லேபிள்கள்

திங்கள், 15 நவம்பர், 2010

சொந்த வீடு....நொந்த வீடு.....!!


வாசலிலிருந்தே குரல் கொடுத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் சீனிவாசன். புதுசா கல்யாணம் ஆனவங்க...டப்புன்னு போய் முன்னால நின்னு சங்கடத்தக் கொடுக்கக்கூடாதுங்கற இங்கிதம் தெரிஞ்சவர். இப்படி கொஞ்சம் நல்லதுகளும் இருந்தாலும்....பெரும்பாலும் தில்லாலங்கடி வேலை செய்தே பிழைப்பை ஓட்டிக்கொண்டிருப்பவர். நிலையாய் ஒரு வேலையிலும் இருக்க மாட்டார். கொஞ்சநாள் ஏதாவது துக்கடா கம்பெனியில் கணக்கெழுதுவார், கொஞ்சநாள் கூரியர் ஆபீஸுக்கு ஃப்ரென்சைஸா ஒரு கடை திறப்பார், அப்பப்ப வீடு நிலம் வாங்க விறக தரகுவேலை செய்வார்....எல்லாம் சரிப்பட்டு வராம...இப்ப லேட்டஸ்டா எல்.ஐ.சி ஏஜெண்ட் அவதாரம் எடுத்திருக்கார்.

ஆனா இவரைப் பாக்கறவன்க ஏதோ நரசிம்ம அவதாரமே வர்ற மாதிரி அலறியடிச்சுக்கிட்டு ஓடுவாங்க. மனுஷன் பேசிப்பேசியே பாலிஸி எடுக்க வெச்சுடுவார்.

‘வாங்க சித்தப்பா...எங்க ரொம்பநாளா ஆளையே காணோமே...சித்தி குழந்தைங்கல்லாம் நல்லாருக்காங்களா?”

“எல்லாரும் நல்லாருக்காங்கம்மா...கணேசன் வீட்லதான இருக்கான்...?”

சுசீலா பதில் சொல்ல வாயெடுப்பதற்குள் வெளியிலிருந்து அந்த சத்தம் கேட்டது...

“என்னம்மா இது யாரோ தகர டப்பாவ ரோட்டுல போட்டுத் தேய்க்கிற மாதிரி சத்தம் வருது...”

“நீங்க கேட்டீங்களே உங்க மாப்பிள்ளை....அவருதான் சித்தப்பா பாட்டு பாடறார்....”

“ஏம்மா அவனுக்கு இந்த விபரீத ஆசையெல்லாம்....” 

‘ஆசையெல்லாம் ஒண்ணுமில்ல சித்தப்பா....குளிக்கப் போயிருக்கார். பாத்ரூம் கதவுக்கு தாப்பாள் இல்ல...வீட்டு ஓனரைக் கேட்டா...பாட்டுப் பாடிக்கோங்கன்னு சொல்லிட்டார்...இதுக்காக செம்மங்குடி சீனிவாசய்யர்கிட்டயா பாட்டுக் கத்துக்க முடியும்....ஏதோ இருக்கிற குரலை வெச்சு ஒப்பேத்திக்கிட்டிருக்கோம்...”

“அட கஷ்டகாலமே....இப்படிகூட ஒரு வீட்டு ஓனர் இருப்பாரா...?”

“இருக்காரே....கிச்சன் சின்க்ல தண்ணி வரலன்னு சொன்னதுக்கு....வெளியில போய் எடுத்துக்கிட்டு வாம்மா....சின்னவயசுப் புள்ளைங்க...ஓடியாடி வேலை செஞ்சாத்தான் ஆரோக்கியம்ன்னு அட்வைஸ் பண்றாரு”

“சரி விடும்மா....இந்தக் கஷ்டத்துக்கெல்லாம் ஒரு விடிவுகாலம் வரப்போகுது. அதைச் சொல்லத்தான் வந்தேன்...”

“ஆஹா...சித்தப்பா...வேற வீடு வாடகைக்கு இருக்கா? நல்லாருக்குமா? பாத்ரூம் கதவுக்கு தாப்பா இருக்குமா? கிச்சன் சின்க்ல தண்ணி வருமா?”

‘அடடடா....என்னம்மா இது நான்ஸ்டாப்பா கேள்வி கேட்டா எப்படி. நான் சொல்ல வந்ததே வேற. உங்களுக்குன்னு சொந்த வீடு கட்டிக்கிற யோகம் வந்திருக்கும்மா. அதான் உன்னையும், கணேசனையும் பாத்து பேசிட்டுப் போலான்னு வந்திருக்கேன்”

“ஹை...! சொந்த வீடா..கேக்கவே சந்தோஷமா இருக்கு...இருங்க சித்தப்பா காப்பி எடுத்துக்கிட்டு வரேன்”

“அய்யய்யோ வேணாம்மா....”

“ஏன் சித்தப்பா காப்பின்னதும் இப்படி அலர்றீங்க...”

‘அலறிட்டேனா....ஆ...அது...அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா...காலையிலருந்து மூணு காப்பி ஆயிடிச்சு...அதான் வேணான்னு சொல்ல வந்தேன்” (உன்னோடக் காப்பியக் குடிச்சிட்டு நாலு நாள் கொல்லைக்கும், வீட்டுக்குமா அலைஞ்சு நொந்தது எனக்குத் தான தெரியும்)

“அடடே...மாமாவா...வாங்க மாமா...வீட்ல எல்லாரும் சௌக்கியம்தான...சுசீ காப்பிக் குடுத்தியா..?”

“சித்தப்பா மறுபடியும் அலறாதீங்க...அவருக்கு காப்பி வேண்டாமாங்க...”

“கணேசா...ஒரு முக்கியமான விஷயம் பேசறதுக்குத்தான் வந்திருக்கேன்.”

“இதோ ஒரு நிமிஷம் வந்துடறேன் மாமா...சுசீ கொஞ்சம் வா”

அறைக்குள் வந்ததும்,

“முக்கியமான விஷயம்ங்கறாரே....ஏதாவது பணம் வேணுமாமா?”

“ம்....எங்க வீட்டு ஆளுங்கன்னாலே உங்களுக்கு எளக்காரம்தான். நல்ல விஷயமாத்தான் பேச வந்திருக்காரு. நீங்களே வந்து என்னன்னு கேளுங்க”

சொல்லிவிட்டு கூடத்துக்கு வந்து உட்கார்ந்துகொண்டாள்.

“ஏதோ முக்கியமான விஷயம் பேசனுன்னு சொன்னீங்களே...சொல்லுங்க..”

“கையில இப்ப எவ்ளோ பணம் வெச்சிருக்கே....?”

பாத்தீயான்னு கேக்கற மாதிரி சுசீலாவை ஒரு பார்வை பார்த்தான்...அவளும் குழம்பிப்போய்...

“சித்தப்பா...ஏதோ வீடுன்னு சொன்னீங்க...”

“அதுக்குத்தாம்மா கேக்கறேன்...இப்ப எவ்வளவு பணம் வெச்சிருக்கே”

“மாசக்கடைசி 86 ரூபாதான் மாமா இருக்கு....”

“அய்யோ....அதில்லடா....மொத்தமா எவ்ளோ இருக்கு?”

“ம்...மொத்தமா 86 ரூபாவும் சில்லறையா அம்பது பைசாவும் இருக்கு”

“ஷ்....அப்பா...முடி...........ல”

என்னையெ வெச்சு இவ‌ன் காமெடி கீம‌டி பண்ண‌லையேன்னு க‌ணேச‌னை ச‌ந்தேக‌மாக‌ப் பார்த்த‌வ‌ர், அந்த‌ அப்பிராணி முக‌த்தைப் பார்த்துவிட்டு...ம்ஹீம்...இவ‌னுக்கு அந்த‌ள‌வுக்கெல்லாம் சாம‌ர்த்திய‌ம் ப‌த்தாதுன்னு நினைச்சுக்கிட்டு, 

“பேங்குல, வீட்ல அப்படின்னு ஏதாவது சேத்து வெச்சிருக்கியான்னு கேட்டேன்.”

“ஓ..நீங்க அதைக் கேட்டீங்களா? பிரைவேட் கம்பெனியில சாதாரண கிளார்க்...என் கிட்ட எவ்ளோ இருக்கப் போகுது....பேங்குல மொத்தமா 37 ஆயிரமும், சில்லறையா 27 பைசாவும் இருக்கு...நேத்துதான் பாஸ்புக்குல எண்ட்ரி போட்டுக்கிட்டு வந்தேன்”

விட்டால் அழுதுவிடுவதைப் போல பரிதாபமான முகத்தோடு சீனிவாசன்,

“வேற ஏதாவது பணம் இருக்கா?”

“உங்க பொண்ணு போஸ்ட் ஆபீஸ்ல கொஞ்சம் பணம் போட்டு வெச்சிருக்கா...நான் கேட்டாக்கூட எவ்ளோன்னு சொல்றதில்ல...நீங்களே கேட்டுக்குங்க...”

“ஆமா...அப்படியே கோடிக்கோடியா சேத்து வெச்சிருக்கனில்ல....28 ஆயிரம்தான் இருக்கு”

“அது 37 இது ஒரு 28, ஆக 65 ஆயிரம்.....ம்....இப்போதைக்கு 50 டோக்கன் அட்வான்ஸாக் கட்டிடலாம்...மீதி ஒண்ணேகால் லட்சத்தை ரிஜிஸ்ட்ரேஷன் டைம்ல குடுத்தா போதும்...”

“என்ன ஏதுன்னு சொல்லாம நீங்க பாட்டுக்கு இவ்ளோ குடுக்கலாம்....அவ்ளோ குடுக்கலான்னு சொன்னா எப்படி மாமா?”

“அடடா....இப்படி அவசரப்படா எப்படிடா கணேசா...சிட்டியவிட்டு கொஞ்சம் தள்ளி அருமையான ஒரு எடத்துல ப்ளாட் போட்டிருக்காங்க. ரொம்ப ஃபேமஸான பில்டர்ங்க ஏஜி பில்டர்ன்னு கேள்வி பட்டிருப்பியே...நம்ம நாட்டாமை நடிகர்கூட ரொம்ப நல்ல இடம்ன்னு டிவியில சொல்லுவாரே....அதான்....நாப்பதுக்கு முப்பது....1200 சதுர அடி....அருமையா ரெண்டு பெட்ரூம் கிச்சன் வீடு கட்டலாம்....ஒண்ணேமுக்கால் லட்சம்தான். ரொம்ப சீப்...கேள்விப்பட்டதும் நான்கூட உடனே ஒரு ப்ளாட் புக் பண்ணிட்டேன்....சரி நீங்க இந்த வாடகை வீட்லருந்து கஷ்டப்படறீங்களேன்னு உங்கக்கிட்ட சொல்லான்னுதான் ஓடி வந்தேன்....”

மூணு ப்ளாட்டுக்கு ஆள் பிடிச்சிக் குடுத்தா ஒரு ப்ளாட் இலவசம்ங்கறதாலத்தான் இவ்ளோ அக்கறையா தேடி வந்திருக்காருன்னு சொல்லவா முடியும்?

“நாளைக்கே பணத்த எடுத்துக்கிட்டு ரெடியா இருங்க....நான் அந்த பில்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போறேன், அவங்களே வண்டி ஏற்பாடு பண்ணித்தருவாங்க. போய் இடத்தப் பாத்துட்டு வந்துடலாம். சரியா?”

சொந்தவீடு என்ற கனவில் செம்மறியட்டைப்போல இரண்டுபேரும் தலையாட்டினார்கள்.

ஜி பில்டரின் முதலாளியைப் பார்த்ததும், கணேசனுக்கு ஒரு மரியாதை தோன்றியது. அதிலும் உட்கார வைத்து, குளிர்பானமெல்லாம் வாங்கிக்கொடுத்ததும்...ஒரேயடியாய் உருகி...ஐம்பதாயிரத்தை லெதர் பையிலிருந்து எடுத்து மேசைமேல் கொட்டினான். அதை அவர் செத்த எலியைப்போல தூக்கி மேசை டிராயரைத் திறந்து தொப்பென்று போட்டதைப் பார்த்து, “ம்....எவ்ளோ பணத்தைப் பாத்திருப்பாரு....இவருக்கெல்லாம் இந்த 50 ஆயிரம் ஜுஜூபி” என்று நினைத்துக் கொண்டு சீனிவாசனைப் பார்க்க, அவரும் ஏதோ..ஒபாமாவையே அறிமுகம் செய்து வைத்தவரைப் போல... மந்தகாசமாகப் பார்த்தார்.

அவர்கள் ஏற்பாடு செய்த ஸ்கார்பியோ வண்டியில் ஏறியதுமே ஓட்டுநர் ஏஸியை உச்சத்தில் வைத்தார். கணேசனுக்கும், சுசீலாவுக்கும் மொத்தமும் ஜில்லாகிவிட்டது. மெதுவாக சீனிவாசனிடம் ,

“ரொம்ப தேங்ஸ் மாமா....ரொம்ப பெரிய பில்டருங்கதான். கோட்டு சூட்டு போட்டிருக்காரு.....ஏமாத்தமாட்டாரு”

என்று வெள்ளையாய் இருக்குறவன் பொய் சொல்ல மாட்டாங்கற மாதிரி பேத்தினான்.

இதோ இப்ப வந்துடும்...இதோ வந்துடிச்சி என்று சொல்லிக்கொண்டே.....சீனிவாசன் கூட்டிக்கொண்டு வந்த இடம் சிட்டியிலிருந்து கொஞ்சம் தள்ளி இல்லை...ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவே தள்ளியிருந்தது. அந்த அத்துவானக் காட்டைப் பார்த்ததுமே கணேசன் தம்பதியர்...அப்ஸெட் ஆகிட்டாங்க.

“என்ன மாமா இது பொறம்போக்கு நெலம் மாதிரி இருக்கு....”

‘இல்லீங்க....போறபோக்குல நாலு கல்ல நட்டு வெச்ச மாதிரி இருக்கு”

‘என்ன சுசிலா இது? மொத்தமா 230 ப்ளாட்ங்க...கட்டி முடிச்சா இது ஒரு சூப்பர் சிட்டி. இப்ப பாக்கறதுக்கு இப்படித்தான் இருக்கும்.... அதோ அங்க‌தான் சூப்ப‌ர் மார்க்கெட்வ‌ருது....இங்க‌ நீச்ச‌ல்குள‌ம்...இங்க‌ க‌ம்யூனிட்டி செண்ட‌ர்.....”

“அதுக்கில்ல மாமா...இங்கருந்து ஆபீஸுக்குப் போகனுன்னா....விடியக்காத்தாலேயே...டிபன் சாப்பாடெல்லாம் கட்டிக்கிட்டு ரெடியாகனும் போலருக்கே...”

“அதெல்லாம் நீ கவலையே படாதடா கணேசா...பறக்கும் ரயில் திட்டத்துல பக்கத்துலயே ஒரு ஸ்டேஷன் வருது. ஏறி உக்காந்தா...ஆஃப் அவர்ல ஆபீஸுக்கு போயிடலாம்.”

“சூப்பர் சிட்டி, சூப்பர் ஃபாஸ்ட் ட்ரெயின்..சூப்பர் பில்டரு கலக்குறீங்க மாமா....”

“ஹி...ஹி...ரொம்ப புகழாதடா....பில்டருக்கு என்னவோ என் மேல ரொம்ப மரியாதை வந்துடிச்சி. அதான் என் சொந்தக்காரங்கங்கறதால இந்த வடக்குப் பாத்த ப்ளாட்டை உங்களுக்கு ஒதுக்கியிருக்காரு....இல்லன்னா இந்த ப்ளாட்டுக்கு 25 ஆயிரம் ஜாஸ்தியா குடுக்கனும்..இப்பதான் வாஸ்துகாரங்க கிழக்குலருந்து, வடக்குக்கு மாறிட்டாங்களே....இங்க வீடு கட்டினா...நீ லைஃப்ல எங்கயோ போயிடுவே...”

இப்பவே சிட்டியிலருந்து எங்கேயோ....தான் வந்துட்டோம்ன்னு நினைச்சுக்கிட்டே,

“சரி போலாம் மாமா....போன மாசம் சீட்டு எடுத்த பணத்தை என் கலீக் சுந்தரேசன் கேட்டான்னு கொடுத்தேன். இந்த மாசம் சீட்டு எடுத்து தரேன்னு சொல்லியிருக்கான்....அவன்கிட்ட போய் ரிமைண்ட் பண்ணனும்”

“அடடே..பரவால்லயே....எவ்ளோ பணம் குடுத்தே....?”

“ஒரு லட்சரூபா சீட்டு மாமா....18 தள்ளி 82க்கு எடுத்தேன்...80ஐ அவன் வாங்கிக்கிட்டான்.... இந்தமாசம் எவ்ளோ தள்ளிப்போகுதுன்னு தெரியல. அதிகமா தள்ளிப் போனா கஞ்சப்பிசினாறி சீட்ட எடுக்க மாட்டான்....அதான் இப்பவே போய் சொல்லனும், என்ன ஆனாலும் எனக்கு இந்த மாசம் பணம் வேணுன்னு”

“தந்துடாவானில்ல....பாத்துடா...எமன் இளிச்சவாயனா இருந்தா எருமைகூட மச்சான் மச்சான்னு சொல்லுமாம்...”

“அப்ப நான் எமனா?”

‘எமனாகூட இருந்துடலாம்....இளிச்சவாயனாமட்டும் இருக்கவேகூடாது...”

“சுந்தரேசன்கூட என்ன மச்சான் மச்சான்னுதான் சொல்லுவான் மாமா...”

‘அய்யய்ய....நீங்க என்னங்க....அந்த அண்ணன் அப்படியெல்லாம் செய்ய மாட்டாரு....போய் பேசிக்கலாம் வாங்க”


ரு தெரு தள்ளியிருந்த பஞ்சமுக விநாயகர் கோவிலுக்கு ரெகுலரா வர்ற மகளிர் அணியில சுசீலாவும் ஒரு மெம்பர்.அன்னைக்கு சாயங்காலம் கூடின கூட்டத்துல, சுசீலா தன்னோட ப்ளாட்டைப் பத்தி ஏகமா அளந்ததைப் பார்த்து, மத்த மகளிரணிக்கு காதுல புகை. அதே குழுவுல இருக்கிற சந்திரா மாமி...சுசீலாவோட தலபுராணத்தைக் கேட்டுட்டு 

“ஏண்டி சுசீலா எந்த இடம்ன்னு கரெக்ட்டா சொல்லு..”

சுசீலா சொன்னதும், சற்று மௌனமாய் இருந்த சந்திரா மாமி, ப‌த‌ட்ட‌த்தோடு...(ச்சும்மா...ந‌டிப்பு)

‘அய்யய்யோ....அந்த எடம் கவர்மெண்டுதோன்னோ....எங்க ஹஸ்பெண்டு ஏ.ஈ யா இருக்கிற டிபார்ட்மெண்ட், அந்த எடத்துலதான் சீவேஜ் ட்ரீட்மெண்ட் ப்ளாண்ட் கட்டறாளாம்”

“என்ன மெண்ட் மாமி”

புரியாத இன்னொரு பெண்மணியின் கேள்விக்கு....

“கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்ன்னு தமிழ்ல சொல்லுவா...அங்க ஒரு போர்ட் கூட வெச்சிருப்பாளே பாக்கலையாடி சுசீலா....?”

"இல்லையே மாமி...எங்க சித்தப்பாதான் கூட்டிக்கிட்டுப் போய் காமிச்சார். பறக்கும் ரெயிலெல்லாம் வருதுன்னு சொன்னாரே...கஷ்டப்பட்டு சேத்து வெச்ச அம்பதாயிரத்த வேற குடுத்துத் தொலைச்சுட்டமே...அய்யய்யோ....அப்ப நாங்க ஏமாந்துட்டமா...”

கொஞ்ச‌ நேர‌த்துக்கு முன்னால‌ க‌ஜினி ரிலீஸுக்கு அப்புற‌ம் சூரியா மாதிரி பிர‌காச‌மா இருந்த‌வ‌ள்....சந்திரா மாமி சொன்னதைக் கேட்டதும், வில்லு ரிலீஸுக்கு அப்புறம் விஜய் மாதிரி ப்யூஸ் போயிட்டா.

சுசீலாவோட அந்த வாட்டத்தைப் பாத்ததும் சந்திரா மாமிக்கே தாங்கல...

"கவலப்படாதடி சுசீலா...நான் எங்காத்துக்காரர்கிட்ட சொல்றேன். அவர் ஏதாச்சும் பண்ணுவார். கவலைப் படாத...பகவான் நல்ல வழி காமிப்பார். அந்த பஞ்சமுகத்தானை சேவிச்சுக்கோ..."

மாமி கொடுத்த ஆறுதலில் கொஞ்சமாய் தெளிவானாலும்....சோகத்தோடவே வீட்டுக்கு வந்த சுசீலா, கணேசனைப் பாத்து எல்லாத்தையும் சொன்னா.

கணேசன் ஏற்கனவே அப்பிராணி...அம்பதாயிரத்த நினைச்சி...மயக்கமே போட்டுட்டான். சுசீலாதான் உடனே சீனிவாசனுக்குப் போனைப் போட்டு வரவழைச்சா. அவர்கிட்ட விஷயத்தை சொன்னதும் ஆரம்பத்துல ஒத்துக்கல....அப்புறம் வெளியே போனவர்...சாயங்காலமா பேஸ்த் அடிச்ச முகத்தோட திரும்பி வந்து....

"விசாரிச்சுட்டேண்டா கணேசா... நிஜ‌மாவே அது க‌வ‌ர்மெண்ட் நில‌ம்தாண்டா...அங்க‌ அது மாதிரி ஒரு பிளாண்ட் வ‌ர‌ப்போற‌தும் உண்மைதான்....என்ன‌டா செய்ய‌ப்போறோம் இப்ப‌.?"

"மாமா இது உங்க‌ளுக்கே நியாய‌மா?...செய்ய‌ற‌தையும் செஞ்சிட்டு...என்ன‌ செய்ய‌ற‌துன்னு கேள்வி வேற‌ கேக்க‌றீங்க‌ளே..."

"ம‌ன்னிச்சுக்க‌டா....நானே பெரிய‌ தில்லால‌ங்க‌டி....என்னையே ஏமாத்திட்டானே அந்த‌ கோட்டு சூட்டு...! ஆனா அவ‌னை சும்மா விட‌க்கூடாதுடா..."

"ந‌ம்மால‌ என்ன‌ ப‌ண்ன‌ முடியும் மாமா....அவ‌ன் பெரிய‌ லெவ‌ல்ல‌ ஏமாத்துற‌வ‌ன்...நாம‌ ந‌ம்ம‌ லெவ‌லுக்கு ஏமாற்ற‌வ‌ங்க‌...என்ன‌ ப‌ண்ண‌ முடியும்..."

"முடியும் க‌ணேசா...."

திடீர்ன்னு அச‌ரீரி மாதிரி ஒரு குர‌ல் கேட்க்க‌வும், யாரு இது ந‌ம்ம‌ புல‌ம்ப‌லைக் கேட்டு புள்ளையாருதான் வ‌ந்துட்டாரான்னு வாச‌ல் ப‌க்க‌ம் பார்த்தான்.

ஏற‌க்குறைய‌ பிள்ளையார் மாதிரியே இருந்த‌ ச‌ந்திரா மாமியோட‌ ஆத்துக்கார‌ர்தான் அந்த‌ அச‌ரீரிக்கு சொந்த‌க்கார‌ர்.

" அதுசரி...நீங்கள்லாம் படிச்சவங்கதானே....நிலம் வாங்கறதுக்கு முன்னாடி விசாரிக்கக்கூடாதா...?"

"தப்புதான் சார்....அந்த நடிகையை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும், அதோட நாட்டாமை நடிகரும் ரெகமெண்ட் பண்ணினதால...நம்பிட்டோம் சார்..."

"அடப்போங்கப்பா....அவங்க பணம் வாங்கிண்டு விளம்பரத்துல நடிக்கிறாங்க....அதையெல்லாம் நம்பலாமா... சரி...சரி...ஆனது ஆயிடுத்து...இப்ப அவங்களை வளைக்கனும், நான் ஏற்க‌ன‌வே போலீஸ் கிட்ட‌ பேசிட்டேன்...இன்னும் ரெண்டு ப்ளாட் வாங்கறதா அவாளைக் கூட்டிண்டு போங்கோ, போலீஸ்ல‌ருந்து ரெண்டு பேர் உன் கூட‌ வ‌ருவாங்க‌ அவ‌ங்க‌ சொன்ன‌ மாதிரி செய்..."


அடுத்த‌நாள்,

கணேசனும், சீனிவாசனும் இரண்டு போலீஸ்காரர்களுடன், அந்த இடத்தில் ப்ளாட் வாங்க வந்திருப்பவர்களாய், ஏ.ஜி பில்டர்ஸ் அலுவலகத்துக்குப் போனார்கள். சந்தோஷமாய் இவர்களை வரவேற்ற அந்த கோட்டு சூட்டு முதலாளி....புதிதாய் வந்தவர்களின் பார்வைக்கு அந்த ப்ளாட் இருக்கும் வரைபடத்தைக் காட்டினார். அது அரசாங்க நிலம்தான் என்பதை உறுதி செய்து கொண்ட அதிகாரிகள், பணத்தைக் கொடுத்தார்கள்.

அதையும் அலட்சியமாய் எடுத்து மேசை அறைக்குள் போட்டதும், அதிகாரிகளின் அழைப்பின் பேரில் உள்ளே வந்த மேலும் சில போலீஸார் அந்தக் கோட்டு சூட்டைக் கைது செய்தார்கள்.

உடனடியாக மேசை அறையிலிருந்து அவர்கள் கொடுத்த பணத்தை விட்டுவிட்டு, வேறு பணத்திலிருந்து 50 ஆயிரத்தை எடுத்து கணேசனிடம் கொடுத்துவிட்டு,

"கந்தசாமி ஸ்டைல்தான்....ஆனா என்ன பண்றது....கேஸ் இழுத்தடிக்கும்....பணம் கிடைக்க லேட்டாகும்...அதான் இந்த லேட்டஸ்ட் ஸ்டைல். வெச்சுக்கங்க....இனிமேலாச்சும்....இப்படி ஏமாறாதீங்க..."

பணத்தைக் கையில் வாங்கிக்கொண்ட கணேசன்...

"ரொம்ப நன்றி சார்..."

என்றதும், சீனிவாசன்...

"சார் என்னோட பணம்...."

"ம்....ஃப்ரீயா கிடைக்கிற ப்ளாட்டுக்காக, அப்பாவிங்க ஏமாற்றதுக்கு காரணமா இருந்ததுக்கான தண்டனையா....கேஸ் முடியற வரைக்கும் காத்துக்கிட்டிருங்க...."

"கேஸ் முடியற வரைக்குமா....அப்ப...அது இன்ஸ்யூரன்ஸ் பாலிஸி மாதிரி...என் பொண்டாட்டிக்குத் தான கிடைக்கும்...."

புலம்பிக்கொண்டே.....கணேசனை பார்த்தார்.

"கவலைப்படாதீங்க மாமா...சீக்கிரம் கிடச்சிடும்....வீட்டுக்குப் போய் சுசீ கையால சூடா ஒரு காப்பி சாப்புடலாம்...."

கருத்துகள் இல்லை:

பழங்கள் சாப்பிட நேரம் காலம் உள்ளதா?

ஊட்டச் சத்துக்களின் சுரங்கமாகக் காய்கறிகள் , பழங்கள் உள்ளன. உடலுக்கு ஆற்றல் அளிப்பதுடன் , தேவையான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருப்பதால் ...

Popular Posts