திருமண பந்தத்தில் இணையபோகும் முன் ஜாதகம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கும் பெரும்பாலானோர், தம்பதிகளாக போகும் இளம் ஜோடிகளின் உடல் பிரச்சனைகள் குறித்து அக்கறை கொள்வதில்லை.
இன்னும் சொல்லப்போனால், உடல் பரிசோதனைக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். திருமண பந்தத்தில் இணைவதற்கு முன்பு, இளம் ஜோடிகள் இருவரும் 9 மருத்துவ பரிசோதனைகள் கட்டாயம் செய்ய வேண்டும்.
1. சிபிசி டெஸ்ட்
ஒருவரின் உடல்நிலையை அறிய முழுமையான இரத்த பரிசோதனை செய்ய வேண்டும். இந்த சோதனை மூலம் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிந்து, அதன் மூலம் இரத்த சோகை, தொற்று, வீக்கம், இரத்தப்போக்கு கோளாறுகள் அல்லது லுகேமியா போன்ற பல்வேறு நோய்களைக் கண்டறிய முடியும்.
2. ரத்த வகை:
ரத்த வகை பரிசோதனையும் அவசியம். சில இரத்தக் குழுக்கள் ஒன்றுக்கொன்று ஒத்துப்போவதில்லை என்பதால் இந்தப் பரிசோதனை முக்கியமானது. இது கர்ப்ப காலத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
3. கருவுறுதல் சோதனை
திருமண பந்தத்தில் குழந்தைபேறு முக்கியமாக பார்க்கப்படுகிறது என்பதால், குழந்தை பேறுக்கான விந்தணு சோதனைகளை செய்து கொள்வது அவசியம். இதன் மூலம் உங்களின் ஆற்றலை அறிந்து முன்கூட்டியே சிகிச்சை எடுக்கவும் உதவியாக இருக்கும்.
4. மரபியல் மருத்துவ வரலாறு
நீரிழிவு அல்லது இதய நோய் இப்போதெல்லாம் பொதுவானது. எனவே, திருமணத்திற்கு முன் தம்பதிகள் ஒருவருக்கொருவர் குடும்ப மருத்துவ வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இது குழந்தை மற்றும் தம்பதியரின் எதிர்கால ஆரோக்கியத்தை பாதிக்கும்.
5. எச்.ஐ.வி மற்றும் எஸ்.டி.டி சோதனை
எச்.ஐ.வி மற்றும் பிற பால்வினை நோய்கள் (எஸ்.டி.டி) ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும். எனவே, ஆண் - பெண் இருவரும் இவற்றில் எந்த தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
6. தலசீமியா சோதனை
தலசீமியா உங்கள் எதிர்கால குழந்தைகளில் பிறவி குறைபாடுகளை ஏற்படுத்தும். எனவே, திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
7. மனநல நிலை
மகிழ்ச்சியான திருமணத்திற்கு இருவரின் மன ஆரோக்கியம் அவசியம். இதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியம்.
8. நாள்பட்ட நோய்
எந்தவொரு நாள்பட்ட நோயும் கர்ப்ப காலத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். திருமணமான தம்பதிகள் தங்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நிலையை ஏற்கனவே அறிந்திருக்க வேண்டும். எனவே, இந்த சோதனையை எடுக்க வேண்டியது அவசியம்.
9. கர்ப்பப்பை சோதனை
கர்ப்பப்பை சோதனை அவசியம். இதன்மூலம் கருப்பைகள் மற்றும் ஃபலோபியன் குழாய்களின் நிலையை அறிந்து கொள்ள முடியும். இது கருவுறுதல் பிரச்சனைக்கு தீர்வு காண வழிவகுக்கும்.
--