லேபிள்கள்

ஞாயிறு, 5 ஜூன், 2011

கோடையில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது ?


கோடையில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது ?

முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு, கடுமையான வெயில் வாட்டி வதைப்பதை நாம் நன்கு உணர்வோம்.
பெரியவர்களாக இருப்பவர்கள் எந்த வகையிலாவது வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள, பல வழிகளை அறிந்து வைத்திருப்போம். ஆனால், குழந்தைகள் அப்படி அல்ல. அவர்களுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை நாம் மட்டுமே அறிந்து உணர்ந்து அவர்களுக்கு ஏற்றதை செய்ய முற்பட வேண்டும். 
குழந்தைப் பராமரிப்பு என்றதும் இது மகளிருக்கான பகுதி நமக்கெதுக்கு என்று நினைத்துவிட வேண்டாம். குழந்தைப் பராமரிப்பைப் பொறுத்தவரையில், தாயை விட அதிக அக்கறை எடுத்து கவனிக்கும் தந்தைகளும் இல்லாமல் இல்லை!

இந்த கோடை காலத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளை எப்படி பராமரிப்பது என்பது குறித்த சில உதவிக்குறிப்புகள் இதோ:

* வெயில் காலத்தில் கட்டிலின் மேல் உஷ்ணம் அதிகம் இருக்கும் காரணத்தினால் உங்கள் குழந்தைகளை கட்டிலில் படுக்க வைப்பதற்குப் பதில், பாயை விரித்து, அதன் மேல் பருத்திப் புடவையை அடர்த்தியாக மடித்து தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க விடலாம்.

* வெயில் காலத்தில் பொதுவாக தண்ணீர் சத்து பற்றாக்குறை ஏற்படும் என்பதால், குழந்தை மருத்துவரின் அனுமதி பெற்று, பால் குடிக்கும் குழந்தைக்கு, சுட வைத்து ஆற வைத்த தண்ணீரையும் அவ்வப்போது கொடுக்கலாம்.

* குழந்தைக்கு வியர்த்துப் போகும் என்பதால், அதிகப்படியான காற்று குழந்தையின் முகத்திற்கு நேரே படும்படி படுக்க வைத்து, குழந்தைக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடக்கூடாது. காற்றின் வேகம் மிதமானதாக இருப்பதே சிறந்தது.

* ஒரே இடத்தில் படுத்து‌க்கொண்டிருப்பதால், குழந்தை உடலின் பின்பகுதி சீக்கிரம் உஷ்ணமாகிவிடும் என்பதால், குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒருதடவை, குழந்தையை இட‌ம்மாற்றி படுக்க வைக்க வேண்டும். அவ்வாறு தரையில் படுக்க வைக்கும்போது குழந்தைக்கு அருகில் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்ட கனமான பொருட்கள் எதுவும் இருக்ககூடாது.


* கோடை காலங்களில் மிகவும் மெல்லியதான பஞ்சு மற்றும் பருத்தியிலான ஆடைகளை குழந்தைக்கு அணிவிக்க வேண்டும்.

* கூடுமானவரை, குழந்தையை வெயில் காலங்களில் வெளியிடத்திற்கு தூக்கிச் செல்வதை தவிர்ப்பது நல்லது.

* வெயில் தாங்காமல் சில குழந்தைகளின் உடம்பில் அரிப்பு, சொறி, சிவப்பு நிற தழும்புகள் போன்ற கிருமி தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதால், அவ்வப்போது குழந்தையின் உடம்பை சோதித்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு இருந்தால், குழந்தை மருத்துவரிடம் அழைத்துச் சென்று அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

* உடம்பில் அதிகப்படியான சூடு இருந்தால், அது சிறுநீர் வெளியேறும் போது தெரியும் என்பதால் வெயில் காலங்களில், குழந்தை வெளியேற்றும் சிறுநீரையும் சோதிக்க வேண்டும்.

* அதேபோல் உடம்பில் தண்ணீர் சத்து குறைவாக இருக்கும்போது, குழந்தைகளால் சிறுநீர் கழிக்க முடியாமலும், அப்படியே கழித்தாலும் குத்துவது போன்ற உணர்வு இருக்கும் என்பதால், சிறுநீர் கழிக்கும்போது குழந்தை அசௌகரியாமாக உணர்கிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும்.

* வெயில் காலங்களில் உடம்பில் சூடு கட்டிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு அதனால் உடம்பை மட்டும் சோதிக்காமல் குழந்தையின் தலைமுடியை விரல்களால் கோதி, கட்டியின் அறிகுறிகள் ஏதாவது இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

வீட்டிற்கு ஏர்கூலர் வாங்குவதற்கு முன் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

ஏ.சி வங்க முடியாத அல்லது ஏ.சியை பயன்படுத்த முடியாத வீடுகளுக்கு ஏர் கூலர் தான் பயனுள்ளதாக இருக்கிறது. இது ஏ.சி அளவிற்கு அறையை குளிர்...

Popular Posts