லேபிள்கள்

சனி, 20 நவம்பர், 2010

கணவன் - மனைவி சண்டை :

கணவன் - மனைவி சண்டை பல வருடங்களாக எனக்கு அறிமுகம் ஆனதுதான். முதலில் அம்மா - அப்பா சண்டை, பின் அண்ணன் - அண்ணி, அக்கா - அத்தான் என பல வித சண்டைகள் பார்த்து பழக்கமாகி போய் தான் இருந்தது.
எனது திருமணத்துக்கு பின் முதல் ஆறு மாதம் நல்லா தான் போனது. ஃபைட் சீன்களுக்கான அறிகுறி ஒண்ணும் காணும்.
கல்யாணமான புதுசு... அப்போல்லாம் அய்யாதான் அதிகமா பேசுவார்... எனது வீர தீர பராக்கிரமங்கள்.. யார் யாரை (one side-ஆ) லவ் பண்ணேன்; எந்த எந்த கவிதை எந்த பெண்ணை பற்றி எழுதியது போன்ற விபரங்கள் சொன்னபோதெல்லாம் நம்ம 'ஹவுஸ் பாஸ்' சிரிச்சிகிட்டே தான் கேட்டாங்க. ஒண்ணும் சொல்லலே...
நான் கூட லைஃப் இப்படியே பிரச்னை இல்லாம போகும்-னு நம்பி...(வடிவேலு ஸ்டைலில் படிக்க) வாழ ஆரம்பிக்கும் போது ஆரம்பிச்சிடுச்சு கதை..
அதன் பின் நடந்த எல்லா சண்டைகளிலும் ஒரு பொதுவான pattern இருக்கும்.
1. ஒரு பெரிய தவுஸண்ட் வாலா பட்டாசு ஒரு சின்ன திரியில் ஆரம்பிக்குமே.. அப்படி ஒரு சின்ன கிண்டல் அல்லது பேச்சில் ஆரம்பிக்கும் சண்டை. அநேகமா இந்த கிண்டல் நம்மோடதாதான் இருக்கும்.
2. அடுத்து யார் பக்கம் என்ன தப்பு-ன்னு ஒரு நீண்ட விவாதம் கோர்ட் சீன் போல் நடக்கும். இதில் அந்த நாள் பண்ணிய தப்பு பற்றி மட்டுமே பேசனும்னு எந்த ரூல்ஸும் கிடையாது. நான் வர மறந்த முக்கிய ஃபங்ஷன்கள் மற்றும் கல்யாணங்கள் என்னென்ன, ஹவுஸ் பாஸ் பக்கத்தில் இருக்கும் போதே மற்ற பெண்களை பற்றி ஹவுஸ் பாஸிடமே அடித்த கமென்டுகள் மற்றும் இன்ன பிற குற்றங்கள் புள்ளி விபரங்களுடன் வெளி வரும். இதற்கு என்னால் ஆன எதோ ஒரு விவாதம் (ரொம்ப weak-ஆக) முன் வைப்பேன்.
3. இதன் பின் ஒரு "அழுகை படலம்" நடக்கும். இப்போது நான் விட்டத்தை பார்த்து கொண்டோ, சாவி போன்ற முக்கியமான ஒன்று தேடுவது போலோ ஏதாவது ஒன்று செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் டிவி ரிமோட் பக்கம் இந்த நேரம் போக கூடாது. அது எரியும் தீயில் எண்ணை ஊற்றும் செயல்.
ஆரம்பத்தில் ரொம்ப அப்பாவியாய், "நானா உன்னை திட்டினேன்? நீயே திட்டிட்டு நீயே ஏன் அழுகிறே?" என்று கேட்டுள்ளேன். இப்போது அப்படி கேட்குமளவு தைரியம் இல்லை.
4. இதன் பின் சமாதான உடன்படிக்கை நிகழும். நீங்கள் நம்பா விட்டாலும் கூட சொல்லி வைக்கிறேன்.. பெரும்பாலான நேரம் நம்ம ஹவுஸ் பாஸ் தான் நம்ம கிட்டே "Sorry" கேட்டு சண்டையை முடிச்சு வைப்பார். (ஆம்பளை ஈகோவை பார் என பெண்கள் முணு முணுப்பது கேட்கிறது).
*
சில நேரம் ரொம்ப விரக்தி ஆகி வீட்டை விட்டு வெளிநடப்பு செய்ய பார்ப்பேன். அது மட்டும் நம்ம ஹவுஸ் பாஸுக்கு பிடிக்கவே பிடிக்காது. எங்கிருந்து தான் வருமோ அவ்வளவு தெம்பு.. என்னை பிடிச்சு உள்ளே தள்ளி வீட்டை பூட்டி விடுவார்.
*
என்ன தான் எத்தனையோ சண்டைகள் போட்டாலும், ஒரு முறை எங்க அக்கா வந்திருந்த போது நாங்கள் இருவரும் போட்ட சண்டை தான் இன்றளவும் எல்லாராலும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பேசபடுகிறது.
இரவு பத்து மணிக்கு ஆரம்பித்த சண்டை விடிய விடிய நடந்தது. நைட் ஷோ படம் மட்டுமல்ல, அதற்கு பிறகு ஒரு ஷோ கூட முடிஞ்சிருக்கும் என்பார்கள் என் ஃபேமிலியில்.. நடுவில் புகுந்து தடுக்க பார்த்த அக்காவுக்கும் எங்களால் ஆன அன்பளிப்பு கொடுக்க, அக்கா அப்புறம் கப் சிப்.
ஒரே நல்ல விஷயம் காலையில் "போர் நிறுத்தம்" அறிவித்து இருவரும் வேலைக்கு போய்டோம்!!
*
இப்போல்லாம் சண்டைகள் ஓரளவு குறைந்து விட்டது!
இதற்கு முக்கிய காரணம் எனக்கு வந்த புரிதல்தான்!
நம்ம ஃபிரண்டை உரிமையாய் கிண்டல் பண்ணுவது போல் ஒயிஃபை கிண்டல் பண்ண கூடாது என்ற தெளிவு (ஓரளவுக்கு) வந்தடுச்சு.. மேலும் எந்த சண்டை வந்தாலும் உடனே தோல்வியை ஒப்பு கொண்டு சரண்டர் ஆகி விட்டால் சண்டை சீக்கிரம் முடிந்து விடும்..
என்ன தான் சுப்ரீம் கோர்ட்லயே நெம்பர் ஒன் வக்கிலாக இருந்தாலும் பெண்டாட்டி கிட்டே சண்டை போட்டு ஜெயிக்க முடியாது!!

கருத்துகள் இல்லை:

பழங்கள் சாப்பிட நேரம் காலம் உள்ளதா?

ஊட்டச் சத்துக்களின் சுரங்கமாகக் காய்கறிகள் , பழங்கள் உள்ளன. உடலுக்கு ஆற்றல் அளிப்பதுடன் , தேவையான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருப்பதால் ...

Popular Posts