயிரம் ஆலோசனைகள் நம்மைச் சுற்றும். ஆம்... வெயில் காலத்தில் தண்ணீர், பழச்சாறு, நீர்க்காய்கறிகள் என உண்ணும் உணவிலும் கொஞ்சம் அக்கறை எடுப்பது, உஷ்ணத்தில் இருந்து நம்மை கரை சேர்க்கும். அதற்கு...
14. வெயிலில் அலைந்து திரிந்துவிட்டு வீட்டுக்குள் வந்ததும் உடனடியாக ஃப்ரிட்ஜை திறந்து கடகடவென கூல் வாட்டர் குடிக்க, ஏதோ அமிர்தமே வயிற்றுக்குள் இறங்குவது போல இருக்கும். ஆனால், அது தவறு. நம் உடல் அதிக சூட்டோடு இருக்கும்போது, அதிக குளிரான நீர் உள்ளே சென்றால், உடல் உறுப்புகளால் அதை பேலன்ஸ் செய்ய முடியாது. எனவே, கொஞ்சம் ஆசுவாசப்படுத்திவிட்டு தண்ணீர் பருகுங்கள்.
15. குழந்தைகள், கோடையைக் கொண்டாடி விளையாடும்போது, அவர்கள் உடலிலிருந்து நீர்ச்சத்து அதிகம் வெளியேறும் (டிஹைட்ரேஷன்). தாகம் எடுத்தாலும், விளையாட்டு மூடில் அதை அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். எனவே, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அவர்களை தண்ணீர் குடிக்க வைப்பது அவசியம். பெரியவர்களும் வாய் உலரும்வரை வெயிட் பண்ணாமல், அதிக அளவில் தண்ணீர் குடித்துக் கொள்ள வேண்டும்.
16. ஃப்ரிட்ஜ் வாட்டர் குடிப்பதற்கு கூலாக இருக்கும். ஆனால், அதன் பக்கவிளைவாக ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம். அதைவிட, மண்பானையில் சேமித்து வைத்துக் குடிக்கலாம். இயல்பாகவே அந்த நீர் குளிர்ச்சி அடைவதால், கெடுதல் எதுவும் இருக்காது.
17. தண்ணீரில் சீரகத்தைப் போட்டுக் கொதிக்க வைத்து, ஆற வைத்து, வடிகட்டிக் குடிக்கலாம். வெட்டிவேரைப் போட்டு வடிகட்டி குடிப்பதும் குளிர்ச்சி தரும்.
18. இளநீர், மோர், பழச்சாறு அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம். பாட்டிலில் அடைக்கப்பட்டு வரும் பானங்களையும், ஐஸையும் தவிர்ப்பது நல்லது.
19. சீப் அண்ட் பெஸ்ட்... எலுமிச்சைப் பழ ஜூஸ். ஒரு பழத்துக்கு அரை லிட்டர் நீர் விட்டு, உப்பு, ஏலக்காய், நாட்டுச் சர்க்கரை (ஜீனி பலனைக் குறைக்கும்) கலந்து ஜூஸ் தயாரித்து வைத்துக் கொண்டு, அவ்வப்போது பருகுங்கள்.
20. கேரட், பீட்ரூட் போன்றவற்றையும் ஜூஸ் போடலாம். இவற்றிலும் நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் போடவும். தேங்காய்ப் பால் சேர்ப்பது சிறந்தது.
21. அளவில் சிறியதாக இருந்தாலும் நெல்லிக்கனி வெயிலுக்கு அவ்வளவு உகந்தது. விட்டமின்-சி அதிகமாக உள்ள இந்தக் கனி, வெயிலில் நாம் இழக்கும் எனர்ஜியைத் திரும்பத் தரவல்லது.
22. ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, வாழை, திராட்சை, வெள்ளரி என பழக்கலவை (ஃப்ரூட் சாலட்) செய்து, காலை அல்லது இரவில் உண்ணலாம்.
23. வெள்ளரிப்பழம், முலாம்பழம், தர்பூசணி போன்றவை நீர்ச்சத்து நிறைந்த, வெயிலுக்கு ஏற்ற பழங்கள். அதற்காகவேதான் வெயில் காலங்களில் இவை விளைகின்றன. உடலில் உள்ள நீர்த்தன்மையை சமநிலையில் வைத்துக் கொள்ள இந்தப் பழங்கள் உதவும். இவற்றை நாட்டுச்சர்க்கரை சேர்த்து ஜூஸ் போட்டும் சாப்பிடலாம்.
24. சுரைக்காய் வெயிலுக்கு மிகவும் நல்லது. ஒரு சுரைக்காய், ஒரு குடம் நீருக்குச் சமம். இதனை சாம்பார் அல்லது கூட்டாகச் சமைத்து உண்ணலாம். சௌசௌ, பூசணி, முள்ளங்கி போன்றவையும் அப்படியே!
25. இது மாம்பழம், பலாப்பழம் போன்றவற்றுக்கான சீஸன். விலை குறைவாகக் கிடைக்கிறதே என்று அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் ஆபத்துதான். வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். எனவே, அளவாக சாப்பிடுவது முக்கியம் - குறிப்பாக, குழந்தைகளும் வயதானவர்களும்!
26. மதிய நேரத்தில் கொஞ்சம் ஹெவியாக சாப்பிட்டாலும், இரவில் லைட்டாக சாப்பிடுவது வயிற்றுப் பிரச்னைகளில் இருந்து தள்ளி வைக்கும்.
27. எண்ணெயில் பொரித்த வடை, பஜ்ஜி, சமோசா போன்ற அயிட்டங்களுக்கு 'நோ..நோ... இந்தப் பழம் புளிக்கும்' என்று சொல்லி தூரம் நிற்பது வயிறு, மனது, பர்ஸ் என அனைத்துக்கும் நல்லது.
மழைக் காலத்தில் மட்டுமல்ல... கோடையிலும் மெடிக்கல் ஷாப்கள் நிரம்பி வழியும்! அதிக உஷ்ணம், நம் உடம்புக்கு உயில் எழுதும் வியாதிகள்தான் அதற்குக் காரணம். அதிலிருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது..?
28. பனங்கற்கண்டு குளிர்ச்சி தரவல்லது. கோடைக் காலத்தில் கண் பொங்குவது, கண் எரிச்சல் என அவதிப்படும் குழந்தைகளுக்கு, பாலைக் காய்ச்சி பனங்கற்கண்டு கலந்து கொடுக்கலாம்.
29. நீர்க்கடுப்பு... வெயில் காலத்தில் பரவலாக அனைவரையும் படுத்தும் பிரச்னை. இதைத் தடுக்க, அடிவயிற்றைச் சுற்றி விளக்கெண்ணெயைத் தடவலாம். புளியங்கொட்டையை வறுத்து சாப்பிட்டாலும் மட்டுப்படும். அல்லது அப்படியே வாயில் போட்டு, சிறிது நேரம் கழித்துக் கடித்துச் சாப்பிடலாம்.
30. வெயில் காலங்களில் பெண்களை இம்சிக்கும் பிரச்னை... சிறுநீர் பாதை தொற்று. இதிலிருந்து தப்பிக்க கொளுத்தும் வெயிலை சமன் செய்யும் அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும். பிரச்னை தொடர்ந்தால் தொற்று அதிகமாகும் என்பதால் தாமதிக்காமல் டாக்டரிடம் செல்வதும் முக்கியம்.
31. காலையில் வாழைத் தண்டு சாறு குடிக்கலாம். இது சிறுநீர் தொற்று எரிச்சலைக் குறைக்கும். தவிர, வெயில் காலத்தில் கிட்னியைப் பாடாய்ப்படுத்தும் நோய்களையும் தவிர்க்க உதவும்.
32. கோடைக் காலங்களில் பெண்களுக்கு அதிக அளவு சூட்டுக் கட்டிகள், கண் கட்டிகள் வந்து படுத்தும். இவற்றுக்கெல்லாம் மூல காரணம், வெயில் காலத்தில் அதிகமாகப் பரவும் தொற்றுக் கிருமிகள்தான். திருநீற்றுப்பச்சிலையை அரைத்துப் போட்டால், இத்தகைய கட்டிகளை துரத்தலாம்.
33. சில பெண்களுக்கு விலா மற்றும் நெஞ்செலும்பில் கோடைக் காலங்களில் மட்டுமே ஒருவகை வலி வரும். இதற்கு நாட்டு ரோஜாப்பூவின் இதழ்களை தினசரி காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
34. உடல் வெப்பம் அதிகரித்து அவதிப்படுபவர்கள் சோற்றுக் கற்றாழையின் வெளிப்புற பச்சைப் பட்டைகளை உரித்து, மஞ்சளாக இருக்கும் அதன் உட்புற சோற்றை நன்கு கழுவி, துண்டு போட்டு விழுங்கலாம்.
35. சித்திரை போன்ற கொடும் வெயில் காலத்தில், கர்ப்பிணிகள் இந்த சோற்றுக் கற்றாழை துண்டுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால்... உடல் நலம் கிடைக்கும். சுகப் பிரசவம் நடக்கவும் வாய்ப்பு அதிகரிக்கும்.
36. சென்சிட்டிவ் ஸ்கின் உள்ளவர்களுக்கும், அளவுக்கு அதிகமாக வெயிலால் பாதிக்கப்படுபவர்களுக்கும் தோலில் அலர்ஜி உண்டாகும். குறிப்பாக... கை, கழுத்துப் பகுதிகளில் எல்லாம் சருமம் தடித்துச் சிவந்து போகும் (ராஷஸ் - Rashes, சன் பர்ன் - Sunburn). இத்தகைய பாதிப்புகள் வராமலிருக்க, முடிந்த அளவு வெயிலில் அலையாமல் இருப்பதே நல்லது. கட்டாயம் போக வேண்டும் எனும் சூழ்நிலையில் குடையும் கையுமாக இருப்பதுதான் சாலச் சிறந்தது. கடலை மாவு, பாசிப்பருப்பு மாவு கலவையை தேய்த்துக் குளிக்கலாம். தோலின் தன்மை இதனால் பாதுகாக்கப்படும்.
37. கோடைக் காலங்களில் முதியோர்களுக்கு வெப்பப் பிடிப்பு, மயக்கம், வெப்பத்தினால் உண்டாகும் தளர்ச்சி போன்றவை பயமுறுத்தும். சிலசமயங்களில் உச்சபட்ச வெப்ப மயக்கத்தால் (சன் ஸ்ட்ரோக்-Sunstroke) மரணம்கூட நேரலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
38. உடலில் நீர்ச்சத்துக் குறைவதே மேற்குறிபிட்ட உபாதைகளுக்குக் காரணம். இவர்கள் அதிகமாக நீர் அருந்துவது, களைப்பாக உணரும் தருணங்களில் உடனடியாக 'உப்பு - சர்க்கரை கரைசலை' (ஒரு ஸ்பூன் உப்பு + மூன்று ஸ்பூன் சர்க்கரையை ஆறிய வெண்ணீரில் கலந்த கலவை) அருந்துவது பாதுகாப்பைத் தரும். பிரஷர், சுகர் போன்ற பிரச்னை உள்ளவர்கள் டாக்டரின் பரிந்துரையோடு சாப்பிடலாம்.
39. வெயில் காலங்களில் கர்ப்பிணிகளுக்கு பனிக்குட நீரின் அளவு குறையும். எனவே, கர்ப்பிணிகள் அதிக நீர் அருந்துவதுடன், 'உப்பு - சர்க்கரை கரைசலை' அருந்துவதால் பாதுகாப்பாக இருந்து கொள்ள முடியும் (பிரஷர், சுகர் போன்ற பிரச்னை உள்ளவர்கள் டாக்டரின் பரிந்துரையோடு சாப்பிடலாம்).
என்ன வெயில் கொளுத்தினாலும் நாங்க நான்-ஸ்டாப்பா ஓடிட்டேதான் இருக்கணும்பா...' என்று வேலை காரணமாக அதிக அலைச்சல், பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இந்த விஷயங்களைக் கவனத்தில் கொள்ளலாம்...
40. ரோட்டோரங்களில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் கரும்பு ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் மற்றும் கலர் கலரான பானங்களுக்கு சொல்லிவிடுங்கள்... 'பிக் நோ'! 'நாங்க எல்லாம் அஞ்சாநெஞ்சர்கள்...' என்று அங்கு டூ-வீலரை நிறுத்தினால், பின் காலரா, அமீபியாஸ், டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் குறிவைத்துத் தாக்கும்.
41. வெளியூருக்கு செல்ல நேரிட்டால், கையோடு சில லிட்டர் தண்ணீர் பாட்டிகள் எடுத்துச் செல்வது நலம். அல்லது அங்குள்ள தண்ணீரைத் தவிர்த்து 'மினரல் வாட்டர்' அல்லது 'பேக்கேஜ்டு வாட்டர்' அருந்தலாம்.
42. பேருந்து, கூட்ட நெரிசல் போன்ற சூழ்நிலைகளில் தாகம் ஏற்பட்டால் நீர் கிடைக்காதபட்சத்தில் மூச்சுப் பயிற்சி மூலமாக தொண்டை வறண்டு போகாமல் தடுக்கலாம். நுனி நாக்கை மடித்து, மேல் அண்ணப் பகுதியில் வைத்தால், நொடிக்கு 2.5 மில்லி முதல் 5 மில்லி வரை எச்சில் சுரக்கும். இது தொண்டை வறண்டு போகாமல் பாதுகாக்கும்.
43. வெயிலில் அலையும் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்னை ஏற்படும். இதனைக் குணப்படுத்த 'அம்மான் பச்சரிசி' என்ற கீரையோடு வெங்காயம் சேர்த்து அரைத்து, நீராகாரம் அல்லது பாலுடன் கலந்து குடிக்கலாம்.
44. பயணச் சூட்டால் சிறுநீர் தொடர்பான பிரச்னைகள் வந்தால், 'ஓரிதழ் தாமரை' என்ற செடியை இடித்து சாறெடுத்து சாப்பிடலாம்.
45. அலைந்து திரியும் வேலைகளில் உள்ளவர்கள், அசைவத்தைக் குறைப்பது நலம். அப்போதுதான் செரிமானக் கோளாறுகளில் இருந்து தப்பிக்க முடியும். அசைவம் சாப்பிட நேரிட்டால், அதிக நீரை அருந்துங்கள்.
46. கனரக வாகனங்களை ஓட்டுபவர்கள், உட்காரும் ஸீட்டில், ஒரு துணிப்பைக்குள் வெங்காய சருகுகளை வைத்து முடிந்து, அதன் மேல் அமர்ந்து 'டிரைவ்' செய்யலாம். இது உடலில் வெப்பம் அதிகரிப்பதைத் தடுக்கும்.
47. ஆல்பகோடா பழம், காய்ந்த திராட்சை ஆகியவை உமிழ்நீர்ச் சுரப்பை அதிகப்படுத்தும் என்பதால், பயண நேரங்களில் இவற்றை வாயில் அடக்கிக் கொள்ளலாம்.
வெயிலுக்கு 'கெட் அவுட்' சொல்லட்டும் நம் வீடு!
கடுகடு வெயிலுக்கு குளுகுளு 'ஏ.சி' பொருத்திக்கொள்வது, எல்லோருக்கும் வாய்க்காத விஷயம். ஆனால், இயற்கையான குளுமையை நம் இல்லத்தில் உண்டு பண்ண முடியும்.
'எப்படி?' என்று ஆர்வமாகுபவர்களுக்கு...
48. செட்டிநாட்டு வீடுகள், சிறிய ஓட்டு வீடுகள், கீற்றுக் கூரை வீடுகள் ஆகியவை எப்போதும் வெயிலுக்கு உகந்தவை. ஆனால், சிமென்ட் வீடுகள் கோடைக்கு ஏற்றது அல்ல. பழைய முறைப்படி சுண்ணாம்பைக் குழைத்துப் பூசி உருவாக்கப்பட்ட வீடுகளின் சுவர்களில் உள்ள குளுமை இவற்றில் கிடைப்பதில்லை.
49. இருப்பினும் உங்கள் சிமென்ட் வீட்டிலும் கோடை காலத்துக்கு ஏற்ப சில வசதிகள் செய்துகொள்ளலாம். மொட்டை மாடியில் ஒரு கீற்றுக் கொட்டகை போடலாம். அல்லது மேலே மணல் பரப்பி தோட்டம் அமைக்கலாம். குறைந்தபட்சம் ஏதாவது தாவரக் கொடியையாவது படரவிடலாம்.
50. தற்போதைய வீடுகளில் பதிக்கப்படும் டைல்ஸ், மார்பிள்ஸ் போன்றவை பார்க்க அழகாக இருந்தாலும், வெப்பத்தைக் கட்டுப்படுத்தாதவை. முடியும்பட்சத்தில் அரை அங்குல மரப்பலகையால், சுவர் மற்றும் தரை சந்திக்கும் இடங்கள் முழுக்க 'உட் பினிஷ்' கொடுக்கலாம். இது சூட்டைப் பல மடங்கு தணிக்கும்.
51. வீடு கட்டியவர்கள், 'மண் மாற்றம்' செய்வதன் மூலம் குளிர்ச்சியைப் பெறலாம். அதாவது, வீட்டைச் சுற்றி நான்கு புறமும், அல்லது வாய்ப்புள்ள புறங்களில் மட்டும் 4 அடி அகலம், ஒரு அடி ஆழத்துக்கு குழி தோண்டி, அதை தேங்காய் நாரால் நிரப்பி, மேலே மணல் போட்டு மூடலாம். இது மிகச் சிறந்த குளிர்ச்சியைத் தரும். இந்த தேங்காய் நார், மணல் முறை கொஞ்சம் செலவு பிடித்தாலும் அதற்கான பலனும் கொடுக்கும். கட்டாந்தரை வீடுகளுக்கு இதெல்லாம் அவசியமே இல்லை.
52. ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகைகளில் வசிப்பவர்கள் அதன் கீழே கீற்றுகளினால் இன்னொரு லேசான கொட்டகையை அமைக்கலாம். இது வெயிலின் கொடுமையைப் பல மடங்கு குறைப்பதோடு, கேன்சர், ஆஸ்துமா போன்ற நோய்கள் வரும் வாய்ப்பையும் குறைக்கும்.
53. 'எந்த வீட்டின் மேல் முதிர்ந்த மரத்தின் நிழல் விழுகிறதோ... அதுவே ஆசீர்வதிக்கப்பட்ட வீடு' என்று ஒரு பொன்மொழி உண்டு. எனவே, வீட்டருகே உள்ள மரத்தின் கிளைகளை வெட்டி விட்டு, சருகுகளைக் கூட்டும் வேலையில் இருந்து தப்பித்ததாக சந்தோஷப்படாதீர்கள். மர நிழல் ஏ.சி-யை விடச் சிறந்தது.
54. வீட்டின் உள் கட்டமைப்புக்கும் வெப்பத்தை தணிப்பதில் பங்கு இருக்கிறது. மர ஃபர்னிச்சர்களை அதிகம் உபயோகியுங்கள், அடர் நிறங்களில் திரைச் சீலைகளை உபயோகப்படுத்தாதீர்கள்.
55. சமையலறைக்கும், படுக்கை அறைக்கும் இடையே ஒரே ஒரு சுவர் மட்டுமே உள்ள வீடுகளில், அடுப்புச் சுவர் அருகே படுக்கை இருந்தால் கோடையில் இடம் மாற்றி வையுங்கள்.
56. வெட்டிவேரை ஜன்னலில் செருகி வைத்து, அதில் தண்ணீர் தெளித்துவிட்டால் ஜன்னலில் நுழையும் காற்று குளிர்ச்சி பெற்று ஹாலுக்கு வரும். வெட்டிவேரினால் பின்னப்பட்ட 'ஜன்னல் கர்ட்டன்' இப்போது கிடைக்கிறது. அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
57. வீட்டின் ஒரு மூலையில், ஏதாவது ஒரு 'டப்'பில் மணலைக் கொட்டி (நான்கு புறமும் செங்கல் வைத்தும் மணல் கொட்டலாம்), அதன் நடுவே மண்பானை வைத்து தண்ணீர் ஊற்றிப் பருகலாம். சுற்றியிருக்கும் மணலில் தண்ணீர் தெளித்து, நவதானியங்களை விதைக்கலாம். பத்து நாட்களுக்குள் பசுமையாக முளைத்து நிற்கும் பயிர்கள்... நம் வீட்டுக் கூடத்துக்கு ஒரு 'கூல் எஃபெக்ட்' தரும். அந்தப் பயிர்களில் அவ்வப்போது தண்ணீர் தெளிக்க, ஃபேன் காற்று அதில் பட்டுச் சுழலும்போது, கூடமே கூல் கூல்தான்!
58. மொட்டை மாடியில் மாலை நேரத்தில் தண்ணீர் ஊற்றிவிட, பகல் முழுவதும் அந்த தரை வாங்கியிருந்த வெம்மை தணிந்து, இரவில் வெப்பம் நமக்கு இறங்காமல் காப்பாற்றும்.
புது வீட்டுக்கு புது யோசனை!
'இனிதாங்க வீடு கட்டப் போறோம்...' என்பவர்களுக்கு, இனிவரும் டிப்ஸ்கள் இன்னும் இனிப்பு தரும்!
59. வீட்டுக்கான 'பேஸ்' அமைக்கும்போது இப்போதெல்லாம் 4 அங்குலம் அல்லது அரை அடி மணல்தான் போடுகிறார்கள். ஆனால், 2 அடிக்கு மணல் போட்டால் நல்ல குளிர்ச்சி கிடைக்கும்.
60. புதிதாக வீடு கட்டுபவர்கள் 12 அடி உயரத்துக்கு 'சீலிங்'கை உயரமாக அமைத்தால் வெயிலில் இருந்து தப்பிக்கலாம். இதைவிட அதிக உயரத்தில்கூட சீலிங்கை அமைக்கலாம். கோயில்கள், பழங்கால வீடுகள் இப்போதும் குளிர்ச்சி தருவதன் ரகசியம் இதுதான்.
61. ஜன்னல்களை தென்றல் வரும் தெற்கிலும், மேலைக் காற்று வரும் மேற்கிலும் அமைக்கலாம்.
62. முதல் மாடியில் ஜன்னல் அமைக்கும்போது, முதல் மாடியின் தரையிலிருந்து இரண்டரை அடி உயரத்தில் அமைக்கலாம். இதனால் காற்று எளிதாக உள்ளே நுழைந்து, தரையைக்கூட குளிர்விக்கும்.
'இந்த சீஸன்லதான் புளி, மிளகாய், பருப்பு எல்லாம் விலை கம்மியா கிடைக்கும்...' என வருஷ சாமான் வாங்கி வைக்கும் நேரம் இது. அப்படி வாங்கும் பொருட்களை எப்படி பதப்படுத்தி, பாதுகாத்து வைப்பது...?
63. அரிசியை மூட்டையாக வாங்கி வைத்தால், வண்டுகள் வந்து தொல்லை கொடுக்கும். சிறிது கல் உப்பை கடாயில் வறுத்து, அதனுடன் மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து, துணியில் மூட்டையாகக் கட்டி, அரிசியில் போட்டு வைத்தால்... வண்டுகள் எட்டிப் பார்க்காது. வேப்ப இலை, நொச்சி இலை, காய்ந்த மிளகாய் போன்றவற்றையும் போட்டு வைக்கலாம்.
64. அரிசியை பிளாஸ்டிக் உறையிட்ட பாலித்தீன் பைகளில் மூடி வைப்பதைவிட, பாத்திரங்களில் போட்டு வைப்பது சிறந்தது. ஈரக் கைகளால் தொடாமல் இருப்பதன் மூலம், அரிசியை நீண்ட நாட்கள் நல்ல நிலையில் வைத்திருக்கலாம்.
65. துவரம்பருப்பை மொத்தமாக வாங்கும்போது, கெட்டியாக உள்ள பருப்பாக பார்த்து வாங்க வேண்டும். தொடர்ந்து ஐந்து நாட்கள் வரை வெயிலில் காய வைத்து, காற்று புகாத வகையில் டப்பாக்களில் போட்டு வைக்கலாம். கூடவே காய்ந்த மிளகாய் ஒன்றிரண்டு போட்டு வைத்தால் பூச்சிகள், வண்டுகள் வராது.
66. தனியாவை மொத்தமாக வாங்கும்போது வெயிலில் நன்கு காயவைத்து, முறத்தால் புடைத்து, சிறு குச்சிகள்-கற்களை நீக்கி விட்டால்... அவற்றால் பரவும் பூச்சிகள் அண்டாது.
67. நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தப்படும் தனியாவை காய வைத்த பின்பு, வெறும் கடாயில் நன்கு வறுத்து, ஆற வைத்து, டப்பாக்களில் போட்டு வைத்தால், காசு கொடுத்து வாங்கிய பொருள் வீணாகாது.
68. பாசிப்பருப்பைப் தொடர்ந்து 3-4 நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். அதை வெறும் கடாயில் சிவக்க வறுத்து வைத்துவிட்டால்... அடுத்த ஆறு மாதங்களுக்கு மணமாகவும் கெடாமலும் இருக்கும்.
69. காய்ந்த மிளகாயை மொத்தமாக வாங்கி வரும்போது, முதலில் அதனை முழு மிளகாய், சரியாக காயாதது என தரம் பிரிக்க வேண்டும். காம்புகளை பாதியாகக் கிள்ளி காய வைத்தால் நீண்ட நாட்கள் சூப்பராக, காரம் குறையாமல் இருக்கும்.
70. புளியிலிருக்கும் கொட்டைகள், நார்கள், காம்புகள் எல்லாவற்றையும் நீக்கிவிட்டு வெயிலில் காய வைத்து எடுத்து வைத்தால் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வைத்துப் பயன்படுத்தலாம்.
71. மொத்தமாக வாங்கும் சோம்பு, கிராம்பு, சீரகம் போன்றவற்றை நன்கு ஈரமில்லாமல் காய வைத்தாலே போதுமானது.
72. பச்சை மஞ்சளை வாங்கி, வட்ட வில்லைகளாக நறுக்கி நன்கு காய வைத்து, மெஷினில் அரைத்து வைத்துக் கொண்டு நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம். இதனால் கடையில் அதிக காசு கொடுத்து கலப்பட மஞ்சள்தூளை வாங்குவதிலிருந்து தப்பிக்க முடியும்.
73. முகத்தில் பூசுவதற்காக வாங்கும் மஞ்சளையும் இதேபோல் செய்து, அரைத்து வைத்துக்கொண்டு, பயன்படுத்தலாம்.
நாம் ஆசையாக வைத்த தோட்ட, தொட்டி செடிகள் வெயிலினால் வாடினால், வைத்த நம் மனமும் வாடிவிடும். எனவே, வீட்டுச் செடிகளும் நம் மனமும் வெயிலில் வாடாமல் பூத்துச் சிரிக்க...
74. காலையில் நீர் தெளிக்கும்போது... செடிக்கும் சேர்த்து தெளிப்பது, மாலையில் கை, கால் கழுவும்போது அப்படியே செடிக்கு கொஞ்சம் இறைப்பது என்று உங்கள் தினசரி நடை முறைகளோடு தாவரம் மீதான கவனத்தையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
75. செடிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தினசரி தண்ணீர் விட வேண்டும். அதிகப்படியான நீர், தொட்டியின் ஓட்டை வழியாக வெளியேறும்போது, அதனைச் சுத்தப்படுத்த வேண்டும்.
76. வேரை ஒட்டியுள்ள மண்ணை 'பொல பொல'வென்று இருக்கும்படி அடிக்கடி சிறு குச்சிகளால் கொத்திவிட வேண்டும். இதன் மூலம் ஆக்ஸிஜன் உட்புகுந்து, செடிகள் மலர்ச்சியுடன் வளரும்.
77. தொட்டிச் செடிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை, அங்கேயே இடமாற்றம் செய்து வைக்க வேண்டும். இது செடிகள் திடீரென இறப்பதைத் தடுக்கும்.
78. தரையில் நடப்படும் செடிகளுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை நீர் விட்டாலும் போதும். பொதுவாக, இத்தகைய செடிகளை நீர் வெளியேறும் வாய்க்கால் அருகே நடுவது நல்லது.
79. வீட்டில் தண்ணீர் பாயும் இடங்களில் சோற்றுக் கற்றாழையை வளர்க்கவும். இது பல மருத்துவ குணங்களைக் கொண்டது என்பதோடு, ஒரு சிறிய கற்றாழைச் செடி தரையின் முழு வெப்பத்தையும் தணிக்கும் என்ற பெரிய பலனும் உண்டு. இதனை எந்த அறிவியல் கருவியாலும் செய்ய முடியாது.
80. வீட்டின் தெற்குப் பகுதியில் கொஞ்சம் இடம் கிடைத்தால் அங்கே இஞ்சி, மஞ்சள், பேரரத்தை, சிற்றரத்தை போன்ற கிழங்குகளை பாத்தி கட்டி ஊன்றலாம். அவை அங்கே ஒரு குட்டி ஊட்டி எஃபெக்ட்டை உருவாக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பழங்கள் சாப்பிட நேரம் காலம் உள்ளதா?
ஊட்டச் சத்துக்களின் சுரங்கமாகக் காய்கறிகள் , பழங்கள் உள்ளன. உடலுக்கு ஆற்றல் அளிப்பதுடன் , தேவையான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருப்பதால் ...
Popular Posts
-
உங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...
-
இன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...
-
பூமியதிர்ச்சிகள் உணர்துவது என்ன ? மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி அல்லாஹ் கூறுகின்றான்: وما نرسل بالآيات إلا تخويفا ' الإسرا...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக