பருக்கள் வராமல் தடுக்கவும்
பருக்கள் வருவதை விட, அவை விட்டுச் செல்லும் வடுக்கள்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பருக்கள் வராமல் தடுக்கவும், பரு வடுவைப் போக்கவும் வழி உள்ளதா?இந்த கேள்விக்கு நமது அழகுக் கலை நிபுணர் கூறும் யோசனை:
பருக்கள் வந்ததால் முகத்தில் இருக்கும் ஓரிரு வடுக்களை நிச்சயமாக போக்க முடியும். முதலில் வடுக்கள் ஏன் ஏற்படுகின்றன என்றால், முகப்பரு வந்ததும் அதனை நகத்தால் கீறுகிறார்கள்.
நகம் பட்டாலே வடு விழுந்துவிடும். அதனை உடனடியாக போக்க முடியாது. சிறிது காலம் பிடிக்கும். சிலருக்கு பருக்கள் வந்து முகத்தில் சிறிய பள்ளங்களே ஏற்பட்டிருக்கும்.
முகப்பரு வந்தால் அதனை நீக்குவதற்கு முன்பு, ஐஸ் கட்டிகளால் ஒத்தடம் கொடுத்த பிறகு அதில் கை வைப்பது நல்லது. இதனால் பருக்களின் வழியாக ரத்தம் வெளியாவது தவிர்க்கப்படுகிறது. பொதுவாக பருக்கள் வந்தால் அது முற்றிய நிலையில் அதில் இருக்கும் வெள்ளையான திரவத்தை எடுத்து விடுவது மிகவும் முக்கியம். அதிலும் மற்ற இடங்களில் அவை படாமல் எடுக்க வேண்டியதும் அவசியமாகிறது.
மேலும், பருவை நீக்குவது என்பதை கவனமாக செய்ய வேண்டும். பருவை கைகளால் கிள்ளி எடுத்துவிடுகிறோம். அதில் இருந்து வெள்ளையான திரவம் வெளியான பிறகு ரத்தம் வரும். அதனை துடைத்துப் போட்டுவிட்டு அப்படியே விட்டுவிடக் கூடாது. அப்படி விட்டுவிட்டால்தான் பருக்கள் பரவுகிறது.
பருக்கள் வந்தால் அதனை நீக்கியதும் உடனடியாக அதனை சுத்தப்படுத்திவிட்டு அதில் ஏதாவது ஒரு பேஸ் பேக்கை (க்ரீம்) போட வேண்டும். அப்படி போடாவிட்டால், பருவில் ஏற்பட்ட துளைக்குள் தூசு, துகள்கள் போய் பெரிய பிரச்சினையாகிவிடும்.
முகப்பரு வந்தவர்கள் அதிலும், அதிகமாக முகப்பருவினால் பாதிக்கப்படுபவர்கள் தங்களது முகத்தை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். பருக்கள் வருபவர்கள் எந்த விதமான க்ரீம்களையும் பயன்படுத்தக் கூடாது. சிலரது முகத்தில் விரலைக் கூட வைக்க முடியாது. அந்த அளவிற்கு வலி எடுக்கும். அவர்கள் அழகுக் கலை நிபுணரிடம் செல்வதை விட, ஒரு தோல் மருத்துவரிடம் செல்வதுதான் நல்லது.
அழகுக் கலை நிபுணரால் எல்லாமே செய்ய முடியாது. எனவே, அவர்களுக்கு அடிப்படையில் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை மருத்துவர் மூலம் அறிந்து கொண்டு அதற்கு முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
பருவை மட்டும் நீக்கிவிட்டாலும், உள்ளுக்குள் இருந்து சீழ் போன்ற ஒன்று வந்து கொண்டே இருக்கும். அதனை எவ்வளவுதான் எடுக்க முடியும். ஒரு வேளை அது சருமத்திற்கு அடியிலேயே தங்கிவிட்டாலும் பிரச்சினையாகிவிடும். அதிகமாக எடுத்தாலும் பரு இருந்த இடத்தில் வடு ஏற்பட்டுவிடும். எனவே பருவை அழகுக் கலை நிபுணரிடம் சென்று நீக்கிக் கொள்வதை விட, அதிகமாக பரு இருப்பவர்கள் ஒரு மருத்துவரிடம் செல்வதுதான் நல்லது.
பருக்களினால் ஏற்பட்ட வடு நிச்சயமாக போகும். அதற்கு ஒரு நீண்ட சிகிச்சை உள்ளது. முதலில் பரு உள்ளவர்கள் பேஷியல் செய்து கொள்ளவேக் கூடாது. ஏன் அப்படிக் கூறுகிறேன் என்றால், பரு வருகிறது என்றால் அவர்களது சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை உள்ளது. மேலும், பேஷியலின் போது பயன்படுத்தும் க்ரீம்கள் அனைத்திலும் அதிகப்படியான எண்ணெய் பசைதான் இருக்கும். எனவே அவரகளது சருமத்தை பேஷியல் மேலும் சிக்கலாக்கும்.
முகத்தில் அதிகமான பருக்கள் இருப்பவர்கள் அவசியமாக பேஷியல் செய்தே ஆக வேண்டும் என்று நினைத்தால் முதலில் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுவிட்டு பிறகு பேஷியல் செய்து கொள்ளலாம்.
ப்ளீச் செய்யலாம். ஏனெனில் ப்ளீச் செய்வதால் முகத்தில் இருக்கும் எண்ணெய் தன்மை நீக்கப்பட்டுவிடும். எனவே ப்ளீச்சிங் செய்து கொள்ளலாம். தவறில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக