முட்டைகள் உலக அளவில் அதிக மக்களால் கோரப்படும் காலை உணவுகளில் முதலிடத்தைப் பிடிக்கின்றன. எப்படி வேண்டுமானாலும் உட்கொள்ளக் கூடிய தேர்வுகள் இதன் பெருமையை அதிகரிக்கவே செய்கின்றன.
எளிமையான உணவென்றாலும், உடலுக்குத் தேவையான சத்துகள், நுண்பொருட்கள் நிறைந்திருக்கும் உணவாகவும் இது இருக்கிறது. ஆனால், இதிலும் ஒரு குழப்பம் நம் மக்களுக்கு உண்டு. பிரவுன் முட்டை நல்லதா, அல்லது வெள்ளை முட்டை சிறந்ததா? இரண்டுக்கும் ஆன வித்தியாசங்களைப் பார்க்கலாம். சிலர், பிரவுன் முட்டை தான் சிறந்ததென்று நம்புகின்றனர். ஏனெனில், பொதுவாகவே வெள்ளை நிறமல்லாத பிரவுன் நிறம் ஆரோக்கியத்தைப் பிரதிபலிக்கிறது என்ற பார்வை உண்டு. இதில், குறிப்பிட வேண்டிய விஷயம், பிரவுன் முட்டை வெள்ளை முட்டையை விட விலை அதிகமானது.
இரண்டு முட்டைகளுக்கும் ஓட்டின் நிறத்தில் மட்டும் வேறுபாடு இல்லை. பிரவுன் முட்டையின் மஞ்சள் கரு நிறத்தில் அடர்த்தியாக இருக்கும், இதற்குக் காரணம் இந்த முட்டையில் இருக்கும் நிறமி தான். ஆனால், உண்மை என்னவெனில் இந்த முட்டைகள் தரும் சத்துகளை ஒப்பிட்டுப் பார்த்தால், கிட்டத்தட்ட இரண்டுமே சம அளவில் சத்துகளைத் தருகிறது.
புரதம், சின்க், கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ், செலீனியம், கொழுப்பு என்று முட்டை இத்தனை சத்துகளைக் கொண்டிருக்கிறது. பிரவுன் முட்டைகள் ஆர்கானிக் என்ற பேச்சும் அடிபடுகிறது. ஆனால், அது முற்றிலும் பொய்யே.
இரண்டு முட்டைகளுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம், அதன் சுவை மட்டுமே. எந்த கோழி இனத்தின் முட்டை அது என்ற அடிப்படையில் தான் முட்டைகளின் நிறங்கள் நிர்ணயம் ஆகின்றன. பிரவுன் முட்டைகளை இடும் கோழிகளுக்குப் பொதுவாக சற்று தரம் உயர்ந்த தீனிகள் தரப்படுகின்றன. ஆதலால்தான் இந்த விலை சற்று அதிகமாக உள்ளது. அனைத்துக் கோழிகளுக்கும் அதே தீனி கொடுக்கப்படும்போது, இந்த சுவை வித்தியாசம் கூட முட்டைகளில் இருக்காது.
--