லேபிள்கள்

வெள்ளி, 10 ஜனவரி, 2014

வியாபாரம் பற்றி இஸ்லாம்

வியாபாரம் பற்றி இஸ்லாம்

வியாபாரத்தைப் பற்றி திருமறை:
வியாபாரத்தைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் 2:275 வசனத்தில் குறிப்பிடுகிறான்: அல்லாஹ் உங்களுக்கு வியாபாரத்தை அனுமதித்திருக்கிறான். 
ஆனால் அல்லாஹ் கூறும் வியாபாரத்தில் அளவை நிறுவையில் மோசடி, பொய்யான வாக்குறுதி, பொருள் கலப்படம், குறையுள்ள பொருள் விற்பனை, வாங்குபவரை ஏமாற்றுதல், பொருள் விற்பனைக்காக அல்லாஹ் மீது சத்தியம் செய்தல், பொருளை பதுக்குதல், கொள்ளையடித்தில், திருடுதல், அல்லாஹ் ஹராமாக்கிய பொருளை விற்பனை செய்தல் அல்லது வாங்குதல், வாங்கிய பொருள் கைக்கு வருவதற்கு முன் விற்பனை செய்தல் போன்ற எண்ணற்ற குறைபாடுகள் கிடையாது. ஆனால் இன்றைய வியாபாரத்தில் இவையெல்லாம் வியாபார நுணுக்கங்களாக தலை தூக்கிவிட்டன.
பலர் எந்த வியாபாரம் ஹலாலானது, எந்த வியாபாரம் ஹரமானது என்பதை அறியாமலேயே வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால்தான் வியாபாரியாக இருந்து வாழ்க்கையை நடத்தும் முஸ்லிம்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பற்கு இஸ்லாம் சில வரையறைகளை விதிக்கிறது.
அளவையிலும், நிறுவையிலும் மோசடி கூடாது!
"அளவையிலும், நிறுவையிலும் மோசடி" செய்பவர்களைக் குறித்து அல்லாஹ் தன் திருமறையில் 83:1-3 வசனங்களில் கடுமையாக எச்சரிக்கின்றான்:
அளவையிலும் நிறுவையிலும் யார் மோசடி செய்கிறார்களோ அவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் இருந்து அளந்து வாங்கினால் நிறைய அளந்து கொள்வார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும் போது குறைத்து விடுவார்கள். அளவையிலும் நிறுவையிலும் குறைத்து வியாபாரம் செய்வது வியாபார நுணுக்கமாக சில வியாபாரிகள் நினைக்கின்றனர்.
ஆனால் இது ஒரு மாபெரும் மோசடி. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"(அளவை, நிறுவை என) இரண்டு விஷயங்களில் பொறுப்பேற்றுள்ளீர்கள். இதில்தான் உங்களுக்கு முன் இருந்த சமுதாயத்தினர் அழிந்தனர்" என்று எச்சரித்தார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) திர்மிதீ).
வியாபாரத்தில் பொய்ச்சத்தியம் கூடாது!
இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்தார்கள்.
"(வியாபாரத்தில்) சத்தியம் செய்வது, சரக்கை விற்கச் செய்திடும். (ஆனால்) லாபத்தை அழித்துவிடும்" என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம், நஸாயீ, அஹ்மத், அபூதாவூத்).
இவ்வாறு விற்கும் பொருளில் இல்லாததை இருப்பதாக பொய்ச்சத்தியம் செய்து விற்றால் மறுமை நாளில் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என்று மற்றொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"மறுமை நாளில் மூன்று நபர்களை அல்லாஹ் பார்க்க மாட்டான், அவர்களைத் தூய்மைப் படுத்தமாட்டான், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என்று கூறினார்கள். அந்த மூவரில் ஒருவன் தனது வியாபாரப் பொருளில் இல்லாததை இருப்பதாக கூறி சத்தியம் செய்தவன்." (அபூஹுரைரா (ரலி) புஹாரி).
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒருவன் ஒரு சத்தியம் செய்து அதன் காரணமாக மற்றொரு முஸ்லிமுடைய சொத்தைப் பறித்துக் கொண்டு, அதில் அவன் பொய்யனாக இருப்பின், மறுமையில் அவன் மீது கோபமாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வைச் சந்திப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்." (அஷ் அஸ் இப்னு கைஸ் (ரலி)புஹாரி, முஸ்லிம்).
இது பற்றி அல்லாஹ் தன் திருமறையில் (2:188) வசனத்தில் குறிப்பிடுகிறான்:
உங்களுக்கிடையே (ஒருவருகொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! என்று கூறுகிறான்.
வியாபாரத்தில் போட்டி, பொறாமை கூடாது!
இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். "ஒரு மூமின் மற்றொரு மூமினின் சகோதரர் ஆவார். தன் சகோதரரின் வியாபாரத்தில் தலையிட்டு வியாபாரம் பேச ஒரு மூமினுக்கு அனுமதியில்லை" என்று கூறினார்கள். (உக்பா இப்னு ஆமிர் (ரலி) இப்னுமாஜா, அஹ்மத்).
இதேபோன்று மற்றொரு ஹதீஸில் "உங்களில் ஒருவர் தன் சகோதரன் செய்யும் வியாபாரத்தில் (குறுக்கீடு செய்து) வியாபாரம் செய்ய வேண்டாம்" என்று கூறினார்கள். (இப்னு உமர் (ரலி) புஹாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸாயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).
(வாங்கும் நோக்கமின்றி விலையை உயர்த்திடும் நோக்கில்) விலையை கூடுதலாக்கிட முயல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். (இப்னு உமர் (ரலி) புஹாரி, முஸ்லிம், நஸாயீ, இப்னுமாஜா, அஹ்மத்).
பதுக்கல் வியாபாரம் கூடாது!
இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"தேவையான பொருளைப் பதுக்கி வைக்காமல் உரிய நேரத்தில் அவற்றை அங்காடிக்குக் கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தவனாவான். மேலும் அல்லாஹ் அவனுக்கு வாழ்வாதாரங்களையும் வழங்குவான். இன்னும் அவற்றை பதுக்கி வைப்பவன் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவனாவான்" என்று
கூறினார்கள். (உமர் (ரலி) இப்னுமாஜா).
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பாவியைத்தவிர வேறு யாரும் உணவுப் பொருளைபதுக்கமாட்டார்கள்." என்று கூறினார்கள். (மஃமர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) முஸ்லிம்).
இந்தப் பதுக்கல்காரனைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தேவையான பண்டங்களைப் பதுக்கி வைப்பவன் எவ்வளவு கெட்டவனாக இருக்கிறான். அல்லாஹ் பொருளின் விலையை மலிவாக்கி விட்டால் இவன் வருத்தப்படுவான். விலை ஏறிவிட்டாலோ மகிழ்ச்சிகொள்கிறான்." என்று கூறினார்கள். (முஅத் (ரலி) பைஹகீ).
கூட்டு வியாபாரத்தில் சகதோழரை ஏமாற்றுவது கூடாது!
இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
"வியாபாரம் போன்ற வணிகத்தில், இரண்டு கூட்டாளிகளில் ஒருவர் தன்னுடைய தோழருக்கு மோசடி செய்யாத வரை அவர்களுடன் மூன்றாவது கூட்டாளியாக அல்லாஹ் இருப்பான் " என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) அபூதாவூத்).
இது பற்றி அல்லாஹ் தன் திருமறையில் (38:24) வசனத்தில் குறிப்பிடுகிறான்:
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரைத் தவிர, உங்களில் கூட்டுச் சேர்வோரில் அதிகமானோர் ஒருவர் மற்றவர் மீது அநீதி இழைக்கின்றனர்.
வியாபாரத்தில் ஹலால் ஹராம் பேணுவதை கைவிடல் கூடாது!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக! என்று மூன்று முறை கூறிவிட்டு, நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மீது கொழுப்பை ஹராமாக்கினான். அவர்களோ அதை விற்பனை செய்து அதன் பணத்தில் சாப்பிட்டார்கள். அல்லாஹ் ஒரு சமுதாயத்தின் மீது எதை உண்ண ஹராமாக்கினானோ அதனுடைய பணமும் ஹராமாக்கிவிட்டான்" என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) அபூதாவூத்).
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஹராமின் மூலம் வளர்ந்த சதைக்கு நரக நெருப்பே தகுதியானது" என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) தப்ரானீ).
நபி (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள்: "ஒரு காலம் வரும். அப்போது மக்கள் தாங்கள் சம்பாதிப்பவை ஹலாலா?ஹராமா? என்பதை பொருட்படுத்தமாட்டார்கள்" என்று கூறினார்கள் (அபூஹுரைரா (ரலி) புஹாரி).
நபி (ஸல்) அவர்கள் கூறிய அந்த காலத்தில்தான் நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்று ஒரு மனிதன் தான் எந்த வழியில் சம்பாதிக்கிறோம் என்பதை பார்ப்பதில்லை. அவனுடைய நோக்கம் பணம் மட்டும்தான். பணமென்றால் அனைத்தையும் இழக்கத்தயாராகிவிடுகிறான்.
ஏன் நமது துஆ அங்கீகரிக்கப்படுவதில்லை?
சிலருக்கு என்னடா! நாம் அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். ஆனால் நம்முடைய துஆ இதுவரை அல்லாஹ் அங்கீகரிக்கவில்லையே? என்று எண்ணம் தோன்றலாம். அதற்கு என்ன காரணம் தெரியுமா?
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: "ஒருவனது உடை, உணவு, பானம் ஆகியவை ஹராமானதாக இருக்கும் போது, அவனது துஆ எவ்வாறு அங்கீகரிக்கப்படும்?" என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்).
நாம் ஹராமான முறையில் சம்பாதித்துவிட்டு பிறகு நமது தேவைக்காக அல்லாஹ்விடம் துஆ செய்தால் அந்த துஆவிற்கு பதிலும் இருக்காது, பலனும் இருக்காது.
நேர்மையான வியாபாரிகளின் நிலை என்ன?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உண்மை பேசி, நாணயத்துடன் நடந்து கொள்ளும் ஒரு வணிகர் மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீதுகள் ஆகியோருடன் இருப்பார்" என்று கூறினார்கள். (அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) திர்மிதீ).
இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "வியாபாரிகளே! ஷைத்தானும் பாவமும் வியாபாரத்தின் போது ஆஜராகி வருவதால், உங்கள் வியாபாரங்களுடன் தர்மத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். (பரா பின் ஆஸிப் (ரலி) திர்மிதீ, அபூதாவூத்).
இறுதியாக!
அன்பான வியாபாரிகளே! நீங்கள் மக்களின் அன்றாடம் தேவைகளை விற்பனை செய்கிறீகள். ஆனால் உங்கள் வியாபாரத்தில் மோசடி செய்யாதீர்கள்! எது ஹராம்? எது ஹலால் என அறிந்து வியாபாரம் செய்யுங்கள்! அல்லாஹ்வின் மீது பொய்ச் சத்தியம் செய்து பொருளை விற்பனை செய்யாதீர்கள்! விற்பனை பொருளை பதுக்கல் செய்யாதீர்கள்! விற்பனை பொருட்களில் கலப்படம் செய்து அப்பாவி மக்களின் உயிர்களை குடிக்காதீர்கள்! அடுத்தவரின் வியாபாரத்தில் குறுக்கீடு செய்து, பொறாமை கொள்ளாதீர்கள்! கூட்டுத்தொழிலில் சகதோழரை ஏமாற்றாதீர்கள்! உங்களின் வியாபாரங்களுக்கு மத்தியில் அதிகம் தர்மம் செய்யுங்கள்!


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

வெள்ளை முட்டை நல்லதா? பழுப்பு முட்டை நல்லதா? என்ன வித்தியாசம்?

முட்டைகள் உலக அளவில் அதிக மக்களால் கோரப்படும் காலை உணவுகளில் முதலிடத்தைப் பிடிக்கின்றன. எப்படி வேண்டுமானாலும் உட்கொள்ளக் கூடிய தேர்வுக...

Popular Posts