லேபிள்கள்

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

நீங்கள் சரியாகத்தான் பால் காய்ச்சுகிறீர்களா ?


காலையில் எழுந்ததும் ஒரு கப் டீயோ, காபியோ குடித்தால்தான்... சுறுசுறுப்பு நாடி நரம்பெல்லாம் பரவும் என்ற மனப்பழக்கத்துக்கு ஆளாகி இருப்பவர்கள் நாம். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்குமான முக்கியமான ஊட்டச் சத்தும் பால்தான். அப்படி நமக்கு மிக முக்கிய மாகிப் போன பாலை, நாம் சரியான முறையில் காய்ச்சுகிறோமா..? அப்பா டீ குடிக்கும்போது ஒருமுறை, குழந்தைக்குப் பாலூட்ட ஒரு முறை என பாலை பலமுறை சுடவைக்கும்போது, இது சரிதானா என்று யோசித்துப் பார்த்தது உண்டா..?
''பாலை பலமுறை சுட வைப்பது மிகத் தவறான பழக்கம்!'' என்கிறார், உணவியல் நிபுணர் ஷைனி சந்திரன். ''காய்ச்சிய பாலை 2-3 நிமிடங்களுக்கு மேல் நீண்ட நேரம் சுட வைக்கும்போது, அதில் இருக்கும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகிவிடும். கால்ஷியம், வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால், பாலை அடிக்கடி சுடவைப்பதால் அந்த சத்துக்கள் வீணாகிவிடும் என்றால், பால் குடிப்பதன் காரணமும் வீணாகிவிடும்தானே?!'' என்று தெளிவுபடுத்திய ஷைனி, பாலைக் காய்ச்சுவதற்கான காரணத்தைக் கூறினார்.
''பசும்பாலில் இருக்கும் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள், அதைக் காய்ச்சும்போது அழிந்துவிடும். அதனால்தான் பாலைக் காய்ச்சுகிறோம். இன்று பெரும்பாலானவர்கள் பாக்கெட் பால் வாங்குகிறோம். அது ஏற்கெனவே சுத்தம் செய்யப்பட்ட பிறகுதான் பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது என்பதால், அதனை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும் என்கிற அவசியமில்லை. பாலைக் காய்ச்சியதும் குடித்துவிடலாம். ஆறவிட்டு, மீண்டும் சூடாக்கி சூடாக்கி சத்துக்களை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர்க்கலாம்'' என்றவர், பால் காய்ச்சும் முறையைக் கூறினார்.
பசும்பால் வாங்குபவர்களுக்கு...
''பால் பொங்கியதும் உடனே இறக்கிவிடாமல், 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். கரண்டியால் பாலைக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பால் 100 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும்.
பாக்கெட் பால் வாங்குபவர்களுக்கு...
'டோன்டு மில்க்’, 'பாஸ்டரைஸ்டு மில்க்என்று பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலில் ஏற்கெனவே பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு இருப்பதால், அதை 6-8 நிமிடங்கள் சூடு செய்தால் போதும்.
யு.ஹெச்.டி (அல்ட்ரா ஹை டெம்ப்ரேச்சர்)
வகை பால் வாங்குபவர்களுக்கு...
இந்த வகைப் பால் வாங்குபவர்கள், அதைக் கொதிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை. சுட வைத்தாலே போதுமானது.
எந்த வகைப் பால் ஆயினும், அதை இரண்டு முறைக்கு மேல் சுட வைக்க வேண்டாம். ஒரு முறை பாலைக் காய்ச்சியபின் அதை ரெஃப்ரிஜிரேட்டரில் வைக்கலாம்.
காபி, டீ என தயார் செய்யும்போது மீண்டும் மொத்தப் பாலையும் காய்ச்சாமல், எத்தனை டம்ளர் காபி/டீ தேவைப்படுகிறதோ, அந்தளவுக்கு மட்டும் பாலை எடுத்து தயார் செய்யலாம்'' என்று வழியும் சொன்னார் ஷைனி!
இதை ஆமோதிக்கும் சித்த மருத்துவர் ஜீவா சேகர், ''பாலை 'மைக்ரோ அவன்மூலம் சூடு பண்ணுவதைத் தவிர்ப்பதும் நல்லது. காரணம், அதில் சத்துக்கள் எளிதில் ஆவியாகிவிட வாய்ப்புண்டு!'' என்பதையும் குறிப்பிட்டார்.
முழுமையான சத்துக்களைப் பெற, இனி பாலை சரியாகக் காய்ச்சுவோமா..?!

கருத்துகள் இல்லை:

வீட்டிற்கு ஏர்கூலர் வாங்குவதற்கு முன் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

ஏ.சி வங்க முடியாத அல்லது ஏ.சியை பயன்படுத்த முடியாத வீடுகளுக்கு ஏர் கூலர் தான் பயனுள்ளதாக இருக்கிறது. இது ஏ.சி அளவிற்கு அறையை குளிர்...

Popular Posts